பயணக்கட்டுரை. 12 ஆவது சீரடி புனித யாத்திரை.
பயணக்கட்டுரை.
12 ஆவது சீரடி புனித யாத்திரை.
சாந்தி வெங்கடாச்சலம்.
ஸ்ரீ சீரடி சாய் பக்தர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். ஸ்ரீ சாய் தியானாலயா ஆத்மா ஞானபீடம் மற்றும், சாய் மகராஜ் குருவை தேடி ஆன்மீக மாத இதழின் சார்பாகவும் நமது ஆசிரியரும், யோக குருவுமான திரு.ஸ்ரீராம் சாய் அவர்கள் 12ஆவது சீரடி புனித யாத்திரையை, 35 சாய் பக்தர்களுடன் கடந்த 19 ஜூன் 2024 அன்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து துவங்கினார்.
இப்புனித பயணத்தில் அடியேன் பெற்ற அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.யாத்திரீகர்களை வரவேற்க முதல் ஆளாக குருஜி இரயில் நிலையம் வந்துவிட்டார்.
ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 35 சாய் அன்பர்கள் ஆரவாரமாக சீரடி இரயில் வண்டிக்கு காத்திருந்தோம்.
முன்னதாக குருஜியிடம் அளித்த வாக்கின்படி ‘’மகரஜோதி பவுண்டேசன்’’ திரு.முனுசாமி சாய்ராம் அவர்கள், இரயில் பயணத்திற்கு தேவையான 3 வேளை அன்னதானத்தை சுகாதாரமாக பேக் செய்து குருஜியிடம் வழங்கினார்கள்.
அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்த திரு.கோபால் சாய்ராம் அவர்களும் உடனிருந்தார். சாய் அன்பர்களின் சார்பில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
2 மணிநேரம் தாமதமாக வந்த சீரடி எக்ஸ்பிரஸ் இரயில் 12.20 க்கு புறப்பட்டது. புறப்படுமுன் குரு ஸ்ரீராம் சாய்ராம் அவர்கள் பயணத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறை களையும் அறிவுரைகளையும் வழங்கினார். சேலத்தில் இருந்து
“பிரார்த்தனை செம்மல்” திரு. சாய் கலியன் அய்யா அவர்களும் எங்களுடன் பயணத்தில் பங்கு பெற்றது ஆனந்தமாக இருந்தது.
Anmrs IT Solutions Pvt LTd நிர்வாகி திரு.ராஜசேகர்-சுகுணா தம்பதியர் யாத்திரையில் கலந்துகொண்ட சாய் பக்தர்களுக்கு அனைவருக்கும் அவர்களது சொந்த செலவில் அடையாள அட்டை(ID Card) வழங்கினார்கள்.
சீரடி சாய் பகவானின் அருளை பெற வேண்டி எங்களின் 12 வது சீரடி புனித யாத்திரை இனிதே துவங்கியது.
மறுநாள் வியாழன் மதியம் 12.30 க்கு சீரடி புனித ஸ்தலத்தை அடைந்தோம். எங்கும் சாய், எதிலும் சாய். நம் பாபா நின்று, நடந்து, அமர்ந்த அந்த சீரடி புனித தெருக்களில் நங்கள் ஆட்டோவில் பயணித்து தங்கும் விடுதியை அடைந்தோம்.
அனைவரும் சிரமப்பரிகாரம் செய்து கொண்டு விடுதியில் ஏற்பாடு செய்திருந்த சுவையான மதிய உணவினை அருந்திவிட்டு மாலை 4 மணியளவில் குருஜி ஸ்ரீராம் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஸ்ரீ சாய் பகவானை நேரில் காண, அவரது அருளை பெற வேண்டி ஸ்ரீ சாய் சமாதி மந்திர் நோக்கி நடந்தோம். சமாதி மந்திர் திருப்பணி செய்யப்பட்டு புது பொலிவுடன் இருந்தது.
பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய உள்கட்டமைப்பு, பாபா தனது பக்தர்கள் மேல் கொண்ட அன்பையும், அக்கறையையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. சிரமமின்றி அரை மணி நேரத்திலேயே சாய் பகவானை தரிசித்து மகிழ்ந்தோம்.
நம் பாபா சிவப்பு நிறத்தில் பட்டுடுத்தி அமைதியே வடிவாய் அமர்ந்திருந்தார். கண்கள் கருணை மழை பொழிந்தது. முகத்தில் தவழும் புன்முறுவலோடு ஆத்மார்தமாய், அன்பே வடிவாய், வாருங்கள் வாருங்கள் என்று நம்மை அழைப்பது போல் அமர்ந்து அருள் புரிந்தார் பாபா.
சுற்றுப்புறம், சூழ்நிலை, மக்கள் கூட்டம், ஆரவாரம் அனைத்தையும் ஒரு கணம் மறந்து கண்களில் துளிர்த்த ஆனந்த கண்ணீரோடு, அருள் ஒளி விட்டு பிரகாசிக்கும் பாபாவின் முழு உருவையும் மனதார கண்டு மகிழ்ந்தோம். நவவித பக்தியும் மனதில் நாட்டியமிட்ட அந்த நேரம் எனது எல்லா கேள்விகளுக்கும் பதிலும் ஆசியும் கிடைத்ததை உணர்ந்தேன்.
பாபாவின் தாரக மந்திரமான நம்பிக்கை, பொறுமை காதில் ஒலித்து கொண்டே இருந்தது. ‘’ஷிர்டி சாய்நாத் மகாராஜ் கி ஜெய்’’ என்ற கோஷத்துடன் சாயி நாதரை கண்குளிர தரிசித்துவிட்டு, மன திருப்தியுடன் வெளியில் வந்தோம்.
பிறகு, சமாதி மந்திரின் பின்புறம் பாபா அமர்ந்த வேப்பமரத்தடியில் உள்ள குருஸ்தானை வணங்கி பிரார்த்தனை செய்துவிட்டு, உதி மற்றும் லட்டு பிரசாதம் பெற்றுக்கொண்டு பிரகாரம் வந்தோம்.
எங்கள் குருஜி ஸ்ரீராம் அவர்கள் பாபாவின் நெருங்கிய நண்பர்களும் சீடர்களுக்குமான சமாதி மந்திர் களையும், பார்க்கவேண்டிய இடங்களையும் விளக்கி கூறி ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்றார்கள்.
அப்துல் பாபா சமாதி, நானவலி சமாதி, V.P. ஐயர், தாத்யா பாட்டில், மற்றும் பாபாவால் பராமரிக்கபட்ட லெண்டி தோட்டம், பாபா அருளால் நீர் ஊறிய கிணறு, ராதாகிருஷ்ணாயியின் நினைவாக அமைத்த நந்தா தீபம், பாபாவால் ஏற்றிவைத்து இன்றும் பாதுகாத்து வரும் அணையா விளக்கு, அனைத்தும் வரலாற்று சாட்சியாக சமாதி மந்திரின் உள்வளாகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளதை தரிசித்து மகிழ்ந்தோம்.
முக்கியமாக சாயி மந்திர் வளாகத்தில் அமைந்துள்ள தீக்ஷித் வாடா மியூஸியம். பாபா உபயோகப்படுத்திய பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. பாபா அணிந்த கபினி, புகைக்குழாய், அன்னபூரணி ராதாகிருஷ்ணமாயி பாபாவிற்கு வழங்கிய அனுமன் படம் போட்ட கைவிசிறி, பல்லக்கு, சாய்வு நாற்காலி, குளிக்கும் கல், அடுப்பு, கோதுமை மாவு அரைத்த திருக்கை அனைத்தும் விபர குறிப்புகளோடு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அனைத்தையும் கண்டு ரசித்துவிட்டு, வியப்பு மேலிட வெளியில் வந்து
தியான அறையில் அனைவரும் அமர்ந்து 5 நிமிடம் தியானித்தோம். தன்னலமின்றி குருஜி எங்களுக்கு அளித்த தியான பயிற்சி துணை புரிந்தது. விநாயகர், சிவன், சனி பகவான் மூவருக்கும் தனி ஆலயம், எதிரில் பாபாவிடம் மோட்சம் பெற்ற புலிக்கும் சமாதி இருந்தது.
சமாதி மந்திரின் தெற்கு வாசலில் ஆலமரத்தின் அடியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில், பாபா இரவில் நண்பர்களுடன் உறங்கி, பல லீலைகள் செய்த சாவடி, எதிரில் அப்துல் பாபா வீடு, மற்றும் அணையா நெருப்பாக இன்றும் உதி வழங்கும் துவாரகாமாயி என்று பாபா புழங்கிய இடங்கள் அனைத்தையும் பக்தி சிரத்தையோடு தரிசித்து மகிழ்ந்தோம்.
மேலும், மகல்சாபதி, லட்சுமி பாய் ஷிண்டே, பய்யாஜி, மாதவ்ராவ் ஆகியோர் வீடுகளுக்கு அழைத்து சென்றார். பாபா தனது இறுதி காலத்தில் லட்சுமி பாய் ஷிண்டேவுக்கு, நவவித பக்தியை குறிக்கும் விதமாக வழங்கிய 9 நாணயங்கள் இன்றும் அவர் வீட்டில் காட்சிக்கு உள்ளதை தரிசித்து மகிழ்ந்தோம்.
குருவும், கலியன் அய்யாவும் தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கிணங்க பக்தர்களை, “வாழும் பாபா” சீரடி ஸ்ரீ அச்சுதானந்த சுவாமிகளை சந்திக்க வைத்து ஆசி பெற வைக்கவேண்டும் என்று முயற்சி எடுத்தனர். அதன் விளைவாக பல்வேறு பணிகளுக்கிடையேயும் எங்கள் அனைவரையும், சமாதி மந்திரின் வாசலில் சந்தித்து ஆசி வழங்கினார் வாழும் பாபா ஸ்ரீ அச்சுதானந்தா சுவாமிகள் அதை பக்தர்கள் அனைவரும் பெரும் பாக்கியமாக கருதுகிறோம்.
21ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5.30க்கு குருஜி அவர்கள் சீரடியில் இருந்து 3 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீ சிவநேசன் சுவாமிகள் சன்னதிக்கு அழைத்து சென்றார். ஸ்ரீ சிவநேசன் சுவாமிகள் கோவையை சேர்ந்த தமிழர். தனது இறுதிக்காலம் வரை பாபவின் சேவையில் ஈடுபட்டு பாபவின் புகழ் பரப்பிய அடியவர். ‘’ஓம் சாய் ஸ்ரீ சாய், ஜெய் ஜெய் சாய்” என்ற மகா மந்திரத்தை நமக்கு வழங்கியவர்.
அவரது சன்னதியில், குருஜி எங்களை தியானம் செய்ய தயார்படுத்தி, அடுத்த 20 நிமிடம் எங்களை ஆழ்நிலை தியானத்தில் வைத்திருந்தார். பின்பு குருஜி மற்றும் திரு.கலியன் சாய் அவர்கள் ஆன்மிக சத்சங்கம் நடத்தினார்கள். திரு. கலியன் சாய் அவர்கள் அனைவருக்கும் பிரார்த்தனை நிகழ்த்தினார். மிக அற்புதமான அனுபவத்தை பெற்றோம்.
காலை சிற்றுண்டிக்குப்பின் குரு எங்களை சீரடியிலிருந்து 6 கி.மீட்டர் தொலைவில் உள்ள ரஹாதா விற்கு அழைத்து சென்றார்.அங்கு விட்டோபா கோயில், லட்சுமி நரசிம்மர் ஆலயம், பாபா அமர்ந்த 250 ஆண்டு பழமை வாய்ந்த கற்பக விருச்சம் , ஹனுமான் கோயில், வீரபத்ரர் கோயில் தரிசித்து விட்டு, குசால்சந்த் வீட்டிற்கு அழைத்து சென்றார். மனக்கண்ணில் பாபா அடியவர்களோடு அமர்ந்திருந்து அளவளாவிய காட்சியை உணர முடிந்தது. தொட்டு, தடவி, அமர்ந்து கண்மூடி, உணர்ந்து தரிசித்தோம்.
பின்னர் சாஹூரி உபாசினி மகாராஜ் சமாதிக்குச் சென்றோம். ஸ்ரீ சாய் சத்சரிதத்தில் வரும் கதைகளும் சம்பவங்களும் கதைகள் அல்ல. அனைத்தும் வரலாற்று உண்மை. நம் கண்முன்னே நிதர்சனமாக, இன்றும் பாதுகாக்கப்பட்டுள்ளது.
நேரத்தை வீணாக்காமல் உடனடியாக ‘’ஓல்ட் சீரடி’’க்கு அழைத்துச்சென்றார் குருஜி. பாபா வின் ஹெரிடேஜ் வில்லேஜ். புதிதாக வரும் சாய் பக்தர்களுக்கு இவ்விடம் வரப்பிரசாதம். நபருக்கு 150 ரூபாய் கட்டணம். சத்குரு சாய் பாபா வின் லீலைகளையும், சம்பவங்களையும் தத்ரூபமாக சுதை சிற்பங்களாக காட்சிப்படுத்தி நம்மை ஆச்சரியப்படுத்தி இருக்கின்றார்கள்.
ஒட்டகம் சவாரி, குதிரை சவாரி, மினி மின் ரயில்வண்டி, வயது வித்தியாசமின்றி விளையாடி மகிழ விளையாட்டு திடல் என சுற்றி பார்த்ததில் நேரம் போனதே தெரியவில்லை. வெளியில் வரும்போது பாபாவை பார்த்து உரையாடி உண்டு மகிழ்ந்து திரும்பியதுபோன்ற நிறைவை தந்தது பாபாவின் ஹெரிடேஜ் வில்லேஜ் விசிட்.
அன்று இரவுவரை குருஜி அனுமதியுடன் சமாதி மந்திர் சுற்றியுள்ள கடைகளில் பிரசாதம் மற்றும் பொருட்கள் வாங்கி ஆனந்தமாக சுற்றி திரிந்தோம்.
22 ஆம் தேதி - சனிக்கிழமை காலை சீரடியிலிருந்து சொகுசுப் பேரூந்தில் புகழ்பெற்ற நகரமான “நாசிக்’’ சென்றோம். பிரசித்திபெற்ற சிவஸ்தலமான ‘’த்ரயம்பகேஸ்வரர்” ஆலயம் தரிசனம் செய்தோம்.
பின்பு குருஜி அவர்கள் ஏற்பாட்டின்படி அருகில் உள்ள திருத்தலங்களான பஞ்சவடி முக்திதாம், லக்ஷ்மன் தபஸ், லட்சுமி நாராயண் கோயில், காலராம் கோராராம் ஆலயம், சீதாதேவி குகை, அர்த்தநாரீஸ்வரர், புகழ்பெற்ற புனித நதி கோதாவரி நதி கரையில் அமைந்த தருணை, வருணை, கோதாவரி மூன்று நதிகள் இணையும் திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களை தரிசித்து விட்டு இரவு சீரடிக்கு திரும்பினோம்.
எங்கள் உள்ளங்களைப்போல் இயற்கையும் மண்ணையும் எங்கள் மனங்களையும் குளிர்வித்து கொண்டிருந்தது. நாசிக் பயணம் இனிமையான இறை அனுபவத்தை தந்தது. 23 ஆம் தேதி ஞாயிறு காலை விடுதியின் விருந்தினர் அறையில் அமர்ந்து சாய் பஜன் செய்தோம். குரு ஸ்ரீராம் சாய் மற்றும் சாய் கலியன் அய்யா அவர்கள் சத்சங்கம் செய்ததோடு சாயோடு எங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தார்கள்.
‘’வாழும் பாபா’’ சீரடி ஸ்ரீ அச்சுதானந்த சுவாமிகள் நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கே நேரில் வந்து, அவரது பொன்னான நேரத்தை எங்களுடன் செலவழித்து, எங்களுடன் அளவளாவி, ஆன்மீக அனுபவங்களையும், அறிவுரைகளையும் எங்களுக்கு வழங்கி, தனித்தனியாக ஒவ்வொரு சாய் பக்தருக்கும் பாபா படமும், உதி பிரசாதமும் வழங்கி ஆசிர்வதித்தது நங்கள் அனைவரும் பெற்ற பெரும் பாக்கியம்.
சத்குரு சாய் அப்பாவுடன் அமர்ந்து உரையாடிய அனுபவத்தையும், குதூகலத்தையும் பெற்றோம். இப்புனித பயணத்தின் நோக்கம் நிறைவேறியதை உணர்ந்து மகிழ்ந்தோம். இப்புனிதப்பயணத்தை ஏற்பாடு செய்து, இப்பேரானந்த அனுபவம் பெற காரணமான எங்கள் குருஜி, திரு.ஸ்ரீராம் அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.
சீரடி நாதனை மீண்டும் ஒரு முறை வணங்கி, அவர் அனுமதியுடன் விடுதியில் மதிய உணவினை முடித்து, விடுதி ஊழியர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டு, 4 நாட்களும் எங்கள் அனைவரையும் நல்ல முறையில் கவனித்து உணவளித்தவரும், போக்குவரத்திற்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து தந்தவருமான விடுதி காப்பாளர் திரு. குப்தா அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொண்டு, பேருந்தில் ஏறி இரவு 8.30க்கு புனே வந்தடைந்தோம்.
இரவு 10.30 க்கு வந்த மும்பை எஸ்பிரஸில் ஏறி அனைவரும் பாதுகாப்பாக 24 ஆம் தேதி திங்கள் கிழமை மலை 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தோம்.
இந்த புனித யாத்திரையை வருடத்திற்கு 2 முறை வியாபார நோக்கின்றி மிக சிறப்பாக ஏற்பாடு செய்து, ஆடம்பரமின்றி எளிமையாக, பக்தர்களை அன்பாக வழிநடத்தி,மிகச் சிறந்த ஆன்மிக அனுபவத்தை தந்த எங்கள் குருஜி, வழிகாட்டி, ஆசிரியர் திரு. ஸ்ரீராம் சாய்ராம் அவர்களுக்கும்,
குழுவில் தலைமை பொறுப்பேற்று, அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கி எங்களை வழிநடத்திய ''பிரார்த்தனை செம்மல்'' திரு சாய் கலியன் அய்யா அவர்களுக்கும்,
2 நாட்கள் எங்களுடன் கலந்து உரையாடி தன் மதிப்பு மிக்க நேரத்தை செலவிட்டு எங்களுக்கு ஆசி வழங்கிய ''வாழும் பாபா” திரு. அச்சுதானந்த சுவாமிகள் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை கூறிக் கொண்டு, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்.
சாந்தி வெங்கடாச்சலம்,
மயிலாப்பூர்
சென்னை-28.