குரு இல்லா வித்தை.

குரு இல்லா வித்தை.

குரு இல்லா வித்தை.

குருவின்றி ஆன்மீக சாதனை என்பது ஆன்மீகப் பாதையில் ஒரு நுண்ணிய அபாயமாகும். சித்தர் மரபில் ஆன்மீகம் என்பது வெறும் தத்துவக் கோட்பாடு அல்ல, அது ஒரு உணர்வுநிலை அறிவியல். அந்த அறிவியலின் அடிப்படை விதியே "அனுபவம் வழிகாட்டும்,குரு திருத்துவார்." என்பதாகும்.

இந்து சமய ஆன்மீகத்தின் எந்த மரபை எடுத்தாலும் ஒரு உண்மை மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும். அது தன்னிச்சையாகச் செயல்படும் 'மனம்' தான் முதலில் மாற்றப்பட வேண்டிய கருவி. 
ஆனால், நவீன சாதகர்கள் பலரும் இதற்கு நேர்மாறாகச் சிந்திக்கிறார்கள்: "எனக்குத் தெரியும், நான் வாசித்திருக்கிறேன், நான் உணர்கிறேன். எனக்கு வழிகாட்டுதல் எதற்கு?" என்றே தொடங்குகின்றார்கள்.

இங்குதான் பலபேருக்கு ஆன்மீகப் பயணம் தொடங்குவதற்கு முன்பே, அகங்காரம் தனது ஆன்மீக ஆடையை அணிந்து ஆட்டத்தைத் தொடங்குகிறது.

குருவைத் தவிர்த்துத் தானாகவே சாதனை செய்யும் மாணவன் தீயவன் அல்ல, அவன் தேடுபவன் தான். ஆனாலும் அவன் தவறான திசையில் பயணிக்கிறான். இவர்களின் மனநிலை பொதுவாக மூன்று நிலைகளில் சிக்கியிருக்கும் என்று மெய்ஞானிகள் கணித்திருக்கின்றார்கள்.
 
முதலாவதாக நிறைய நூல்களைப் படித்து மந்திரங்கள், சக்ராக்கள், குண்டலினி எனப் பல தகவல்களைச் சேகரித்து ‘அறிவின் அகங்காரத்தில்’ இருப்பார்கள். இவர்கள் தேடுவது ஞானத்தை அல்ல, அறிவின் மூலம் கிடைக்கும் 'கட்டுப்பாட்டை' குருவிடம் சரணடைந்தால் தனது 'எல்லாம் தெரிந்தவர்' என்ற பிம்பம் உடைந்து விடுமோ என்ற ஆணவத்தில், குருவை மதித்தாலும் அவரிடம் எதையும் கேட்க மாட்டார்.

இரண்டாவது நபர்கள், பயிற்சியின் போது உடலில் ஏற்படும் வெப்பம், அதிர்வு, கண்ணீர் அல்லது சில கனவுகளைக் கண்டு, "எனக்கு ஏதோ நிகழ்கிறது, அதனால் நான் சரியான பாதையில் இருக்கிறேன்" என்ற ‘அதிசய அனுபவத்தில்’ இருப்பார். ஆனால் சித்தர் மரபு சொல்வது, "அனுபவம் என்பது முடிவல்ல, அது மனதின் ஒரு எதிர்வினை மட்டுமே." குரு இருந்தால் அந்த அனுபவத்தைக் கடந்து செல்லச் சொல்வார். குரு இல்லை என்றால் மாணவன் அனுபவத்தையே இலக்காக்கி அங்கேயே தேங்கி விடுகின்றான்.

மூன்றாவதாக தான் செய்யும் ஏதோ ஒன்று தவறு என்று குரு சுட்டிக்காட்டிவிட்டால் என்ன செய்வது என்ற ‘மறைமுக பயம்’ மாணவனுக்குள் இருக்கும். இதனால் குருவிடம் ஒரு பகுதி உண்மையை மட்டுமே பகிர்ந்து கொள்வார். இந்த ஒளிவுமறைவு ஆன்மீக வளர்ச்சியின் பெரும் தடையாகும்.

தனக்கு ஏற்படுவது ஆனந்தமா, சக்தியா அல்லது பிரமையா என்ற அளவுகோல் மாணவனுக்கு இருக்காது. வழிகாட்டுதல் இல்லாத அனுபவம் வெறும் மாயையாக முடிந்துவிடும். இது சாதாரண அகங்காரத்தை விட ஆபத்தானது. "எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது" என்று நினைக்கும் கணமே ஒருவனின் ஆன்மீக வளர்ச்சி முற்றுப்பெறுகிறது. இத்தகையவர்கள் மற்றவர்களைத் தாழ்வாகக் கருதத் தொடங்குவார்கள்.

பிராணாயாமம், தந்திரம் போன்ற பயிற்சிகள் நரம்பு மண்டலத்தோடும் ஆற்றல் வளையங்களோடும் நேரடியாகத் தொடர்புகொள்பவை. முறையான மேற்பார்வை இன்றி இவற்றைச் செய்யும்போது தூக்கமின்மை, தேவையற்ற பயம், உணர்ச்சி வசப்படுதல் அல்லது ஒருவித 'துறவுப் பைத்தியம்' போன்ற நிலைகள் ஏற்படக்கூடும்.

குரு இல்லாத சாதகர் அனுபவத்தை இலக்காகவும், சோம்பலைச் சமாதி நிலையாகவும், வெறும் அமைதியை அடக்கமாகவும் தவறாகப் புரிந்து கொள்வார். குரு என்பவர் வெறும் பாடங்களை நடத்துபவர் அல்ல. மாணவன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் இடங்களைச் சுட்டிக்காட்டுபவரே குரு. மாணவன் காணத் தவறும் சில விஷயங்களை குரு துல்லியமாகப் பார்க்கிறார்.

அனுபவத்தின் பின்னால் மறைந்துள்ள ஆசை. அமைதிக்கு பின்னால் ஒளிந்துள்ள பயம். பக்தியின் பின்னால் இருக்கும் அடையாளத் தேவை.குரு வழிகாட்டுவது உங்களின் 'சாதனை முறையை' அல்ல, உங்களின் 'மனதின் மறைமுக இயக்கத்தை'.

சிஷ்யன் என்பவன் குருவுக்குக் கீழ்ப்படிந்து அடிமையாக இருப்பவன் அல்ல. குருவிடம் தனது அனுபவங்களைச் சரியாகவோ தவறாகவோ தற்காத்துப் பேச முயலாதவனே நல்ல சீடன். தவறு என்று உணர்த்தப்பட்டால் கணம் இன்றித் திருத்திக்கொள்வான்.புரியாததை மறைக்க மாட்டான். அவன் குருவிடம் பேசுவது அறிவைப் பெறுவதற்காக அல்ல, தன்னைத் தவறான பாதையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவே!

ஆன்மீகப் பாதையில் மிகப் பெரிய தடை பாவமோ அல்லது அறியாமையோ அல்ல, தனது அறியாமையையே தனக்கு வழிகாட்டியாக்குவதுதான்.

"தியானம் செய்யும் முன் மனதை குருவிடம் ஒப்படை, இல்லையெனில் உனது மனமே உனக்கு குருவாகி உன்னைத் தவறாக வழிநடத்தும்."

ஆன்மீகம் ஒரு தனிப்பயணம் தான், ஆனால் அது தனியாகச் செய்யும் பயணம் அல்ல. குரு அறிவுக்காகத் தேவைப்படுவதில்லை, உங்களின் பாதுகாப்புக்காகத் தேவைப்படுகிறார்.