சாய் தியானாலயாவில் "சாயி லீலா" - லீலை: 6. குருவை சிலை செய்ய வைத்தது தொடர்ச்சி…
சாய் தியானாலயாவில் "சாயி லீலா"
ஜெயந்தி ஸ்ரீராம்.
லீலை: 6. குருவை சிலை செய்ய வைத்தது தொடர்ச்சி…
என் கணவர் செய்து வந்து வியாபாரம் நஷ்டமடைந்து விட்டதால் நாங்கள் மிகுந்த கஷ்டத்தில் இருந்தோம். கையில் காசில்லாமல் வாழ்க்கையை தள்ளுவதென்பது சென்னையில் மிகவும் சிரமமாய் இருந்த நேரம் அது. குடும்பத்தை ஓட்ட ஏதாவது சம்பாதித்தாக வேண்டுமே என்று பலவாறாக சிந்தித்துக் கொண்டிருந்த நேரம்.
எங்களின் உறவினர் ஒருவர், வெகு தூரத்தில் சிறிய கிராமம் ஒன்றில் வசித்து வந்தார்கள். அவர்களது பெண்ணுக்கு திருமணமாகி குழந்தை செல்வம் இல்லை என்று குருவிடம் முறையிட்டார்கள். குருவோ பாபாவிடம் முறையிடுங்கள். நிச்சயம் உங்கள் குறையைத் தீர்ப்பார் என்று கூற,
அவர்களும் சரி என்று கூறிவிட்டு, எங்கள் வீட்டில் வெகு நாட்களாய் பாபா சிலை வைத்து வழிபட வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். ஆனால் சரியான சிலையும் எங்களுக்கு அமையவில்லை. பாபாவை முறையாக வழிபடவும் வாய்பில்லை. என்று கூறி வருத்தப்பட,
அதற்கு குருவோ, வேண்டுமானால் நல்ல படம் ஒன்று வாங்கித் தருகின்றேன்.என்று கூற, அதற்கு அவர்கள் இல்லை, இல்லை, எங்களுக்கு சீரடியில் உள்ளது போன்ற சிம்மாசன அமைப்புடன் கூடிய சிலைதான் வேண்டும் என்று கூற, குருவும் அவரையறியாமல் அவ்வளவுதானே நானே செய்து தருகின்றேன் என்று கூறிவிட்டு ஊருக்கு வந்து விட்டார்.
ஊருக்கு வந்து ஒருவாரமாக மிகவும் சிரமப்பட்டு, சீரடியில் இருப்பது போன்று சிம்மாசனத்துடன் கூடிய பாபா விக்கிரகம் ஒன்றை உருவாக்கிவிட்டு உறவினருக்கு தகவல் அனுப்பினார். ஆனால் அவர்களோ, நீங்களே கொண்டுவந்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறிவிட்டார்கள்.
சிலை செய்ய ஏற்கனவே 500 ரூபாய் கடன் வாங்கியாயிற்று. அத்துடன் ஊருக்குச் செல்ல 500 கடன் வாங்கிக்கொண்டு சிலையை எடுத்துக் கொண்டு குரு ஊருக்குப் புறப்பட்டார்கள்.
ஊருக்குச் சென்று சிலையை எடுத்து குழந்தை வரம் கேட்ட பெண்ணிடம் கொடுத்ததுதான் தாமதம். அந்தப் பெண், சிலையை கையில் வாங்கியதுமே மயங்கிச்சரிந்தாள். உடனே அந்தப் பெண்ணை, அவளின் குடும்பத்தார் மருத்துவமனைக்கு இட்டுச் செல்ல, அவர்களின் இல்லத்தில் அவர்களுக்காக குரு மட்டுமே காத்திருக்கின்றார். மனதிற்குள் சிலைக்காக போட்ட முதலாவது திரும்ப வருமா என்ற ஏக்கத்துடன்.
மருத்துவமனையில் இருந்து மகிழ்ச்சியுடன் திரும்பிய குடும்பத்தினரைப் பார்த்து குருவிற்கு போன உயிர் திரும்ப வந்தது போலிருந்தது.
அந்தப்பெண் கர்ப்பமாக இருக்கின்றாள் என்ற இனிப்பான செய்தியையும் கூறி, எல்லாம் பாபா வந்த நேரம் தான் என்று குருவிடம் சிலைக்கான தொகையாக ரூ.2000 கொடுத்து அவரை ஊருக்கு அனுப்பி வைத்தார்கள்.
அதன்பின்தான் பாபா அதிசயம் செய்ய ஆரம்பித்தார். அந்த சிலையைப் பார்த்த அக்கம்பக்கத்தை சேர்ந்த பாபா பக்தர்கள், அவர்களுக்கும் அதேபோன்று பாபா சிலை செய்துதரும்படி கேட்க, குரு வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அப்புறம் என்ன? வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்று குழம்பி க்கொண்டிருந்த குரு அவர்கள் பாபா சிலை செய்வதையே முழு மூச்சாக செய்ய ஆரம்பித்தார்.
அதுவும் எப்படி, செய்கின்ற சிலைகள் விற்கின்றதா? இல்லையா என்றெல்லாம் கவலைப்படமாட்டார். தொடர்ந்து விதவிதமாக, சிறிதும் பெரிதுமாக பாபா சிலைகளை செய்து வீடு முழுக்க நிறைத்து விடுவார். அந்த காலகட்டத்தில் வீடு முழுக்க எல்லா இடங்களிலும் பாபாவாகவே இருப்பார்.
எனக்கே சில நேரங்களில் நம்பிக்கையின்மை வந்து விடும். பைத்தியம் பிடித்தது போன்று பாபா சிலைகளை செய்து கொண்டே இருக்கின்றாரே, இவை எல்லாம் விற்பனை ஆகவில்லை என்றால் என்ன செய்வது என்று யோசிப்பேன்.
பாபாவின் லீலைகள் என்ன என்று அவ்வளவு சீக்கிரத்தில் நமக்கு தெரிந்து விடுமா என்ன? அன்றைய காலகட்டத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் தயாரித்து இருந்தார் குரு. ஒரு மாதம் சென்றிருக்கும். யார் என்றே தெரியாதவர் ஒருவர் வந்து எனக்கு ஒரு பாபா சிலை வேண்டும் என்று கேட்டு வாங்கிச் செல்வார்.
வந்தவர்கள் எவ்வளவு விலை என்று கேட்டால் குரு விலையை கூறாமல் உங்கள் மனதிற்கு என்ன தோணுதோ அதை வைத்துவிட்டு எடுத்துச் செல்லுங்கள் என்பார். அவர்களும் சிலையின் அடக்கத்தைவிட அதிகமாகவே வைத்துவிட்டு சிலையை எடுத்துச் செல்வார்கள். இப்படியாக ஒரு நாளைக்கு ஒரு சிலை என்று விற்பனையாகும். அதற்குமேல் விற்பனையாகாது.
இதில் பாபாவின் லீலை என்னவென்றால், அந்த நாளைக்கு வீட்டிற்கு என்ன தேவையோ அதற்குண்டான பொருளாதாரம் அந்த சிலையில் கிடைக்கும். அதற்குமேல் கிடைக்காது. எதிர்பார்க்கவும் கூடாது. இப்படியாக எங்களின் ஆன்மீக வாழ்க்கையை ஒழுங்குபடுத்தினார் பகவான் சாயிபாபா.
லீலை: 7. நெல்லை சீனுவின் கதை.
திருநெல்வேலியைச் சேர்ந்த சீனிவாசன் என்ற இருபத்தி ஐந்து வயது இளைஞர். சொல்லிக் கொள்வதுபோல் உறவினர்கள் யாருமில்லை. அதிகம் படிக்கவில்லை என்றாலும் தன்னுடைய சொந்த முயற்சியால் ஓட்டுனர் ஆகிவிட்டார்.
இளவயது அல்லவா? நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியான வாழ்க்கை. எதைப் பற்றியும் கவலையில்லாத மனம். துடிப்பான செயல் என்று இருந்தவருக்கு திடீரென ஒருநாள் இடுப்பிற்கு கீழே செயல் இழந்து போய்விட்டது.
உலகமே நின்றுவிட்டது போலாயிற்று சீனுவிற்கு. தெரிந்த நண்பர்களும், ஒரு சில உறவினர்களும் நெல்லையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்து விட்டுவிட்டு, காணாமல் போனார்கள். உதவிக்குக்கூட ஆள் இல்லாமல் சீனு ஆறு மாதங்கள் அனாதையாக மருத்துவமனையிலேயே தங்கி வைத்தியம் பார்த்திருக்கின்றார்.
ஆறு மாதங்கள் ஆனதே தவிர உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மனம் வெறுத்துப்போய் இருந்தபோதுதான் பக்கத்து படுக்கை நோயாளியை பார்க்க வந்த ஒரு வயதான பெண்மணி, யாருமில்லாமல் சீனு கஷ்டப்படுவதைப் பார்த்து, ஆறுதலாக சற்று நேரம் பேசிவிட்டு, அவர்களின் பையில் இருந்து நமது
"சாயி மகராஜ் குருவை தேடி" ஆன்மீக மாத இதழை எடுத்து அவரிடம் கொடுத்து இந்தப் புத்தகத்தை படி தம்பி சாயிபாபாவிடம் உன் கஷ்டத்தை சொல்லு. பாபா உன்னை குணப்படுத்துவார். என்று கூறிச் சென்றிருக்கின்றார். அவர்யார்? அவரிடம் நமது இதழ் எப்படிச் சென்றது என்ற விபரம் நமக்குத் தெரியாது.
சீனுவும் பொழுதுபோகாதபோது, புத்தகத்தை கொஞ்ச கொஞ்சமாக படித்திருக்கின்றார். இரண்டு மூன்று நாட்களில் ஏதோ ஒன்று அவரை அந்த புத்தகத்திற்குள் இழுத்திருக்கின்றது. நான்காம் நாள் காலையில் அவராகவே என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னிடம் இந்த புத்தகத்தின் வடிவில் நீ வந்திருக்கின்றாய். நீ இருப்பது உண்மையானால் நான் எழுந்து நடக்க வேண்டும். என்று மனதிற்குள் வேண்டியிருக்கின்றார்.
"எவன் ஒருவனது பாவங்கள் விலக்கப்பட்டனவோ அவனே என்னை அறிந்து கொண்டு வழிபடுகின்றான்" என்ற சாயியின் அருள் வாக்கினுக்கிணங்க, அடுத்தநாளில் இருந்து, அடுத்த ஒரு மாதத்திற்குள் சீனு பரிபூரணமாக குணமடைந்து வீட்டிற்கு புறப்பட தயாரான போது நமது குருவை தொலைபேசியில் அழைத்தார் சீனு,
குருவிடம் இந்தக் கதையை உணர்ச்சிப் பெருக்குடன் கூறியவர். அய்யா உங்களது புத்தகத்தின் மூலம் சாயிபாபா என்பரை அறிந்து கொண்டு வழிபட ஆரம்பித்தேன். இன்று எனது உடல் பரிபூரணமாக குணமாகிவிட்டது. நான் இன்று மருத்துவமனையை விட்டு வெளியேறுகின்றேன்.
இங்கிருந்து நான் போகும் முதல் இடமாக பாபா ஆலயம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே திருநெல்வேலியில் எங்கு பாபா ஆலயம் இருக்கின்றது என்று எனக்கு தெரியாது. உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள் அய்யா என்று கேட்க,
அதற்கு குருவோ, எனக்கும் தெரியாது. ஆனால் நீங்கள் மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும் எதிர்படுகின்ற முதல் மனிதனிடம் பாபா கோவில் எங்கிருக்கின்றது என்று கேட்டுப்பாருங்கள். அவர் உமக்கு வழிகாட்டுவார் என்று கூறினார்.
அன்று மாலை மணி ஆறு இருக்கும். மீண்டும் சீனுதான் பேசினார். அய்யா நீங்கள் கூறியபடியே எதிர்பட்ட முதல் மனிதனிடம் பாபா கோவில் பற்றி விசாரித்தேன். அதற்கு அவர் நானும் பாபா கோவிலுக்குத்தான் செல்கின்றேன். வாருங்கள் என்று கூடவே கூட்டிச் சென்று தரிசனம் செய்து வைத்தார் அய்யா. இனி என் வாழ்க்கையில் பாபாவை மறக்கவே மாட்டேன் என்று உறுதியளித்தார்.
அதன்பின்பு அவர் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் குருவிடம் பகிர்ந்து கொள்வார். தற்போது நெல்லையில் பிரபலமான கல்லூரியில் பேரூந்து ஓட்டுனராக இருக்கின்றார். அவர் மனதிற்கு பிடித்தமான பெண்ணையே திருமணம் செய்து கொண்டு, ஒரு ஆண் குழந்தையோடு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார். பாபா தன் பெயர் தாங்கிய புத்தகத்தின் மூலம் கூட தனது லீலையை அரங்கேற்றுவார் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சாட்சியல்லவா!
லீலை: 8 சாய் தியானாலயா உருவான லீலை.
முதலில் குரு அவர்களால் தியானம் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கப்பட்டதே "சாய் தியானாலயா" பிறகு தியானத்துடன் யோகாவும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். மையத்தில் ஆறு அடி உயரத்தில் சாயிபாபாவின் புகைப்படம் மட்டுமே இருக்கும். தன்னுடைய சற்குரு என்ற வகையில் அந்தப் புகைப்படத்தை வைத்திருப்பாரே ஒழிய அதற்கென்று பூஜை, பிரசாதம் போன்றவை எதுவும் இருக்காது.
நாட்கள் செல்லச், செல்ல, அங்கு தியானம் கற்றுக் கொள்ள வந்த சகோதரி திருமதி. லதா பாபு அவர்கள் குருவிடம், நான் பாபாவிற்கு பிரசாதம் எடுத்து வரலாமா என்று தயங்கியபடியே கேட்க, குருவும் உங்கள் விருப்பம் என்று கூறிவிட்டார்.
அவரும் வியாழன் தோறும் பிரசாதம் செய்து எடுத்து வந்து பாபாவிற்கு படைத்துவிட்டு மையத்திற்கு வருபவர்களுக்கு வழங்குவார். நாட்கள் செல்லச் செல்ல, மையத்திற்கு வரும் சகோதரி திருமதி சரண்யா ஞானமூர்த்தி அவர்கள், குருவிடம் வியாழன் தோறும் பஜனை செய்து பூஜை செய்து கொள்கின்றோம் என்று கேட்க, அதற்கும் குரு அவர்கள் உங்கள் விருப்பம் என்று கூற,
அடுத்த வாரம் முதல் சகோதரி சரண்யா அவர்கள் பஜனை பாடி பூஜையை தொடங்கினார்கள். குரு அவர்கள் பாபாவைப் பற்றி சத்சங்கம் ஆரம்பித்தார்கள். அதன் பிறகு தியானம், பிரார்த்தனை, அன்னதானம் என்று வளர்ந்து இன்று "சாய் தியானாலயா பிரார்த்தனை மையம்" என்ற பெயரோடு மக்களுக்கு,
"அண்டிணோருக்கு அன்னவளமும், வேண்டிணோருக்கு ஞானவளமும்" என்ற சிந்தனையோடு ஆன்மீகப் பணியாற்றி வருகின்றது.
ஒரு முறை சகோதரிகளின் விருப்பத்திற்காக குரு அவர்கள் பாபாவிற்கு ஆரத்தி காட்டத் தொடங்கியவர், ஒரு கட்டத்தில் இனிமேல் நான் ஆரத்தி காட்ட மாட்டேன். என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். ஏன் என்ற காரணத்தை என்னிடம் தனியாகக் கூறி வருத்தப்பட்டார்.
மக்களின் மூட நம்பிக்கைகளைப் போக்கி மெய்ஞானத்தை போதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் தியான வகுப்பிற்கு மக்கள் வரமாட்டேன் என்கின்றார்கள். பூஜை, புனஸ்காரம் என்றால் கூட்டம் கூட்டமாக வருகின்றார்கள். அவர்கள் விருப்பம் அதுவாக இருந்தால் நாம் அதை தடை செய்ய வேண்டாம். ஆனால் நமது முக்கிய குறிக்கோள்
தியானம் மட்டுமே!
ஆகையால் இனி அவர்களே ஆரத்தி செய்து கொள்ளலாம். இனிமேல் நான் ஆரத்தி எடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டு, மனம் சரியில்லை என்றால் குரு எப்போதும் செல்லும் அவரது தாயாக நினைக்கும் சமயபுரம் சென்று மணிக்கணக்கில் தியானத்தில் ஆழ்ந்து விடுவார்.
அன்றும் அப்படித்தான் நான் சமயபுரம் செல்கின்றேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார். ஆலயத்திற்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு இரவெல்லாம் தியானம் செய்துவிட்டு அதிகாலையில் நான்கு மணிக்கெல்லாம் புறப்பட்டு, சமயபுரம் பேரூந்து நிறுத்தத்தில்,பேரூந்திற்காக காத்திருக்க,
அந்த அதிகாலை நேரத்தில் ஒரு வயதான கிராமத்து பெரியவர் குருவிடம் வந்து தம்பி டீ குடிப்போமா? என்று கேட்க, குருவோ நான் டீ குடிக்கமாட்டேன் என்று கூற, அதற்கு அவரோ, அப்படின்னா எனக்கு வாங்கித்தா என்று கேட்க, குருவும் அவருக்கு டீ வாங்கிக் கொடுக்க, பெரியவர் அந்த டீ யைக் குடிக்காமல் குருவையே வைத்தகண் வாங்காமல் பார்த்திருக்கின்றார்.
குருவோ என்ன பெரியவரே அப்படி பார்க்கறீங்க. டீ யை குடிங்க என்று கூற, பெரியவரோ ஒண்ணுமில்ல தம்பி ஒரு சந்தேகம் உங்ககிட்ட கேக்கலாங்கலா? என்று கேட்க கேளுங்க என்றிருக்கின்றார் குரு.
டீ குடிக்கமாட்டேன்கறது உங்களோட தகுதியா? என்ற பெரியவரைப் பார்த்து ஒரு கணம் திகைத்துவிட்டு,
நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியல பெரியவரே என்று கூற,
பெரியவரோ, இங்கிருந்து மூணு கிலோ மீட்டர் கிழக்கே போனீங்கன்னா, ஒரு பாபா கோவில் வரும். அதோட பேரு சீரடி சாயிபாபா தியான பீடம். அங்கே உங்களுக்கு இதற்குண்டான விளக்கம் கிடைக்கும். என்றவர் கையில் இருந்த டீயை ரோட்டில் ஊற்றிவிட்டு, குருவைப் பார்த்துச் சிரித்து, நானும் டீ குடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு விடுவிடுவென நடந்து போயிருக்கின்றார்.
குரு, பெரியவர் கூறிய பாபா கோவிலுக்குச் சென்றாரா? அங்கு என்ன நடந்தது என்பதை அடுத்த மாதம் எழுதுகிறேன்.
-லீலைகள் தொடரும்.