தேவராக வந்த வள்ளலார்
தேவராக வந்த வள்ளலார்
ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தன்று வடலூரில் சமரச சுத்த சன்மார்க்கம் பற்றி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் சொற்பொழி வாற்றுவார்கள். அவரது பேச்சைக் கேட்பதற்காகவே ஆயிரக்கணக்கான வள்ளலாரின் பக்தர்களும் தேவரின் அபிமானிகளும் வடலூர் வருவர்.
வழக்கம் போல் தைப்பூசத்தன்று வடலூரில் தேவர் பேசத் தொடங்குவதற்கு முன்பு. தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சராக இருந்த திரு.ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் தேவரிடம் ஒரு செய்தியைச் சொன்னார்.
"வடலூர் இராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவருடைய வீட்டில் இராமலிங்க அடிகளார் பாடிய ஒன்பது பாடல்கள் அடங்கிய ஏட்டுச்சுவடி இருக்கிறது. இதுவரை அச்சுக்கு வராத அந்தப் பாடல்களை மடத்துக்குத் தந்தால், அச்சில் ஏற்றி நூல் வடிவாக எல்லோரும் படிக்கும் வண்ணம் செய்யலாம்" என்றும் "அடிகளாரின் உறவினரிடம் பல தடவை கேட்டும் அவர் தர மறுக்கிறார். தாங்கள்தான் இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்" என்றும் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் தேவரிடம் கூறினார்.
"அந்தச் சுவடியை வரவழைக்க வேண்டிய விதத்தில் வரவழைப்போம். நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று ஓ.பி.ஆரிடம் கூறிவிட்டு தேவர் சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.
இராமலிங்க அடிகளாரின் அருட்பா பற்றி ஒரு மணி நேரம் பேசிய தேவர் இராமலிங்க அடிகளார் உறவினர் பற்றி, பேச்சை ஆரம்பித்தார். "இராமலிங்க அடிகளார் அவர்களால் பாடப்பட்டு. இதுவரை அச்சுக்கு வராமல் உள்ள ஏட்டுச் சுவடியில் ஒன்பது பாடல்கள் இருப்பதாகவும், அந்தச் சுவடியை இராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவர் வைத்துக் கொண்டு மடத்துக்குத் தர மறுப்பதாகவும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் என்னிடத்திலே சொன்னார்கள்.
அடிகளாரின் உறவினருக்கு இந்தக் கூட்டத்தின் வாயிலாக ஒன்றை சொல்கிறேன். அந்தச் சுவடியை மடத்துக்குத் தந்து மக்களுக்குப் பயன்படும்படி செய்யுங்கள். அல்லது தாங்களே அச் சுவடியை நூலாக வெளியிடுங்கள். இரண்டையும் செய்யாமல் தாங்கள் பிடிவாதமாக இருப்பதால். அடிகளாரின் அந்த ஒன்பது பாடல்களும் உலகத்துக்குத் தெரியாமலே போய்விடும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.
இதுவரை உலகத்திற்குத் தெரியாமல் நீங்கள் ஒளித்து வைத்திருந்த அந்த ஒன்பது பாடல்களையும் அடியேன் பாடுகிறேன் கேளுங்கள்" என்று மடைதிறந்த வெள்ளம் போல் மடமடவென அந்த ஒன்பது பாடல்களையும் வெங்கல நாதத்தில் தேவர் பாடி முடித்தார்.
பாடி முடித்த சிறிது நேரத்தில் இராமலிங்க அடிகளாரின் உறவினர் கையில் அந்த ஏட்டுச் சுவடியோடு வந்து தேவரின் பாதத்தில் விழுந்து வணங்கி, "அய்யா, தாங்கள் தேவரல்ல, தாங்கள்தான் இராமலிங்க சுவாமிகள், என்னை மன்னித்து விடுங்கள்" என்று கூறி. "தாங்கள் பாடிய ஒன்பது பாடல்கள்தான் இந்த ஏட்டுச் சுவடியில் இருக்கின்றன. தயவு செய்து இதனை ஏற்றுக் கொள்ளுங்கள்"
என்று சுவடியைத் தேவரிடம் தந்தார்.
தேவர் அந்தச் சுவடியைப் பெற்றுக் கொண்டு "எல்லாம் ஈசன் செயல்" என்று சொல்லி முடிப்பதற்குள், ஓ.பி.ராமசாமி ரெட்டியார் எழுந்து வந்து, தேவர் அவர்களைக் கட்டிப்பிடித்து, அவரது கைகளை எடுத்து தனது கண்களில் ஒற்றிக் கொண்டு. "இராமலிங்க சுவாமிகளே நீங்கள்தான்" என்று உரக்க சத்தமிட்டுக் கூறினார்.
உண்மையும் அதுதானே! மகான்களுக்குள் உடல்தானே வேறுபாடு. ஆன்மா ஒன்றுதானே!
ஒருமுறை வள்ளிமலை சுவாமிகள் தன்னுடைய இளமைப்பருவத்தில் திருவண்ணாமலை சென்று இரமணாஸ்ரமத்தில் தங்கியிருக்கும்போது, பகவான் இமணரிடம் தீட்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பி அவரிடம் பணிவுடன் எனக்கு தீட்டை அளித்து அருள் புரிய்ங்கள் பகவான் என்று வேண்டுகிறார்.
பகவானோ, புன்சிரிப்புடன் அவரைப் பார்த்துவிட்டு ஏதும் சொல்லாமலே மோனத்தில் மூழ்கிவிடுகின்றார்.
நேரம் போனதே தவிர பகவான் இமணரோ கண் திறப்பதாய் இல்லை.
மனம் வெறுத்துப்போன சுவாமிகள், சிறிது நேரம் கழித்து அவ்விடத்தை விட்டு அகன்றார். எங்கே போவது என்று தெரியாமல் மலை மீது ஏறிப் போனார்.
கந்தாஸ்ரமத்திற்கு முன்பாக "தங்கக்கை" சேசாத்திரி சுவாமிகள் ஒரு பாறை மீது உட்கார்ந்திருக்கின்றார். வள்ளிமலை சுவாமிகள் அவரை கவனியாது சற்று முன்னே செல்ல, பின்னாளில் இருந்து சேசாத்திரி சுவாமிகள் அவரை அழைத்தார்.
வள்ளிமலை சுவாமிகளும் மரியாதை நிமித்தமாக அவரின் முன் சென்று என்ன சுவாமி என்று கேட்க, அதற்கு அவரோ, என்ன, தீட்சை கொடுன்னு கேட்டே, எப்போ வாங்கிக்கறே என்றாராம்.
வள்ளிமலை சுவாமிக்கு ஆச்சர்யம். நாம் இரமணரிடம் அல்லவா கேட்டோம். இவர் தருகின்றேன் என்கிறாரே….என்றவாறே அவரிடம் அமர்ந்து உபதேசம் பெற்றுக் கொண்டு மாலையில் மலையில் இருந்து கீழே இறங்கி வருகையில் பகவான் இரமணர் மலைமீது ஏறிக்கொண்டிருந்தார்.
அப்போது வள்ளிமலை சுவாமியைப் பார்த்து என்ன உபதேசம் ஆச்சா..? என்றாராம்.