சாய் சரிதம். கதை வடிவில்
சாய் சரிதம்.
கதை வடிவில்
வே. ஸ்ரீராம்.
எனது கதைகளை உங்களது உள்ளத்தில் பதிவேற்றுங்கள். ஒவ்வொரு கதையும் தரும் குறிப்பு நுட்பத்தை நன்றாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அதனால் உங்களது மனத்தின் பதைபதைப்பு மறைந் தொழியும். உங்களுக்கு உண்மையான சாந்தியும் அமைதியும் கிடைக்கும். எனது கதைகள் உங்களுக்கு உண்மையான வழியைக் காட்டி ஆசீர்வதிக்கும்.
- ஸ்ரீ சீரடி சாய்பாபா.
அன்பிற்கினிய சாயி சொந்தங்கள் அனைவருக்கும் எமது பணிவான வணக்கங்கள். முதற்கண் யாம் எழுதிய “குருவைதேடி” தொடருக்கு அமோகமாக ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியினை சமர்ப்பிக்கின்றோம். குருவை தேடி நிறைவடைந்ததும் ஒரு மாத ஒய்விற்குப் பிறகு சாய் சரிதம் மூலம் மீண்டும் உங்களை சந்திக்க வந்திருக்கின்றேன். உங்களின் பேராதரவை வேண்டி,
சாய்சரிதம் என்பது சமுத்திரம். இது எதற்கு வேண்டாத வேலை என சிலர் நினைக்கலாம். கடுமையான வேலைதான். ஆனால் இதில் மூழ்கியவர்கள் அத்துனை பேரும் முத்தெடுத்திருக்கின்றார்கள்! நமக்கு முத்து கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. மூழ்கியாவது பார்ப்போமே! மூழ்க முடியாவிட்டாலும் பரவாயில்லை! காலையாவது நனைத்துக் கொள்வோமே!
எதையுமே செய்யாமல் வேடிக்கை மட்டும் பார்ப்பேன் என்றால் எப்படி? சாயி பக்தர்கள் அவ்விதம் கரையிலேயே நிற்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். நான் சமுத்திரத்திற்குள் இறங்கப்போகிறேன். என்னுடன் நீங்களும் சமுத்திரத்திற்குள் இறங்க தயாராகுங்கள்.
அப்படியானால் நாங்கள் இன்னும் சாய் பாபாவைப்பற்றி அறிந்து கொள்ளவில்லை என்கிறீர்களா என்று கோப்படாதீர்கள். ஆமாம் என்று கூறுவதற்கு முன்பாக மற்றொன்றை கூறிக்கொள்கிறேன். இங்கு சாயி சமுத்திரம் மட்டும் அல்ல, நிறைய சமுத்திரம் உண்டு, சிவ சமுத்திரம், விஷ்ணு சமுத்திரம், பிரம்மசமுத்திரம், அல்லா சமுத்திரம், கர்த்தர் சமுத்திரம், குரு நானக் சமுத்திரம் என்று ஏகப்பட்ட சமுத்திரங்கள்.
இவை எல்லா சமுத்திரங்களும் நமக்குத் தெரியும். எதில் முழுவதுமாக இறங்கியிருக்கிறோம் என்றால் உங்கள் பதில் என்னவாக இருக்கும். என்னவாக இருக்கும் என்பது எமக்குத் தெரியும். ஆகவே அதற்கு நீங்கள் பதில் சொல்லி உங்களை நீங்களே குழப்பிக் கொள்ள வேண்டாம்.
வாருங்கள் ஏதாவது ஒரு சமுத்திரத்தில் கடைசிவரை மூழ்கிப்பார்ப்போம். “எதைப்பிடித்தாலும் இறுக்கிப்பிடி” என்று சாயி சொல்லியிருக்கிறார் அல்லவா? எனவே இதுவரையில் கரையில் நின்று களித்தது போதும். வாருங்கள் சற்று நெருங்கிச் செல்வோம். முடிந்தவரை செல்வோம். எவ்வளவு தூரம் சென்றாலும் லாபம் நமக்குத்தானே!
அன்பிற்கினிய சாயி பக்த வாசகர்களே! பகவான் சாயி வாழ்ந்த காலத்தில், அவரோடு வாழ்ந்த மாந்தர்களுடன் நாமும் சேர்ந்து வாழ்ந்து வருவோம் வாருங்கள்!
அத்தியாயம்: 1
என் பெயர் கோவிந்த ரகுநாத் தபோல்கர் 1859 ஆம் வருடம் தாணே ஜில்லாவில் ஒரு சிற்றூரில் பிறந்தேன்.
எனது குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்ததினால் என் தந்தை என்னை மிகவும் சிரமப்பட்டு ஐந்தாம் வகுப்பு வரை படிக்க வைத்தார். அதற்குமேல் என் தந்தைக்கு வசதி இல்லாததனால் நான் எனது படிப்பை நிறுத்தி விட்டு வீட்டிலேயே இருக்க வேண்டியதாக இருந்தது.
சில வருடங்கள் கழித்து எட்டு ரூபாய் சம்பளத்தில் எனக்கு ஆசிரியர் உத்யோகம் கிடைத்தது. வேலை செய்து கொண்டே ரெவினியூ பரிச்சை எழுதி தேர்வானதால் ஒரு ஆபீஸில் குமாஸ்தா வேலையும், பிறகு காட்டிலாக்காவில் உத்யோகமும் கிடைத்தது. 1901 ல் நிரந்தரமாக மாம்லத்தார் பதவியில் நியமிக்கப்பட்டேன்.
அதன்பிறகு 1916 ஆம் வருடம் நான் ஓய்வு பெறும் வரை பல்வேறு இடங்களில் பணி செய்தேன். 1903 லிருந்து 1907 வரை பாந்த்ராவில் பணிபுரிந்தபோதுதான் என் வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக வக்கீல் எச். எஸ். தீட்சித்திடம் நட்பு உண்டானது. 1909 ஆம் வருடம் எச்.எஸ். தீட்சித் அவர்களை அவரது நண்பர் திரு. நானா சாஹேப் சாந்தோர்கர் அவர்கள் சீரடி அழைத்துச் சென்று பாபாவிடம் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
நாங்கள் இருவரும் ஸ்ரீ மத் பகவத் கீதையை பாராயணம் செய்து வந்தோம். 1909 ஆம் ஆண்டு தீட்சித் எனக்கு சிறிய அளவிலான பாபாவின் புகைப்படம் ஒன்றை அளித்து இவர் பெயர் சாயி. இவர் ஓர் “அதிசயமான மகாத்மா” என்று அறிமுகப்படுத்தினார். அதுதான் எனது முதல் பாபாவின் தரிசனம்.
பாபாவின் படத்தைப் பார்த்ததில் இருந்து எனக்கு சாயியை தரிசிக்க வேண்டும் என்ற ஏதோ உந்துதல் ஏற்பட்டது. உடனடியாக சர்க்காரிடம் ஒரு மாதம் விடுமுறை கேட்டு விண்ணப்பித்தேன். அதுவும் உடனே மறுக்கப்பட்டது. வேறு என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தேன்.
அப்போது நான் “காடே” ஜில்லாவில் பணி புரிந்து கொண்டிருந்தேன். அங்கிருந்து சீரடி வெகுதூரத்தில் இருந்தது. நான் ஏற்கனவே பணிபுரிந்த “பாந்த்ரா” வில் இருந்து சீரடி அருகில் இருந்தது. எனவே பாந்த்ராவிற்கு பணி மாறுதல் கேட்டால் என்ன என்று தோன்றியது. உடனடியாக பணி மாறுதலுக்கு விண்ணப்பித்தேன்.
ஏற்கவே நான் இரண்டுமுறை பாந்த்ராவில் பணியில் இருந்ததால் அதுவும் மறுக்கப்பட்டது. மனம் சலிப்படைந்த நிலையில் இருக்கும் போதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.
லோனாவாலாவில் பணிபுரியும் எனது நெருங்கிய நண்பர் ஒருவருக்கு
திருமணம் முடிந்து நீண்டகாலம் குழந்தைவரம் கிட்டாமல் இருந்தது.
அவருடைய குருவின் அருளால் பல காலம் கழித்து ஒர் மகன் பிறந்தான்.
நல்ல குணங்களுடன் மிகவும் ஆரோக்கியமாக இருந்தவன் திடீரென கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். மருத்துவர்கள், மாந்திரீகவாதிகள், அனைவரும் முயற்சித்தார்கள். மனித முயற்சிகளான எல்லா உபாயங்களும் நடந்தன. முடிவாக நண்பரது குரு குழந்தைக்கு அருகிலேயே அமர்ந்து தியானம் செய்தார். ஆனால் அந்த பாலகன் இறந்துவிட்டான்.
உலகினில் மரணம் மட்டுமே நிலையானது என்பது ஏனோ அப்போதைய மனநிலையில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத தத்துவமாக இருந்தது. அதனால் என் நண்பனின் குழந்தையின் மரணச்செய்தியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
என்னுடைய துக்கம், அறியாமை அனைத்தும் சேர்ந்து, கோபமாக உருமாறி, நண்பரின் குருமேல் பாய்ந்தது. தன்னையே பரிபூரணமாக சரணாகதியடைந்திருக்கும் ஒரு பக்தனின் மகனை காப்பாற்ற முடியாத குருவினால் என்ன பிரயோஜனம்? ஒரு குருவால் சீடன் அடைந்த பலன்தான் என்ன?
பிராப்த கர்மா என்பது தவிர்க்க முடியாததாக இருந்தால் எதற்கு வேண்டுதல்? எதற்கு பிரார்த்தனை? எதற்கு குரு நம்பிக்கை? நான் ஏன் சீரடிக்குப் போக வேண்டும்? குருவே கதி என்றிருந்த என நண்பனின் வாழ்க்கை தலைகீழாக மாறியது ஏன்? குரு அருகில் இருந்தும் என் நண்பன் பெற்ற ஆனந்தம் தான் என்ன?
தலை எழுத்துப்படி நடப்பதுதான் நடக்கும் என்றால் குரு என்பவர் இல்லாவிட்டால் என்ன குறைந்துவிடப் போகிறது? என் வினைப்பயனுக்கு குரு என்ன செய்துவிடமுடியும்? நடப்பது நடந்தே தீரும். என்ன முயற்சிக்கினும் நிற்கப் போவதில்லை. என்றால் என் இடத்தை விட்டு நான் ஏன் குரு இருக்கும் இடம் தேடி ஓட வேண்டும்.
எதார்த்தமாக, எதிர்பாராமல், ஆசைப்படாமல் கிடைக்கும் சுக துக்கங்களை அனுபவித்தே தீர வேண்டும். நிகழ்காலத்திலோ, எதிர்காலத்திலோ நடக்கப்போவதில் இருந்து யாரும் தப்பிக்கமுடியாது. இதில் குருவிடம் சென்றால் மட்டும் என்ன நடக்கும் என்று எண்ணி
சீரடிக்குச் சென்று சாயியை சந்திப்பததாக இல்லை என்று முடிவெடுத்து சீரடிப்பயணத்தை தள்ளிப்போட்டேன்.
ஆனால் என்னுடைய கர்மபலனோ, சீரடியில் வசிக்கும் பக்கிரி சாயியின் சங்கல்பமோ, நான் வேண்டாம் என்றது நடந்தது. பிறகு என்ன செய்வது. எல்லாவற்றையும் ஓரம் கட்டிவிட்டு எது நடக்கின்றதோ அதன் பின்னே ஓட வேண்டியதுதான். ஆம் என் கர்ம பலன் என்னை சீரடிக்கு இழுத்துக் கொள்ள முடிவு செய்தது.
சில மாதங்கள் போயிருக்கும். அது ஒரு வியாழக்கிழமை. நான் அலுவலகத்தி ற்குச் சென்ற சில நிமிடங்களில் கமிஷ்னர் என்னை அழைத்து. பாந்த்ராவில் உள்ள உதவி கலெக்டர் எதிர்பாராத விதமாக சென்ற மாதம் காலமாகி விட்டார். நீங்கள் ஏற்கனவே பாந்த்ராவிற்கு பணி மாற்றம் கேட்டிருந்தீர்கள் அல்லவா. ஆகையால் அவரது இடத்திற்கு உங்களை நியமித்திருக்கின்றோம். நீங்கள் பாந்த்ரா செல்ல தயாராகுங்கள் என்று உத்தரவிட்டார்.
எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. சிறிது குழப்பமாகத்தான் இருந்தது. இருந்தாலும் என் உள் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத ஆனந்தம் பரவியது. நான் கமிஷ்னரிடம் பாந்த்ரா செல்ல சம்மதம் தெரிவித்து பொறுப்பேற்றுக்கொண்டு பாந்த்ரா சென்றேன்.
நான் பாந்த்ராவின் உதவி கலெட்ராக பணி ஏற்றுக்கொண்ட இரண்டாவது மாதம் ஒரு நாள் காலையில் எனது உயர் அதிகாரியும் எனது நெருங்கிய நண்பருமான, நானா சாஹிப் சாந்தோர்கர், எங்கள் கிராமத்திற்கு வந்து என்னைப் பார்க்க வேண்டும் என்று ஆள் அனுப்பினார்.
நான் மிக விரைவாக வந்து நானாவை சந்தித்தேன். நான் அவரை சந்தித்த அந்த விநாடி முதல் சீரடிக்கதை ஆரம்பமாகியது. அலுவல் நிமித்தமாக தாதருக்கு செல்ல வேண்டி இருந்தது. வண்டி ஒரு மணிநேரம் தாமதமாம். அது தான் உன்னைப்பார்த்துவிட்டுப் போகலாம் என்று ஆள் விட்டு அனுப்பினேன். என்ற நானா சாஹிப், “சாயியின் தரிசனத்திற்கு நீ எப்போது போகிறாய்”? சீரடிக்குச் செல்வதில் நீ ஏன் காலதாமதம் செய்கிறாய்? மனதில் நீ இன்னும் முடிவு செய்யவில்லையா? என்று அடுக்கடுக்கான கேள்விகளால் என்னை துளைத்தார்.
நான் ஒருவாறு நெளிய ஆரம்பித்தேன். பிறகு என் மனதில் உள்ள சங்கடத்தை முழுவதுமாக நானாவிடம் விவரித்தேன். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட நானா, அப்படியானால் நீ “உன்னை மட்டுமே நம்புகிறாய்” அப்படித்தானே! என்றார்.
அப்படியல்ல, “கையில் இருக்கும் வெண்ணையை விட்டுவிட்டு நெய்க்கு அலைவானேன்” என்று யோசித்தேன் என்றேன் நான்.
நெய்யே தயாராக இருக்கும்போது. கையில் இருக்கும் வெண்ணையை உருக்கி நெய்யாக்குவரை எவனாவது காத்திருப்பானா? வெண்ணைக்கும், நெய்க்கும் உள்ள வித்தியாசத்தை கூட உணராதவனா நீ! வெண்ணையை நெய்யாக உருக்க உனக்கு பக்குவம் தெரியுமா? அதற்கு காலம் ஒத்துவரவேண்டாமா?
சரி! அப்படியே உன் கூற்றுக்கே வருகிறேன். உன் கையில் இருக்கும் வெண்ணை தீர்ந்து போகாமல் காலம் முழுவதும் அப்படியே இருக்குமா என்ன? ஒரு நாள் தீர்ந்துவிட்டால் என்ன செய்வாய்? “நான் என்னை மட்டுமே நம்புகிறவன்” என்பதெல்லாம் ரத்த ஓட்டம் இருக்கும் வரைக்கும்தான். ரத்தம் சுண்டிவிட்டால் ஊன்றி நடக்க ஒரு குச்சியாவது கிடைக்காதா என்று ஏங்குவாய்!
நான் கூறுவதைக்கேள் ரகுநாத், சாயி மகான்களுக்கெல்லாம் மகான். அவர் அறியாமல் இங்கு எதுவும் நடப்பதில்லை. இறைவன் நம்மேல் வைத்த கருணைதான். இறைவனின் பேரொளியே சீரடியில் வந்து இறங்கியிருக்கிறது. இவ்வுலகில் நடக்கும் சம்பவங்களை எல்லாம் ஒன்றோடொன்று முடிச்சுப்போட்டு தர்க்கவாதம் பண்ணிக் கொண்டிருந் தால் நீ யார் என்பதை எப்போது உணர்வாய். சாயி சாதாரணமான ஆளில்லை உனது ஏழேழு சென்மங்களையும் அறிந்தவர்.
எனவே உனது, விதண்டாவாதங் களையும், தர்க்க சிந்தனையையும் தூர வைத்துவிட்டு சீரடி சென்று சாயியை தரிசனம் செய்! உனது ஆன்ம முன்னேற்றத்தின் சூட்சுமதாரி சாயி என்பதை உணர்வாய்! உன் நன்மைக்காக கூறுகிறேன். இனியும் என் வார்த்தையை தட்டாதே!
“இப்பொழுதே சீரடி செல்கிறேன்” என்று உறுதி கூறு என்று நானா என்னிடம் கேட்டார்.
நானாவின் நலம் தரும் அன்பு நிறைந்த அறிவுரைகளும், அவர் தந்த விளக்கங்களும் என்னை சீரடிக்குப் போகத் தூண்டின. கண்டிப்பாக இன்றே சீரடிக்கு புறப்படுகிறேன். என்று நானாவிடம் உறுதியளித்தேன்.
அதன்பிறகு அலுவலகத்திற்கு பத்து நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு பயணத்திற்கு தேவையான பொருட்களை தயார் செய்து கொண்டு அன்று மாலையே பாந்த்ரா இரயில் நிலையம் சென்றேன். அங்கு மன்மாட் செல்லும் வண்டி புறப்படத் தயாராக இருந்தது. அந்த வண்டி தாதரில் நிற்கும் என்று நினைத்து தாதருக்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு இரயிலில் ஏறி அமர்ந்து கொண்டேன்.
வண்டி புறப்படும்போது, இல்ஸாமிய இளைஞன் ஒருவன் என்னருகே வந்து எனது பொருட்களைப் பார்த்துவிட்டு, எங்கே பயணம் என்று கேட்டான். நான் அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு, தாதர் சென்று மன்மாட் இரயிலை பிடிக்கப்போகிறேன் என்று கூறினேன்.
அவன் உடனே என்னிடம், மன்மாட் செல்லும் மெயில் தாதரில் நிற்காது. போர்பந்தரில்தான் நிற்கும். எனவே நீ தாதரில் இறங்காதே. போர்பந்தரில் இறங்கிக்கொள் என்று ஆலோசனை கூறினான். நல்லவேலை என் நேரம் நல்லநேரமாக இருந்தததால் ஒன்றும் யோசிக்காமல் இஸ்லாமிய இளைஞன் கூறியதுபோல் போர்பந்தரில் இறங்கிக்கொண்டேன்.
நான் இறங்கிய சிறிது நேரத்திலேயே, மன்மாட் மெயில் வரவும் அதில் ஏறிக்கொண்டு மறுநாள் காலை10 மணிக்கெல்லாம் சிரமமில்லாமல் சீரடி வந்து சேர்ந்தேன். ஒரு வேலை இஸ்லாமிய இளைஞன் கூறியதைக் கேட்காமல் எனது சிந்தனைப்படி நடந்து தாதரில் மெயில் கிடைக்காமல் போயிருந்தால் எனது சஞ்சலப்பட்ட மனது மீண்டும் மரத்தில் ஏறியிருக்கும்.
சீரடியில் எனக்காக தீட்சித் அவர்களும், பாபாவின் பரமபக்தனான தாத்யா சாகிப் நூல்கரும் “ஸாதே வாடாவில்” காத்துக்கொண்டிருந்தனர் 1910 ஆம் ஆண்டு பக்தர்கள் தங்குவதெற்கென்று சீரடியில் ஸாதே வாடா மட்டுமே இருந்தது. நான் குதிரை வண்டியில் இருந்து இறங்கியவுடனே சாயியியை தரிசிக்கவேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று.
என் சிரசினை அவரது பாதங்களில் சரணாகதி செய்து, எனது வந்தனத்தை எப்போது சாயிடம் சமர்ப்பிப்போம் என்று என் மனம் ஆனந்தக் குதியாட்டம் போட்டது.. எனவே நான் தீட்சித்திடம் கேட்ட முதல் கேள்வி, நான் எப்போது சாயியை தரிசிக்கலாம்?
இக்கேள்விக்கு தாத்யா சாகிப் நூல்கர் பதில் கூறினார். பாபா பக்தர்கள் கூட்டத்துடன் வாடாவில் இருக்கிறார். உங்கள் பெட்டி, படுக்கைகளை அறையில் வைத்துவிட்டு,உடனே போய் ஒரு தரிசனம் செய்து கொள்ளுங்கள். பிறகு பொறுமையாக குளித்துவிட்டு
பாபா மசூதிக்கு வந்தவுடன், மீண்டும் போய் தரிசிக்கலாம் என்றார்.
நான் உடனே பாபா இருக்கும் இடம் தேடி ஓடினேன். பாபா பக்தர்கள் கூட்டத்துடன் வாடாவில் நின்றிருந்தார். நான் அவரை தலைமுதல் கால் வரை பார்த்தேன். என் உடல் சிலிர்த்து எனக்கு எல்லையற்ற ஆனந்தம் உண்டாயிற்று. என் அத்தனை அவயங்களும் மண்ணில்பட அவரது பாதங்களில் சரண்புகுந்தேன்.
நானா சாஹிப் கூறியதைவிட உண்மையில் அதைவிட அதிகமாகவே உத்தம மாகானின் பேரொளியை பாபாவிடம் கண்டேன். சாயி தரிசனத்தால் நான் புண்ணியம் பெற்றேன். என் கண்கள் அதன் பயனை அடைந்தன. அந்த ரூபத்தை பார்த்தும் என்றுமே நான் காணாத, கேட்காத, அறியாத, பேரானந்தத்தை அடைந்தேன்.
என் பசி தாகங்கள் அடங்கின, இந்திரியங்கள் சம நிலையை அடைந்தன. சாயியின் சரணப்பரிசம், அவருடன் சம்பாசனை, இவை என் இல்வாழ்வுக்கு ஒரு பூரணத்துவத்தை அளிக்கப்போகின்றன. அந்தக் கணத்தில் இருந்து எனது புது வாழ்க்கை ஆரம்பமாகியது.
பாபாவின் தரிசனம் கிடைத்த அக்கணத்தில் இருந்து என் மனதில் இருந்த சஞ்சலம் பறந்தோடிவிட்டது. சாயியின் தொடர்பினால் என்னிடம் இருந்த பரமானந்தம் ஒளிவீசத் தொடங்கிவிட்டது. தேவையற்ற சிந்தனைகள் நீங்கிவிட்டது. பழைய தர்க்கங்கள் என்னை விட்டு ஓடிவிட்டன.
அவருடைய கருணை நோக்கினால் என் பழவினைகளின் தொகுப்பு அழிந்து போயிற்று. அவருடைய நாம சரணங்களே ஏதுமறியாத என் போன்றோருக்கு ஆத்மானுபூதியை வழங்கும் என்று என் மனதில் தோன்றியது. என்னுடைய பூர்வ புண்ணியத்தினால் காக்கையாக இருந்த நான் சாயி என்ற புனிதமான மானஸரோவரில் நீந்தும் அன்னப்பறவையாக மாறினேன்.
சாயி ஒரு மகாத்மா, சற்குரு, சாதுக்களின் பொக்கிஷம், பரமயோகி, பரம ஹம்சர், கோப, தாப உத்வேகங்களை அழிக்கின்ற புண்ணியாத்மாவின் தரிசனத்தால் நான் இப்போது பரம பவித்ரனாக மாறிவிட்டேன். என் பூர்வபுண்ணிய பலனால் என்க்கு சாயி கிடைத்தார்.
அதே நேரம் யார் மூலம் இந்த சத்சங்கம் கிட்டி என் மனதிற்கு பேரனுபவமாகிய பரமானந்தம் கிட்டியதோ அவர்களே எமக்கு நண்பர்களும், உறவினர்களும் ஆவார்கள். அவர்களைவிட நெருக்கமானவர்கள் இவ்வுலகினில் வேறு யாருமில்லை என்று மனதால் உறுதி ஏற்றுக்கொண்டேன்.
அவர்களுடைய இந்த மகத்தான உதவிக்கு என்னால் வேறு எந்த உபகாரமும் செய்ய முடியாது என்பதை நான் நன்கறிவேன். ஆகையால் என் கரங்களைக்கூப்பி என் தலையை அவர்களின் பாதங்களில் வைக்கிறேன்.
சாயி தரிசனம் செய்து வாடாவிற்கு வந்து திரு. தீட்சித் அவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் மல்க பேச்சற்று நின்றேன். என் நிலையை பரிபூரணமாக உணர்ந்த தீட்சித் என் முதுகில் தட்டிக் கொடுத்து, இனிமேல்தான் கதையே ஆரம்பமாகப்போகிறது. இதற்கே இப்படி வியந்துபோய் நின்றால் எப்படி? போய் குளித்து தயாராகுங்கள். சாயி மசூதிக்கு வந்ததும் சாவகாசமாக சென்று தரிசிக்கலாம் என்றார்.
-தரிசனம் தொடரும்