காக்கும் தெய்வம்
******
ஷீரடி தர்பார். ஒருநாள் மாலைப் பொழுது துனி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்க, பாபா தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு,
உற்சாகமாக பாடினார், “ரமதே ராம் ஆவோஜி! ஆவோஜி! உதியாங்கி
கோனியா லாவோஜி! லாவோஜி! (ஓ விளையாட்டு ராமரே, வாருங்கள்!
வாருங்கள்! மூட்டை, மூட்டையாய் உதியை தாருங்கள்! தாருங்கள்!)
அளவில்லா உற்சாகத்துடன் லயித்துப் பாடினார். நம்மை ஆட்கொள்ளவந்த அற்புத தெய்வம் ஸாயிநாதன்.
ஜாம்நேரில் உள்ள நானா சாகிப் சாந்தோர்கர் வீட்டில் நிலமை சரியில்லை. நானாசாகிப் மீளாத் துயரில் ஆழ்ந்திருந்தார். அவரின் மகள் நிறை மாத கர்ப்பிணி. பிரசவ வலி வந்தும் ஒரு வாரமாக பிரசவம் ஆகவில்லை. சிக்கலுக்கு மேல் சிக்கல். திறமையான மருத்துவர்களும், மருத்துவச்சிகளும் கைவிரித்து விட்டார்கள்.இன்னும் 24 மணி நேரத்தில் பிரசவம் ஆகவில்லை என்றால் தாய்-சேய் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் கூறிவிட்டனர்.
சாயியே தெய்வம் என்று நம்பிய நானா சாகிப், சாயி, சாயி, சாயி என்று குமுறினார். உன்னைத் தவிர எனக்கு வேறு கதி இல்லை என்று உருகினார். எனது பெண்ணை இந்த இக்கட்டில் இருந்து எப்படியாவது காப்பாற்றுங்கள் சாயி என்று மனமுருக வேண்டுகோள் வைத்தார்.
ஆனால் ஷீரடியில் சாயி மிக உற்சாகமாக காணப்பட்டார்.மசூதியில் அமர்ந்திருந்த ராம்கீர்புவாவை அழைத்து, அவரின் கை நிறைய உதியை கொடுத்து, கூடவே ஷாமாவிடம் ஆரத்தி பாடல்களை காப்பி எடுக்கச் சொல்லி அதையும் அவர் கையில் வைத்து, நீ ஜாம்வேர் வரை சென்று, இவைகளை நானா சாகேப் சாந்தோக்கரிடம் கொடுத்து வா, என்றார்.
ஆனால் புவா சீரடியில் இருந்து அருகில் உள்ள கந்தேஷ் என்ற ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதற்கு தேவையான பணம் இரண்டு ருபாய் மட்டுமே அவரிடம் இருந்தது. எனவே அவர் பாபாவிடம், “சாயி! என்னிடம் இரண்டு ரூபாய்கள் தான் உள்ளது. அது ஜாம்நேர் வரை செல்லப் போதாது என்றார்,
அதற்கு பாபா “ஹே ராம்கீர்! என்னை நம்பு. உனக்கு கடவுள் கொடுப்பார் உன் பயணத்திற்குண்டான வேறு ஏற்பாடுகள் செய்யப்படும் சென்று வா!” என்றார்.
சாயியின் வாக்கை யாரால் மீற முடியும்? உடனே புறப்பட்டார் புவா.
அதிகாலை இரண்டரை மணி, ஜல்காம் வந்தடைந்தது இரயில். அங்கிருந்து ஜாம் நேர் செல்லவேண்டும். கும்மிருட்டு, கடும் குளிர். பாபாவை நம்பி இங்கு வந்தோமே, இந்த இரயில் நிலையத்தில் என்னைத்தவிர ஒருவரும் இறங்கவில்லையே! இங்கிருந்து நானாசாகேப் வீட்டிற்கு எப்படி போவது என்றவாறே
கழிவிரக்கம் கொண்டு யோசிக்கத் தொடங்கினார் புவா.
அப்போது இருட்டில் “இங்கு யார் ராம்கீர்புவா?” என்றது ஒரு குரல். குரல் வந்த திசையை நோக்கினார் புவா,
ஆஜானுபாகுவாய் ஒரு வாலிபர்! நேர்த்தியான உடை, நேர்த்தியான பார்வை கொண்ட அவர் புவாவிடம் வந்து “வாருங்கள் ஐயா! பாபாதானே உங்களை அனுப்பி வைத்தது. நானா சாகிப் உங்களை அழைத்து வரச்சொன்னார்” என்றார்.
புவா ஏதும் பேசாமல் அவரின் பின்னால் சென்றார். இரட்டை குதிரை வண்டி தயாராக இருந்தது. புவா வண்டியில் ஏறிக்கொள்ள சிட்டாய் பறந்தது குதிரை ஒண்டி. சற்று நேரத்தில் ஜாம்நேர் வந்தவுடன், வண்டியை நிறுத்தி, நதியில் நீராடி சிற்றுண்டி உண்டு வெளியே வர, அங்கே வண்டியும் இல்லை, ஆளும் இல்லை. இதென்ன மாயம்!
முன்னும் பின்னும் பார்க்க, சரியாக நானா சாகிப் வீட்டுக்கு முன்பாக
வந்திருந்தார் புவா. வீட்டிற்கு அருகே நெருங்க, நெருங்க வீட்டிற்குள் இருந்து மரண ஓலம். பிரசவம் ஆவதில் சிக்கலுக்குமேல் சிக்கல். நானா பரிதவித்துக் கொண்டு அங்கும் இங்கும் வீட்டிற்குள்ளேயே அலைந்து கொண்டிருக்கின்றார்.பெற்ற மகள் கஷ்டப்படுகின்றாள். என்ன செய்வதென்று அறியாமல் பதட்டத்தின் உச்சத்தில் இருக்கின்றார்.
அந்த வேலையில் உள்ளே நுழைந்தார் ராம்கீர். “ஐயா! நான் ராம்கீர் புவா, ஷீரடியில் இருந்து வருகிறேன். பாபா அனுப்பி வைத்தார். இந்தாருங்கள் உதி. அத்துடன் ஆரத்தி பாட்டையும் கொடுக்கச் சொன்னார் என்று கொடுக்க, நானா சீரடி இருக்கும் திசையை நோக்கி தக்க சமயத்தில் அபயம் வழங்கிய பகவான் சாயிநாதரை நோக்கி தலைக்குமேல் கைகூப்பி வணங்கினார்.
உடனே பெண்ணுக்கு உதியை தண்ணீரில் கலந்து குடிக்க கொடுத்து விட்டு, அனைவரும் ஆரத்தி பாட்டு பாடி ஆரத்தி எடுத்து சாயிநாதரிடம் தன் பிரார்த்தனையை சமர்ப்பிக்க, ஒரு வாரமாய் இழுத்துக் கொண்டிருந்த, மருத்துவர்களால் கைவிட்டப்பட்ட பிரசவம் சுகப்பிரசவம் ஆனது. தாயும்
பிழைத்தார்.
மனம் மகிழ்த நானா. “ராம்கீர்! மகத்தான காரியம் செய்தீர்கள்“ என்று பாராட்ட, அதற்கு ராம்கீர், நான் என்ன பெரிதாக செய்து விட்டேன் அய்யா? பாபா உதி கொடுத்தனுப்பினார். திக்கு திசை தெரியாத எனக்கு இந்த ஊருக்கு வர நீங்கள் ஜல்காமிலிருந்து வண்டியை அனுப்பி என்னை அழைத்துக் கொண்டீர்கள் எனக்கொன்றும் கஷ்டம் இல்லை.” என்றார் புவா.
இதைக் கேட்ட நானா துணுக்குற்றார் என்ன சொன்னீர்கள்? நானா? வண்டியா? அப்படி எதையும் நான் செய்யவில்லையே? பாபா உதி அனுப்பியதே எனக்கு தெரியாதே? என்றவாறே அவரும் மற்றவர்களும் அந்த வண்டியையும், வண்டிக்காரனையும் ஊர் முழுக்க தேடினார்கள். ஊர் எல்லைவரை வண்டியையும் காணோம், வண்டிக்காரனனையும் கணோம்.
அப்போது தான் உறைத்தது ராம்கீருக்கு. “ஹே ராம்கீர்! என்னை நம்பு. உனக்கு கடவுள் கொடுப்பார் உன் பயணத்திற்குண்டான ஏற்பாடுகள் செய்யப்படும் சென்று வா!” என்றாரே சாயி.
எல்லாம் அறிந்தவர் சாயி! சகலத்திற்கும் ஆதாரமானவர் சாயி! சாயியின் சேவையை செவ்வனே செய்தால் சாயி நம்மை கலங்காமல் காப்பார் என்பதனை அழுத்தம் திருத்தமாக உணர்ந்தார் ராம்கீர்புவா.
நாம் உணரும் நாள் எந்நாளோ!
சாயியை பணிவோம்! சகல நன்மைகளையும் பெறுவோம்!
******