“தகுதியை பெறு”

“தகுதியை பெறு”

“தகுதியை பெறு”

கடைக்காரரிடமிருந்து இனிப்புப் பொட்டலத்தைப் பெறுவது போல பாபாவிடம் இருந்து பிரம்மஞானம் பெற்றுவிடலாம் என்ற நோக்கத்துடன் பாபாவிடம் அவ்வப்போது சிலர் வருவார்கள். 

ஏற்கனவே நாம் சாயி சத்சரித்திரம் 16-17 ம் அத்தியாயத்தில் ஒரு பணக்கார மனிதர் பிரம்மஞானம் பெற பாபாவிடம் வந்த கதையை நாம் படித்து தெரிந்து கொண்டுள்ளோம். இப்போது அதைப்போன்று மற்றொரு நிகழ்வைக் காண்போம்.

ஒரு முறை ஒரு செல்வந்தர், பாபாவைத் தேடி சீரடிக்கு வந்தார். வந்தவர் மசூதிக்குச் சென்று பாபாவிடம் நேரடியாக “கடவுள் எப்படி இருப்பார்” எனக் கேட்டுவிட்டு பாபாவின் பதிலை எதிர்பார்த்து அவரின் முன்பு உட்கார்ந்துகொண்டார். அவரை மேலும் கீழும் பார்த்த பாபா பதில் எதுவும் கூறவில்லை. 

சிறிது நேரம் சென்றபின் அருகில் இருந்த பக்தர் ஒருவரை அழைத்த பாபா அவரிடம், பாக்சந்த் மார்வாடியிடம்  சென்று பாபாவிற்கு நூறு ரூபாய் வேண்டுமாம் என்று கேட்டு வாங்கி வா என்றார். 

உடனே அந்த பக்தர் பாக்சந்த் மார்வாடியின் வீட்டிற்குச் சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த அவர், மார்வாடி தம் கையில் தற்போதைக்கு பணமில்லை என்று கூறி, தங்களுக்கு வணக்கத்தை தெரிவிக்கச் சொன்னார் என்று கூறினார். 

உடனே பாபா நூறுரூபாய் கடனுக்காக அவரை வேறு ஒரு மார்வாடியிடம் அனுப்பினார். இந்த முறையும் பக்தர் அதே பதிலுடன் திரும்பி வந்தார்.

அடுத்து பாபா, நானா சந்தோர்க்கரை அழைத்து வா எனப் பணித்தார். நானா வந்தார். தமக்கு 100 ரூபாய் வேண்டும் என பாபா நானாவிடம் கேட்டார். உடனே நானா பாக்சந்த் மார்வாடிக்கு ரூ.100 உடனடியாக அனுப்பி வைக்கும்படி ஒரு சீட்டு எழுதி ஒரு நபரிடம் அனுப்பினார். 

மார்வாடியிடமிருந்து ஒரே நிமிடத்தில் பணம் வந்துவிட்டது! நானா அதை பாபாவிடம் அளித்தார்.பணத்தைப் பெற்றுக்கொண்ட பாபா, செல்வந்தரைப் பார்த்து “இவ்வுலகில் எல்லாமே இதைப்போலத்தான்” என்றார்.

பொறுமையிழந்த செல்வந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. கடவுளைப் பற்றி கேட்டபோது பாபா தனக்கு பதில் எதுவும் கூறாமல் கடன் பெறுவதற்காக ஒருவரை எங்கெங்கோ அனுப்பிக் கொண்டிருக்கிறார்! பாபா ஏன் அப்படி செய்தார் என தாஸ்கணு மகராஜ் அவர்களிடம் சென்று விளக்கம் கேட்டார். 

பாபா உனக்கு மிகத் தெளிவாக  பதிலளித்திருக்கின்றாரே என்று  கூறினார் தாஸ்கணு. செல்வந்தரோ, எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. நீங்கள்தான் எனக்கு விளக்கிக்கூற வேண்டும் என்றவருக்கு தாஸ்கவே விளக்கிக்கூறினார்.

பாபா உட்பட மற்றவர்கள் பணம் கேட்டபோது, பணம் உடனே கிடைக்கவில்லை அல்லவா? ஆனால் நானா சாகேப் கேட்டவுடன் பணம் உடனே வந்துவிட்டது பார்த்தீர்களா! இதில் இருந்து என்ன தெரிகின்றது. கடவுள் எத்தகையவர் என்று கேட்பதால் மட்டும் ஒருவர் அதை அறிந்து கொண்டுவிட முடியாது. 

அதைத் தெரிந்துகொள்ள யார் தகுதி பெற்றிருக்கிறாரோ, யாருக்கு அதை தெரிந்துகொள்ளும் யோக்கியதை இருக்கிறதோ,அவரே அந்த ஞானத்தைப் பெறுகிறார்.ஆகவே பாபாவின் பதில், பிரம்மனை அறிய விரும்புவதற்கு முன்பு “தகுதியைப் பெறு” என்பதேயாகும். என்று கூறினார்.

**