சாய் தியானாலயாவின் 9 வது சீரடி புனித யாத்திரை.

சாய் தியானாலயாவின் 9 வது சீரடி புனித யாத்திரை.

சாய் தியானாலயாவின் 9 வது சீரடி புனித யாத்திரை.

அகஸ்டின்

சாய் தியானாலயாவின் சார்பில் 9 வது சீரடி புனித யாத்திரை கடந்த 18.1.23 புதன் அன்று, இதழின் ஆசிரியரும், நமது குருவுமான திரு.ஸ்ரீராம் சாய் அவர்களின் தலைமையில் 25 நபர்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.

பக்தர்கள் அனைவரும் காலை 8 மணிக்கெல்லாம் சென்னை மத்திய இரயில் நிலையத்திற்கு வந்து விட்டனர். பக்தர்கள் கோவை, திண்டுக்கல், மதுரை, அவிநாசி, சென்னையிலிருந்த வந்திருந்ததினால் குரு அவர்கள் அனைவரையும் ஒருவரோடு ஒருவர் அறிமுகப்படுத்தி வைத்தார்.

மேலும், நாம் அனைவரும் பகவான் சாயிநாதரின் தரிசனத்திற்கு புனித யாத்திரை செல்கிறோம். பகவான் சாயிநாதரைத் தவிர வேறு நினைவுகள் நமக்கு வேண்டாம்.எனவே  வருகின்ற ஆறு நாட்களுக்கு ஒரே குடும்பமாக இணைந்திருப்போம். ஒருவரோடு ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வோம். நம் வாழ்வில் இப்பயணம் மறக்கமுடியாத பயணமாக  மாறட்டும் என்று கூறி பயணத்தை தொடங்கினார்.

காலை 10.20 க்கு சாய்நகர் எகஸ்பிரஸில் உறங்கும் வசதியுடன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் அமர்ந்து எங்களது புனிதப் பயணம் ஆரம்பம் ஆனது. மறுநாள் காலை 11 மணிக்கு சீரடியை அடைந்த நாங்கள் தயாராக இருந்த வாகனத்தின் மூலம் தங்குமிடத்தை  அடைந்தோம்.

தங்குமிடத்தில் மூன்று நபர்களுக்கு ஒரு அறை ஒதுக்கித்தரப்பட்டது. பயணக்களைப்பு நீங்க குளித்துத் தயாரானோம். மதியம் ஒரு மணிக்கு  தமிழக உணவு தயாராக இருந்தது. உணவு அருந்திவிட்டு, சிறிது நேர ஓய்விற்குப் பின் சாயிநாதரின் தரிசனத்திற்கு புறப்பட்டோம்.

அன்று வியாழக்கிழமை என்றாலும் நாங்கள் சென்ற நேரம் கூட்டம் சற்று குறைவாக இருந்தது. ஒரு மணி நேரத்தில் பகவானை கண்குளிர தரிசித்து திரும்பினோம். மாலை ஆறு மணிக்கு அச்சுதானந்த சுவாமிகள் அவர்களை சந்திக்க விரும்பினோம். 

உடனே சுவாமிகள் எங்கள் குழுவினரை சாவடிக்கருகில் சந்தித்து அனைவருக்கும் ஆசி வழங்கினார்கள். குரு ஸ்ரீராம் அவர்கள் சுவாமிகளுக்காக தான் எடுத்துச் சென்றிருந்த திருமதி.மாதங்கி பாலாஜி அவர்கள் எழுதிய சம்பூர்ண ஸ்ரீ பாத ஸ்ரீவல்லப சரிதாம்ருதத்தை சுவாமிகளிடம் கொடுத்து ஆசி பெற்றார்கள்.

அடுத்தநாள் காலை எட்டு மணிக்கு சிற்றுண்டி முடித்துவிட்டு அனைவரும் பிம்பல்வாடி செல்லும் வழியில் இருக்கும் சிவநேசன் சமாதி திருக்கோவிலுக்குச் சென்றோம். குரு அவர்கள் சத்சங்கம் நிகழ்த்தி அனைவருக்கும் தியானப்பயிற்சி அளித்தார்கள். வழக்கம்போல் நோய் உள்ளவர்களை பைரவர் வந்து தன் நாவால் தடவிக்கொடுத்து ஆசிர்வதித்தார்.

12 மணிக்கு அறைக்குத் திரும்பி மதியம் உணவு முடித்து சற்று ஓய்வுக்குப் பின் மாலை 3 மணிக்குப் புறப்பட்டு, துவாரகாமாயி, சாவடி, அப்துல்லா காட்டேஜ், லட்சுமிபாய், மகல்சாபதி, பாய்யாஜி ஆகியோர்களின் வீடு, கந்தோபா ஆலயம் பாரத்து இரவு 9 மணிக்கு அறைக்குத் திரும்பி உணவருந்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டோம்.

மறுநாள் காலை எட்டு மணிக்கு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரூந்தில் ஏறி, நாசிக் சென்று திரையகம்பேஸ்வரர், திரிவேணி சங்கமம் ( அருணா, வருணா, கோதாவரி நதிகளின் சங்கமம்.) காலாராம், கோராராம், சீதா குகை, முக்திதாம் ஆகியவற்றை தரிசித்து இரவு அறைக்குத் திரும்பினோம்.

மறுநாள் அதிகாலை 5 மணிக்கு மீண்டும் சிவநேசன் சமாதியில் தியானம் செய்துவிட்டு, பகல் 10 மணிக்கு பேரூந்தில் புறப்பட்டு, சகூரி உபாசினி மகராஜ் சமாதி கோவில், சனி சிங்கனாப்பூர், தரிசித்து இரவு பூனா வந்து சேர்ந்தோம்.

அன்று இரவு 10.10 க்கு சென்னை எக்ஸ்பிரஸ் மூலம் அனைவரும் சாயிநாதரின் ஆசியுடன் மறுநாள் மாலை 5 மணிக்கு சென்னை வந்தடைந்தோம்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் குரு ஸ்ரீராம் சாய் அவர்கள், சத்சங்கம், யோகா, தியானம் போன்ற பயனுள்ள  நிகழ்வுகளை நிகழ்த்தியதும், பக்தர்களின் இல்லறப் பிரச்சனைகளுக்கு தீர்வு கூறி அவர்களது சந்தேகத்தை தீர்த்ததும், பயணத்தை இன்னும் அதிக பயனுள்ளதாக மாற்றியது.

புனிதப்பயணத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களும். மிகுந்த திருப்தியுடனும், ஆனந்தத்துடனும், நமது குரு ஸ்ரீராம் சாய் அவர்களுக்கு தமது நன்றியினைக் கூறிக்கொண்டு பிரியாவிடைபெற்றுச் சென்றனர்.

பயணத்தின் போது சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டபோதிலும் அவைகளை எல்லாம் எங்களுக்கு பெரும் நன்மைகளாக மாற்றி சிறப்பான தரிசனத்தை தந்து பத்திரமாக இல்லம் கொண்டு சேர்த்த பகவான் சாயிநாதருக்கு என் மனமார்ந்த நன்றியினை கூறி நிறைவு செய்கிறேன்.

குரு வாழ்க ! குருவே சரணம்!