பாபாவின் பல்
பாபாவின் பல்
காஷிபாய் என்ற பெண் நிபெட் என்ற ஊரைச் சேர்ந்த மணமகனுக்கு மணமுடிக்கப்பட்டதால், சீரடியில் உள்ள தன்னுடைய பிறந்த வீட்டை விட்டு கணவனோடு நிபெட்டுக்கு சென்று விட்டாள். மணவாழ்க்கை ஆரம்பத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது.
விவசாயியான அவர்களின் பொருளா தாரமும் வலுவாகவே இருந்தது.
ஆனால் ஒரு வருடத்திற்குள்ளாகவே அவளது கணவன் இறந்து போனான். அந்த நேரத்தில் கர்பிணியாக இருந்த காஷிபாய்க்கு ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு மாதவ் என்று பெயரிட்டாள். மாதவ் ஐந்து மாதக் குழந்தையாக இருக்கும்போது அவள் சீரடிக்கு தன் பிறந்தவீட்டிற்கே வந்து விட்டாள். காஷிபாய் அனைத்து குடும்ப வேலைகளையும் பொறுப்பாக செய்து வந்ததோடு மாதவையும் நன்கு வளர்த்து வந்தாள்.
மாதவ்க்கு இரண்டு வயதானபோது காஷிபாயின் பெற்றோர் வறுமையில் இருந்தனர். எனவே அவள் வயல் வேலைக்குப் போவது எனத் தீர்மானித்தாள். தினந்தோறும் காலையில் மாதவ்வை தூக்கிக் கொண்டு வந்து துவாரகாமாயியில் விட்டுவிட்டு வயல் வேலைக்குச் சென்று விடுவாள். மாலையில் வந்து மாதவ்வை தூக்கிக் கொண்டு தன் இல்லத்திற்குச் செல்வாள்.
இப்படியாக மாதவ் முழுமையாக பாபாவின் கவனிப்பில் வளர்ந்தான். மாதவ்விற்கு நான்கு வயதான போது பாபாவின் தினசரி நடவடிக்கைகளில் அவருக்கு உதவியாக செயல்புரிந்து வந்தான். பாபா அவனுக்கு தினந்தோறும் ஒரு ரூபாய் கொடுத்து வந்தார். எனினும் காஷிபாய் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட போதுமான வருமானமின்றி மிகவும் சிரமப்பட்டாள்.
ஒரு நாள் அவள் மாதவ்வை கூட்டிப் போக துவாரகாமாயி வந்தபோது பாபாவிடம், பாபா நீங்கள் அனைவருக்கும் பெரிய தொகையைக் கொடுக்கின்றீர்கள். உங்களுடைய வேலைகளில் மாதவ் உங்களுக்கு கூடமாட ஒத்தாசையாக உதவிகள் செய்த போதும் நீங்கள் எப்படி அவனுக்கு ஒரு ரூபாய் மட்டுமே கொடுக்கலாம்? இது கொஞ்சம் கூட நன்றாக இல்லை. என்று கூறி சலித்துக் கொண்டாள்.
அதற்கு பாபா அமைதியாக, மற்றவர்களுக்கு நான் கொடுக்கும் பணம் எந்த நேரமும் நிறுத்தப்படும். ஆனால் மாதவ்விற்கு பணம் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்த மாட்டேன். என்று கூறினார். மேலும்
"நானே உன்னைப் போன்ற ஆதரவற்ற பெண்களைப் பாதுகாப்பவன்" என்று கூறினார்.
காஷிபாய் பாபா கூறியதன் அர்த்தத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், "ஓ..என் கணவன் ஐந்து வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார் என்று கூறுகிறீர்களா" என்று கேட்டாள். இதைக்கேட்ட பாபா கடுங்கோபம் கொண்டார். அவருடைய ஆக்ரோஷத்தைக் கண்ட காஷிபாய், சத்தமில்லாமல் மாதவ்வை தூக்கிக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டாள்.
இச்சம்பவத்தால் பயந்துபோன காஷிபாய் இரண்டு மூன்று நாட்களாக துவாரகாமாயி பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. ஆனால் பாபா மட்டும் அடிக்கடி மாதவ்வை எங்கே என்று கேட்டு வந்தார். பிறகு அவனை தூக்கிவரச் சொல்லி காஷிபாய் வீட்டிற்கு ஒரு நபரை அனுப்பி வைத்தார்.
அவரோடு வந்த காஷிபாயும், மாதவ்வும்,பாபாவின் முன்பாக பவ்யமாக நின்றார்கள். அவர்களைப் பார்த்து புன்முறுவல் பூத்த பாபா, அவர்களை தன்னருகே வருமாறு வாஞ்சையோடு அழைத்தார்.
அதன்பிறகு, ஆடிக்கொண்டிருந்த தனது பற்களில் ஒன்றைப் பிடுங்கி அதை ஒரு கைப்பிடி உதியில் வைத்து ஒரு பழைய துணியில் கட்டி காஷிபாயிடம் கொடுத்து, இதைப் பத்திரமாக வைத்துக் கொள்.அல்லா நன்மையே செய்வார். என்று கூறினார். வீடு திரும்பியதும் காஷிபாய் பாபாவின் பல்லையும், உதியையும் ஒரு தாயத்தில் வைத்து கட்டி அதை மாதவ்வின் வலது கையில் கட்டிவிட்டாள்.
வெகுநாட்களுக்குப்பின் காஷிபாய் இறந்ததும், மாதவ் தன் தந்தை வீடு உள்ள நிபெட்டிற்கு சென்று விட்டான்.
அதே நேரம் அகமது நகரில் வசித்து வந்த தாமோதர் ராஸ்னே( தாமு அண்ணா) குடும்பத்தோடு புனே நகருக்கு குடிபெயர்ந்தார். அவர்கள் புனே சிவாஜி நகரில் ஒரு அடுக்கு மாடிவீட்டில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி குடிபோனார்கள்.
அவரது மகன் நானா சாகிப் அந்த அடுக்கு மாடி வீட்டின் கீழ் உள்ள இரண்டு அறைகளை வாங்கி 1945 ஆம்
அதை ஒரு ஆலயம் போல் மாற்றி அதை பாபாவிற்கு அர்பணித்தார்.
பாபாவை வணங்க சுற்று வட்டாரத்தில் இருந்தும், வெகுதூரத்தில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் கூடுவது வழக்கமாயிற்று. இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்த வண்ணம் இருந்தது.
நானா சாகிப் பெருகிவரும் பக்தர்கள் கூட்டத்தினை சமாளிக்க, பாபாவை வசதியாக தரிசிக்கவும் ஒரு விசாலமான ஆலயத்தை கட்ட வேண்டும் என்று தீர்மானித்தார். அதற்கு நிகம் என்ற தனது நண்பரை நாடினார். அவரும் தான் பார்த்து வந்த காவல்துறைப் பணியை ராஜினாமா செய்துவிட்டு புனேவிற்கு வந்து பாபாவிற்கு ஆலயம் கட்ட முனைந்தார்.
விரைவிலேயே அவர்களின் வீட்டிற்கு எதிரிலேயே மிக அழகிய ஆலயம் கட்டப்பட்டு அங்கு பாபாவின் படம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாபாவின் ஆலய கட்டுமானத்தில் நிகம் தன்னுடைய முழு சக்தியையும் செலவிட்டார். அனைத்து ஆலயப் பணிகளிலும் நிகம் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டார்.
ஒரு நாள் இரவு அவருக்கு ஓர் கனவு வந்தது. அதில் பாபா தோன்றி, அவரை நிபெட் என்ற ஊருக்குச் சென்று அங்கே வசிக்கும் மாதவ் என்பவரிடம் இருந்து தன்னுடைய பல்லினைப் பெற்றுக் கொள்ளும்படியும், அறிவுறுத்தினார்.
ஏற்கனவே நிகம், மாதவ்வை பலமுறை சீரடியில் சந்தித்திருப்பதால் இது மிகவும் எளிதாகிப்போனது. அதே நேரத்தில் மாதவ்வின் கனவிலும் பாபா தோன்றி, "நாளை உன்னைப் பார்க்க வரும் நபரிடம் பல்லைக் கொடுத்து விடு" என்று ஆணையிட்டார்.
நிகம், நிபெட்டில் உள்ள மாதவ்வின் இல்லத்திற்குச் சென்றபோது மாதவ் தனக்காக காத்துக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்தார். நிகம்மிற்கு தோன்றிய கனவைக் கேட்டு மிகுந்த வியப்படைந்த மாதவ், பாபாவின் பல் உள்ள தாயத்தை மகிழ்ச்சியோடு நிகம்மிடம் ஒப்படைத்தார்.
1950 ஆம் ஆண்டு, பூஜ்ய ஸ்ரீ பி.வி. நரசிம்ம சுவாமிஜி அவர்கள், பாபாவின் திருஉருவப்படம், பாபாவின் பல் மற்றும் புகைக் குழாய், ஆகியவற்றை முறைப்படி அங்கு ஸ்தாபிதம் செய்தார். புனே சிவாஜி நகரில் கட்டப்பட்டுள்ள ஆலயத்தில் பாபாவின் வெள்ளித்திருப் பாதுகைகள் வைக்கப்பட்டுள்ள பேழையில், பாபாவின் பல்லும்,
புகைக் குழாயும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.