‘குருவருள்’ - சொ. அகஸ்டின்.
‘குருவருள்’
சொ. அகஸ்டின்.
அரக்கன் என்றாலே கொடூரமானவன், இரக்கமற்றவன், என்ற சிந்தனை எழும் அதை சார்ந்தே புராணங்களிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக தேவர்களுக்கும் அரக்கர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டங்களை மைய்யமாக வைத்தே கதைகளை அமைத்திருப்பார்கள். அவர்களை அழிப்பதற்காகவே கடவுள் அவதாரம் எடுப்பதாகவே கதைகளில் கூறியிருப்பர்.
ஆனால் இலக்கியங்களில் அரக்கர்கனை தீயவர்களாக காட்டாமல் அவர்களின் வீரம், அறிவு, மற்றும் பக்தி ஆகியவற்றையும் விவரிக்கின்றனர். நம் நாட்டில் அரக்கனை கொன்ற நாளை விழாவாக கொண்டாடும் அளவிற்கு கதைகளை அமைத்து மக்கள் மனதில் தொடர்ந்து ‘அரக்கத்தனத்தை’ பதிவு செய்து வருகிறார்கள்.
சக மனிதன் செய்யும் தீய செயல்களால் அவனை அரக்கன் என்று கூறுவதை மகான்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக அச்செயல்களை பொறுத்து அவன் அறியாமையால் செய்கிறான் அல்லது அகங்காரத்தால் செய்கிறான் என்றே கருதுகிறார்கள்.
1924 ஆம் வருடம் ஜூன் 26 தேதியன்று இரமணாசிரமத்திற்குள் மூன்று திருடர்கள் திருடுவதற்காக இரவு 11.30 மணியளவில் சன்னல் கண்ணாடிகளை உடைக்கின்றனர் இதை கவனித்த பகவான் இரமணர் கதவு திறந்து தான் இருக்கிறது உள்ளே வந்து வேண்டியதை எடுத்து செல்லுங்கள். தேவையில்லாமல் சன்னல்களை உடைக்க வேண்டாம் என்று கூறினார்.
இரமணர் பேசுவதை கேட்டு ஆசிரம ஊழியர்களும் விழித்துக் கொண்டு திருடர்களை பிடித்து கட்டிப்போடுகின் றோம் என்று சத்தம் போட்டனர். ஆனால் பகவனோ, வேண்டாம்! அவர்கள் ஏதோ அறியாமையால் செய்கிறார்கள் நாம் நமது தர்மத்தில் இருந்து தவறக்கூடாது பொறுமையுடன் அமைதியாக இருக்க வேண்டும் அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று பகவான் இரமணர் அவர்களை தடுத்து விடுகிறார்.
வேறுவழியில்லாமல் பக்தர்களும் ஊழியர்களும் அமைதி காத்து அத்திருடர்களிடம் கட்டிடத்தை சேதப்படுத்த வேண்டாம் உள்ளே சென்று வேண்டியதை எடுத்துச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். ஆனாலும் அம்முரடர்கள் அவர்கள் கூறுவதை ஏற்காமல் குடிசைகளுக்கு தீ வைப்பதாக மிரட்ட அப்படி ஏதும் செய்யவேண்டாம் நாங்கள் அனைவரும் வெளியே சென்று விடுகிறோம் நீங்கள் உள்ளே சென்று தேவையானதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று இரமணர் கூறினார்.
அதன்படி, ஒவ்வொருவரையும் பிரம்பால் பலமாக அடித்து வெளியே அனுப்புகிறனர் திருடர்கள். அதில் இரமணரும் தப்பவில்லை அவருக்கு இடது தொடையில் அடி விழுகிறது. பிறகு உள்ளே சென்று சல்லடை போட்டு ஆராய்ந்ததில் கிடைத்தது பத்து ரூபாய் மட்டுமே! அதிலும் ஆறு ரூபாய்தான் ரொக்கம். திருடர்களுக்கு இது பெரிய ஏமாற்றம்.
இதனால் விரக்தி ஏற்பட்டு கோபத்துடன் பகவான இரமணரை மீண்டும் தாக்க முயற்சிக்க, அதைக்கண்ட பக்தர்களும் ஊழியர்களும் வெகுடெழுந்து கையில் கிடைத்த கட்டைகளை எடுத்துக் கொண்டு திருடர்களை தாக்க புறப்பட்டனர்.
இரமணர் அவர்களை தடுத்து, அவ்வாறு செய்ய கூடாது, நாம் சாதுக்கள். நமது தர்மத்தை கைவிடலாமா! நீங்கள் அவர்களை தாக்கி ஏதாவது உயிர் சேதம் ஏற்பட்டால் அப்பழி நம்மீதே விழும். அவர்கள் அறியாமையில் செய்கிறார்கள் அறிந்த நாம் நமது தர்மத்தை கைவிடலா மா? சில சமயங்களில் நமது நாக்கை நாமே கடித்துக் கொள்கிறோம் அதற்காக பல்லை உடைத்துவிடுகிறோமா என்ன? இவ்வாறு திருடர்களிடம் உள்ள அரக்க குணத்தை அறியாமை என்றும் அந்நேரத்தில் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டியதை தர்மம் என்றும் உபதேசமாக கூறுகிறார் “பகவான் இரமண மகரிஷி”.
அதுபோலவே கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் தேதி ‘யோகி ஶ்ரீராம் பாபா’ தலைமையில் 26 நபர்களுடன் சீரடி யாத்திரைக்குப் புறப்பட்டோம். யாத்திரையில் கோவையை சேர்ந்த குணசேகர் என்ற நபர், பாபா பக்தர் என்ற முகமூடி அணிந்து எங்களுடன் பயணத்தில் கலந்துகொண்டார். சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் அனைவரும் ஒன்றிணைந்த பின்பு நம் குரு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அந்நபர் மிக பவ்யமாக அனைவரிடமும் தன்னை அறிமுகம் செய்து கொண்டு பாபா அனுமதித்தால் இம்மாதிரியே தானும் சேவை செய்வேன் என தன்னடக்கத்துடன் கூறிகொண்டார்.
இரயில் புறப்படுவதற்கு முன்பாகவே அனைவரிடமும் கலகலப்பாக பேசி அனைவரது விவரங்களையும் சேகரித்துக்கொண்டார். அதன்பின்பு இரயில் புறப்பட்டதும் அவரின் பேச்சு தன்னை முன்னிலைபடுத்துவதிலே இருந்தது குழுவில் அவரே மூத்த வயதுடையவர் என்பதால் அனைவரிடமும்
அதிகாரத்துடன் பேசி குரு தனக்கு மிகவும் வேண்டியவர் என்றும், நாங்கள் பல காலமாக நண்பர்கள் என்றும் பேசி வந்தார். இதை அனைத்தையும் கவனித்த படியே மெளனமாக நம் குரு பயணம் செய்திருக்கின்றார்.
மறுநாள் காலை 12.00 மணியளவில் சீரடிக்குச் சென்றோம். அவரவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று தங்களுடைய லக்கேஜ் வைத்துவிட்டு உணவருந்த கீழே இறங்கவும் என்று குரு கூறினார். அதற்குள் அந்த நபர் குருவிடம் எண்ண கேட்டார் என்று தெரியவில்லை. அதற்கு குரு, முதலில் உங்கள் அறைக்கு சென்று சற்று ஓய்வெடுத்துக்கொண்டு வந்து உணவு அருந்துங்கள். பிறகு கூறுகின்றேன் என்றார்.
அவர் அதை காதில் ஏற்றுக்கொள்ளாமல், நான் யார் தெரியுமா? எனக்குண்டான மரியாதையை உங்கள் குழுவினர் எனக்கு தரவில்லை என்று குருவிடம் கூற, குருவின் ரௌத்திரம் வெளிப்பட்டது. நீங்கள் யாராக இருந்தால் எனக்கென்ன? பயண விதிமுறைகளை அறிந்து கொண்டுதானே யாத்திரை வந்தீர்கள். இந்த யாத்திரைக்கு நான் தான் தலைவர். நான் கூறுவதைத் தான் நீங்கள் கேட்க வேண்டும். என்று மிகக்கடுமையாக கூற, குருவின் ரௌத்திரத்தை முதன் முதலாக அன்று கண்டேன்.
ஒர் அரக்கனை அழிக்க நினைத்தால் எவ்வாறு உடல் மொழியோடு வார்த்தைகள் வருமோ அவ்வாறு குருவிடம் இருந்து வந்தது. நாங்கள் அனைவரும் திகைத்து நிற்கிறோம். எனக்கு மிகுந்த ஆச்சரியம் அவ்வாறு நான் குருவை அதுவரை பார்த்ததேயில்லை. அவரை கொன்று விடுவேன் என்று கூறவில்லை அவ்வளவு தான் அதற்குண்டான வார்த்தைகள் வந்துவிட்டதை கண்டு திகைத்து நின்றேன்
சத்தத்தை கேட்டு அங்கிருந்து ஓடிவந்த ஹோட்டல் மேலாளர், குருவோடு உள்ள நட்பினால் அந்த நபரைத்திட்டி அவருக்குண்டான தொகையை கொடுத்து அனுப்பிவிட்டார். அந்நபர் புறப்படும் முன் நான் யார்னு தெரியாம பேசிட்டிங்கல பார்த்துக்கொள்கிறேன் என்று கூற, குருவிற்கு இன்னும் கோபம் கூடியது ‘உன்னை அழிக்காம விடமாட்டேன்’ என்று கோபப்பட்ட குருவை ஹோட்டல் மேலாளர் ஆசுவாசப்படுத்தி சாப்பிட அழைத்து சென்றார்.
புயலுக்கு பின் அமைதி நிலவியதை போல அவ்விடம் அமைதியானது. பிற்பாடுதான் குரு கூறினார். அந்நபர் கோவையில் இதுபோலவே பல பாபா பக்தர்களை சீரடிக்கு அழைத்துச்செல்வதாக கூறி அனைவரிடமும் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார். இம்மாதிரியாக பாபாவின் பெயரைக்கூறி பணம் பறிப்பவர்களிடம் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதை நம் குழுவினரிடமும் செய்வதற்குத்தான் ஒரு நாள் முழுவதும் எனக்கு மிகவும் தெரிந்தவர்போல் உரிமையுடன் உங்களிடம் வலம் வந்து கொண்டிருந்தார். சமயம் வரட்டும் என்றுதான் காத்துக் கொண்டிருந்தேன் என்றார் குரு.
பயணம் முடிந்து வீடு திரும்பிய பிறகு குருவின் ஞாயிறு சத்சங்கத்தில் கலந்து கொண்டேன். சீரடியில் அந்த நபருக்கும், குருவிற்கும் நடந்த நிகழ்வின் போது குரு பேசிய கடுமையான வார்த்தைகளே என் காதில் ஒலித்து கொண்டிருந்தது. இதை குரு எப்படித்தான் கவனித்தாரோ தெரியவில்லை. அப்போது குரு ஓரு கதை சொன்னார். ஓர் பக்தர் ஒருவர் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு முன் அங்கிருந்த சேஷாத்திரி மகானிடம் உபதேசம் பெற்றுவிட்டு செல்லலாம் என நினைத்து அவரிடம் சென்று ஆசிபெற்று, அருகில் இருக்கும் இரமணரை பார்த்துவிட்டு கிரிவலம் செல்கிறேன் என்று கூறி புறப்பட்டாராம்.
அதற்கு சேஷாத்திரி மகான் அவன்கிட்டயா போற போ, போ, அவன் உன்னை கொல்லாமால் விட மாட்டான் என்றாராம். அந்த பக்தருக்கு ஒன்றும் புரியவில்லை. இரமணாசிரமம் நெருங்க நெருங்க பயம் அதிகமாகி அங்கு செல்லாமலே கிரிவலம் புறப்பட்டாராம். அது எப்படி அவர் கொல்லுவார் என்ற சிந்தனை எனக்குள் எழுந்ததை மீண்டும் உள்வாங்கிய குரு கதையை விவரித்தார் உன்னை கொல்லாமல் விடமாட்டான் என்று சேஷாத்திரி கூறியது இவ்வுடலை அல்ல உடலில் மறைபொருளாக இருக்கும் ’நான்‘ என்ற அகங்காரத்தை என்றார்.
அப்போது தான் எனக்கு புரிந்தது ‘யோகி ஶ்ரீராம் பாபா’அவர்கள் சீரடியில் குணசேகரை கண்டித்ததும் உன்னை அழிக்காமல் விடமாட்டேன் என கூறியதும் அவரை அல்ல, அவருக்குள் இருக்கும் நான் என்ற அகங்காரத்தைதான் என்பதை சத்சங்கம் வாயிலாக அறிந்து கொண்டேன் மேலும் இம்மாதிரியான அரக்க குண நபர்களை அணுகும் போதெல்லாம் அவர்கள் அகங்காரத்தால் செய்கிறார்கள் என்பதை உள்வாங்கி அதற்கேற்றார் போல் பல்வேறு யுக்திகளை கையாள்கின்றனர் என்பதும் அப்போது தான் எனக்கு புரிந்தது.
மேலும், தன்னை நாடி வரும் ஒவ்வொருவரின் நிலையை நான் பார்ப்பதில்லை. மாறாக அவர்களின் ஆன்மாவையே பார்க்கிறேன். அதை நீங்களும் உணர்வதற்கு உண்டான வழியை தான் சத்சங்கம் மூலமாக நான் உங்களுக்கு விவரிக்கிறேன் என்று கூறினார்.
எனவே குருவின் வார்த்தைகளும், செயல்களும் நாம் நினைப்பதைப் போன்று சாதாரணமானவை அல்ல. அவை சூட்சுமமானவை. குரு ஒருவர் ‘உன்னைக் கொன்று விடுவேன்’ என்றால் நாம் நினைக்கின்ற பொருளில் குரு கூறுவாரா என்று சற்றே கூர்ந்து யோசித்தால் அதற்கு நாம் நினைக்கின்ற பொருள் இல்லை. அதற்குள் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம் அல்லவா?
அர்த்தம் பொதிந்த வார்த்தைகளுக்கு நாம் நம்முடைய நிலையில் இருந்து அர்த்தம் பண்ணிக்கொள்வது மாபெரும் தவறு என்று இந்த சந்தர்ப்பங்கள் மூலம் நான் நன்குணர்ந்து கொண்டேன்.