சீரடியில் அன்னபூரணி

சீரடியில் அன்னபூரணி

சீரடியில் அன்னபூரணி

இராமச்சந்திர ஆத்மாராம் தார்க்கட் குடும்பத்தினரும், அவரது நெருங்கிய நண்பருமான கோவிந் என்பவரும், 6.9.1910 அன்று சீரடிக்கு முதன்முதலாக வந்தார்கள். அவர்கள் முப்பது பேர் கொண்ட குழுவாகப் புறப்பட்டு மும்பை தாதரில் இருந்து இரயிலில் சீரடிக்கு காலை 10 மணியளவில் வந்து சேர்ந்தனர்.

தார்கட்டின் நண்பர் கோவிந் பாபாவை தரிசிப்பதில் மிகுந்த ஆவலாய் இருந்தார். ஏனெனில் பிரார்த்தனா சமாஜத்தில் இருந்த அவருக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கையில்லை. அவர் பல்வேறு சமய நூல்களை கற்றறிந்தபோதும், அதனால் சந்தேகங்கள் அதிகமாகி குழப்பமடையவே செய்தார்.

சீரடிக்கு வருவதற்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு தாஸ்கணுவின் கீர்த்தனைகளை கேட்கும் பேறு கிட்டியது. அது அவரது மனதில் நீங்காத நினைவுகளை ஏற்படுத்திட, அதனால் சாயி பாபாவை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் அவருக்குள் கொழுந்து விட்டு எரிந்தது.

அவர் பாபாவின் அப்பழுக்கற்ற, தெய்வீகமான, அன்பு ததும்பும் தோற்றத்தை கண்டு நெகிழ்ந்து போனார். அவர் தனக்குள் "தாங்கள் சத்புருஷர் ஆனால் அதை கிரகித்துக்கொள்ளும் ஞானம் எனக்கு கிடையாது.மற்றவர்கள் ஊதுபத்தி, கற்பூரம், தேங்காய் ஆகியவற்றை சமர்ப்பிப்பதைப் பார்த்து நானும் அதையே செய்கிறேன். அவ்வாறு செய்வதால் நான் மாட்டிக்கொள்ள மாட்டேன் என்று நம்புகிறேன் அவ்வளவே!" என்றவாறு தனக்குள் யோசித்தார். 

அதே வேளையில் பாபா, ஒரு தேங்காயை எடுத்து "யாருடையது இது"
என்று கேட்டார். அவருடைய நண்பர்கள் அவரை சுட்டிக்காட்டி, "இது அவருடையது" என்றார்கள். பாபா தேங்காயை கையில் வைத்துக் கொண்டு "இதை எடுத்துக்கொள்" என்றார்.

அந்த தேங்காயை பெறுவதற்காக அவர் எழுந்தபோது பாபா, "இந்த மனிதன் எழுந்து கொள்வதற்குகூட நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறார்" என்றார். இதைக் கேட்டு வந்திருந்த அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர். ஆனால் அவர் அதை சட்டை செய்யவில்லை. அந்த தேங்காய் பிரசாதத்தைப் பெறும்போது, அவர் தனக்குள்,"பாபா இங்கு நடப்பது பற்றி எனக்கொன்றும் புரியவில்லை. ஆனால் இனிமேல் என்னுடைய எல்லாச் சுமைகளையும் தாங்கள் மேல் சுமத்தப் போகிறேன்" என்று கூறிக்கொண்டார்.

அவரின் மனதின் குரலை அறிந்தவரான பாபா, உடனே "சரி" என்றார். கோவிந் தன்னைத் தவிர அங்கு கூடியிருந்த அனைவரும் ஆன்மீக ரீதியாக முன்னேறியவர்கள் என்றும், தான் மட்டுமே அஞ்ஞானியாக, அறியாமையோடு இருப்பதாக  கருதினார்.

ஆயினும், தனக்கு ஆதரவு தந்து தன்னை தாக்கிப்பிடிக்க ஒருவர் இருக்கிறார் என்று அவரால் நிம்மதியாக உணர முடிந்தது. பிறகு அவர் பாபாவிடம், பாபா நான் தாங்களிடம் ஒன்று கேட்கலாமா? என்று கேட்க, பாபாவும் கேள் என்றார்.

அதற்கு அவர், "பாபா தாங்கள் எல்லாரோரையும் சமமாக ஒரே மாதிரியாகத்தான் பார்க்கின்றீர்களா?" என்று கேட்டார். அதற்கு பாபா, "என்ன இதுபோல் கேட்டுவிட்டாய்! உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கின்றதா? என் கருணையானது அனைவரிடமும் சமமாகவே செலுத்தப்படுகின்றது. மேலும் நான் எல்லோரையும் ஒரே சமநோக்கோடுதான் பார்க்கின்றேன்" என்று பதில் கூறினார்.

மீண்டும் அவரோடு வந்த குழுவினர்  அனைவரும் "கொல்" என சிரித்தனர். இந்தச் சிரிப்பினால் அவர் கொஞ்சமும் வருத்தப்படவில்லை. மாறாக, தனக்குப் பின்னால் பாபா இருக்கின்றார் என்ற நம்பிக்கையும், தைரியத்தையும் அவர் முழுமையாக உணர்ந்தார். 

இதைப்போல் உணர்ந்தவருக்கு, "தனக்கு விருப்பமான முறையில், தானும் வழிபடவும், தியானித்திடவும், ஒரு இஷ்ட தெய்வம் இருந்தால் நன்றாக இருக்கும்" என்று தோன்றியது. அந்த கணமே, பாபாவிற்கு ஆரத்தி வழிபாடு தொடங்கியது. அனைவரும் எழுந்து நின்றனர். இவரும் எழுந்து நின்றார்.

ஆனால் இவரின் பார்வை பாபாவைத் தாண்டி சென்றது. அங்கே பழைய பள்ளிக்கூடத்தின் ஜன்னல் திறந்திருப்பது கண்ணில் பட்டது. அதன் வழியே அவர் வெளியே பார்த்தார்.

ஒவ்வொரு நாளும் மாலை வேளைகளில் அன்னை இராதாகிருஷ்ணமாயி அங்கு அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது வழக்கம் அவர் அந்த ஜன்னல் வழியே, சொக்க வைக்கும் பேரழகைக் கொண்ட பிரகாசமான ஒளி பொருந்திய ஒரு பெண்மணியைக் கண்டார். அவள் தலைமுதல் கால்வரை பல்வேறு விலையுர்ந்த ஆபரணங்களையும்,மிகச் சிறப்பான கலைநயமான பட்டு ஜரிகையுள்ள புடவையையும் அணிந்திருந்தாள்.

அன்னையின் பேரழகு, அவள் ஏற்றி வைத்த விளக்கொளியில் பட்டு மேலும் தேவலோகத்து தேவதையைப் போன்று ஒளிர்ந்தது. அதைப்போன்ற விண்ணுலகப் பேரழகை அவர் இதற்கு முன் பார்த்ததில்லை. தன் வாழ்நாளில் இனிமேலும் பார்க்கப் போவதில்லை.

சட்டென்று திரும்பி அன்னை இவரை அன்புடன் பார்த்தாள். எனவே அவரும் அன்னையை ஆச்சரியமாகப் பார்த்தார். "பேரழகியாக இருக்கும் இந்தப் பெண்மணி யாராக இருக்கும்? இந்தக் குக்கிராமத்தில், இவ்வளவு அசாதாரணமான விலையுயர்நத ஆபரணங்களும், அழகிய துணிமணிகளும் அவளுக்கு எப்படி கிடைத்தன? எவ்வித கவலையோ, பயமுமின்றி எப்படி அவளால் சுதந்திரமாக நடமாட முடிகிறது?" இப்படியாக பல்வேறு கேள்விகள் அவரது மனதில் எழுந்தன.

திடீரென அவருக்கு தான் வேறு யாரோ ஒருவரின் உரிமையானவரை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது. அவர் தன் தவறை உணர்ந்து திரும்பி பாபாவைப் பார்த்தார். உண்மையில் பாபாவும் அவரது செயலை அறிந்தவராக அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். ஆரத்தி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. எனினும் அவரது பார்வை அந்த தெய்வீகப் பேரழகை நோக்கியே திரும்பியது. இறுதியாக தன் மனதை யாரோ கட்டுப்படுத்து வதைப் போல் உணர்ந்தார். அதன்பின்னர், அந்தப் பக்கமே பார்க்கக்கூடாது என்று தீர்மானித்து மனதை ஒருநிலைப் படுத்தினார்.

இந்நிகழ்ச்சிக்குப்பின் அடுத்தடுத்து அவர் சீரடிக்கு வந்த போது "அன்னையை" அவர் மீண்டும் பார்க்க நேர்ந்தது. ஒரு நாள் மாலை அவர், நண்பர் பலராம் மான்கரோடு பேசிக்கொண்டிருக்கையில், அன்னையைப் பற்றி அவரிடம் கேட்டார். 

மான்கர் அவரிடம், அது வேறு யாரும் அல்ல, "அது சாக்ஷாத் அன்னபூரணி தேவியே தவிர வேறு யாருமில்லை"  அப்படி இல்லை என்றால் ஒன்றுமே இல்லாத இந்த குக்கிராமத்தில் பாபாவை தரிசிக்கவரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தான் ஒருத்தியே எவ்வாறு உணவளிக்க முடியும், அன்னை அதை தொடர்ந்து செய்து வருவது ஆச்சர்யமல்லவா? அவ்வாறு அந்த அன்னபூரணியாகிய அன்னையின் தரிசனத்தைப் பெறும் பேறு தனக்கும் கிட்டியது என்றும் கூறினார்.

அன்னையின் தரிசனம் தனக்கு கிட்டிய பிறகு, உலகாயத வாழ்க்கையின் மீதும், உலகப் பொருட்களின் மீதும் ஒரு வித விரக்தி ஏற்பட்டு, அவற்றை துறந்துவிட்டு சீரடிக்கே வந்து தங்கி தானும் ஒர் பக்கீராக மாறிவிட்டதாக மான்கர் அன்னையின் தரிசனத்தைப் பற்றி சிலாகித்துக் கூறினார்.

அதன்பின் கோவிந்தும் கூட, தன் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உணர்ந்தார். முன்பெல்லாம் பெண்களை ஏளனமாகவும், போகப் பொருளாகவும், உதாசீனமாகவும், நடத்திய அவர் இப்போது பெண்களை மிகவும் மரியாதையுடன் பார்க்கத் தொடங்கிவிட்டார்.

இதைப்போன்று அன்னை இராதாகிருஷ்ணமாயி சீரடியில் அநேக பக்தர்களுக்கு அவர்கள் அறியாமலே அருள் புரிந்திருக்கின்றாள். மேலும் சீரடியில் பகவான் சாயிநாதருக்கு சேவை செய்ய வேண்டி  அன்னபூரணியே அன்னையாக சீரடி மண்ணில் வசித்து வந்தாள் என்பதை  நாம் கூறவும் வேண்டுமோ?

ஜெய் சாய்ராம்!
ஜெய் இராதா கிருஷ்ணமாயி!

******