சீரடிக்கு வந்த கங்கை.

சீரடிக்கு வந்த கங்கை.

சீரடிக்கு வந்த கங்கை.

சீரடி மசூதியில் அமர்ந்து கொண்டு பாபா அடிக்கடி கூறும் வாக்கு, "புடே லேயே சங்லே திவேஸே ஏதலே" அதாவது, "மிக நல்ல நாட்கள் எதிர்காலத்தில் வர இருக்கின்றன". என்பதாகும்.

பொதுவாக பண்டைய வழக்கப்படி பர்வணி என்ற புண்ய காலத்தில் மக்கள் புனித தீர்த்தமாடுவது வழக்கமாகும். அப்படி ஒரு பர்வணி திதியில், நாகமகாசயா என்பவரின் தந்தை பாகீரதி நதியில் தீர்த்தமாட வேண்டும் என்று விரும்பி தன் மகனிடம், தன்னை பாகீரதி நதிக்கு அழைத்துச் செல்லுமாறு கோரினார்.

ஆனால் மகனோ, பார்க்கலாம், பார்க்கலாம், என்று தள்ளிப்போட்டுக் கொண்டே சென்றார். மகனின் இந்த நடவடிக்கையால் ஏமாற்றமடைந்த தந்தை விதியை நொந்து கொண்டு பேசாமல் இருந்து விட்டார்.

ஆயினும் இறைவன் மனம் கனிந்துவிட்டால் காலம் என்ன செய்யும். மிகச்சரியாக அதே புண்ய காலத்தில் பாகீரதி நதியின் கரைகள் உடைப்பெடுத்து பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அவரது கிராமத்திற்குள் வெள்ளமென பாய்ந்தாள் பாகீரதி. தந்தையாரும், ஏனைய கிராம மக்களும் ஆனந்தமாக பாகீரதி நதியில் தீர்தமாடி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்விற்கு பல்லாண்டுகளுக்குப் பிறகு, அதே பர்வணி முகூர்த்தம் மீண்டும் வருவதால் பாபுசாஹேப் ஜோக்கும், அவரது மனைவியும், கோபர்காவ்னில் கோதாவரியில் நீராட விரும்பினர். பாபா எப்போதும் கோதாவரி நதியை கங்கா என்றே அழைப்பார். எனவே ஏனைய பக்தர்களும் அவ்வாறே அழைப்பது வழக்கம்.

ஜோக், இதற்காக பாபாவின் அனுமதியை கேட்கச் சென்றபோது பாபா, "பாபுசாகேப்! இதோ பார், நாம் அது குறித்து நாளை யோசிக்கலாம்" என்றார். 

உடனே பாபுசாகேப், பாபா! புண்யகாலம் காலை ஏழு மணிக்கே வந்து விடுகின்றது. நாம் கோபர்கான் செல்ல வேண்டும். அப்படியானால் காலை நான்கு மணிக்கே எழுந்தாக வேண்டும். அப்போதுதான் கங்கையில் நீராடுவது சாத்தியமாகும். என்று கூறினார்.

அதற்கு பாபா மீண்டும், ஆகட்டும் நாளை யோசிக்கலாம் என்றே கூறினார். ஜோக் பாபாவிடம் பலவாறாக கெஞ்சினார். ஆனால் முடிவாக பாபாவின் ஓரே பதில் "நாம் நாளைக்குப் பாரக்கலாம்".

அந்த அபூர்வமான பர்வணி முகூர்த்தம் ஒருவரின் வாழவில் ஒருமுறைதான் வரக்கூடியது என்பதால் ஜோக்கும், அவரது மனைவியும் ஏமாற்றம் அடைந்தனர்.

பாபுசாகேப், ஒருபோதும் பாபாவின் விருப்பத்திற்கு மாறாக செயல்படாத அதிதீவிர பக்தராவார். பாபா அவரின் விருப்பத்திற்கு சரியான பதில் அளிக்காததால் அன்றைய இரவு பாபுசகேப்பிற்கு  மன உளைச்சலுடன் கழிந்தது. அந்த இரவு பாபா சாவடியில் உறங்கும் நாளாகும்.

மறுநாள் காலையில் ஜோக் சாவடிக்கு வந்து பாபாவிற்கு காகட் ஆரத்தி செய்தார். காகட் ஆரத்தி முடியவும் சீரடி கிராம மக்கள் அனைவரும் கத்திக்கொண்டு ஓடிவரவும் சரியாக இருந்தது. 

அவர்கள் அனைவரும் ஓடிவந்து பாபாவிடம், பாபா கங்கை மதகுகளை உடைத்துக்கொண்டு ஓடிவருகின்றாள். பெருக்கெடுத்துவரும கங்கை நீரால் சீரடியின் கால்வாய்கள் நிரம்பி வழிகின்றன. எனக்கூறிவிட்டு ஓடினர்.

பாபா ஜோக்கைப் பார்த்து, ராத்திரி முழுக்க நீ என்னை திட்டித் தீர்த்தாய். ஆனால் இறைவனின் கருணையால் கஙாகையே நம்மிடம் வந்துள்ளாள். "போ ! போய் இப்போது நீராடு!" என்றார்.  பாபுசாகேப் அவரது மனைவி மட்டுமல்லாது சீரடி கிராமமே கங்கையில் நீராடி மகிழ்ந்தது.

அக்காலத்தில் கோதாவரியில் இருந்து சீரடிக்கு தண்ணீர் வழங்குவதற்காக, கால்வாய் வெட்டும் பணிகள் அப்போது தான் தொடங்கப்பட்டிருந்தன. அந்தப் பணிகள் அப்போது முடியவில்லை. அதில் பணிகள் முடிந்து அதில் தண்ணீர் திறந்து விடுவதற்கு நான்கு ஐந்து மாதங்கள் ஆகும். ஆனால் யாருமே எதிர்பாராவண்ணம் சீரடிக்குள் கங்கை நீர் பெருக்கெடுத்து வந்து விட்டது.

காரணம் என்னவென்றால், சீரடிக்கு முன்பாக கட்டப்பட்டிருந்த தடுப்பனைகளில் ஒன்று திடீரென உடைந்துவிட்டது. எனவே பயனின்றிப் போகும் அந்த நீர் மற்றொரு அணையில் இருந்து சீரடிக்கு திறந்து விடப்பட்டது.

அபிரிமிதமாக நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பாபு சாகேப் மகிழ்ச்சியோடு காலையில் மட்டுமின்றி,மதியமும் ஆனந்தமாக நீராடினார்.

அவர்டைய மகிழ்ச்சியைக் கண்ட பாபா, "அர்ரே  பாபுசாகேப், கடவுள் எவ்வளவு கருணை உள்ளவர் பார்த்தாயா, ஆனால் நாம் தான் அவர்மீது முழுமையான நம்பிக்கை வைப்பதில்லை. அதற்குண்டான பொறுமையும் நம்மிடமில்லை. என்றார்.

1910 செப்டம்பரில் மகாதாரா முதன்முதலாக சீரடிக்குச் சென்றார். அந்த சமயத்தில் கிராமத்திற்குத் தேவையான தண்ணீர் சீரடியின் கிணறுகளில் இருந்தே பெறப்பட்டது. அப்போது  மகாதாராவிடம் பாபா, "அர்ரே, கங்கை எப்போதும் என் பாதங்களில் இருக்கும்" என்றார்.

அந்த காலகட்டத்தில் அந்த வாக்கு அசாத்தியமானதாக இருந்தது. ஆனால் அதற்கு பல ஆண்டுகளுக்குப் பின் கோதாவரியில் இருந்து சீரடிக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்திற்கு அரசாங்கம் அனுமதி அளித்து 11 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய்கள் வெட்டப்பட்டன.

கால்வாய்கள் வெட்டப்படுவதற்குமுன் சீரடியும், சீரடியில் இருந்து கோபர்கான் செல்லும் வழி பெரும்பாலும் தரிசு நிலப்பரப்பாகவே இருந்தது. ஆனால் இப்போது சீரடியில் இருந்து கோபர்கான் செல்லும் வழி நெடுக பசுமையான வயல் வெளிகளாக பூத்துக் குலுங்குகின்றன.

*****