"வாக்கை காப்பாற்று"
"வாக்கை காப்பாற்று"
புனேயைச்சேர்ந்த காசிநாத் துபே என்பவரது மகன் ரகுநாத் துபே, அவர் தனது மனைவி குழந்தைகளுடன், பாபாவைக் காண சீரடிக்குச் சென்றார். ரகுநாத்தைக் கண்டவுடன், பாபா,
"சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும். அப்படி இல்லை என்றால் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டிவரும்" என்றார்.
யாருக்கு புரிந்ததோ இல்லையோ ரகுநாத்திற்கு உடனடியாகப் புரிந்து போனது. உடனடியாக பாபாவின் பாதங்களில் தலையை வைத்து, இனி ஒரு போதும் அப்படி நடந்து கொள்ள மாட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் தெய்வமே என்று சரணாகதியடைந்தார்.
ரகுநாத் அப்படி என்ன தவறு செய்தார். தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
ரகுநாத் தனது தந்தை காசிநாத்துடன் ஒரே குடும்பமாக புனேயில் வசித்து வந்தார். 1913 ஆம் வருடம் புனே நகரில் பிளேக் நோய் கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கியது. எனவே புனே நகர மக்கள் அனைவரும் தங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு நகரை விட்டு வெளியேறத்தொடங்கினர்.
எனினும் காசிநாத் தன் வீட்டை விட்டு வெளியேறவில்லை. ஏனெனில் அவருக்கு பாபாவின் மேல் அதீத நம்பிக்கை இருந்ததால், பாபா எந்த ஒரு இக்கட்டில் இருந்தும் தன்னை நிச்சயமாக காப்பாற்றுவார் என்று மிக உறுதியாக நம்பினார்.
எனினும் அவர் மகன் ரகுநாத்திடம் குடும்பத்தை அழைத்துக் கொண்டு மாமியார் வீட்டிற்குச் சென்று தங்கிவிடும்படி கூறினார். ரகுநாத்தும் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு புனேயை விட்டு புறப்படத் தயாரானார். ஆனால் அதற்குள் ஒரு முறை சீரடி சென்று பாபாவின் தரிசனம் பெற விரும்பி மனதிற்குள் பிரார்த்தித்துக் கொண்டார்.
இருப்பினும், தனது சிறு குழந்தைகள், கர்பிணி மனைவியுடன் நீண்ட தூரம் பயணிப்பதற்காக பொருட்களை சேகரித்து தயார் செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டதால் சீரடி செல்ல மறந்து விட்டார்.
பிறகு, தந்தையிடம் விடை பெற்றுக் கொண்டு தன் மனைவியோடும், இரண்டு மகன்களோடும் தன் மாமியார் வீடு இருக்கும் கர்நாடகா மாநிலத்திற்கு இரயிலில் பயணமானார். தோண்ட் என்ற இரயில் நிலையம் அடையும் வரை எல்லாம் நல்லபடியாகத்தான் இருந்தது.
அதன்பிறகு, நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த அவரது இளைய மகன் திடீரென்று கடும் காய்ச்சல் கண்டு அவதிப்பட்டான். மகனின் நிலை கண்டு மனமொடிந்து போன நிலையில், அவரது மனைவிக்கும் கடுமையான காய்ச்சல் வந்து விட்டது.
மாலை ஆனவுடன் காய்ச்சலின் தன்மை தீவிரமடைந்து பிளேக் நோயின் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன.
இறுதியில் ஒரு வழியாக எப்படியோ சமாளித்து அவரது மனைவியின் கிராமமான நாவல்குதாஸ் என்ற ஊரை சென்றடைந்தார். ஆனால் ரகுநாத்தின் பிரச்சனைக்ள் அதோடு நிற்கவில்லை. அந்த கிராமத்தில் அவருக்கு ஒருவரையும் தெரியாது. அங்கு பேசப்படும் கன்னடமும் அவருக்குத் தெரியாது.
அங்கு முதலில் ஒரு மருத்துவரை அவரால் கண்டு பிடிக்கமுடியவில்லை. பிறகு ஒரு நல்ல மனிதர் இவர் படும் கஷ்டத்தை கண்டு இவரோடு நட்பு பாராட்டி, இவருக்கு உதவிகள் செய்ய முன்வந்தார்.அவர் ஒரு மருத்துவரை ரகுநாத்தின் மனைவிக்கு சிகிச்சை அளிப்பதற்காக அழைத்து வந்தார்.
அவரது மனைவியின் உடலை பரிசோதித்த மருத்துவர், அவள் அப்போது ஆறு மாத கர்ப்பிணியாக வேறு இருந்ததால், அவள் உயிர் பிழைக்க வாய்பில்லை என்று அவளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டு சென்று விட்டார்.
ரகுநாத் அந்த வீட்டின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் அனைத்து பொருப்புகளும் அவரின் தலையில் விழுந்தது. அவர் மனைவியின் நிலையோ மிகவும் மோசமாகிக் கொண்டே போனது. இதனால் முற்றிலும் விரக்தியடைந்து, அநாதரவான நிலையில் ரகுநாத் பாபாவிடம் உதவிக்காக தன்னை மறந்து கதறினார்.
முழுமையான பக்தியுடனும், நம்பிக்கையுடனும், பாபாவின் பாதங்களில் தன்னுடைய பிரச்சனைகளை சமர்ப்பித்தார். இவ்வாறு அவர் பிரார்த்தித்த அன்றைய தினமே பாபா மாலை நான்கு மணியளவில் ரகுநாத்திற்கு தனது சத்திய சொரூபத்தைக் காட்டி அருள் புரிந்தார்.
ஆம், சீரடியில் வாழும் தெய்வம், கர்நாடகாவில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்த ரகுநாத்தின் வீட்டிற்கு எழுந்தருளியது. பாபா அவரது வீட்டின் வடக்கு புற கதவின் வழியாக உள்ளே வந்து அங்கிருந்த மனப்பலகையில் அமர்ந்தார். பிறகு அங்கு நோய்வாய்ப்பட்டு படுத்திருந்த ரகுநாத்தின் மனைவியை கருணையோடும், கனிவோடும் உற்று நோக்கினார்.
பின் தன்கைகளில் இருந்த கமண்டலத்தில் இருந்து தீர்த்தத்தை எடுத்து பருகக் கொடுத்தார். தன் திருக்கரங்களால் அவளது தலையை தடவிக்கொடுத்த பாபா, தன் கப்பினியில் இருந்து உதியை எடுத்து அவளுக்கு பூசிவிட்டு அவளை ஆசீர்வதித்தார்.
அதன்பிறகு ரகுநாந்திடம் மராட்டியில்,
"சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும். அப்படி இல்லை என்றால் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டிவரும்" என்றார். இவ்வாறு பாபா கூறிக்கொண்டிருக்கும் போதே அருகில் சில குழந்தைகள் சத்தமாக கத்தின. எனவே ரகுநாத்தின் கவனம் சற்ற திசை திரும்பியது. என்ன சத்தம் என்று ரகுநாத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் பாபாவைப் பார்த்தால் அதற்குள் பாபா மாயமாகிப் போனார்.
இவை அனைத்தையும் கண்டு அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நின்றிருந்த ரகுநாத்திற்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை. ஆனால் அவரின் மனைவியைப் பார்த்த போது அவளது நெற்றியில் உதி இடப்பட்டிருந்தது. எனவே பாபா அவர்களது நல்வாழ்விற்காக, அவரது வீட்டிற்கு வந்தது உறுதியாகிப்போனது.
அன்று இரவு 9 மணியில் இருந்து அவளது காய்சல் குறையத் தொடங்கியது. அடுத்த நாள் காலையில் அவரது மனைவி பிளேக் நோயின் பிடியில் இருந்து விடுபட்டு நடமாடும் அளவிற்கு நன்கு குணமடைந்தாள்.
அதற்குப்பிறகு, சிறிது காலம் சென்ற உடன் ரகுநாத் தன் குடும்பத்தாருடன் சீரடிக்குப் புனிதப் பயணம் சென்று பாபாவை தரிசித்தனர். அப்போது பாபா ரகுநாத்திடம், "சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும். அப்படி இல்லை என்றால் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டிவரும்" என்றார்.
அதற்குப்பின்பு ரகுநாத் தன் வாழ்நாள் முழுவதும் பாபாவின் வாக்கை பின்பற்றி, தன் வாயில் இருந்து வரும் வார்த்தைகளை நன்கு யோசித்து பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.
****