விஸ்வநாத் நூல்கர் வரமா சாபமா?

விஸ்வநாத் நூல்கர் வரமா சாபமா?

லஷ்மண் நூல்கர்- ஜானகி தம்பதியினர் பாபாவின் கருணையால் ஆட்கொள்ளப்பட்டவர்கள். தங்களது வாழ்வே பாபாவிற்காக என்று வாழ்ந்தவர்கள்.  நேரம் கிடைக்கும் போதெல்லாம் சீரடி வந்து பாபாவின் தரிசனத்தை பெறத்தவறுவதில்லை.

அப்பேர்பட்ட தம்பதியினருக்கு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாபாவின் பேரருளால் 1889 ல் ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு விஸ்வநாதன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். அவர் புனேயில் உள்ள நியூ இங்க்லீஷ் ஸ்கூல் என்னும் பள்ளியில் ஆரம்பக் கல்வியும், டெக்கான் காலேஜ் ஆப் காமர்ஸ் என்ற கல்லூரியில் உயர் கல்வியும் பயின்றார். பின்னர் அவர் மாநகராட்சியில் பணியாற்றினார்.

அவர் முதன்முதலாக 1909 ஆம் ஆண்டு தன் தந்தையோடு சீரடிக்கு வந்தார். பெற்றோர்களால் செல்லமாக விசு என்று அழைக்கப்படும் அவரை பாபா, உடனடியாக " சாலா" (பள்ளி) விற்கு செல்லுமாறு பணித்தார். பள்ளி என்று அழைக்கப்படுவது இராதாகிருஷ்ண மாயியின் இல்லத்தைக் குறிப்பதாகும். இராதாகிருஷ்ணமாயியின் இல்லம் ஆன்மீகத்தின் உச்சத்தில் இருக்கக் கூடியதாகும். 

அங்கு பாபாவால் அனுப்பப்பட்ட ஒரு சிலர் உயர்ந்த ஆன்மீக ஞானம் பெற்றதை நாம் அறிவோம். அதே போன்று பாபா, விஸ்வநாதனும் சிறந்த ஆன்மீக ஞானம் பெற வேண்டும் என்ற விருப்பத்தினாலேயே விசுவை சாலாவிற்கு அனுப்பினார். ஆனால் மனித சென்மங்களிடையே உள்ள பற்று, பாசம் என்பது இறைவனின் திட்டத்தையே எப்படி மாற்றுகின்றது என்பதே விசுவின் கதையாகும்.

பாபாவின் தரிசனத்திற்குப் பின்பு விசு, தன்னுடைய பெற்றோரோடு இல்லம் அதன் பிறகு கல்லூரியில் சேர்ந்த பிறகும், அவரது மனம் எண்ணவோ சீரடியிலேயே இருந்தது. சீரடியைப் பற்றியும் அங்கே உறைய்ம் தெய்வம் சாயி பாபாவைப் பற்றியும் அவர் மனதில் வைராக்கியத்தை வளர்த்துக் கொண்டார். 

காலப்போக்கில், அவருக்கு சீரடிக்குச் சென்று அங்கேயே தங்கி பாபாவிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற தணியாத தாகம் பிறந்தது. அது நிறைவேறக்கூடிய நல்ல அதிர்ஷ்டத்தையும் அவர் பெற்றிருந்தார் என்றே தோன்றுகின்றது. ஏனெனில் சீரடிக்கு வந்தால் பாபாவின் கவனிப்பு விசுவின் மீதே இருந்தது.

கல்லூரி படிப்பை முடித்ததும் ஒருவரிடமும் கூறாமல் சன்னியாசி ஆக வேண்டும் என்று வீட்டை விட்டு சீரடிக்கு வந்துவிட்டார். அவர் வீட்டை விட்டுச் சென்றது அவரது பெற்றோருக்கு மிகுந்த கவலையளித்தது. அவன் சீரடிக்குத் தான் சென்றிருக்க வேண்டும் என்று அறிந்து கொண்ட அவனது பெற்றோர், விசு எப்படியிருக்கின்றான், என்ன செய்து கொண்டிருக்கின்றான் என்று பார்ப்பதற்காக சீரடிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

சீரடிக்கு செல்வதற்கு முன்பாக கோதாவரி நதியில் குளிப்பதற்காக சென்ற அவரது குடும்பத்தார் அங்கே பாபாவைப் போன்று உடையணிந்த ஓர் இளம் துறவியைக் கண்டார்கள். அருகில் சென்று கண்டதும் அது தங்களுடைய மகன் விஸ்வநாதன் என்று அறிந்ததும் திடுக்கிட்டுப் போனார்கள்.

அவனுடைய சன்யாசி கோலத்தைக் கண்டு விசுவின் குடும்பத்தார் மிகுந்த மன உளைச்சல் அடைந்தனர். உடனே பாபாவிடம் சென்று முறையிட்டனர். மனிதன் எப்போதும் பாசத்திற்கு அடிமையாகின்றவன். அவனுக்கு எப்போதும் கூலுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது பாபாவிற்கு தெரியாதா? விசுவை சமாதானப்படுத்தி சில மாதங்களுக்கு அவரின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அதன்பிறகு விசு வீட்டில் இருந்து கொண்டே படித்து பட்டம் பெற்று மாநகராட்சியில் பணிபுரிந்தார்.

பாபா அவரை அன்போடு "கிப்ரா"  (நீண்ட தலைமுடியைக் கொண்டவன்) என்று அழைப்பார்.

1914 ல் சுசீலா ஜெமெனிஸ் என்ற பெண்ணை விசு மணந்து கொண்டார். மணமகளை பாபாவே தேர்ந்தெடுத்தார். விசுவின் தந்தை
தன் மகனுக்கு மணமுடிக்கத்தக்க இரண்டு பெண்களின் புகைப்படத்தை கொண்டுவந்து பாபாவிடம் நீட்டினார்.

பாபா தன்னுடைய விரலை சுசீலாவின் படத்தின் மீது வைத்தார். தாம் பணிபுரிந்த புனேயிலேயே வசித்த விசு சுசீலா தம்பதியினருக்கு ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்து சம்சார சாகரத்தில் உழன்றார் என்பதை கூறவும் வேண்டுமோ?

இறைவன் எப்போதும் வரம் மட்டுமே கொடுக்கின்றான். மனிதன்தான் அதை எப்போதும் சாபமாகவே மாற்றிக் கொள்கிறான். எல்லாம் இறைவன் செயல் எனும் மனிதன், இறைவன் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளாமல், தான் கேட்பதையே இறைவன் கொடுக்க வேண்டும் என்று அடம் பிடிப்பது ஏணோ?

இப்படித்தான் நம்மில் பலர் நமது கர்ம வினை நீங்க நல்ல சற்குரு கிடைத்தும் அவர் கூறுவதை கேட்காது. நாம் கேட்பதை அவர்தரவேண்டும் என்று விரும்பி பெற்று, பின்னர் அவதியுறுகிறார்கள். 

குருவைப் பணிவோம்! குறைவின்றி வாழ்வோம்!
***