பணிந்தோர்க்கு பரந்தாமன்.

பணிந்தோர்க்கு பரந்தாமன்.

பணிந்தோர்க்கு பரந்தாமன்.

கோவிந் தாமோதர் பண்டிட் குல்வா மாவட்டத்தில், பல்சே என்ற குக்கிராமத்தில வசித்து வந்தார்.
கோவிந் தன் மகளுக்கு பொருத்தமான வரனை தேடி கடுமையாக முயற்சித்தும், சரியாக அமையாததால் மிகுந்த வருத்தத்தில் இருந்தார்.

ஒரு நாள் தன் நெருங்கிய நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, பேச்சு ஞானிகளைப் பற்றி திரும்பியது.
அந்த நண்பர் கோவிந்திடம் பாபாவைப் பற்றி பேசத் தொடங்கினார். அப்போது திடீரென்று அவர், கோவிந் உங்கள் மகளுக்கு 15 நாட்களுக்குள் திருமணம் நடந்தால், நாம் சீரடிக்குச் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெறுவோம் சம்மதமா என்றார். கோவிந்தும் அதற்கு ஒத்துக் கொண்டு சரி அப்படியே செய்வோம் என்றார்.

ஹைதராபாத்தை சேர்ந்த ஹர்தேக் குடும்பத்தினர் தங்களது மகனுக்கு அவரது பெண்ணைக் கேட்டு வந்தபோது வியப்பின் உச்சிக்கே சென்று விட்டார் கோவிந். மணமகனுக்கு பெண்ணை மிகவும் பிடித்திருந்ததனால் அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

கோவிந் திருமணத்திற்காக எங்கேயும் எதற்காகவும் அதிக சிரமப்படாமல் 15 நாட்களுக்குள் நடந்து முடிந்துவிட்டது. அதை அவரது நண்பர் சுட்டிக்காட்டி, பாபாவின் தரிசனத்திற்கு செல்ல வேண்டும் என்பதனை நினைவுப் படுத்தினார்.

கோவிந்தும் தன் நண்பர் ஒருவரிடம் 30 ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு சீரடி புறப்பட்டார். அவர்கள் சீரடி சென்றதும் முதலில் மாருதி கோவிலுக்குச் சென்றனர். அப்போது பாபா தன் பக்தர்களுடன் லெண்டிப் பார்க் சென்றிருந்தார். ஆகவே அவர்கள் துவாரகாமாயி சென்று அங்கேயே அமர்ந்து கொண்டனர்.

அங்கு கூடியிருந்த பக்தர்கள், பாபா லெண்டிக்கு புறப்படுவதற்கு முன்பு மிகவும் கோபமாக இருந்ததாகவும், எனவே அவர்கள் கீழே இறங்கி சபா மண்டபத்தில் அமர்வதே புத்திசாலித்தனம் என்றும், இல்லாவிட்டால் பாபாவின் கோபம் உங்களின் மீது திரும்பக்கூடும் என்று கூறினர்.

அவர்களின் அறிவுரைப் படி கோவிந் கீழே இறங்கி சபா மண்டபத்தில் அமர்ந்து பாபாவின் வரவிற்காக காத்திருந்தார் . சிறிது நேரத்தில் பாபாவும் அவரது தொண்டர்களும் சிரித்து பேசிக் கொண்டு மிகவும் மகிழ்சியாக ஆராவாரமாக வந்தனர். பாபாவின் முகத்திலும்கூட  கோபத்திற்குண்டான அறிகுறியே இல்லை. இதைக் கண்டு கூடியிருந்த பக்தர்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.

மசூதிப் படிகளில் ஏறுவதற்குமுன் பாபா, நான் குளிப்பதற்கு தண்ணீர் கொண்டு வாருங்கள் என்றார். அப்போது அவர் துவாரகாமாயியின் படிக்கட்டுகளில் நின்றிருந்தார். பக்தர்கள் தண்ணீர் கொண்டுவந்து பாபாவின் பாதங்களை அலம்பினார்கள். கோவிந் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பாபாவின் பாதங்களை கழுவிய தண்ணீரை கைகளில் ஏந்திப் பருகினார்.

பின்பு படியேறி வந்து தேங்காய், வெற்றிலை பாக்கு,ஆகியவற்றோடு ஒரு ரூபாய் தட்சிணையையும் வைத்து பாபாவின்முன் சமர்ப்பணம் செய்தார். பிறகு தன் தலையை பாபாவின் பாதங்களில் வைத்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

உடனே பாபா, நீ என் பாதத்தில் உன் தலையை வைத்து நமஸ்காரம் பண்ண வேண்டியதில்லை. தொலைவில் இருந்து நமஸ்காரம் செய்தால்கூட அது என்னை வந்தடையும் என்றவர் தட்சிணையாக வைக்கப்பட்டிருந்த ஒரு ரூபாயைப் பார்த்த பாபா, ஏன் ஒரு ருபாய் கொடுக்கிறாய் எனக்கு இன்னொரு ரூபாய் கொடு என்றார். கோவிந் இன்னொரு ரூபாயை பாபாவிடம் கொடுத்தார்.

பிறகு அந்த ஒரு ரூபாயை தன் கைகளால் சுண்டிவிட்டார். பின் கோவிந்தைப் பாரத்து, நான் உனக்கு முப்பது ரூபாய் கடன் பட்டுள்ளேன். என்று திரும்பத் திரும்பக் கூறினார்.
உண்மையில் பாபா கோவிந்திடம் கடன் பட்டிருக்கவில்லை. கோவிந்துதான் பாபாவிடம் வருவதற்கு 30 ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு வந்திருக்கின்றார்.

பாபா தன் பக்தர்களில் ஒருவரிடம், நாராயணா, அந்த பாபு சாகேப் இங்கே வந்தால் அவனை நன்றாக சாத்து. அவன் என்னிடம் இருந்து நாலாயிரம் பணத்தை வாங்கிக்கொண்டு, இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை. கேட்டால் கொடுக்கின்றேன், கொடுக்கின்றேன், என்று கூறுகிறானே தவிர இதுவரை கொடுத்தபாடில்லை. என்றார்.

இதைக்கேட்டு கோவிந் திடுக்கிட்டார். ஏனெனில் பாபா கூறிய அந்தத் தொகையை, பாபு சாகேப் என்ற பெயருடைய நபருக்கு கடனாகக் கொடுத்திருந்தார். கேட்கும் போதெல்லாம் கண்டிப்பாக திரும்பிக் கொடுத்துவிடுவதாக கூறும் அவர் இதுவரை திருப்பிக் கொடுக்கவில்லை 

அவர்கள் புறப்படும் நேரம், பாபா கோவிந்திடம், நானும் உன்னோடு வரப்போகிறேன். இங்கு மக்கள் என்னை மிகவும் தொந்தரவு செய்கின்றனர்  என்று கூறினார். பாபா என்ன சொல்கின்றார் என்று கோவிந்துக்குப் புரியவில்லை.பிறகு கோவிந்துக்கு பாபா உதியை கொடுத்து, அவரது நெற்றியில் இட்டு அவர் புறப்பட அனுமதித்தார்.

தன்னை முழுமையாக நம்பி எவர் ஒருவர் சரணாகதியடைகின்றாரோ அவர்களுக்கு சாயிநாதர் பரந்தாமனாகவே காட்சி தந்து அவர்களின் இடர்களை போக்குவார் என்பதை இக்கதையின்மூலம் நாம் அறியலாம்.
……………..