கண்கண்ட தெய்வம்

கண்கண்ட தெய்வம்

சப்கா மாலிக் ஏக்” அதாவது “எல்லோருக்கும் இறைவன் ஒருவனே” இந்த வரியை அடிக்கடி “ஷீரடியில்” வாழ்ந்த “ஸ்ரீ சாய் பாபா” தன் பக்தர்களிடம் கூறுவார்.

 பக்தர்களால் இறைவனாகவே வழிபடப்படும் ஸ்ரீ சாயிபாபா இன்றும் தன்னை நம்பி வழிபடுகிறவர்களுக்கு அருள்புரிகிறார். அவரை வெறுப்போர்கள் யாரையும் அவர் வெறுத்ததில்லை. வெறுப்பவர்களுக்கும் நம்மை செய்வதே இறைவனின் இயல்பல்லவா? அப்படி தன்னை இகழ்ந்த ஒருவனை தனது பக்தனாக மாற்றிக்கொண்ட ஒரு உண்மை சம்பவம் தான் இது. 

கணேசன் என்பவர் சென்னையில் வாழ்ந்து வந்தார். சிறு வயதிலிருந்தே “கடவுள் இல்லை என்ற கொள்கைகளால்” ஈர்க்கப்பட்டு, அதன் காரணமாக இறைமறுப்பாளராகவும், துறவிகளையும், ஞானிகளையும் குறைத்து பேசும் குணம் கொண்டவராக இருந்தார். 

ஒரு முறை தன் உறவினர் ஒருவர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று விட்டு, தன் இருச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது ஒரு கடுமையான விபத்தை சந்தித்தார். உயிரையே இழந்திருக்கக்கூடிய அந்த விபத்தில், அவரின் ஒரு கால் மட்டும் கடும் சேதமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

அங்கு அவரை வைத்தியம் செய்த மருத்துவர்கள் அவரின் அந்த கால் கடுமையாக சேதம் அடைந்திருப்பதால் அவரால் முன்பு போல் நடக்க முடியாது என்றும், பாதிப்பு தீவிரமானால் அவரின் அந்த ஒரு காலையே எடுக்க வேண்டி வரும் என்று எச்சரித்தனர். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த அவரை காண்பதற்கு அவரின் நண்பரும், சாய் பாபாவின் பக்தருமான ஒருவர் மருத்துவமனைக்கு வந்தார். 

அப்போது அந்த நண்பர் வைத்திருந்த “சாய் பாபாவின் சத் சரிதம்” என்ற புத்தகத்தைக் கண்டு, தான் மருத்துவமனையில் நேரம் போக்க அந்த புத்தகத்தை தனக்கு படிக்கத்தருமாறு கேட்டு, தன் நண்பரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

 அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்த அந்த இறை மறுப்பாளர் தன்னை அறியாமல் சாய்பாபாவின் பக்தராகவே மாறிப் போனார். தன் கடந்த கால தவறுகளுக்காக பாபாவை நினைத்து மனம் வருந்தி, மன்னிக்க வேண்டினார். இதற்கிடையில் அவரின் அந்த கால் காயங்கள் நன்கு ஆறின. 

இப்போது மீண்டும் அவரை பரிசோதித்த அந்த மருத்துவர்கள் அவரின் கால் நன்றாக குணமடைந்து விட்டதாகவும், இனி அவர் பழைய படி நடக்க முடியும் என்று கூறினர். இது சாய்பாபாவின் கருணை என்று மகிழ்ந்தார் அவர், 

பூரண குணமடைந்த அவர்,அந்த மருத்துவ மனையிலிருந்து புறப்படும் சமயத்தில், அவர் விபத்தில் சிக்கிய போது, அவரிடம் இருந்த பொருட்களை மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரிடம் ஒப்படைத்தனர். அதில் தான் விபத்தில் சிக்கும் முன்பு, தான் ஒரு திருமணத்தில் பெற்றுக்கொண்ட தேங்காய்ப்பையும் இருந்தது, 

அதை எடுத்து நோக்கியபோது அந்த பையில் “தன் கையை உயர்த்தி ஆசிர்வதிக்கும் சாய் பாபாவின் படமிருந்ததை” அப்போது தான் அவர் கவனித்தார். பாபாவின் அருள் தனக்கு முன்பே இருந்திருப்பதால் தான், அந்த விபத்தில் உயிரிழக்காமல் காலில் மட்டும் காயம் ஏற்பட்டதோடு தப்பித்தோம் என்று எண்ணி அவர் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

தன்னை நம்பாமல் எதிர் வாதம் பேசுவோருக்கும் நன்மையே செய்யும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமன்றோ நம் சாயி!