சாய் தியானாலயாவில் "சாயி லீலா"

சாய் தியானாலயாவில் "சாயி லீலா"

லீலை:3.கல்லூரியில் இடம் கிடைத்தது.

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு வியாழன் அன்று பாபா பூஜைக்கு, சகோதரி வரலட்சுமி அவர்கள் அவருடைய தோழி ஒருவரை அழைத்து வந்தார். அவருடைய பெயர் பத்மா என்று குருவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

குரு அவர்களை அமரச்சொல்லி விட்டு சத்சங்கத்தை தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து தியானம் நிகழ்ச்சியும் நடந்தது. சகோதரி பத்மாவோ தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார்கள். கீழே அமர்வதற்கு அவர்களால் முடியவில்லை. உட்காரவும், உடனே எழுந்து கொள்வதுமாக இருந்தார்.

குரு அவர்களை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு ஒரு மணிநேரம் கழித்து, சகோதரி பத்மா அவர்களை நோக்கி, அழுது கொண்டே இருப்பது பாபாவிற்கு பிடிக்காது. உங்கள் பிரட்சனை என்னவென்று கூறுங்கள் என்று கேட்க பத்மா அவர்கள் தனது பிரட்சனையை குருவிடம் கூறினார்.

என் வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகள். அதற்காக கோவில் கோவிலாக சுற்ற ஆரம்பித்து, பிறகு சோதிடர்களைத் தேடி அவர்கள் சொல்லும் பரிவர்த்தனைகள் செய்வதுமாய் இருந்தேன். காலமும், பணமும்தான் கரைந்ததே தவிர ஒரு மாற்றமும் இல்லை. 

சொல்லப்போனால் முன்பை விட இப்போதுதான் பிரச்சனை அதிகமாகி விட்டது. அதோடு சேர்ந்து இப்போது உடல் பிரச்சனையும் என்னை பாடாய் படுத்துகின்றது. என்னால் ஐந்து நிமிடம் கூட ஓரிடத்தில் உட்காரவோ, நிற்கவோ முடியாது. என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்த போதுதான் சகோதரி வரலட்சுமி அவர்கள் பாபாவைப் பற்றியும், உங்களைப்பற்றியும், கூறி இங்கு அழைத்து வந்தார்கள் என்று கூறி அழுதார்கள். 

பாபாவைத் தேடி இங்கு வந்துவிட்டீர்கள் அல்லவா? இனி நீங்கள் அழத் தேவையில்லை. அனைத்தையும் பாபா பார்த்துக் கொள்வார். இன்னும் மூன்று மாதத்திற்குள்ளாக உங்கள் சூழ்நிலையை பாபா மாற்றுவார். நீங்கள் பாபாவையே சரணாகதி அடைந்து அவரையே வணங்குங்கள். இங்கு நடைபெறும் தியானத்தில் தொடர்ந்து பங்கு பெறுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார் குரு.

தொடர்ந்து அவர்களுக்கு குருஜி யோகாவும், தியானமும் கற்றுக் கொடுத்து பாபாவைப் பற்றியும் விளக்கிக் கூறினார். மூன்று மாதத்திற்குள்ளாக சகோதரி பத்மா அவர்கள் உடலாலும், மனதாலும் பல மாறுதல்களை உணர ஆரம்பித்தார்கள்
அதன் பிறகு முழுமையாக பாபாவையே  வணங்க ஆரம்பித்தார்கள்.

காலப்போக்கில் கோவில் கோவிலாக சுற்றுவதையும், ஜாதகம் பார்ப்பதையும் படிபடியாக குறைத்துக் கொண்டார்கள். அதன்பின்பு ஒர் வருடத்திற்குள் அவரது கணவருக்கு ஏதிர்பார்த்திருந்த வேலை நிரந்தரமானது.

பல வருடங்களாக பிரிந்திருந்த அவரது தாயும், சகோதரனும், ஒன்று சேர்ந்தார்கள். 

ஒரு முறை பத்மா அவர்கள் தனது பிறந்த நாளுக்காக பிரியாணி செய்து தனது கணவர் குழந்தைகளுடன்  உணவருந்தும் சமயம், தன்னுடைய  தாயுடன் சேர்ந்து உணவருநத முடியவில்லையே! அவர்கள் என்ன சாப்பிட்டார்களோ என்று வருந்தி பாபா, நான் இங்கு பிரியாணி சாப்பிடுகின்றேன். என் தாய் இந்நேரம் என்ன சாப்பிட்டார்களோ! அவர்களை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, தன் மனபாரத்தை குருவிடம் வந்து சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

மறுநாள் காலையில் வந்த பத்மா குருவிடம், அம்மாவை விட்டுவிட்டு நான் மட்டும் பிரியாணி சாப்பிடுகின்றேன், நீங்கள் தான் அம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பாபாவிடம் முறையிட்டேன் என்று கூறினேன் அல்லவா? பாபா எனக்கு ஒரு அதிசயம் செய்திருக்கின்றார் குருஜி நேற்று என் அம்மா வீட்டில் குடியிருக்கும் ஒரு இஸ்லாமிய அம்மா, பிரியாணி செய்து நேற்றிரவு அம்மாவிற்கு கொடுத்திருக்கின்றார்கள். 

இன்று காலையில் நான் அம்மாவிற்கு போன் செய்து, பிறந்த நாளுக்கு பிரியாணி செய்து சாப்பிடேனம்மா என்று கூற அவர்களோ, நானும் தான் பிரியாணி சாப்பிட்டேன் என்று நடந்த விசயத்தைக் கூறி திகைக்க வைத்தார்கள் என்னே பாபாவின் மகிமை என்று கூறி வியந்தார்கள்.

பாபாவிற்கு இவை எல்லாம் ஒரு விசயமே இல்லை. அவர் நினைத்தால் நடவாத காரியம் ஒன்றும் இல்லை. தேவை நமக்கு அவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை என்று கூறி அவரை அனுப்பி வைத்தார் குரு.
 
மற்றொரு சமயம், அவர்களது பெரிய பெண் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 1139 வாங்கி வெற்றி பெற்றாள். பல்வேறு குடும்ப நிகழ்வுகளால் கல்லூரியில் அட்மிசன் பெற சற்று கால தாமதமாக ஆகிப்போனது. கல்லூரிகள் தொடங்க இன்னும் மூன்று நாட்களே உள்ளன.

என்ன செய்வது என்று தெரியவில்லை அனைத்து கல்லூரிகளிலும் முடிவாக இடம் இல்லை என்று கூறி விட்டார்கள். என் மகள் மிகவும் மன வருத்தத்தில் இருக்கின்றாள் என்று குருவிடம் வந்து  முறையிட்டார்கள்.

குருவோ, இன்னும் மூன்று நாட்களில் நகருக்குள் இருக்கும் நல்ல கல்லூரியில் உனக்கு இடம் கிடைக்கும் என்று கூற, அவரது மகளோ சிறிதும் நம்பிக்கையற்றவராக, அனைத்து கல்லூரிகளிலும் இடம் இல்லை என்று கூறிவிட்டார்கள் அங்கிள். பிறகு எனக்கு எப்படி கிடைக்கும் என்றாள்.

அதற்கு குருவோ, எல்லா கல்லூரிகளிலும் இடம் இல்லை என்ற பிறகும், இன்னும் மூன்று நாளில் உனக்கு இடம் கிடைத்தது என்றால் அதுதான் பாபா என்பதை நீ உணர்ந்து கொள்ள வேண்டும்  என்றார். 

அந்தப் பெண்ணுக்கு அப்போதும் நப்பிக்கை ஏற்படவில்லை. எனவே குரு மீண்டும் கூறினார், மூன்று நாளில் உனக்கு கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டால், பாபாவிற்கு என்ன செய்வாய் என்று கேட்டார்.

என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள். கல்லூரியில் இடம் கிடைத்து விட்டால் கண்டிப்பாக செய்கின்றேன் என்றார்கள் தாயும், பெண்ணும்.

வரும் மாதம் வரவிருக்கும்  "சாயி மகராஜ் குருவை தேடி"  இதழை  வாங்கி உன் தோழிகளுக்கு கொடுக்க வேண்டும். என்று கூற அவர்களும் நம்பிக்கையற்ற மனதோடு சென்றனர்.

குரு கூறியதைப் போன்றே மூன்றாம் நாளில் பெண்ணுக்கு நகருக்குள்ளேயே நல்ல கல்லூரியில்  அவர்களாகவே கூப்பிட்டு இடம் கொடுத்தார்கள். அவளும் சாயி மகராஜ் குருவை தேடி இதழை  காணிக்கை செலுத்தி கைநிறைய வாங்கி தோழிகளுக்கு விநியோகித்தாள். தங்கள் வாழ்க்கை முழுவதும் பாபாவையம், அவரை அறிமுகப்படுத்திய குருவையும் மறக்க மாட்டோம் என்று உறுதி கூறிச் சென்றார்கள்.

 -லீலைகள் தொடரும்.