"குரு பூர்ணிமா"

"குரு பூர்ணிமா"

"குரு பூர்ணிமா"

சுந்தர்சாய்

ஜூலை 3 திங்கட்கிழமை நம் ஆன்மீக  மற்றும் லெளகீக வாழ்வில் மிக உன்னதமான நாள். ஆம் நண்பர்களே! நம் வாழ்வில் மாய இருளில் தவிக்கும் நம் மனதிற்குள் இருக்கும் இருளை நீக்கி பரம் ஜோதியைக் காட்டும் நம் இரு குரு மகான்களை நன்றியுடன் வழிபடும் நன்னாள். 

இன்னாளில் நமது சமர்த்த சற்குரு சாய் மகராஜையும், அவர்தம் வழியில் நின்று ஒளிவிளக்காய் நம்மை வழிநடத்தும் நமது குரு ஸ்ரீராம் சாய் அவர்களையும், இப்புண்ணிய குரு பூர்ணிமா நன்னாளில், நம் இருகரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணங்குவோம் வாரீர்.

குரு பூர்ணிமா சீரடி சாய் மந்திரில் மிகவும் கோலாகலமாக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகின்றது. பிரதானமாக "குருஸ்தான்" வேப்ப மரத்தடியில் உள்ள பாதுகைகளுக்கு ருத்ராபிசேகம், ஹோமம், மற்றும் விசேச பூஜைகளும் களைகட்டும். அக் காட்சிகளை காண கண் கோடி வேண்டும். 

இந்த நாள் மிகவும் முக்கியமாக  நமக்கு நான்கு வேதங்களையும் தொகுத்துக் கொடுத்த மகரிஷி வேத வியாசர் பிறந்த நாளாக அறியப்படுகிறது. "வீயாஸாய விஷ்ணு ரூபாய வியாஸ ரூமாய விஷ்ணவே" எனும் மந்திரத்தினால் வேதவியாசர் போற்றப்படுகிறார்.

வியாச பகவான் மற்றும் வேத வியாசர் என்றெல்லாம் அழைக்கப்படும் வியாசர் இறைவன் விஷ்ணுவின் அவதாரமாக போற்றப்படுகிறார். வேதங்கள் இறைவனின் மூச்சாக மதிக்கப்படுகின்றது. நம் வாழ்விற்கு வழிகாட்டவே, இருள் நீக்கி ஒளி ரூபமாக வேதம் போற்றப்படுவதால் குரு என்ற சொல்லுடன் (கு- இருள், ரு- நீக்குபவர்) பரிபூரணமான பவுர்ணமி நன்னாளில் "குரு பூர்ணிமா" என்று போற்றப்படுகின்றது. 

சந்திரன் நம் மனதிற்கு அதிபதியாக ஆட்சிபுரிவதால் முழுவடிவமாக பவுர்ணமி நாளில் தன் முழு சக்தியுடன் பரிமளிக்கும் காலம் நம் மனோபலம் உச்சத்தில் இருக்கும். குருவருளும், உச்சகட்ட மனோபலமும் சேர்ந்து விளங்கும் இந்த குரு பூர்ணிமா திருநாளில், நம் அனைவருக்கும் ஒளியாய் அமைந்திருக்கும் நம் குருமார்களை வழிபடுவதும், நேரில் சந்தித்து ஆசி வேண்டுவதும் நம் வாழவிற்கு "ரீ ஜார்ஜ்" போன்ற ஒரு வாய்ப்பாகும். 

குருவின் பார்வையும் ஆசீர்வாதமும் நம் அனைவருக்கும் கோடி நன்மையை பெற்றுத் தருவது திண்ணம். சாய் சொந்தங்கள் அனைவருக்கும் சாய் மகராஜ் குருவை தேடி இதழின் மூலம் குரு பூர்ணிமா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

குரு வாழ்க! குருவே சரணம்!

***