சாய் தியானாலயாவில் சாயிலீலா.
சாய் தியானாலயாவில் சாயிலீலா.
ஜெயந்தி ஸ்ரீராம்.
குரு அவர்கள் பக்தர்களுக்கு எவ்வாறு "சாயி தாயத்து" கொடுக்க ஆரம்பித்தார் என்பதை இம்மாதம் காண்போம்.
புத்தகமும், அன்னதானமும் ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்ததும் சற்றே பொருளாதாரப்பிரச்சனை தலை தூக்க ஆரம்பித்தது. குரு எவ்வளவு பிரச்சனை ஏற்பட்டாலும் யாரிடமும் உதவி கேட்டதில்லை. நிச்சயம் பாபாவே தனக்கு தேவையானதை செய்வார் என்ற நம்பிக்கையுடன், எவ்வளவு சிரமம் வந்தாலும் பல்லைக்கடித்துக்கொண்டு பொறுமையாக இருப்பார்.
ஒரு வியாழக்கிழமை அன்று பெரம்பூர் பகுதியில் அன்னதானம் விநியோகித்துக் கொண்டிருந்தபோது, ஒரு உணவு பொட்டலம் மட்டும் மிச்சம் இருந்திருக்கின்றது. அதை யாரிடம் கொடுக்கலாம் என்று யோசித்தபடி சிறிது தூரம் சென்றிருக்கிறார். அப்போது முரசொலி மாறன் பாலத்திற்கு அடியில் அமர்ந்திருந்த ஒரு பிச்சைக்காரரிடம் சென்று, அய்யா சாப்பிடுகின்றீர்களா என்று கேட்டிருக்கின்றார்.
அதற்கு அவரும் சரி என்று கூற, குரு மிச்சமிருந்த ஒரு பொட்டலத்தை அவரிடம் கொடுக்க, அவரோ அதை மரியாதையுடன் பெற்றுக்கொண்டு, குருவிற்கு வணக்கம் கூறிவிட்டு அவரைப் பார்த்து சிரித்திருக்கின்றார்.
அது ஒரு தெய்வீகச்சிரிப்பு என்று குரு அந்நிகழ்ச்சியைப் பற்றி நினைவு கூறுகின்றார்.
நான் அப்படிப்பட்ட ஒரு சிரிப்பை இதற்கு முன் யாரிடமும் பார்க்க வில்லை. அவர் என்னைப்பார்த்து சிரித்தவுடன் நான் என்னையறியாமல் அவரைப்பார்த்து கைகளைக் கூப்புகிறேன். அவர் என்னை ஆசீர்வதிப்பதுபோல் கைகளை மேலே உயர்த்துகிறார். அவருடைய சிரிப்பும், அவருடைய செய்கையும் அவர் ஓர் சாதாரண மனிதர் இல்லை என்பதை எனக்குச் சுட்டிக்காட்டின.
அழுக்கான உடையணிந்திருந்த அவர் பரட்டை தலையுடனும், நீண்ட தாடியுடனும் காணப்பட்டார். அவரது கண்களில் தென்பட்ட ஒளி அவருக்குள்ளே ஒளிந்திருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்தின.
என்னை சில நிமிடங்கள் கூர்ந்து பார்த்துவிட்டு பின்பு கூறினார். நான் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே உணவருந்துவேன். இது இவ்வருட உணவு.
இவ்வருட உணவை எமக்களித்த உமக்கு நான் ஏதாவது தரவேண்டுமே! என்றவாறு தனது கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த அழுக்கான ஒரு தாயத்தை அறுத்து எடுத்து என்னிடம் கொடுத்தார். நான் அதைப் பெற்றுக்கொண்டு, சுவாமி, நான் தாயத்து உட்பட எதையும் அணியும் பழக்கமில்லாதவன். இதை நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன்.
நல்லது. தனக்கு கிடைக்கும் பொருள் அனைத்தும் தனக்கானதல்ல என்ற எண்ணம் இருப்பது மிகவும் சிறப்பு, உம்மை வாழ்த்துகிறோம். இதை யாமும் உனக்குக் கொடுக்கவில்லை. பிறருக்கு கொடுப்பதற்காகவே அளித்தோம். இதை மூன்று நாட்கள் மட்டும் உமது உடலில் அணிந்துகொள். இதைப்போன்ற தாயத்துக்களை உருவாக்குவது எப்படி என்று அதுவே உனக்குக் கற்றுத் தரும்.
சூட்சுமத்தை மிகச்சரியாகக் கற்றுக்கொண்டால், மூன்று நாட்களுக்குப்பின் உன்னிடமிருந்து இந்த தாயத்து மறைந்துவிடும். நீ உருவாக்கும் தாயத்துக்கள் நல்லவைகளுக்கே மட்டுமே பயன்படும். அந்த தாயத்துக்களை உருவாக்க உனது சற்குருவின் பிரசாதமான உதியையே பயன்படுத்து.
தாயத்துக்கள் உருவானவுடன் அதை 108 நாட்கள் உன்னுடைய தவத்தின் மூலம் உருவேற்றி பின்பு மக்களுக்கு வழங்கு. ஒரு போதும் இலவசமாக வழங்கிவிடாதே! ஒரு நியாயமான தொகையைப் பெற்றுக்கொண்டு கொடு. அந்த தாயத்துக்கள் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்.அதன் மூலம் அன்னதான திட்டத்திற்கு உண்டான பொருளுதவியும் கிட்டும். உனது அன்னதானத்திற்கு தடை உண்டாகாது என்று கூற, நான் சரி அய்யா அப்படியே செய்கிறேன் என்று கூறி தாயத்தை பத்திரப்படுத்திக் கொண்டேன்.
அவர் கூறியதைப்போன்றே அன்றிலிருந்து மூன்றாவது நாளுக்குள் தாயத்தை உருவாக்குவதற்குண்டான பாடம் எனக்கு சூட்சுமவடிவில் வழங்கப்பட்டது. ஆனால் அதனிலும் ஒரு சூட்சுமம் என்னை வியக்க வைத்தது. ஆம் மூன்றாம் நாள் அதிகாலை நான்கு மணிக்கு நான் உறக்கத்தில் இருந்து விழிக்கின்றேன். என் தலையணையைச்சுற்றி ஏதோ ஒரு பொருள் சிதறிக்கிடக்கின்றது. கண்களை விழித்துக்கொண்டு நன்றாகப் பார்க்கிறேன்.
அது தாயத்துதான். சிதறிக்கிடந்த தாயத்துக்களை ஒன்று சேர்த்துப் பார்க்கிறேன் மொத்தம் ஒன்பது தாயத்துக்கள் இருந்தது. இது எப்படி சாத்தியம். நான் உறங்கும்போது நானே தாயத்துக்கள் செய்வது போன்று காட்சிகள் தெரிந்தது. ஆனால் அது கனவு போன்று தெரிகின்றது. அப்படியானால் இந்த தாயத்துக்கள் எங்கிருந்து வருகின்றன.
எல்லாம் பகவான் சாயிநாதரின் கருணை. தன் பெயரில் நிகழும் அன்னதானம் எக்காலத்திலும் நின்றுவிடக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கின்றார். ஆனால் நான் அதுவரை தாயத்து போன்ற புறப்பொருட்களை நம்ப வேண்டாம் என்பதுபோல் அல்லவா பக்தர்களிடம் பேசி வந்திருக்கின்றேன். இப்போது எப்படி நானே அவர்களிடம் தாயத்தைப் பற்றி கூறுவேன். என்று என்னிடம் கூறி வருத்தப்பட்டார்.
நாம் அனுபவக்குறைவின் காரணமாக சிலபல "வித்தை"யை "அவித்தை" என்று கூறி மறுத்துவிடுவோம். காலம் நமக்கு பல்வேறு அனுபவங்களைக் கொடுத்ததும் "அவித்தை" "வித்தை"யாக காட்சியளிக்கும்போது தர்மசங்கடத்தில் நெளிவோம். அம்மாதிரி குரு அவர்கள் சற்று சங்கடத்தில் இருந்தார்.
நான் அவரை அதில் இருந்து மீட்கும் பொருட்டு, கவலைப்படாதீர்கள் இதுவரை நடந்த அதிசயங்கள் பாபாவினால் தான் என்றால் இனிமேல் நடக்கப்போவதும் சாயிநாதரால்தான். ஆகவே பொறுமையாக இருப்போம். தாயத்தை உறுவாக்க வைத்தவர். அதை வாங்குவதற்குண்டான நபரையும் உங்களை நோக்கி வரவைப்பார். என்றேன்.
குருவும் அதுவும் சரிதான் என்று அதைப்பற்றிய நினைவை விட்டுவிட்டார். ஒன்பது தாயத்துக்களோடு தான் செய்த தாயத்துக்கள் ஒன்பதையும் சேர்த்து பதினெட்டு தாயத்துக்களை தினந்தோறும் தவமிற்றும்போது உரு ஏற்றிக்கொண்டே இருந்தார்.
சரியாக 108 நாட்கள் முடிந்து 109 நாள் அதிகாலை குரு அவர்கள் கும்பகோணத்தில் அவர்களது குரு வின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆறு மணிக்கெல்லாம் குருவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு. கோதை நாயகி (பெயர் மாற்றப்பட்டிருக் கின்றது) என்ற பெண்மணி தன்னை ஒரு சித்தா மருத்துவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேசுகின்றார்.
தனக்கு தற்போது 85 வயது ஆகின்றது என்றும், கும்பகோணம் அருகே பாபநாசம் என்ற ஊரில் வசித்து வருவதாகவும், தான் ஒரு தீவிர புட்டபர்த்தி சாய்பாபாவின் பக்தை எனவும், இளம் வயதில் இருந்தே ஆன்மீகத்திலும், மருத்துவத்திலும் தீவிர ஆர்வம் இருந்ததால் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆகவே கடைசி காலத்தில் தனக்கு உதவியாக இருக்கட்டும் என்று தனது தங்கை பையனை தத்து எடுத்து வளர்த்து வந்ததாகக் கூறினார்.
காலப்போக்கில், தத்து கொடுத்த தங்கையை பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததனால் அந்தப் பையனை திரும்ப கேட்கின்றார்கள் என்றும், தான் முடியாது என்று கூறிவிட்டதால் கோபப்பட்டு தனது உடன்பிறந்த தங்கையே மந்திரவாதியின் மூலம் தனக்கு செய்வினை வைத்து விட்டதாகவும், அதனால் நான் உடலளவிலும், மனதளவிலும் பல பிரட்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது என்றும் கூறினார்.
இதேபோல் இருபது வருடங்களுக்கு முன்பும் ஒரு முறை செய்தார்கள் என்றும், அப்போது புட்டபர்த்தி பாபா உயிரோடு இருந்ததினால் நான் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது சத்ய சாய்பாபா ஒரு தாயத்தை வரவழைத்து எனக்குக் கொடுத்தார். நான் அதை அணிந்து கொண்டேன். அதில் இருந்து எனக்கு ஏற்பட்ட தொந்தரவுகள் என்னைவிட்டு விலகின.
ஆனால் தற்போது மீண்டும் ஒரு வருடத்திற்கு முன் என் தத்துப் பையனை கேட்டு வந்தார்கள். அவனுக்கு இப்போது 60 வயதாகிறது. அவனுக்கும் என்னைவிட்டுப் போக இஷ்டமில்லை. ஆகவே அவனே தன் தாயிடம் உங்களுடன் வரமாட்டேன் என்று கூறிவிட்டான். என் சகோதரி என்னை சும்மா விடமாட்டேன் என்று சபதம் செய்து விட்டுப் போய்விட்டாள்.
போனவள் என்ன செய்தாளோ? தெரியவில்லை. இருபது வருடங்களுக்கு முன்னால் எனக்கு ஏற்பட்ட தொந்தரவுகள் எல்லாம் இப்போது மீண்டும் நடக்கின்றன. எனக்கு ஆதரவளித்து காத்து வந்த பகவான் புட்டபர்த்தியாரை விட்டால் எனக்குவேறு கதியில்லை. அதனால் சென்ற வியாழன் அன்று அவரை நினைத்து தியானம் செய்தேன்.
தியானத்தில் பாபா எனக்கு ஒரு நம்பரை காட்டி இந்த நம்பரில் தீர்வு இருக்கிறது என்று கூறினார். தியானத்தில் இருந்து எழுந்த நான் அந்த நம்பரை எழுதிப்பார்த்தேன். அது ஒரு தொலைபேசி எண்ணைப்போல் இருந்தது. அந்த எண்ணிற்குத்தான் இப்போது தொடர்பு கொண்டேன்.
பகவான் சத்யசாய் பாபா எனக்கு அளித்த அந்த எண்ணிற்குண்டான தாங்கள் யார் அய்யா! எனது பிரட்சனைக்கு உங்களிடம்தான் தீர்வு இருக்கின்றது என்று சாய் கூறினாரே! எனக்கு என்ன தர விரும்புகின்றீர்கள் அய்யா என்று அந்த வயதானப் பெண் கேட்கவும் குரு சட்டென்று "நானும் தாயத்துதான் தரப்போகிறேன்".என்று கூறினார்.
குரு அந்த வயதான பெண்ணுக்கு எப்படி தாயத்து கொடுத்தார்?அவர்கள் அந்த பிரச்சனையில் இருந்து விடுபட்டார்களா? சத்யசாய் பாபாவின் வாக்கு எப்படி பலித்தது என்பதை அடுத்த மாதம் எழுதுகிறேன்.
தொடரும்.