தீப தியானம் - திருவிளக்கு பூஜையும் தியானமும்.

தீப தியானம் - திருவிளக்கு பூஜையும் தியானமும்.
சாய் ஆத்ம ஞான சபையில் திருவிளக்கு பூஜையும் தியானமும்.

ஸ்ரீ சாய் தியானாலயாவில்
தீப தியானம்.

ஒளி வழிபாடு என்பது மிகப் பழமையானது. இறைவன் அரும் பெருஞ் சோதியாகத் திகழ்பவன். சோதியாய்,சுடராய்,சூழொளி விளக்காய் அருள் பாலிப்பவன். திருமுறைகள் இச்சிறப்புகளை போற்றி பரவுகின்றன. விளக்கிட்டார் பெற்ற பயன்களையும் விரித்துரைக்கின்றன.

நம் தமிழகத்து மாமன்னர்கள் திருக்கோவில்களின் அருட்பொலிவிற்குத் தாங்கள் ஆற்றிய அரிய பணிகளுள் திருவிளக்கிடுதலுக்கு நிலையான நிபந்தங்களை அமைப்பதை முக்கியமானதாகக் கொண்டனர் என்பதைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இன்றைய உலகியலும், திருவிளக்கு ஏற்றியே எச்செயல்களும் மேற்கொள்ளப் பெறுதலையும் காண்கின்றோம்.

உலகில் ஒளிப்பொருள்களாக விளங்குவன ஞாயிறு, திங்கள், அக்கினி. இவற்றுள் அக்கினி விளக்கின் வாயிலாக ஒளி தருவது. எனவே இம்மூன்றும் ஒளிப்பொருட்களாக திகழ்கின்றன.

அவற்றுள் ஞாயிறு பகலில் மட்டுமே ஒளி தருவது, திங்கள் இரவில் மட்டுமே ஒளி தருவது. விளக்கு எக்காலத்திலும் ஒளிரும் சிறப்புடையது. ஆதலால் இறைவனை விளக்கொளியில் ஆவாகனம் செய்து மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெருஞ்சோதி வடிவினனாகிய சிவபிரானைச் சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே என்று போற்றி அழைக்கின்றார். மணிவாசகர்.

மாலை நேரங்களில் " ஒளிவளர் விளக்கே" என்று போற்றுகின்றனர்.
மகளிர் தத்தம் இல்லங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்வதையும் கார்த்திகைத் திங்கள் முழுமதிநாளில்  வீடு நிரம்ப விளக்கிட்டு விழா கொண்டாடுதலையும் இலக்கியங்கள் உணர்த்துகின்றன.

விளக்கொளி வடிவில் இறைவனைக் கண்ட மக்கள் ஆலயங்களிலும், தெய்வங்கட்குத் திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர். பண்டைய தமிழ் மன்னர்கள் ஆலயங்களில் நந்தா விளக்கு ஏற்ற பல்வேறு அறக்கட்டளைகள் நிறுவியுள்ளதை கல்வெட்டுக்ள் தெரிவிக்கின்றன. விளக்கிட்டார் அடையும் பயன் என்னவென்றால், மெய்நெறியும், அதற்கேற்ற அறிவுமாகும்.என்கிறார் அப்பரடிகள்.

விளக்கேற்றுதல் என்பது தமிழர்தம் வாழ்வியலில் முதன்மையானதும், முக்கியமானதுமாகும். விளக்கிடுவது ஒரு குறியீடு அது " வாழ்வில் மேம்பாடு உண்டாகுதல்" என்ற பேருண்மையை சுட்டுவதாகும்.

சங்க இலக்கியம் தொடங்கி, சமயச் சான்றோர்களும், அண்மையில் தோன்றிய இலக்கிய கர்த்தாக்களும் விளக்கீட்டின்  பெருமையை பலவாறாகப் போற்றி பாடுகின்றனர்.

" கார்த்திகை விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்" என்று ஞானசம்பந்தர் பாடி விளக்கீட்டு வழிபாட்டின் உயர்வினைச் சுட்டுகிறார்.

" உடம்பென்னும் மனையகத்துள் உள்ளமே தகளியாக 
மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனும் திரியாக்கி
இடம்படு ஞானத்தீயால் எரி கொளவிருந்து நோக்கில்
கடம்படு காளைதாகை கழலடி காணலாமே"
என அப்பர் அடிகள் பாடுகின்றார்.

வழிபடும் காரணம் இல்லாமல் தன்னிச்சையாய் விளக்கு தீபத்தினைத் தூண்டிய எலிக்கு மறுபிறப்பில் மகாபலி சக்ரவர்த்தியாய் பிறக்கும்பேறு நல்கியவன் சிவபெருமான் என்பதை அப்பர் அடிகள் இவ்வாறு பாடுகின்றார்.

" நிறைமறைக் காடுதன்னில் நீண்டெரி தீபந் தன்னை
கறைநிறத் தேலிதன் மூக்குச் சுட்டிடச் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகமெல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கு வீரட்டனாரே"

சமய வரலாற்றில் தண்ணீரில் விளக்கிட்டு புகழ் பெற்றவர்கள், நமிநந்தியடிகள், வள்ளல் பெருமானார், கணம்புல்லில் விளக்கெரித்து அது கிட்டாத போது தன் முடியையே விளக்காக எரித்தவர் கணம்புல்லர். விளக்கிற்கு இடுவதற்கு எண்ணை தர வியாபாரிகள் மறுத்ததனால் தண்ணீரை ஊற்றி விடியவிடிய  விளக்கெரிய வைத்தவர் நமது சற்குரு சாயிபாபா.

மேற்குறித்த சான்றோர் மொழிகளும், செயல்களும், விளக்கு வழிபாட்டின் மேன்மையை உலகுக்கு உணர்த்துவன.

திருவிளக்கு பூஜை ஒன்றில்தான் நான்கு மார்க்கங்களிலும் இறைவனுக்கு பூஜை செய்யலாம்.
விளக்கை சுத்தம் செய்வது, சரியை மார்க்கமாகும். தீபம் ஏற்றுவது கிரியை மார்க்கமாகும். அந்த தீபத்தை சிந்தையில் நிறுத்தி தியானித்தல் யோக மார்க்கமாகும். தீபச் சுடரை புகழ்ந்து பாடி வேண்டுதல் ஞானமார்க்கமாகும். 

திருவிளக்கு பூஜையின் பலன்கள்:
குடும்பத்தில் ஏற்படும் கவலைகள் நீங்கி நிம்மதி கிடைக்கும். திருமணத்தடைகள் அகலும்,குழந்தை பாக்கியம் கிட்டும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும். வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் துறையில் இருப்பவர்கள் தொழிலில் வெற்றி பெறுவார்கள். பணக்கஷ்டம் உடையவர்கள் செல்வம் கிடைத்து கடன் தொல்லை நீங்கப் பெறுவர். நிம்மதி கிடைக்கும். நோய் நொடிகள் நீங்கும்.  வேண்டிய வரங்களைப் பெற்று ஆனந்த வாழ்வு வாழலாம். 

குத்துவிளக்கின் சிறப்பு:
குத்து விளக்கு, பஞ்ச மூர்த்திகளின் வடிவமும் சகல தேவதைகளும் உறையும் ஓர் அம்சமாகும். குத்துவிளக்கின் அடிப்பாகம் பிரம்ம அம்சமாகும், நடுப்பாகம் விஷ்ணு அம்சமாகும், எண்ணை விடும்பகுதி ருத்திரன் அம்சமாகும், மேல்பகுதி மகேஸ்வரர் அம்சமாகும், உச்சிப்பகுதி சதாசிவன் அம்சமாகும்.

விளக்கில் இருந்து தோன்றும் ஒளி ஸ்ரீ பரமேஸ்வரனும், விளக்கில் ஊற்றும் நெய்-நாதம், திரி-விந்து, சுடர்-திருமகள், பிழம்பு- கலைமகள்,தீ- மலைகள். ஐந்து முகங்கள் பஞ்ச பூதங்களைக் குறிக்கும். 

விளக்கு ஏற்றுவதின் தத்துவம்:
விளக்கு ஏற்றுவது என்பது இருளை அகற்றி ஒளியைக் கொடுப்பதாகும்.
விளக்கின் ஒளி,புற இருளை அகற்றுவததோடு, மனிதனின் அக இருளையும் அகற்றி மெய்யான ஒளியை தோற்றுவிக்கும். நமது அஞ்ஞானம் அழிந்து மெய்ஞானம் பிறக்க, இருளில் இருந்து ஒளிக்கு வரவேண்டும்.

தீப எண்ணைகளும், பலன்களும்:
நல்லெண்ணை:  கணவன், மனைவி சண்டைகள் நீங்கி ஒற்றுமையுண்டாகும்.
இலுப்பை எண்ணை:
எம பயம் தீரும் ஆரோக்கியம் தரும்.
ஆமணக்கு எண்ணை:
குல தெய்வ அருள் கிட்டும், சகல சம்பத்துக்களும் கிடைக்கும்.
தேங்காய் எண்ணை:
மன உறுதியும்,உள்ளத் தெளிவும் வரும்
வேப்பெண்ணை:
உற்றார்,உறவினர் உதவி, கிட்டும்.
பசு நெய்:
கிரக தோசங்கள் விலகும். ஞானம் ஏற்படும்.
முக்கூட்டு எண்ணை:
பசு நெய், இலுப்ப எண்ணை,வேப்ப எண்ணை, இம்மூன்றும் கலந்து விளக்கேற்ற, அனைத்து ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
பஞ்ச தீப எண்ணை:
பசு நெய், ஆமணக்கு எண்ணை,வேப்ப எண்ணை,இலுப்ப எண்ணை,தேங்காய் எண்ணை, கொண்டு தீபமேற்ற, வெண்குஷ்டம், நரம்புத்தளர்ச்சி, போன்றவை நீங்கும், மந்திர சக்தி உண்டாகும்.
தீபம் ஏற்றக்கூடாத எண்ணைகள்:
கடலை எண்ணை,கடுகு எண்ணை, பாமாயில், பருத்தி எண்ணை.

தீப மேற்றும் திரி வகைகள்:
பஞ்சுத்திரி: பிரிவுத்துயர் நீங்கும், சூரியபகவானின் அருள் கிட்டும். பருத்தி திரியில் மஞ்சள் தோய்த்து விளக்கிட தாம்பத்ய தகராறு நீங்கும். புத்திர சோகம் நீங்கி அம்மன் அருள் கிட்டும்.
தாமரை திரி: செல்வங்கள் கிடைக்கும் முற்பிறவி பாவங்கள் அகலும். குல தெய்வ குறைபாடு நீங்கும்.
வாழைநார் திரி:
குழந்தைபாக்கியம் கிட்டும்.
வெள்ளெருக்கு நார்திரி:
நீண்ட ஆயுள் கிட்டும், பேய், பிசாசு,பில்லி, ஏவல், சூனியம், திருஷ்டி விலகும்.
குறிப்பு: விளக்கில் எண்ணை இட்ட பின்பே திரியை இட வேண்டும். அகல்விளக்கு ஏற்றி அதன் மூலமே விளக்கை ஏற்ற வேண்டும். முதலில் கிழக்கு முகத்தை ஏற்ற வேண்டும்.

தீபம் ஏற்றவேண்டிய எண்ணிக்கை:
ஒரு முகம்: குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
இரண்டு முகம்: செல்வம் உண்டாகும்.
மூன்று முகம்: படிப்பு குறைபாடு நீங்கும்.
நான்கு முகம் : அனைத்து நலன்களும் கிட்டும்.
ஐந்து முகம்: சர்வ மங்களம் ஏற்படும். 
ஒன்பது முகம்: கிரக தோசங்கள் நீங்கும்.

விளக்கினை கழுவும் முறை:
விளக்குகளை முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும். பிறகு எழும்பிச்சை கொண்டு கழுவ வேண்டும். அதன் பின்பு, பயத்தம் பருப்பு, சீயக்காய், வெந்தயம், பச்சரிசி, காய்ந்த எழும்பிச்சை தோல் ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொண்டு அந்தப் பொடியால் தான் விளக்க வேண்டும். வேறு எதனால் விளக்கினாலும்  விளக்கிற்கு கறை தோஷம் ஏற்படும்.

குறிப்பு: 
*தென்திசை தவிர அனைத்து திசைகளிலும் தீபமேற்றலாம். 
*குத்து விளக்கை, காலையில் சூரிய உதயத்திற்கு முன்னும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னும் ஏற்ற வேண்டும்.
*எல்லா காலங்களிலும்,நாட்களிலும், எல்லா மாதங்களிலும், விளக்கேற்றலாம். 
* ஆண், பெண்,குழந்தைகள், முதியவர்கள், விதவைகள் என யார் வேண்டுமானாலும் விளக்கேற்றலாம். 
* ஞாயிறு,திங்கள்,வியாழன்,சனி ஆகிய நாட்களில் விளக்கை துலக்கலாம். 
* செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமைகளில் துலக்ககூடாது
* தினமும் காலை, மாலை,குறைந்தது பத்து நிமிடமாவது, விளக்கை எரிய விட்டு, இறைவனை சோதியாகப் பாவித்து தியானம் செய்ய வேண்டும்.
* விளக்கினை கையாலோ, வாயாலோ அணைக்கக்கூடாது. திரியை எண்ணைக்குள் இழுத்து அணைக்க வேண்டும்.

விநாயகர் சரணம்:
அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாதுயரம் போம் நல்ல
குணமதிகமாம் அருணைக் கோபுரத்தூண்மேவும் 
கணபதியை கைதொழுதக்கால். 

திருவிளக்கு போற்றி!
ஓம் சிவாய போற்றி!
ஓம் சிவ சக்தியே போற்றி!
ஓம் இச்சா சக்தியே போற்றி!
ஓம் கிரியா சக்தியே போற்றி!
ஓம் குண்டலினி சக்தியே போற்றி!
ஓம் மூலாதாரத்து கனலே போற்றி!
ஓம் சுவாதிஷ்டானத்து சுடரே போற்றி!
ஓம் மணிபூரகத்தின் மாமணியே போற்றி!
ஓம் அநாதகத்தின் துடிப்பே போற்றி!
ஓம் விசுக்தியின் விளக்கே போற்றி! 10

ஓம் ஆக்கினையின் சோதியே போற்றி!
ஓம் துரியத்தின் தெளிவே போற்றி!
ஓம் துரியாதீத பிரம்மமே போற்றி!
ஓம் அருட்பெரும் சோதியே போற்றி!
ஓம் தனிப்பெரும் கருணையே போற்றி!
ஓம் தமிழர்குலச் சுடரே போற்றி!
ஓம் தண்டமிழ் தாயே போற்றி!
ஓம் தமிழ் கூறும் ஒளியே போற்றி!
ஓம் தீந்தமிழ் சுவையே போற்றி!
ஓம் திரிபுர சுந்தரியே போற்றி!          20

ஓம் ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி!
ஓம் இருள் அகற்றும் சோதியே போற்றி!
ஓம் ஒளிக்கும் ஒளியாய் உணர்வாய் போற்றி!
ஓம் சூளா மணியே சுடர்ஒளி போற்றி!
ஓம் என் இல்ல விளக்கே இறைவி போற்றி!
ஓம் சுடர்விளக்கின் தெய்வமே போற்றி!
ஓம் எரிசுடராய் நின்ற இறைவி போற்றி!
ஓம் ஞானச்சுடரான ஞானமே போற்றி!
ஓம் சக்தி போற்றி! சுடரே போற்றி!
ஓம் தீப மங்கள சக்தி போற்றி!         30

ஓம் நந்தா விளக்கு நாயகியே போற்றி!
ஓம் ஆதியும் அந்தமும் நீயே போற்றி!
ஓம் அருமறைப் பொருளே போற்றி!
ஓம் ஓதும் உள் ஒளி விளக்கே போற்றி!
ஓம் சொல்லக விளக்காம் சக்தி போற்றி!
ஓம் ஒப்பில்லா ஒளிவளர் விளக்கே போற்றி!
ஓம் உள்ளத் தகளி விளக்கே போற்றி!
ஓம் இருளை அகற்றும் ஒளியே போற்றி!
ஓம் கற்பனை கடந்த சோதியே போற்றி!
ஓம் சக்தி போற்றி! சுடரே போற்றி!     40

ஓம் அற்புதக் கோல விளக்கே போற்றி!
ஓம் உள்ளத்து இருளை ஒழிப்பாய் போற்றி!
ஓம் ஓதுவார் அகத்து ஒளியே போற்றி!
ஓம் ஓங்கார உள்ளொளி விளக்கே போற்றி!
ஓம் பூங்கழல் விளக்கே போற்றி!
ஓம் வழிகாட்டும் விளக்கே போற்றி!
ஓம் வாழ்விக்கும் விளக்கே போற்றி!
ஓம் ஆணிப்பொன் விளக்கே போற்றி!
ஓம் அருந்துணை விளக்கே போற்றி!
ஓம் அறிவொளிப் பிழம்பே போற்றி! 50


ஓம் பேரின்ப பெருவெளியே போற்றி!
ஓம் பேதமை ஒழிப்பாய் போற்றி!
ஓம் பேரருள் புரியும் தாயே போற்றி!
ஓம் மங்கள நாயகியே போற்றி!
ஓம் பொங்கும் கீர்த்தி பூரணி போற்றி!
ஓம் துன்பமில்லா இன்பம் அருள்வாய் போற்றி!
ஓம் முந்தைய வினையை முடிப்பாய் போற்றி!
ஓம் அருளே உருவாய் அமைந்தாய் போற்றி!
ஓம் குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி!
ஓம்  அருள்திரு உருவே அழகே போற்றி!        60

ஓம் எங்கள் குல விளக்கே போற்றி!
ஓம் எரி சுடர் கொழுந்தே போற்றி!
ஓம் கார்த்திகை தீபமே போற்றி!
ஓம் கன்னியர் விளக்கே போற்றி
ஓம் காலை செஞ்சுடரே போற்றி!
ஓம் கோபுர விளக்கே போற்றி!
ஓம் திருமகள் விளக்கே போற்றி!
ஓம் திருவருள் விளக்கே போற்றி!
ஓம் தூண்டாமணி விளக்கே போற்றி!
ஓம் தூய்மை விளக்கே போற்றி!     70

ஓம் நிறை நாழி விளக்கே போற்றி!
ஓம் நெஞ்சக விளக்கே போற்றி!
ஓம் நீலகண்டன் திருவிளக்கு போற்றி!
ஓம் திருமாலின் நெய்விளக்கே போற்றி!
ஓம் பசுபதி விளக்கே போற்றி!
ஓம் பாவை விளக்கே போற்றி!
ஓம் பெருஞ்சுடர் விளக்கே போற்றி!
ஓம் பேரொளி விளக்கே போற்றி!
ஓம் பொன்னம்பல விளக்கே போற்றி!
ஓம் பொற்கொடி விளக்கே போற்றி!  80

ஓம் மாசறு விளக்கே போற்றி!
ஓம் மறைமுடி விளக்கே போற்றி!
ஓம் மாதர் தொழும் விளக்கே போற்றி!
ஓம் மாயா விளக்கே போற்றி!
ஓம் மெய்ஞான விளக்கே போற்றி! 
ஓம் வெள்ளி விளக்கே போற்றி!
ஓம் வேதநாயக விளக்கே போற்றி!
ஓம் ஆனந்த விளக்கே போற்றி!
ஓம் மகிமை கொண்ட மாவிளக்கே போற்றி!
ஓம் மங்கள விளக்கே போற்றி!          90

ஓம் குலம் காக்கும் விளக்கே போற்றி!
ஓம் சொர்ணச் சுடரே போற்றி!
ஓம் முக்தி நல்கும் ஒளி விளக்கே போற்றி!
ஓம் முழு ஞானப் பெரு விளக்கே போற்றி!
ஓம் பரமானந்த திரு விளக்கே போற்றி!
ஓம் பூங்கழல் விளக்கே போற்றி!
ஓம் எங்கும் நிறைந்த ஏகாந்த விளக்கே போற்றி!
ஓம் கவலைகள் போக்கிடும் ஒளிவிளக்கே போற்றி!
ஓம் எம்மை காக்கும் காமாட்சி விளக்கே போற்றி!
ஓம் நல்லருள் புரியும் நல்ல விளக்கே போற்றி!     100

ஓம் முக்கண்ணில் எழும் சுடரே போற்றி!
ஓம் அங்கயற்கண்ணி அம்மையின் விளக்கே போற்றி!
ஓம் அருந்தவத்தின் சுடரே போற்றி!
ஓம் பிணிக்கு மருந்ததே போற்றி!
ஓம் தவயோக அருட்கனலே போற்றி!
ஓம் திரிபுர சுந்தரி சோதியே போற்றி!
ஓம் திக்கெட்டும் ஒளிர்பவளே போற்றி!
ஓம் நித்யகல்யாணி சுமங்கலி தீபமே போற்றி!   108

போற்றுதலுக்கும், பெருமைக்குரியதுமான ஆதி தமிழரின் தீப வழிபாட்டை நமது "சாய் தியானாலயா தவ மன்றத்தில்"  
தீப தியானம் என்ற பெயரில் கடந்த 24.07.2021 குரு பூர்ணிமா அன்று வெகு சிறப்பாக நிகழ்த்தப்பட்டது.

பாபா பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவரின் குடும்ப நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் பிரார்த்தனை செய்து தீப தியானம் நிகழ்சி நிறைவு செய்யப்பட்டது.

அருட்பெரும்சோதி! அருட்பெரும்சோதி!
தனிப்பெரும் கருணை! அருட்பெரும்சோதி!

******