சாய் தியானாலயாவில் "சாயி லீலா"
சாய் தியானாலயாவில் "சாயி லீலா"
-ஜெயந்தி ஸ்ரீராம்.
லீலை:12, சீரடி பயணத்தில் பாபாவின் லீலை தொடர்ச்சி..
கலியுகக் கடவுள் சாயிநாதரை ஒருவர் முழுமையாக சரணடைந்துவிட்டால் அவருக்கு நிகழும் அத்தனை பிரச்சனைகளுக்கும் மாற்று ஏற்பாடுகளை அடுத்த நொடியே பாபா கொடுத்தருள்வார் என்பதற்கு சாட்சி அன்று நடந்த அன்னதானம்.
நமது குரு தன்னுடன் வந்திருக்கும் யாத்திரீகர்களுக்கு மதிய உணவிற்கு ஏற்பாடு செய்யவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டே பேரூந்தைவிட்டு இறங்க, திரு.குப்தா அவர்கள் 50 நபர்களுக்கும் சாப்பாடு தயாராக இருக்கின்றது என்றவுடன், திரு.குப்தாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நன்றி கூறிவிட்டு சாயியின் லீலையை எண்ணிக்கொண்டே அன்னக் கூடத்திற்குள் நுழைந்தார்.
குருவைத் தொடர்ந்து நாங்களும் அன்னகூடத்திற்குள் நுழைந்தால் அங்கு எங்களுக்கு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. மணி இரண்டாகி விட்டதால் அனைவரும் நல்ல பசியுடன் இருந்தனர். பசிக்கு எது கிடைத்தாலும் சாப்பிடலாம் என்று வந்தவர்களுக்கு நாங்கள் எதிர்பாராவண்ணம் தமிழ் நாட்டு உணவான சாதம், சாம்பார், ரசம், மோர், வத்தல்குழம்பு, வடை பாயாசத்துடன் அனைத்தும் சுடச்சுட தயாராக இருந்தது.
என்னே பாபாவின் லீலை. தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு என்ன தேவையோ அதை அவர்களே எதிர்பாராவண்ணம் தயாராக கிடைக்க வைப்பதே சாயிலீலை அல்லவா. குரு அடிக்கடி நமக்கு சீரடியில் நல்ல தங்குமிடமும், நல்ல தமிழக உணவும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறிக் கொண்டே இருப்பார். அதை பாபா எங்கனம் நிறைவேற்றி வைத்திருக்கின்றார் பார்த்தீர்களா?
எப்படி குரு நினைத்தால் மட்டும் சாயி உடனே நிறைவேற்றி வைக்கின்றார் என்று நினைப்பேன். ஆனால் நம்மைப் போன்று ஒரு நாள் கூட அவர் தீவிரமாக சாயியை வணங்கி நான் பார்த்ததில்லை. பாபாவின் ஆலயத்திற்குச் சென்றால் கூட நான் கேட்டால் தான் எனக்கு ஒரு பூமாலை வாங்கிக் கொடுப்பார். அவர் ஒருபோதும் இதுவரை ஒரு பூவைக்கூட பாபாவிற்கு சமர்ப்பித்ததில்லை.
இதைப்பற்றி குருவிடம் கேட்டால், எதை எதையோ கொடுப்பதற்குப் பதில் உன்னையே கொடு, எதைஎதையோ கேட்பதிற்குப் பதில் அவரை கேட்டுவிடு என்பார். உங்களுக்கு தேவை என்றால்தான் சாயியை தேடுகின்றீர்கள். எனது தேவையே சாயிதான் என்பார்.
குரு சீரடியில் ஒருவரை நம்பி ஏற்பாடுகளை செய்யச் சொன்ன நபர் அவரை ஏமாற்றவில்லை என்றால் இம்மாதிரியான வசதியான தங்குமிடமும், நல்ல தமிழக உணவும், நமக்கு கிடைத்திருக்குமா. எனவே இவை எல்லாம் பாபாவின் லீலையே!
இந்த பெருமை எல்லாம், இக்கட்டான நேரத்திலும், இவை எல்லாம் பாபாவின் லீலை எனச் சரியாக புரிந்து கொண்டு, பதட்டப்படாமல் எங்களை வழிநடத்திய எங்கள் குருவையே சேரும்.
பிறகு ஓய்வான நேரத்தில் குருவிடம் யாத்திரீகள், நீங்கள் நம்பியவர் உங்களை ஏமாற்றிவிட்டார். அதிலும் சில பொருளாதார இழப்புகளை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். இருந்தும் ஒரு இடத்தில் தங்குவதற்கு முன்பதிவு செய்து அதையும் நீங்கள் பயன்படுத்தவில்லை. அதிலும் சில பொருளாதார இழப்புகள் இருக்கும்.
உங்களை ஏமாற்றியவரின் சீரடி முகவரி உங்களிடம் இருக்கின்றது. அங்கு சென்று பார்க்கலாம் என்றால் வேண்டாம். என்று கூறிவிட்டீர்கள். அனைத்தும் இருந்தும் எப்படி பதட்டப்படாமல் எங்களை வழிநடத்தினீர்கள் என்று கேட்க,
குரு அவர்கள் ஒரே வரியில் பதில் அளித்தார்கள். இந்த சீரடியில் எதை நாம் இழந்தாலும், அது பாபாவிற்கு நாம் செலுத்தும் காணிக்கையே! எதைப் பெற்றாலும் அது பாபாவின் பிரசாதமே! இது என் மனதில் ஆழமாக பதிந்திருக்கின்றது. இங்கு எல்லாம் பாபா! எல்லாமே பாபா! என்ற சரணாகதி வந்துவிட்டால் எப்படிவரும் பதட்டம் என்றார்.
லீலை: 13. சீரடியில் குருவிற்கு பைரவரின் துணை.
சீரடி சென்றதும் பக்தர்கள் அனைவரும் சாயிநாதரை தரிசனம் செய்ததும். எங்காவது ஓரிடத்தில் அனைவரையும் அமரச்செய்வார். கூட்டத்தில் நடுநாயகமாக குரு அவர்கள் அமர்ந்ததும் உடனே பைரவர் ஒருவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு சரியாக குருவிடம் சென்று அமர்ந்து விடுவார்.
குரு அனைவரிடமும் இந்த பைரவரை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் சீரடியில் எங்கு சென்றாலும் இறுதியில் இங்கு வந்துவிடுங்கள். யார் இல்லை என்றாலும் பயப்படவேண்டாம். இந்த பைரவர் இதே இடத்தில் படுத்திருப்பார். இங்கேயே நீங்களும் அமர்ந்து கொள்ளுங்கள்.எல்லோரும் வந்த உடன் தங்குமிடத்திற்குச் செல்லலாம். என்று கூறுவார்.
அதைப்போலவே, அந்த பைரவர் அங்கேயே இருக்கும். அனைவரும் எங்கு சுற்றினாலும் நாங்கள் அமர்ந்த இடத்திற்கே வந்து பைரவரைச் சுற்றி அமர்ந்து கொள்ளுவோம். குரு வந்தவுடன் பைரவர் அவர் மடியில் சென்று அமர்ந்து கொள்ளும். பைரவர் அவரின் மடியை விட்டு எழுந்து கொள்ளும் வரை குரு சத்சங்கம் செய்வார். அதிகபட்சமாக நான்கு மணிநேரம் வரை கூட சத்சங்கம் நீண்டதுண்டு. பைரவர் எழுந்து கொண்டால்தான் குருவும், நாங்கள் எழுந்து கொள்வோம்.
ஒருமுறை ஐம்பது நபர்களுடன் நானும் குருவுடன், சீரடிக்குச் சென்றேன். அனைவரும் தரிசனம் முடித்து திரும்பும் போது இரவு பத்து மணியாகிவிட்டது. அன்று ஹோலி பண்டிகை வியாழக்கிழமை வேறு. கூட்டம் அதிகமாக இருந்தது. தரிசனம் முடித்து எங்கள் குழு வெளியே வந்தபோது எப்படியோ அனைவரையும் தவறவிட்டுவிட்டு தனியாக நின்றேன்.
எங்கள் குழுவினர் ஒருவரை கூட காணவில்லை. எனக்கு சற்று பயமாகிவிட்டது. சாயிநாதா என்னை எங்கள் குழுவிடம் சேர்த்துவிடுங்கள் என்று மனதிற்குள் வேண்டினேன். அடுத்த விநாடியே ஒரு பைரவர் வந்து என்னருகே நின்று ஒரு சில விநாடிகள் என்னையே பார்த்துக் கொண்டு நின்றது.அடுத்த விநாடி கூட்டத்திற்குள் புகுந்து மெதுவாக நடக்க ஆரம்பித்தது.
சீரடியில் பைரவரின் உதவி பலவிதங்களில் தனக்கு கிடைத் திருப்பதை குரு என்னிடம் ஏற்கனவே கூறியிருப்பதால், நான் உடனே பாபாவின் மேல் நம்பிக்கை வைத்து பைரவரைப் பின் பற்றி நடக்கத் தொடங்கினேன். ஐந்து நிமிட நடைக்குப் பின் பைரவர் சரியாக எங்கள் குழு அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று நின்றது. நான் மனதிற்குள் ஆயிரம் முறை சாயிநாதருக்கு நன்றி கூறினேன். பைரவர் மீண்டும் ஒருமுறை என்னை திரும்பிப் பார்த்து விட்டு, குருவின் மடியில் சென்று அமர்ந்து கொண்டது.
கொரோனா வருவதற்கு முன்புவரை, காலையில் 4 மணிக்கு சமாதி மந்திரில் அனைவரும் குருவின் தலைமையில் தியானம் செய்வோம். தியானத்திற்கு முன்பாக குரு அவர்கள் அனைவரையும் இடம் விட்டு வசதியாக அமரச் செய்வார்.
அதன் பின்பு, நாம் அனைவரும் சாயிநாதரின் சந்நிதியில் தவம் செய்யும் பேறு பெற்றிருக்கின்றோம்.
அனைவரும் சாயிநாதரையே நினைத்துக் கொண்டு கண்களை மூடிக்கொள்ளுங்கள். என்ன நடந்தாலும் நான் கூறுகின்ற வரையில் யாரும் கண்களை திறக்கக்கூடாது. பகவான் சாயி நம்மை ஆசீர்வதிப்பார் என்று கூறி தவத்தை ஆரம்பிப்பார்.
தவம் தொடங்கிய சில நிமிடங்களில் ஒரு பைரவர் வந்து அனைவரின் தலையிலும் தன் முன்னங்கால்களை தூக்கி ஆசீர்வதிப்பதுபோல் செய்வார். ஒருசிலரின் தோள்பட்டையில் இரண்டு கால்களையும் தூக்கி வைத்துக் கொண்டு நிற்பார். அப்போது சிலர் பயந்து கண்விழித்துவிடுவர். அவர்களை குரு பதட்டப்படாமல் இருக்குமாறு அறிவுறுத்துவார்.
சரியாக இருபது நிமிடம் கழித்து அனைவரும் தியானம் முடித்து கண்விழித்தால் பைரவர் குருவின் மடியில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பார். குரு அவரை தொந்தரவு செய்யாமல், அவர் விழித்தெழும் வரை சத்சங்கம் செய்வார். இந்நிகழ்வு ஒவ்வொரு பயணத்திலும் தவறாது நடைபெறும்.
இந்த வருட ஜூலை மாத பயணத்தில் கொரோனாவை காரணம் காட்டி சீரடி சமஸ்தான் நிர்வாகம் எங்களை உள்ளே தியானம் செய்ய அனுமதிக்கவில்லை. ஆகையால் சீரடியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிவநேசன் சமாதியில் தியானம் செய்யலாம் என்று கூற நாங்கள் அனைவரும் அதிகாலை 5 மணிக்கு சிவநேசன் சமாதிக்கு நடந்தே சென்றோம்.
நாங்கள் நடக்க ஆரம்பித்த உடன் சற்று தூரத்தில் இரண்டு பைரவர்கள் வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். குரு எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தார். பைரவர்கள் மெல்ல, அனைவரையும் கடந்து குருவுடன் சேர்ந்து கொண்டு நடக்கத் தொடங்கியது.
தொடர்ந்து குருவின் பின்னே நடந்து வருவதால் பக்தர்கள் இருவர், குருவே, இரண்டு நாய்கள் வெகு தூரம் உங்கள் பின்னாலேயே நடந்து வருகின்றன. அதற்கு பிஸ்கெட் வாங்கிப் போடுங்களேன் என்று கூற, அதற்கு குரு நீங்கள் வேண்டுமானால் வாங்கிப் போடுங்கள் என்றார்.
உடனே இரண்டு பக்தர்களும் ஆளுக்கொரு பக்கமாய் போய் தேடி கண்டுபிடித்து பிஸ்கெட் பாக்கெட் வாங்கிக் கொண்டு வந்தனர். பிஸ்கெட் பாக்கெட்டை பிரித்து பைரவர்களுக்கு கொடுக்க, அவர்களோ அதை திரும்பிக்கூட பார்க்காமல் குருவின் பின்னே நடந்து கொண்டே இருந்தார்கள்.
பக்தர்கள் இருவரும் எவ்வளவோ முயன்றும் பைரவர்கள் இருவரும் ஒரு பிஸ்கெட்டைக் கூட வாங்கவில்லை. உடனே பக்தர்கள், குருவே நீங்கள் கொடுத்தால் தான் வாங்கும் போல் இருக்கின்றது. நீங்களே கொடுங்கள் என்று கூற,
அவர்களை திரும்பிப் பார்த்த குரு, "இந்த பைரவர்கள், நீங்கள் போடும் பிஸ்கெட்டுக்காக உங்கள் பின்னால் வருகின்றார்கள் என்று நினைத்தீர்களா" என்றபோது நான் குருவைப் பார்த்தேன். அவரின் கண்கள் பைரவரின் கண்களைப்போல் ஜொலித்தன. மேலும் குரு அவர்கள், பிஸ்கெட் போடுவதை விட்டுவிட்டு, பைரவர்கள் வடிவில் இருக்கும் அவர்களை யார் என்று அறிய முற்படுங்கள். என்று கூறிவிட்டு தொடர்ந்து நடந்தார்.
நாங்கள் அனைவரும் சிவநேசன் சமாதியை அடைந்த உடன் அதுவரை எங்களுடன் வந்த பைரவர்கள் எங்கு மறைந்தார்கள் என்று தெரியவில்லை. அதே சமயம் கடுமையான மழை பொழிய ஆரம்பித்தது. நல்ல வேளையாக மழையில் நனையாமல் அனைவரும் ஆஸ்ரமத்திற்குள் வந்துவிட்டோம்.
சிவநேசன் சமாதியில் குரு அவர்கள் சத்சங்கம் நிகழ்த்தினார்கள். பின்பு தியானம் ஆரம்பமானது. அனைவரும் எக்காரணம் கொண்டும் கண்களை திறக்காதீர்கள். நீங்கள் கண்களை மூடிய அடுத்த விநாடி பைரவர்கள் வருவார்கள். உங்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவார்கள் என்று கூற, அனைவரும் கண்களை மூட, அடுத்த விநாடி, வெளியே பலத்த மழை பெய்து கொண்டிருந்த போதும் எங்கிருந்தோ இரண்டு பைரவர்கள் வந்து பக்தர்களை ஆசீர்வதிக்க ஆரம்பித்தன.
குறிப்பாக அந்த பலத்த மழையில் அவை எங்கிருந்து வந்தன, எப்படி நனையாமல் வந்தன என்பது பகவான் சாயிக்கே வெளிச்சம். தியானம் முடிந்து அனைவரும் விழித்துக் கொள்ள, மழை இன்னும் விடாததால் தொடர்ந்து நான்கு மணிநேரம் குரு சத்சங்கம் செய்தார்கள். அதுவரை பைரவர்கள் அவருடனே இருந்தன.
இவை எல்லாவற்றையும் தாண்டி உச்ச நிகழ்வாக மற்றொன்றையும் பைரவர்கள் நிகழ்த்தினார்கள். ஆம்
மழை நின்று நாங்கள் புறப்படும் நேரம் சில பக்தர்கள் ஞாபக மறதியாக முகத்தில் அணியும் மாஸ்க்கை ஆங்காங்கே ஆஸ்ரமத்தில் கீழே போட்டிருக்க, பைரவர் அதை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு போய் குருவிடம் கொடுத்ததைப் பார்க்கும் போது, முக்த்தில் அணியும் மாஸ்க்கை கண்ட இடத்தில் போடக்கூடாது என்பதை பைரவர்கள் மனிதர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் நிகழ்வாக அது இருந்தது.
ஆயினும் குருவிடம் ஒன்று மட்டும் எனக்கு புரியாத புதிராக இருந்தது. ஊரில் இருக்கும் போது, இன்று வரை அவர் பைரவர்களிடம் பழகியதே இல்லை. அவரிடமும் பைரவர்கள் வந்ததும் இல்லை. நான் ஒருமுறை இதைப்பற்றி கேட்டதற்கு, எனக்கு பைரவர் என்றால் பயம். நான் அதற்கு பக்கத்தில் கூட போக மாட்டேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் சீரடியில் அவரும் பைரவரும் பழகும் விதம் எனக்கு இன்றுவரை ஆச்சர்யம்தான்.
அடுத்து தொடர்ந்து ஒரு மாதம் முழங்கால் வலியால் அவதிப்பட்ட குரு சீரடியில் சென்று பாபாவை தரிசனம் செய்த விநாடியில் வலிநீங்கி குணமடைந்த அற்புத லீலையை அடுத்தமாதம் கூறுகிறேன்.
தொடரும்