சாய் தியானாலயாவில் சாயி லீலா

சாய் தியானாலயாவில் சாயி லீலா

சாய் தியானாலயாவில் சாயி லீலா

ஜெயந்தி ஸ்ரீராம்.


இம்மாதம் அன்புச்சகோதரி லதா பாபு அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சாயி லீலையைக் காண்போம். 

2013 ஆம் ஆண்டு, எனது குழந்தைகளும், சகோதரி லதா அவர்களின் குழந்தைகளும் பள்ளியில் ஒன்றாக படித்து வந்தார்கள். அவர்களை அழைத்துவர பள்ளிக்குச் செல்லும்போது அறிமுகமானவர்தான் சகோதரி லதா அவர்கள். அவரைப் பார்க்கும்போதெல்லாம் மிகுந்த மனக்குழப்பத்தில் இருப்பது போன்று தோன்றும். அவரும் யாரிடமும் சரியாக பேசமாட்டார். அமைதியாக இருப்பார்.

காலப்போக்கில் நாங்கள் நல்ல சிநேகிதிகளாகிவிட்டோம். ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது, மனம் திறந்து அவர்களது குடும்ப கஷ்டங்களைப் பற்றிக் கூறினார். நானும் அவர்களிடம், நாங்கள் பாபா சென்டர் வைத்துள்ளோம். அங்கு பாபா பூஜை, யோகா, தியானம் எல்லாம் நடக்கிறது. நீங்களும் வந்து கலந்து கொள்ளுங்கள். நல்ல மாற்றம் கிடைக்கும் என்று பலமுறை கூறினேன்.

ஆனால், ஏனோ அவர்கள் அதில் ஆர்வம் காட்டாமல் இருந்து விட்டார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால், அவர்களுக்கு சாயி பாபாவைப் பற்றி ஏதும் தெரியாது. சாயி பாபா என்ற பெயரையே ஒரு சில முறைதான் கேட்டிருக்கின்றார்கள். தவிர சிறிய அளவிலான அவரது புகைப்படத்தை ஓரிருமுறை பார்த்ததோடு சரிதானாம். மற்றபடி பாபாவைப்பற்றி அவர்களுக்கு ஏதும் தெரியாது.

சில வாரங்கள் சென்றிருக்கும், என்ன தோன்றியதோ தெரியவில்லை. என்னிடம் கூட சொல்லாமல், திடீரென ஒரு நாள் பாபாவிற்கு பிரசாதம் செய்து கொண்டு சென்டருக்கு வந்தார்கள். வந்தவர்கள் சென்டரில் இருக்கும் எட்டடி உயர பாபாவின் திருஉருவத்தைப் பார்த்ததும் அப்படியே வியந்து போய் நின்றுவிட்டார்கள்.

அப்போதுதான் முதல்முறையாக எட்டடி உயர பாபாவின் உருவப்படத்தைப் பார்க்கின்றார்களாம். பார்த்ததுமே பாபாவின் உருவத்தில் லயித்துப்போய்  சிறிது நேரம் பாபாவையே பார்த்து கொண்டிருந்தார். பின்பு பிரசாதத்தை பாபாவிற்கு படைத்துவிட்டு, பாபாவின் முன்னால் சிறிது நேரம் கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருந்தார்.

கண்களைத் திறந்ததும் அவரை குருவிடம் அறிமுகப்படுத்தினேன். குருவும், நீங்கள் அதிகமான மன அழுத்தத்தில் இருக்கின்றீர்கள். இதற்கு பூஜை, புனஸ்காரங்கள் செய்து கொண்டிருப்பதனால் பலன் ஒன்றும் கிடைக்காது. நீங்கள் மனதளவிலும், உடலளவிலும், மிகவும் தளர்ந்து போயிருக்கின்றீர்கள். எனவே அவசியம் தியானம் செய்யுங்கள் என்று கூறி, பாபாவின் கதைகளைக்கூறி ஆறுதல் கூறினார்.

சகோதரி லதா அவர்கள் அதிலிருந்து தொடர்ந்து பாபாவிற்கு பிரசாதம் செய்து கொண்டு சென்டருக்கு வருவார். அவரே பிரசாதத்தை பாபாவிற்கு படைத்துவிட்டு அங்கிரு க்கும் பக்தர்களுக்கு கொடுத்து விட்டு செல்வார். இருப்பினும் அவருக்கு பாபாவின் பக்தியில் ஒரு அழுத்தமான பிடிப்பு இல்லாமல் இருந்தது.

அந்த சமயத்தில் அவர்களது வீட்டிற்கு அருகில் இருக்கும் அவர்களது நாத்தனார் வீட்டிற்கு அடிக்கடி சென்று 
வருவாராம். அவரது நாத்தனாரின் கணவர் தீவிர பாபாவின் பக்தர். இருப்பினும் ஒரு சில தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக இருந்திருக்கிறார். அதில் இருந்து விடுபட பாபாவிற்கு மாலையணிந்து விரதமிருந்திருக்கின்றார்.

அதில் இருந்து அவர் தீய பழக்க வழக்கங்களை விட்டுவிட்டு, நல்ல மாறுதலை அடைந்த அவர், தொடர்ந்து பாபாவிற்கு மாலையணிந்து சீரடிக்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றார். அவர் தொடர்ந்து சீரடிக்குச் சென்று வருவதைக்கண்ட சகோதரிக்கும் சாயி நாதரின் மேல் நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்திருக்கின்றது.

அதே நேரம் நமது குரு அவர்கள், “சாய் தியானாலயா ஆத்ம ஞான பீடம்” என்ற தியான கூடத்தை ஆரம்பித்தார். அந்த இடம் சகோதரியின் வீட்டிற்கு அருகிலேயே இருந்ததால் சகோதரியும் தொடர்ந்து பீடத்திற்கு வர ஆரம்பித்தார். மெல்ல, மெல்ல, குருவின் சத்சங்கத்தை கேட்கத் தொடங்கிய அவர், யோகா, தியானம் போன்றவற்றில் ஆர்வத்துடன் ஈடுபட ஆரம்பித்தார்.

பாபாவிடம் நான் காட்டிய பக்தி என் வாழ்க்கையை மாறியதோ இல்லையோ, என் மனம் மாறத் தொடங்கியது என்று கூறுகிறார். எதற்கெல்லாம் மனம் ஆசைப்பட்டு ஏங்கியதோ, அதெல்லாம் என்னை விட்டு நீங்க ஆரம்பித்தது. எதற்கெடுத்தாலும், நெருங்கிய உறவுகளைப்பற்றி கவலையும், பயமும் கொண்டிருந்தேனோ அதெல்லாம் என்னை விட்டு விலகியது.

வாழ்க்கையின் நிலையாமையை நன்கு உணர்ந்து கொண்டேன். அனைத்தையும் பாபாவிடம் ஒப்படைத்துவிட்டு முழுமையாக சரணாகதியாகும்படி எங்களது குரு அடிக்கடி கூறுவார். ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும், போகப்போக எனக்கு சரணாகதி தத்துவத்தின் முழு விளக்கமும் புரிந்தது.

சராசரி அனைத்து நடுத்தர குடும்பத்திற்குண்டான எல்லாப்
பிரட்சனைகளும் எனக்கும் இருந்தாலும், “எல்லாம் பாபாவே” என்ற தெளிந்த சிந்தனையோடு,மன இறுக்கம் இன்றி வாழ்க்கையை நகர்த்தக் கற்றுக் கொண்டேன்.

நான் பாபாவின் பக்தையான இரண்டாவது வருடமே பாபா என்னை சீரடிக்கு வர வாய்பளித்தார். என் நாத்தனார் குடும்பத்துடன் சீரடிக்குச் சென்று பாபாவை தரிசித்தேன். இருப்பினும் எனது முதல் பயணம் அவ்வளவு திருப்திகரமாக அமையவில்லை.

அதற்குப்பின்பு அடுத்தவருடமே எங்களது குரு ஸ்ரீராம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த சீரடி புனிதப் பயணத்தில் நானும் எனது இரண்டு மகன்களும் கலந்து கொண்டோம். அந்தப் பயணத்தில் தான் நான் பாபாவை முழுமையாக உணர்ந்து கொண்டேன். ஆறு நாட்கள் நாங்கள் ஐம்பது பேர் கொண்ட குழுவினருடன் மிகவும் ஆனந்தமாகவும், உற்சாகமாகவும், பாபாவின் கதைகளை கேட்டுக் கொண்டும், பாடிக்கொண்டும், சீரடிக்குச் சென்று பகவான் சாயிநாதரை தரிசித்தோம்.

இரண்டு பயணத்திலும் ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால் என்னுடன் என் கணவர் வரவில்லையே என்பதுதான். எனவே நான் பாபாவிடம் அடுத்தமுறை நான் சீரடிக்கு வரும்போது என் கணவரும் என்னுடன் வரவேண்டும் என்று பிரார்த்தனை வைத்தேன். அடுத்தவருடமே நான் என் கணவருடனும், குடும்பத்தினருடனும் சீரடி சென்று சாயியை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன்.

எங்களது பல வருடக் கனவான வீடு கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை எங்களது குருவின் மூலம் பாபாவிடம் வைத்தோம். சாய் தியானாலயாவின் அன்னதானத்திற்கு ஒன்பது வாரங்கள் உங்களால் முடிந்த தொகையை அளித்து வாருங்கள் என்று குரு அவர்கள் கூற நானும் தொடர்ந்து என்னால் முடிந்த காணிக்கையை கொடுத்துவந்தேன்.

அடுத்த ஆறு மாதங்களுக்குள் புது வீடு கட்டி புது மனை புகுவிழா வைத்தோம். அதற்கு எங்களது குரு, பகவான் சாயிநாதருடன் வந்து ஆசீர்வதித்தார். எனது மூத்த மகன் சுரேஷ் நிரந்தரமான நல்ல வேலையில் அமர வேண்டும். எனது இளைய மகன் கார்த்திக் நல்லபடியாக படிப்பை முடிக்க வேண்டும் என்று சாய் பாபாவிடம் பிரார்த்தனை வைத்திருக்கின்றேன்.

என் வாழ்க்கையில் எல்லாமே பாபாதான்! அவரை விட்டால் எங்களுக்கு வேறு கதி கிடையாது. நிச்சயம் எங்களின் பிரார்த்தனைகளை பகவான் சாயிநாதர் நிறைவேற்றுவார். அதில் சிறிதும் சந்தேகம் கிடையாது. இந்த தெளிவை எனக்கு அளித்த என் குரு திரு.ஸ்ரீராம் அவர்களுக்கும் என் சாய்அப்பாவிற்கும் என் மனமார்ந்த நன்றியினை சமர்ப்பிக்கின்றேன். என்று கூறி முடித்தார்.

அடுத்த மாதம் வேறெரு பக்த லீலாம்ருதத்துடன் சந்திக்கின்றேன்.
ஓம் சாய்ராம்.

தொடரும்.