சேவை செய்!
சேவை செய்!
பாபா சாகேப் எனப்படும் நீலகண்டனும் தாத்யா சாகேப் நூல்கரும் பள்ளிப் பருவத்தில் இருந்து உயர்நிலைக் கல்வி வரையில் ஒன்றாகப் பயின்ற நண்பர்கள். காலமும், விதியும் அவர்கள் இருவரையும் இரு வேறு திசைகளில் பிரித்து விட்டது. நூல்கர் பண்டரிபுரத்திற்குச் சென்றபின்பு நீலகண்டனுக்கு அவருடைய தொடர்பு விட்டுப்போனது.
மிகவும் அன்பானவரும், பழகுவதற்கு இனியவருமான, நீலகண்டன் மிகுந்த ஆன்மீக நாட்டமுடையவர். வேதங்களையும், உப நிடதங்களையும் கசடறக் கற்றதோடு அவற்றின் வழிபிறழாது நடந்து வந்தார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஞானிகளுடனும்,சத்புருஷர்களோடும் தொடர்பு கொண்டு அவர்களின் சத்சங்கத்தில் இருந்து ஆன்மீக ஞானச் செல்வத்தை பெற்றுக் கொள்ள தவற மாட்டார்.
அவர் ஒரு சமூக சீர்த்திருத்தவாதியாக, பெண் கல்வி, பால்ய விவாகம், விதவை மறுமணம் போன்றவற்றிலும், பெண்களின் உரிமைக்காகவும் குரல் கொடுப்பதில் எப்போதும் முன்னணியில் இருந்தார். மேலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எங்கெல்லாம் குரல் தேவைப்பட்டதோ அங்கெல்லாம் இவரின் குரல், முதல் குரலாக ஒலித்தது.
1904 ஆம் ஆண்டு பிளேக் நோய் பரவியபோது, அவருடைய நேரம், செல்வம், உழைப்பு அனைத்தயும் பிளேக் நோயாளிகளுக்காவே செலவிட்டார். பெரும்பான்மையான உறவினர்களே செய்யத்தயங்கிய இறந்தவர்களை தாமே சுமந்து சென்று இடுகாட்டில் எரித்து வந்தார்.
பல்வேறு பதவிகளை வகித்து வந்தவர், இராணுவ கணக்காளராகவும்,பாம்பே நகராட்சி செயலாளராகவும்,போஸ்லே அரச குடும்பத்திற்கு மேலாளராகவும் சில காலம் பணிபுரிந்தார்.
ஒரு முறை அவரது நண்பர் ஒருவர் குருவின் முக்கியத்துவம் பற்றி அவரிடம் வினவ, அதற்கு அவர், குருவானவர் சந்தையில் கிடைக்கும் பொருள் அல்ல, சாதகன் தன்னுடைய காமம், குரோதம்,மோகம்,மதம்,லோபம், மாத்சர்யம், என்ற ஆறு எதிரிகளை வென்றவனாகவும், பொறுமையாகவும் இருக்கும் பட்சத்தில் குருவே தன்னுடைய கருணையை அவன்மீது அபரிதமாக பொழிவார் என்றும் விடையளித்தார்.
1911 ஆம் ஆண்டில் நானா சாகேப் சந்தோர்கர் இராகிருஷ்ணமாயி கேட்டதற்கிணங்க, சமையல் பாத்திரங்கள் சிலவற்றை சீரடிக்கு அனுப்பிட விரும்பினார். இப்பணிக்கு பொறுத்தமான நபருக்காக காத்திருந்த வேளையில் தற்செயலாக நீலகண்டனை சந்திக்க நேர்ந்தது.
அப்போது நானா அவரிடம் இதுபற்றிக் கூறியபோது, நீலகண்டன் பாத்திரங்களை சீரடிக்கு கொண்டுபோக ஆகும் செலவிற்கு என்னிடம் பணம் இல்லை என்றார். பிறகு நானாவே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அவரை சீரடிக்கு அனுப்பி வைத்தார்.
சீரடிக்கு சென்ற நீலகண்டன் அங்கு தன்னுடைய பால்ய நண்பன் தாத்யா சாகேப் நூல்கரைக் கண்டு இன்ப அதிர்ச்சியடைந்தார்.
நீலகண்டன் சீரடிக்குச் சென்ற புதிதில் பாபாவின் தர்பாரில் சத்சங்கம் நடக்கும். அதில் பாபா பேசும் பரிபாஷையான கருத்துக்கள் யாருக்கும் புரியாதவையாக இருக்கும். அதை நூல்கரும், மற்ற பக்தர்களும் புரிந்து கொள்ள முயற்சிப்பதைக் கண்ட நீலகண்டன் அவர்களை மனநோய் காப்பகத்தில் இருக்க வேண்டியவர்கள் என்று திட்டுவார்.
அவர் பாபாவின் தரிசனத்திற்குச் சென்ற போது, பாபா அவரிடம் பரிபாஷையாக, "நூல்கருக்கும், ஜோக்குக்கும் நமஸ்காரம் செய்வதால் உன் மதிப்பு ஒன்றும் குறைந்து விடாது. உனக்கு நஷ்டமும் கிடையாது, நீ இருவருக்கும் சேவை செய்" என்று கூறினார். இதையே நீலகண்டனிடம் தொடர்ந்து மூன்று நாட்கள் கூறிக்கொண்டே இருந்தார்.
நீலகண்டன் சீரடியை விட்டு புறப்படுவதற்காக, ஷாமா மூலம் பாபாவின் அனுமதியைக் கோரி வந்தார்.( பாபாவின் தரிசனத்திற்கு வந்தவர்கள் பாபாவின் அனுமதியைப் பெற்றே சீரடியை விட்டுச் செல்ல வேண்டும் என்ற வழக்கத்தின் படி) முதலில் பாபா, "அவன் நான்கைந்து நாட்கள் கழித்து புறப்படட்டும்" என்றார். ஆனால் நான்கைந்து நாட்களுக்குப் பின்பு மீண்டும் அவருக்காக நானா அனுமதி கேட்ட போது, "அவன் மசூதிக்கு எதிரில் நாய் போல் கிடக்கட்டும் அவனுக்கு சில முக்கியமான வேலைகள் இருக்கின்றன" என்றார்.
எனவே நீலகண்டன் சீரடியிலேயே தங்கிவிட முடிவு செய்தார். அவர் தன் பால்ய நண்பரான நூல்கரிடம், உனக்கு நான் என்ன சேவை செய்ய வேண்டும் என்று உன் குரு விரும்புகிறார் என்று கேலியாகக் கேட்பார். ஆயினும் பாபாவின் வார்த்தைகளுக்கு ஆழ்ந்த பொருள் இருக்கும் என்றும், அதைக் காலமே உணர்த்த முடியும் என்றும் நூல்கர் திடமாக நம்பினார்.
சீரடியில் தங்கியிருந்தபோது நீலகண்டன் பல அற்புத அனுபவங்களை பெற்று, பாபாவே அனைவர் இதயங்களிலும் உறையும் சர்வாந்தர்யாமி என்பதை நன்கு உணர்ந்து கொண்டார்.
நீலகண்டனுக்கு அவ்வப்போது ஐயங்கள் எழும் போது பாபா அவரை தட்சணை வாங்கி வருதல் என்ற பெயரில், பாபு ஜாகேப் ஜோக்கிடமோ, அல்லது காகா சாகேப் தீட்சித்திடமோ அனுப்புவார். இவர் தட்சிணை கேட்கப் போகும் சமயம் அங்கு அவர்கள் பாராயணம் செய்து கொண்டிருக்கும் அத்யாயம் அவருடைய ஐயங்களுக்கு பொறுத்தமான விடையாக இருக்கும்.
இப்படி நீலகண்டனுக்கு பாபாவிடம் பக்தி பல்கி பெருகியது. இதற்கிடையே நூல்கர் திடீரென நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உடல்நலமில்லாமல் ஆனார். அவரது உடலெங்கும் கட்டிகள் தோன்றி அச்சம் கொள்ளும் விதத்தில் வேகமாகப் பரவியது. நீலகண்டன் நூல்கரை அருகில் இருந்து கவனித்துக் கொண்டார்.
அவருடைய புண்களுக்கு மருந்திட்டு கட்டுப்போட்டுவிட்டார். நூல்கர் படுத்த படுக்கையாகிப் போய் எழுந்திருக்க முடியாமல் இருந்த போது நீலகண்டன்தான் அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுப்பது, சிறுநீர் கழிக்க உதவுவது போன்ற சேவைகளை மனம் நோகாமல் செய்து வந்தார்.
ஆனால் நூல்கரோ, நீலகண்டனின் சேவையில் மனம் நெகிழ்ந்து தன் நண்பருக்கு சிரமம் கொடுக்கின்றோமே என்று மன வருத்தம் அடைந்தார். ஆனால் நீலகண்டனுக்கோ மன வருத்தம் ஒன்றும் இல்லை. சகலத்தையும் அறிந்த தேவன் சாயிநாதன் முன்பே "நூல்கருக்கு சேவை செய்வதால் உனது மதிப்பு ஒன்றும் குறைந்துவிடாது" என்று கூறினார் அல்லவா? அவர் எப்படி மன வருத்தம் அடைவார். தமக்கு நடக்கக்கூடிய வற்றை முன்பே உணர்ந்து கூறக்கூடிய தெய்வத்திடம் அல்லவா அவர் அடைக்கலமாகி இருக்கிறார்.
தாத்யா சாகேப் நூல்கர் மரணமடையும் வரை நீலகண்டன் அவருடனே இருந்து அவருடைய ஒவ்வொரு தேவைகளையும் பார்த்துப் பார்த்து கவனித்துக் கொண்டார். சாயியினுடைய வாக்கில் நீலகண்டனுக்கு அவ்வளவு மரரியாதை இருந்தது.
ஓம் சாய்ராம்.
*******