குருவைத் தேடு
Guruvai Thedi [குருவை தேடி]. குருவைப் பின்பற்றி வாழ்தலே, குருவை அடைந்ததற்கு அர்த்தமாகும். நல்ல குருவை தேடுவதென்று முடிவு செய்து அவரை அடைந்து விட்டோம். முடிந்த அளவிற்கு சாயி மகானின் வாழ்வை நம் கண் முன் கொண்டுவந்து பாராயணம் செய்து அவரை இன்பத்திலும், துன்பத்திலும், இரவினிலும், பகலினிலும், விழித்திருக்கும் நேரம் எல்லாம் பின்பற்றிப் பார்ப்போமே!
பொய் மதங்கள் போதனை செய் பொய் குருக்களைப்
புத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய் மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும்
மெய் குருவின் பதம் போற்றி ஆடு பாம்பே!
- பாம்பாட்டிச் சித்தர்
குருவிலே நியத குரு, அநியத குரு என இருவகை உண்டு. இறைவனால் நியமிக்கப்பட்டவர் நியத குரு. இறைவனால் நியமிக்கப்படாதவர் அநியகுரு. நற்பண்புகளை ஊட்டி மனதை தூய்மையாக்கி சீடனை ஞான மார்க்கத்தில் வழிநடத்தி சீடனை சீடனாக மட்டுமே வளர்ப்பவர் அநியத குரு.
நான் வேறு, நீ வேறு என்ற துவைத பாவத்தை அழித்து, நானும் கடவுளும் ஒருவரே என்ற அத்வைத பாவமாகிய " தத்துவமஸி" எனும் மகா வாக்கியத்தின் பொருளை நேரிடையாக உங்களுக்குள் மலரச்செய்து சீடனை பரம்பொருளை நோக்கி அழைத்துச் செல்பவரே நியத குரு. அவரே சற்குரு.
யானை சேனை தேர்பரி யாவும் அணியாய்
யமன் வரும் போது துணையாமோ அறிவாய்
ஞானம் சற்றும் இல்லா நாய்கட் குப்புத்தி
நாடி வரும்படி நீ நின்று ஆடு பாம்பே!
- பாம்பாட்டிச் சித்தர்
என்றெல்லாம் இவ்வுலக வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றி எடுத்துச் சொல்லி நம்மை நல்வழிப்படுத்திய அநேக மெய் குருமார்கள் காலம் தோறும் தோன்றி மனித குலத்திற்கு நல்வழிகாட்டி அருளி இருக்கின்றார்கள். இன்றும் அநேக குருமார்கள் இருக்கின்றார்கள். நாம் தேடினோமா என்பதுதான் கேள்வி?
பணத்தை தேடவே நேரம் போதவில்லை. இதில் குருவை எங்கே தேடுவது என்கிறீர்களா? உண்மைதான் பணம் தேடுகின்ற மனம் நற்குருவை நிச்சயமாய் தேடாது.
ஆயினும் "இரை தேடும்போது இறையையும் தேடு" என்று மகான்கள் கூறியிருக்கின்றார்களே! எனவே நற்குருவை நாம்தான் தேடிப்போக வேண்டும். நம்மைத் தேடி குரு வரமாட்டார்.
"குருவருள் இன்றி திருவருள் இல்லை" குருவின் பெருமைகளைச் சொல்ல எங்களிடம் ஆயிரம் போதனைகள் உண்டு.ஆனால் எங்களுக்கும் நேரம் இல்லை.
அப்படியானால் என்னதான் செய்வது? நாம் தெரிந்தோ, தெரியாமலோ, முன்வினைப் பயனோ, பின்வினைப் பயனோ நற்குருவில் சற்குருவான சாயிநாதனை பிடித்திருக்கின்றோம்.
பிடித்தவர்கள் அனைவரும் நாம் புளியங்கொம்பை பிடித்திருக்கின்றோம் என்பதை அறிகின்றார்களா, அறிந்தால் நன்று.
இப்பூவுலகில் இவரைவிட நற்குரு எங்கு கிடைப்பார். கிடைத்ததை கைநழுவவிடுவது மூடத்தனமன்றோ! சற்குரு சாயி மகராஜ் என்பது ஏட்டுக்கல்வி அன்று. அது நடைமுறை அனுபவம். பாபா யாருக்கும் உபதேசம் வழங்கியதில்லை. ஆயினும் உபதேசமாக வாழ்ந்தார்.
இவ்வுலகு உய்ய வேண்டுமாயின் ஒவ்வொரு சாயி பக்தனும் சாயியின் வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வையும் பாராயணம் செய்யுங்கள். இவ்வுலகு நற்கதி அடையும்.நாமும் மனிதப்பிறவியின் பயனை அடைவோம்.
பாபா உத்வேச புவா என்பவரிடம் 11 ரூபாய் தட்சிணை கொடு என்கிறார்.
புவா சமயோசிதமாக, நான் எனது 10 இந்திரியங்களையும், மனதினையும் சேர்த்து 11 ரூபாய் தட்சிணையாக சமர்ப்பிக்கின்றேன் என்கிறார்.
பாபா கூறுகின்றார், அவைகளை அளிக்க நீ யார், ஏற்கனவே அவைகள் என்னுடையவைகள். நான் கேட்டது உன் நற்சிந்தனைகளையும், நற்செயல்களையும் ஆகும் என்றார். தொடர்ந்து ஏதாவது புராணம் பாராயணம் செய் என்றார்.
புவா, எந்த புராணம் என்று கேட்டார்.
எதில் நான் உன்னிடம் பேசியுள்ளேனோ, எதில் இன்றும் நான் உன்னுடன் பேசுகின்றேனோ. அவைகளை மீண்டும், மீண்டும் நினைவிற்கொண்டு வந்து பாராயணம் செய் என்றார்.
குருவை வணங்குவது ஒரு முறை.
அவரைப் பின்பற்றுவது என்பது நடைமுறை அல்லவா? நாம் சற்குருவை பின்பற்றுகின்றோமா அப்படியானால் நாம் குருவைத் தேட தொடங்கிவிட்டோம் என்று அர்த்தம்.
தினம், தினம், வகை வகையாய் பட்சணங்களும், பாலும் பழங்களும் பாபாவின் காலடியில் பரப்பி பாபா யாருடைய நிவேதனத்தைச் சுவைப்பார் என்று மக்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்க, அத்தனையையும் தன் புறங்கையால் ஒதுக்கி விட்டு தன் பழைய தகர டப்பாவை எடுத்துக் கொண்டு தினமும் ஐந்து வீடுகளில் யாசகம் செய்து அந்த உணவையே பெரிதும் விரும்பி உண்டவர் நம் சாயி மகராஜ்.
ஆசை என்ற அகப்பையில் மாட்டிக்கொண்டிருக்கின்ற குரங்காகிய மனதை உடைய நம்மால் இதை பின்பற்ற முடியுமா?
ஒரு காலும் முடியாது, சரி பரவாயில்லை. அன்னதானம் அருந்துகின்றோமே அது கூட பகவான் நமக்கிடும் பிச்சைதான் என்கின்ற பணிவு நம்மிடம் இருக்கின்றதா? இந்த ஓட்டைச் சட்டைக்குள் உயிர் தங்கவேண்டி இறைவன் இடும் பிரசாதத்திலேயும் குற்றம், குறை கண்டுபிடிக்கின்றோம்.
கண் அசைத்தால் தங்க, வைர, அணிகலன்களும்,பட்டாடைகளும் கொண்டு வந்து குவிக்க ஆயிரமாயிரம் பேர் அணிவகுத்து நிற்க தயாராய் இருந்தும் கிழியும் வரை ஒரே ஆடையை அணிந்து திரிந்தாரே, இவரே குருவென்று அடைந்த நாம் செய்வது என்ன?
ஏழு வருடங்களுக்கு முன்பு எடுத்த பழைய ஆடையைகூட தலை தீபாவளிக்கு எடுத்தது என்று இன்னமும் பீரோவில் வைத்து அழகு பார்க்கின்றோம்.
தேவையை குறைத்தால் தெய்வத்தன்மை வளரும் என்பார்கள். தேவைகளே இல்லாது வாழ்ந்தவர் நம் சாயி மகராஜ்.
நடக்க இயலாத கடைசி காலத்தில் அவரை அமர்த்தி நகர் வலம் வர மெய்யன்பர்கள் பல்லக்கும், சக்ரநாற்காலியும் கொடுத்தும், அதை ஒரு பொழுதும் உபயோகிக்காது, தன் உடல் அழியும் இறுதிக்காலம் வரை தன் அடியார்களின் உதவியோடு தத்தித் தத்தி நடைபழகினாரே..... அவர் பாதம் பட்ட புனித பூமி சீரடியிலேயே தரிசனம் முடிந்து "பிரசாதாலயா" சென்று வர இலவச பேரூந்தை எதிர் நோக்கி காத்திருக்கின்றோம்.
இப்படி நம் காலத்திலேயே வாழ்ந்த நம் சற்குரு நாம் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கின்றார்.
ஆனால் நாம் இவைகளை எல்லாம் கண்டும், கேட்டும், படித்தும் உடல் புல்லரித்து கண்கள் நீரைப் பணிக்க, என்ன ஒரு மிராக்கிள் என்று கூடிப்பேசி பெருமை பேசி திரிகின்றோம்.
நல்ல குருவை தேடுவதென்று முடிவு செய்து தேடி விட்டோம். மடிந்த அளவிற்கு சாயி மகானின் வாழ்வை நம் கண் முன் கொண்டுவந்து பாராயணம் செய்து அவரை இன்பத்திலும், துன்பத்திலும், இரவினிலும், பகலினிலும், விழித்திருக்கும் நேரம் எல்லாம் பின்பற்றிப் பார்ப்போமே!
குருவைப் பின்பற்றி வாழ்தலே,
குருவை அடைந்ததற்கு அர்த்தமாகும்.