பாபா காட்டும் பாதை
பாபா காட்டும் பாதை
ஒருநாள் பிரம்ம ஞானத்தை காட்டும் வகையில் பாபா நீண்ட விளக்கம் ஒன்றை அளித்தார். இதோ அந்த விளக்கம்.
சில பானைகளில் தண்ணீர் நிரப்பி சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு போன்ற வண்ணப் பொடிகளை கலக்கினால் ஒவ்வொரு பானை தண்ணீரும் ஒவ்வொருவிதமான கலரில் காட்சியளிக்கும். பானைகளில் நிரப்பப்பட்ட தண்ணீர் ஒன்றுதான். ஆனால் வண்ணங்கள் கலந்ததால் நிறம் மாறுபடுகின்றன அல்லவா?
அந்த வண்ணங்களை பானைகளில் இருந்து நாம் பிரித்து எடுத்து விட்டால் அங்கு வெறும் தண்ணீர்தான் இருக்கும். இப்படிப் பட்டதுதான் ஆத்மா. பானைகளில் இருந்த பல்வேறு வண்ணங்களை உடல்களாக கருத வேண்டும். அதாவது ஆத்மாவும், உடலும் ஒன்று சேரும்போது தான் பல்வேறு வண்ணங்களை போல பல்வேறு உணர்வுகளை கொடுக்கின்றன.
உடம்பில் உள்ள இதயம் மகிழ்ச்சியையும், துன்பத்தையும் வெளிப்படுத்தும்போது ஆத்மா தன்நிலை மாறாமல் அப்படியே இருக்கும். ஆத்மாவை பொறுத்தவரை அதற்கு யாரிடமும் எந்த வித்தியாசமும் கிடையாது. ஒரே நிலையில்தான் எல்லோரது உடம்பிலும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. அதுதான் உண்மையான வடிவம்.
இந்த அடிப்படை தத்துவத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மெய்ஞான உணர்வு ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. ஆனால் ஒவ்வொருவரின் பருவத்துக்கு ஏற்ப அவை மாறுபட்டுகிறது. குறிப்பாக குழந்தை பருவம், இளமை பருவம், திருமண பருவம், உழைக்கும் பருவம், வயதான பருவம், முதுமை பருவம் என்று அவை மாறுபடும்.
இந்த மாறுபட்ட நிலைகளில் நல்ல ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். எதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிதல் இருந்தால் ஆன்மீகத்தில் முக்தியை நோக்கி மனம் செல்லும்.
அதே சமயத்தில் இந்த உணர்வுடன் கலந்தவர்களை ஞானிகள் என்று அழைக்கிறார்கள். இந்த 3 வகையான உணர்வுகள் வேறு வேறு நிலைகளில் இருந்தாலும் ஆத்மா ஒன்றுதான். ஒரு ராஜாங்கத்தில் அரசன், அதிகாரி, போர் வீரர் என்று இருப்பது போல இதை சொல்லலாம். ராஜாங்கத்தை ஆட்சி செய்யும் பொறுப்பு இந்த 3 பேருக்குமே இருக்கிறது. ஆனால் 3 பேரின் இயல்புக்கும், தன்மைக்கும், பொறுப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது.
அரசன் யானையில் வருவான், அதிகாரி குதிரையில் வருவான், போர் வீரன் நடந்து போவான். அரசன் எதையெல்லாம் நினைக்கிறானோ அதுவெல்லாம் நடக்கும். அதையொட்டிதான் அதிகாரியும், போர் வீரனும் நடந்து கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் அரசனின் சட்ட திட்டங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும்.
ஒருநாள் அரசன் இறந்து விடுவான். ஆனால் அவனால் ஆளப்பட்ட அரசாங்கம் இருக்கும். அரசனின் வாரிசு புதிய பொறுப்பை ஏற்பார். ஆனால் அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் மாறாது. அதிகாரி, போர் வீரனின் செயல்பாடுகளும் மாறாது. இதேதான் ஆத்மாவுக்கு பொருந்தும். ஆத்மா வரும்-போகும். ஆனால் அதன் நிலை மாறாது. இதை உணர்ந்தால் தன்நிலையை உணர முடியும். தன்நிலை உணர்ந்தால் பிரம்மத் துடன் ஐக்கியமாக முடியும். எவருக்கு இந்த அனுபவமும், பாக்கியமும் கிடைக்கிறதோ அவர் பிரம்ம ஞானம் பெறுகிறார்.
மெய்ஞான உணர்வு பெற்றவர்களில் ஒருவருக்கு அதிக பலனும், சிலருக்கு குறைவான பலனும் கிடைக்கலாம். மனிதர்கள் தங்களுடைய அறிவுக்கும், பக்குவத்துக்கும் ஏற்ப அடைந்திருக்கும் தகுதியை வைத்தே மெய்ஞான உணர்வு வேறுபடுகின்றது. மெய்ஞான உணர்வும், மாயையும் இணைந்தே இருக்கும். அப்படி இணைந்ததுதான் இந்த உலகம்.
இந்த உலகம் மாயையால் சூழப்பட்டு இருக்கிறது. மெய்ஞான உணர்வில் இருந்து மாயையை பிரிக்க இயலாது. என்றாலும் மாயைக்கு ஒருநாள் முடிவு உண்டு. ஆனால் பிரம்மத்தின் மெய்ஞான உணர்வுக்கு என்றுமே முடிவு கிடையாது. மெய்ஞான உணர்வு அழிவற்றது. அது தொடர்ந்து என்றென்றும் இருந்து கொண்டே இருக்கும். அதன் ரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்களை நீங்களே புரிந்து கொண்ட பிறகு அந்த நிலையை பேரின்ப நிலையாக மாற்ற வேண்டும். அந்த பேரின்ப நிலையை ஒவ்வொரு நாளும் அனுபவிக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் மீண்டும் மாயை வலையில் சிக்கி அறியாமைக்குள் வீழ்ந்து விடக்கூடாது.
மாயை மிகவும் மோசமானது. அதை நீங்கள் சாதாரணமாக நினைக்காதீர்கள். அது கடலை விட ஆழமானது. வானத்தை விட அளவற்றது. அதை அளவிடுவது கடினமானது. நான் என்ற உணர்வு மாயையால்தான் நமக்கு வருகிறது. மாயை நமக்குள் புகுந்து கொண்டால் நமக்கு உண்மைகளை புரிந்து கொள்ளும் சக்தி குறைந்து விடும்.
உண்மையையும், நம் உலகையும் மாயை முழுமையாக நம்மிடம் இருந்து மறைத்து விடும். மாயையிடம் மேற்கண்ட 2 குணங்களும் மிக அதிகமாக உண்டு. மாயை நம்மிடம் அதிகமானால் பொய்மையை அதிகரிக்க செய்யும். வெளி தோற்றத்தில் நாம் ஏமாற மாயை வழிவகுத்து விடும். இந்த நிலை அதிகமானால் ஒரு கட்டத்தில் மாயை நம் ஞானத்தையே முற்றிலும் கட்டுப்படுத்தி அழித்து சூனியம் ஆக்கி விடும். எனவே மாயையிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் மாயையால் ஏமாற்றப்படுகிறார்கள். ஒவ்வொருவரிடமும் அவர்களை சுற்றி மாயத் திரை இருந்து கொண்டே இருக்கும். மாயத் திரை சூழ்ந்து இருந்தால் உண்மையான தன்மை எடுபடாது. பிரம்மம் என்னும் உண்மையை உணர முடியாமலேயே தவிப்பான நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள்..
இப்படிப் பட்ட சூழ்நிலையைதான் மக்கள் மத்தியில் மாயை உண்டாக்குகிறது.
அதாவது ஒருவனது புத்தியில் உண்மை நிலையை மறைத்து பொய்யான ஒரு தோற்றத்தை மாயை மிக எளிதாக ஏற்படுத்தி விடுகிறது. அந்த பொய் தோற்றம் அதிகமாகும் போது பிரம்ம ஞானமே நினைவுக்கு வராது. மாயைக்கு அடிமையாகி விட்டால் அந்த பழக்கமே அவனுக்கு நிரந்தரமாகி விடும். பிறகு அதிலிருந்து மீள்வது கஷ்டம்
.
இப்படிப்பட்ட மாயை ஏற்படுத்தும் மர்ம திரையில் இருந்து என் பக்தர்கள் ஒவ்வொருவரும் விலகி வரவேண்டும். பிரம்மத்தை உணர வேண்டும். பிரம்ம ஞானத்தை பெற வேண்டும். அந்த ஞானம் வரவேண்டுமானால் மாயை இல்லாத மெய்ஞான உணர்வு தலைதூக்க வேண்டும். மெய்ஞான உணர்வு உங்கள் ஒவ்வொருவரிடமும் அதிகமானால் மட்டும் தான் உண்மை நிலையை தெரிந்து கொள்வீர்கள்.
உண்மை புரியும்போது நாம்தான் இந்த உலகம் என்ற உணர்வு உங்களுக்கு தெரிந்து விடும். மாயையை எவ்வளவு சீக்கிரமாக விரட்ட முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக விரட்டுங்கள். தண்ணீரில் உள்ள அழுக்கை போக்கினால்தான் நல்ல சுத்தமான தண்ணீர் கிடைக்கும். அதுபோல மெய்ஞான உணர்வால் மாயை என்னும் மன அழுக்கை, குப்பைகளை போக்குங்கள்
.
அந்த மன குப்பை அழுக்குகள் போக்கப் படும் போது மாயை மனதுக்குள் இருக்காது. மனம் வெறுமை ஆகும். அப்போது நாம் யார் என்ற உண்மையை அறிந்து புரிந்து கொள்ள முடியும். இப்போது உங்களுக்கு மாயைக்கும், ஆத்மாவுக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்திருக்கும். ஆத்மாவே உண்மையானது.
நான் உங்களுக்கு காட்டும் பாதையும் இதுதான். பிரம்ம ஞானத்தை அடைய வேண்டுமானால் முதலில் ஆத்மாவை புரிந்து கொண்டு அதை உணருங்கள். ஆத்மாவை பற்றி நிறைய சிந்தித்துப் பாருங்கள். அதை சிந்திக்கும் போது உங்களுக்குள் நிச்சயம் மாற்றம் வரும். ஆத்மாவை நினைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். ஆத்மா எவ்வளவு புனிதமானது என்பதை நினைத்து பார்த்து பக்குவம் அடைவீர்கள்.
ஆத்மாதான் அனைத்துக்கும் அடித்தளம். உங்கள் ஆத்மாவை நீங்கள் நிச்சயம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆத்மாவின் மகத்துவம் அளவிட முடியாதது. ஆத்மாவை தெரிந்து கொள்ளாமல் நிச்சயம் உங்களால் பரமாத்மாவை தெரிந்து கொள்ளவே முடியாது.
ஆத்மா பலம் பெற வேண்டும். அதற்கு ஞானத்தை பெற வேண்டும். மெய்ஞான உணர்வுடன் ஆத்மா பலம் பெறுமானால் இந்த உலகத்தில் முடியாதது எதுவுமே இல்லை. எனவே மெய்ஞான உணர்வை நமக்குள் ஏற்படுத்தும் கருத்துக்களை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளுங்கள். மெய்ஞான உணர்வு பெற பெற அறியாமை நீங்கும். நான் யார் என்பது விளங்கும். நான் ஆத்மா என்பதை அறிந்து கொண்டபின், பிரம்ம ஞானத்தை எளிதில் தெரிந்து கொள்வீர்கள். நான் காட்டிய இந்த பாதையை ஒரு போதும் மறக்காதீர்கள். இவ்வாறு பாபா பக்தர்களுக்கு விளக்கம் அளித்தார்.
****