சீரடி புனித யாத்திரை.

சீரடி புனித யாத்திரை.

சீரடி புனித யாத்திரை.

-ஜெயந்தி ஸ்ரீராம்.

சாய் தியானாலயா பிரார்த்தனை மையத்தின் சார்பில் 7 வது சீரடி புனித யாத்திரை கடந்த 13.7.2022 அன்று சென்னையில் இருந்து 36 யாத்திரிகர்களுடன், நமது ஆசிரியரும், நமது குருவுமான ஸ்ரீராம் அவர்களது தலைமையில் புறப்பட்டது. 

13 ந் தேதி காலை 10.20 க்கு சாய்நகர் விரைவு வண்டியில் முன் பதிவு செய்யப்பட்டிருந்ததால், தேனி, ஆண்டிப்பட்டி, பாண்டிச்சேரி, திருச்சி, மற்றும் சென்னை சுற்றுப்புறத்தில்  இருந்தும் யாத்திரீகர்கள் காலை 8  மணிக்கெல்லாம் சென்னை சென்ட்ரல் இரயில்வண்டி நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.

காலை 6 மணிக்கெல்லாம் இரயில் நிலையம் வந்துவிட்ட குரு அவர்கள், யாத்ரீகர்கள் அனைவரும் வந்துவிட்டார்களா என்று சரிபார்க்க, சென்னை திருமுல்லைவாயிலில் இருந்து இரு பெண்கள் இன்னும் வரவில்லை என்பதை அறிந்து அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார். 

அவர்களோ, நாங்கள் 15 ந்தேதி என்றல்லவா நினைத்திருந்தோம் என்று கூற ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்ட குரு அவர்கள், ரயில் புறப்பட இன்னும் 1. 30 மணி நேரம்தான் இருக்கின்றது. அதற்குள் புறப்பட்டு வாருங்கள். என்று கூற, அவர்கள் நாங்கள் எப்படியாவது வந்து விடுகிறோம். எங்களை விட்டுவிட்டுச் சென்று விடாதீர்கள். என்று கேட்டுக்கொள்ள,

பாபா அனுமதித்தால் நீங்கள் எங்களுடன் வருவீர்கள். வண்டி புறப்படும் வரை உங்களுக்காக காத்திருக்கின்றோம் என்று கூறிவிட்டு குரு காத்திருந்தார்கள். சரியாக இரயில் புறப்பட்டும்முன் இரண்டு நிமிடத்திற்கு முன்பாக அவ்விரு பெண்களும் வந்து சேர, பாபாவின் கருணையோடு, அவர் அனுமதித்த 36 நபர்களோடு, எங்களது புனிதப் பயணம் துவங்கியது.

மறுநாள் காலை10 மணிக்கு சீரடி சாய்நகர் சென்றோம். அங்கிருந்து தயாராய் இருந்த ஆட்டோவில் ஏறி  நாங்கள் தங்கப்போகும் ஒட்டலை பத்து நிமிடத்தில் அடைந்தோம். அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கும் சென்று குளித்து முடித்து தயாராகவும், தமிழகத்து மதிய உணவு சுடச்சுட தயாராக இருந்தது. அனைவரும் ஆனந்தமாக உணவை உண்டு முடித்து உடனடியாக பாபாவின் தரிசனத்திற்கு புறப்பட்டோம். 

அன்று குருபூர்ணிமா, வியாழக்கிழமை வேறு, லேசான தூறல் எங்களை இதமாக வரவேற்றது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கப் போகின்றது என்று பயந்தபடியே சென்ற எங்களுக்கு பாபா இன்ப அதிர்ச்சியைத் கொடுத்தார். ஆலயத்தில் கூட்டம் இல்லாதது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

அங்கிருக்கும் காவலர்களிடம் இலவச தரிசனத்திற்கு டோக்கன் எங்கு வாங்குவது என்று விசாரித்தோம். கூட்டம் இல்லாததினால் டோக்கன் தேவையில்லை. நேரடியாக தரிசனத்திற்கு செல்லுங்கள் என்று அனுப்பி வைக்க, அடுத்த 10 நிமிடங்களில் நாங்கள் பகவான் சாயி பாபாவின் தரிசனத்தை பெற்றோம். 

கூட்டம் அதிகம் இல்லாததினால் எங்களுடன் வந்த பக்தர்கள் பொறுமையாக கண்குளிர பாபாவை தரிசித்தனர். பிறகு குருஸ்தான், லெண்டிபார்க், அருங்காட்சியகம், பாராயண ஹால், ஆலய வளாகத்தில் அமைந்திருக்கும் நானாவதி சமாதி, தாத்யா சமாதி, ஜயர் சமாதி, அப்துல்லா சமாதி ஆகியவற்றையும் தரிசித்துவிட்டு, சிவன், கணபதி, சனி பகவான் ஆகியோரையும் தரிசித்து வெளியில் வந்து ஆஞ்சநேயர், துவாராகாமாயி, அப்துல்லா குடில், சாவடி ஆகியவற்றையும் தரிசித்து இரவு 8 மணிக்கு அறைக்குத் திரும்பினோம். 

இரவு உணவு தயாராய் இருந்தது. உண்டுகளித்து அனைவரும் ஓய்வெடுத்து கொண்டோம். மறுநாள் காலையில் 4 மணிக்கு ஆலய வளாகத்தில் தியானம் நடைபெறும் முடிந்தவர்கள் வரலாம் என்று குரு அவர்கள் தெரிவித்திருந்தார்கள். நாங்கள் 20  நபர்கள் தியானத்தில் கலந்து கொண்டோம்.

சிவன், கணபதி, சனி பகவான் சன்னதிக்கு பின்புறம் மாடியில் தியான ஹால் அமைந்திருக்கின்றது. தியானம் செய்யும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தியானம் முடித்து மீண்டும் அறைக்கு வந்து 8 மணிக்கு காலை உணவு முடித்து அனைவரும்  சிவநேசன் சமாதிக்குச்  சென்றோம். 

மழை தூறிக் கொண்டே இருந்தது. ஆனாலும் நாங்கள் அனைவரும் ஆனந்தமாக இரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள சிவநேசன் சமாதிக்கு நடந்தே சென்றோம். அங்கு நமது குரு ஸ்ரீராம் அவர்கள் சத்சங்கம் நிகழ்த்தினார்கள். அதன்பின்பு தியானம் நடைபெற்றது.

தியானத்தின் ஆரம்பத்திலேயே குரு அவர்கள் நீங்கள் கண்களை மூடிய அடுத்த நொடியே இங்கு ஒரு பைரவர் வந்து உங்கள் அனைவருடைய தலையிலும் தன் கால்களால் தடவிக்கொடுப்பார். யாரும் பயந்து கண்களை விழித்துப் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டு தியானத்தை ஆரம்பித்தார். 

அவர் கூறியதைப் போலவே அனைவரும் கண்களை மூடிய உடன் இரண்டு பைரவர்கள் வந்து அனைவர் தலையிலும் தடவிக்கொடுத்தார்கள். இது ஒவ்வொரு யாத்திரையின் போதும் தவறாது நடக்கும் நிகழ்வுதான் என்றாலும் இம்முறை இரண்டு பைரவர்கள் வந்தது ஆச்சரியமாக இருந்தது. தியானம் முடித்து அறைக்கு வரும்வரை பைரவர்கள் எங்கள் கூடவே வந்தார்கள்.

தியானம் முடிந்ததும், சிவநேசன் சுவாமிகளுக்கு பூஜைசெய்யும் சுவாமிகள், நமது குருவிடம் பூஜை பொருட்களை கொடுத்து சிவநேசன் சுவாமிகளுக்கு பூஜை செய்யும்படி கூற குருவும் அவர் கூறியதை போன்று அனைத்து பூஜைகளையும் செய்தார். 

சுவாமிகள் அனைவருக்கும் கேசரி பிரசாதம் வழங்கி, உதி அளித்தார். நமது குருவிடம் ஒரு கிலோ அளவிற்கு உதியை சேகரித்து ஒரு பாக்கெட்டில் போட்டு அன்போடு அவரை அணைத்து ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.

மதியம் உணவு முடித்து சற்று ஓய்வெடுத்துக்கொண்டு 3 மணிக்கு புறப்பட்டு லெட்சுமிபாய் வீடு, மகல்சாபதி வீடு, பய்யாஜி வீடு, கந்தோபா ஆலயம் பார்த்து விட்டு, தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு அறைக்குத் திரும்பி உணவருந்திவிட்டு, ஓய்வெடுத்துக் கொண்டோம். 

மறுநாள் காலை சிற்றுண்டி அருந்திவிட்டு, பேரூந்தில் புறப்பட்டு, சனிசிங்னாப்பூர்,  கிறிஸ்னேஸ்வரர் சோதிலிங்கம், ஆஞ்சனேயர் கோவில், எல்லோரா குகைக்கோவில் பார்த்துவிட்டு இரவு அறைக்குத் திரும்பினோம். 

மறுநாள் காலை 4 மணிக்கு அனைவரும் மீண்டும் சாயி நாதரை தரிசனம் செய்துவிட்டு, காலை 10 மணிக்கு புறப்பட்டு, உபாசினி மகராஜ், ரஞ்சன்காவ் கணபதி கோவில் பார்த்துவிட்டு இரவு 9 மணிக்கு புனே வந்தடைந்தோம். அங்கிருந்து 10.10 க்கு சென்னை எக்ஸ்பிரஸில் புறப்பட்டு, மறுநாள் மாலை 4 மணிக்கு சென்னை வந்தடைந்தோம். 

பகவான் சாயிநாதரின் பேரருளாலும்,  பக்தர்களின் ஒத்துழைப்பாலும், எங்களது 7 வது சீரடி புனித யாத்திரை மிகச் சிறப்பாகவும், ஆனந்தமாகவும் நிறைவடைந்தது. யாத்திரீகர்கள் அனைவரும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு அவரவர் இல்லம் வந்து சேர்ந்தோம்.

8 வது யாத்திரை வருகின்ற 21.09.22 அன்று புறப்படுகின்றது.  9 வது யாத்திரை வருகின்ற 18.01.23 சனவரி அன்று புறப்படுகின்றது. சனவரி யாத்திரைக்கு வருகின்ற 01.9.22 முதல் முன்பதிவு தொடங்குகிறது. விபரங்களுக்கு கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்: 99418 16692.

***