பாபாவின் தோழி Dr. வின்னி சிட்லூரி

பாபாவின் தோழி Dr. வின்னி சிட்லூரி

வின்னி மா அனைவரையும் ஆசீர்வதித்து, வழிநடத்தி, நம்மை அவரது அருளுக்கு உரியவராக்கட்டும்.
அவர் தன்னை பாபாவுடன் இணைத்துக் கொண்ட இப்புனித நன்னாளில் பாபாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நல்லடியாரைப் பற்றி எழுதுவதில் பெருமை கொள்கிறது சாய் மகராஜ் குருவை தேடி ஆன்மீக மாத இதழ்.

இவரைத் தன் மகளென தேர்ந்தெடுத்து தனக்கு அருகிலேயே வைத்துக்கொண்டு, அவர் மூலம் தனது வழியில் பலரையும் நடத்திச் செல்ல இவரைப் பாபா பணித்திருக்கிறார். 

வெகு சில புண்ணியம் பெற்றவர்கள், பாபாவின் 'கர்ம பூமி'யான ஷீர்டிக்கு செல்லும் போதெல்லாம் இவரைச் சந்திப்பதும், இவரோடு நேரத்தை செலவிட்டதும் அவர்களின் பாக்கியம். இவரை பக்தர்கள் தீதி என்றே அழைத்தனர்.

இவரைச் சந்திக்குப்போது, பாபாவின்  பக்தி உணர்வு மேலும் அதிகமாகிறது. பாபாவின் மீதான அன்பு இன்னும் கூடுகிறது. நேரம் போவதே தெரியாமல் நமது ஆணவமும் கரைந்து போகிறது. இவரது சந்திப்பு நமது உள்ளுணர்வைத் தூண்டிவிட்டு, நம்மை சுய பரிசோதனை செய்து கொள்ளத் தூண்டும்.

பாபாவின் கர்ம பூமி இப்போது இவருடைய கர்ம பூமியாகி விட்டது. 'தீதி' என பக்தர்கள் அழைத்தாலும், இவர் அதற்கும் மேலானவராகிறார்.
'மாயி' என அன்புடன் அழைக்கப்படும் இவர் பாபா சேவையில் தன்னை முழுதுமாக ஈடுபடுத்திக்கொண்டு, இன்னும் பலரையும் ஒவ்வொரு அடியாக சேவையில் ஈடுபடுத்தி உதவி செய்கிறார். 

இந்தப் பதிவைப் படிப்பவர்களே இவர் யார்? இவரது பெருமை என்ன? என்பனவற்றைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றோம். ஏனெனில் இவர் இப்போது பூவுலகில் இல்லை. கடந்த   24.3.22  வியாழன் அன்று தன் பூத உடலை நீத்துவிட்டு பாபாவுடன் கலந்து விட்டார்.

ஏனெனில் இந்த உலகம், கடவுளே மனித உருவெடுத்து நம்முடன் வாழ்ந்தாலும், அவர் மறைந்தால்தான் அவரை நம்பும். ஏன் என்றால் இறந்ததற்குப்பின் எவர் அதிசயம் செய்கின்றாரோ, அவரே புனிதர் பட்டத்திற்கு தகுதியானவர் என்றல்லவா மனித இனம் சட்டம் இயற்றி வைத்திருக்கின்றது.?

தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில், அரவங்காடு என்னும் ஊரில் 1943-ல் நான்கு குழந்தைகளில் இளையவராகப் பிறந்தவர் வின்னி சிட்லூரி. அவரது தந்தை ஒரு தீவிர நாத்திகர். பாட்டி இறையன்பு மிக்கவர். அவர் பிறந்தது முதல் அவரின் தாய் மிகவும் நோய்வாய்ப்பட்டு, சாவின் விளிம்பில் இருந்து வந்தார். பல மருத்துவர்களிடம் காட்டியபின், இறுதியாக வேலூரில் இருக்கும் கிறுஸ்தவ மருத்துவமனையில் சேர்த்தார்கள். 

அங்கே அவறுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து, பல பரிசோதனை களுக்குப் பின், இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று  வீட்டுக்கு எடுத்துச் செல்லச் சொல்லிவிட்டார்கள்.

ஒருநாள், 'ஹிந்து' நாளிதழில் பூஜ்யஸ்ரீ. நரசிம்ம சுவாமிஜி என்பவர் கோயம்புத்தூரில் இருக்கும் நாகசாயி ஆலயத்துக்கு வருவதாகச் செய்தி வந்திருந்தது. பாபாவின் அருளால் இவ‌ர் செய்துவ‌ரும் அற்புத‌ங்க‌ளைப் ப‌ற்றியும், குறிப்பாக‌ நோயைக் குண‌மாக்குவ‌தைப் ப‌ற்றியும் விரிவாக‌ப் போட்டிருந்த‌ன‌ர். அவரது  த‌ந்தை மனைவியை அங்கே கூட்டிச் செல்வ‌தென‌ நிச்ச‌யித்தார். 
இது 1949-ல் நிகழ்ந்தது. 

அதற்கு முல்நாள் இரவு அவரின் தாய் வெண்ணிறத் தாடி வைத்த ஒரு பெரியவர் பல அன்பர்கள் சூழ்ந்திருக்க, கஃப்னியும், குர்தாவும் அணிந்து ஒரு பல்லக்கில் உட்கார்ந்திருப்பது போல‌ ஒரு கனவு கண்டார். மறுநாள் நடக்கப்போவதை அறியாத அவர் தன் கணவரிடம் இந்தக் கனவைச் சொன்னார்.

'உனக்கு என்ன வேண்டும்? பதவி உயர்வா? பணமா? குழந்தையா? அல்லது புகழா?' என அவரின் தந்தையைக் கேட்க, அவரோ அவரின் மனைவியைக் காட்டி, 'இதோ, இவள் மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். இவளைக் குணப்படுத்துங்கள். எனக்கு வேறொரு மனைவி கிடைப்பாள். ஆனால் என் பிள்ளைகளுக்கு ஒரு தாய் கிடைக்க மாட்டாள்' என வேண்ட, சுவாமிஜியும் தன் கைகளை என் தாயின் தலை மீது வைத்தார். 'ஜில்லென்று குளிருகிற‌தே' என‌ அவரின்  அம்மா சொல்ல‌, மீண்டும் த‌ன் கைக‌ளை வைக்க‌, 'இப்போது சூடாக‌ இருக்கு' என்றாள்.

'ஆஹா!' எனச் சொன்னவண்னம் பாபாவின் உதியை அவள் கைகளில் தந்து, 'அச்சுதா, அனந்தா, கோவிந்தா' எனும் மந்திரத்தை நாளொன்றுக்கு 21 தடவை வீதம் 21 நாட்களுக்கு உச்சரித்து, உதியை நெற்றியில் அணிந்து, சிறிதளவைத் தண்ணீரில் கலந்து குடிக்கும்படி உபதேசித்தார்.

இதெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, வின்னிமா கதவருகே நின்றிருந்து அந்த வெண்தாடி வேந்தரையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு கிருஸ்துமஸ் தாத்தாவைப்போல் அவர் காட்சியளித்தார்! அவரது தாடியை வருட வேண்டுமென ஒரு அவா எழுந்தது. அப்போது அவர் சிறுமியாய் இருந்த வின்னிமாவை அழைத்து, தன் மடியில் உட்கார்த்திக் கொள்ள,அவரும் அவர்  மார்பில் சாய்ந்துகொண்டு, அந்தத் தாடியை லேசாக வருடி விளையாடினாள்

அவர் தலை மீது கை வைத்து வின்னிமாவை ஆசீர்வதித்தார். அவரது ஆசியாலும், பாபாவின் அருளாலும் அவரின் தாய் விரைவில் குணமுற்றார். அவரின் தந்தையும் ஒரு தீவிர பாபா பக்தர் ஆனார்.

சில காலம் கழித்து சென்னை சென்று பி.வி நரசிம்ம சுவாமிக்கு நன்றி கூற அதற்கு அவர், 'நான் செய்தது ஒன்றுமில்லை. எல்லாம் பாபாவின் அருளே! அவருக்கே உங்களது நன்றியைக் கூறுங்கள். அதிருக்கட்டும், ஓ பிரபு, நீங்கள் மத்திய இந்தியாவுக்குச் சென்று அங்கு பாபாவின் புகழைப் பரப்புங்கள்' எனச் சொல்லி, உதியும், பாபா படத்தையும் கொடுத்தனுப்பினார். 

அவர் சொன்னதன் அர்த்தம் புரியாமல் அவரின் தந்தை சற்று குழம்பினார். ஆனால், சிறிது நாட்களிலேயே மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஜபல்பூருக்கு மாற்றலானார். அங்கே அவர்கள் வியாழக் கிழமை பூஜையை ஆரம்பித்தார்கள். சிறிது காலத்தில் வின்னிமாவின் தந்தை ஒரு பாபா ஆலயம் கட்டினார்.

அடிக்கடி பாபாவின் அறிவுரைகளை அவர்களுக்கு நினைவூட்டுவார். கடுகளவு செய்யும் பாபா பிரசாரமும் மலையளவு ஆகும் என்பார். அடிக்கடி ஷீர்டி சென்றும், பாபாவைப் பற்றி கட்டுரைகள் எழுதியும், ஸத் சங்கம் நடத்தியும் வந்தார்.

பள்ளிப் படிப்பை முடித்து ஜபல்பூர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார் வின்னிமா. 1963-ல் ஷீர்டி சென்றார்கள். ஸாயிநாத் மருத்துவமனை அப்போதுதான் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கே இலவச சேவை செய்வதாக உறுதி பூண்டார்கள் மருத்துவ மேல் படிப்பை தில்லியில் இருக்கும் கலாவதி சரண் மருத்துவ மனியில் தொடர்ந்தார். 

பின்னர், அமெரிக்கா சென்று, குழந்தை நல மருத்துவராகப் பணியாற்றினார். இதற்கிடையில் பாபாவுக்கு கொடுத்த வாக்கை சுத்தமாக மறந்து போர்கள். ஆண்டுகள் உருண்டோடின. என் உள்மனதில் 'இதெல்லாம் தேவையா?' எனும் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. அவரது தந்தை சொன்ன அறிவுரையும் அவ்வப்போது வந்து போனது. இரண்டையும் அப்போது அலட்சியப் படுத்தினார்கள்.

ஆனால் தொடர்ந்து ஒலித்த இந்த குரலுக்குக் கட்டுப்பட்டு, தன் பணியின் உச்சத்தில் இருந்தபோது, ஒருநாள் அதை உதறிவிட்டு சீரடி திரும்ப முடிவெடுத்தார் வின்னிமா.
1994-லிருந்து சீரடியில் தங்க ஆரம்பித்தார்கள். இருப்பினும் மருத்துவ மனையில் அவர்களால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. ஒரு சில சேவைகளைச் செய்தாலும் அதையெல்லாம் பிரசாரம் எனச் சொல்ல இயலாது அல்லவா?

எனவே வின்னிமா தனது 50 வது வயதில் தன் மருத்துவத் தொழிலில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சீரடியை அருகிலேயே கொராலே என்னும் சிறிய கிராமத்தில் பாபா பக்தர்களுக்குண்டான சேவைக்கெனவே ஸ்ரீ இராதாகிருஷ்ணாயி ஹால் என்ற சேவா மையத்தை நிர்மானித்து அநீக பாபா பக்தர்களுக்கு சேவை செய்தவர் வின்னிமா.

வின்னிமாவுடன் பழகியவர்களுக்கு ஸ்ரீ ராதாகிருஷ்ண மாயியையே வின்னிமா உருவில் சீரடியில் வாழ்ந்ததாகத்தான் உணர்வார்கள்.
அவர் காட்டிய அன்பு, குரு பக்தி, கீழ்ப்படிதல், கடின உழைப்பு, ஸாயி புகழைப் பரப்புதல், இதற்கெல்லாம் மேலாக ஒரு கண்டிப்பான தாயன்பு இவற்றையெல்லாம் வின்னிமாவிடம் நாம் எப்போதும் காணலாம்.

தம்மிடம் வரும் அனைவருக்கும் இங்கிருக்கும் அனைத்து புனித இடங்களையும் சுற்றிக்காட்டி, சாயி நடந்த, உரையாடிய, நின்ற, குளித்த பல இடங்களையும் காட்டித் தருகிறார். இவையெல்லாம் ஷீர்டியில் இப்போது அழியும் நிலையில் இருக்கின்றன. [புனித‌ இடங்கள் எல்லாம் இடிக்கப்பட்டு வியாபாரத் தலங்களாக மாறும் அவலத்தைக் கண்டு மனம் நோகின்றது].

கோரலே மந்திரை ஸ்ரீ ராதாகிருஷ்ணமாயி எனப் பெயரிடும்படி ஸாயிதான் வின்னி மாவிற்கு  குறிப்பு தந்திருக்க வேண்டும் அவரைப் போலவே இவரும் செய்துவரும் சேவையில்தான் என்னவொரு ஒற்றுமை!
மாயியை நாம் இவர் வடிவில் காணலாம் என்பதே உண்மை.

ஸ்ரீ ராதாகிருஷ்ண மாயி - ஷீர்டி ஸாயிபாபா மந்திர் - கோரலே, ஷீர்டி.'
பாபாவின் பிரதிமை தாங்கிய ஆலயமல்ல இது. ஒரு சாவடி, த்வாரகா மாயி மற்றும் ஒரு பெரிய கூடத்தில் 'குடையின் கீழே பாபா நின்றிருக்கும்' படமும் இருக்கின்றன. இந்தக் கூடத்தில் கிராம மக்களுக்கான பல்வேறு சேவைகளும் நிகழ்கின்றன. 

'அன்னதானம்' -- வயிறார அவலுணவும், தேநீரும் இங்கு வந்துபோகும் யாத்ரீகர்களுக்குத் தரப்படுகிறது. ஸாயியைத் தரிசிக்க உள்ளன்போடு வரும் இவர்களில் ஒரு சிலர் இங்கே இரவில் தங்கிச் செல்கின்றனர். அவர்களுக்கு இரவு உணவும் கிடைக்கிறது. இதைத் தவிர, விழாக் காலங்களில் கிராமத்தினருக்கு பிரசாதமும் வழங்கப் படுகிறது.

'முதலுதவி' -- ஸ்ரீராம நவமியின்போது மும்பையிலிருந்து ஷீர்டி வருகின்ற பாத யாத்ரீகர்களுக்கும், கிராமத்தினருக்கும் முதலுதவி தரப் படுகிறது. சமீபத்தில் காலராவால் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனைக்குக்கூடச் செல்ல இயலாத கிராமத்தினருக்கு, மருத்துவர்களை வரவழைத்து, இந்தக் கூடத்திலேயே தேவையான மருத்துவ வசதி தரப்பட்டது.

13000 முதல் 14000 வரையிலான பக்தர்களுக்கு மாதந்தோறும் அன்னதானம் நடக்கிறது. இவர்களில் 6000 பேருக்கு முழு உணவும், 7000 பேருக்கு சிற்றுண்டியும் தரப்படுகிறது. சுமார் 200 பேர் இரவில் தங்கிச் செல்கின்றனர்.

சீரடி செல்லும் பக்தர்கள் அவசியம் அருகில் உள்ள கோரலே  ஸ்ரீ இராதாகிருஷ்ண மாயி ஆலயம் சென்று பாபாவையையும், பாபாவின் தோழியாகிய டாக்டர் வின்னிமா அவர்களையைம் தரிசித்து ஆசி பெற்று கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

*****