அன்னதானமும் அணையாத அக்னியும்

அன்னதானமும் அணையாத அக்னியும்

அன்னதானமும் அணையாத அக்னியும்
உலகெங்கும் இருக்கும் சாயிபாபா ஆலயங்களில் இரண்டு விஷயங்கள் பொதுவாக இருக்கும். ஒன்று, அன்னதானம். இரண்டு, அணையாமால் எரியும் தூனி. அன்னதானத்தின் மகிமையைப் பற்றி பாபா பலமுறை சொல்லியிருக்கிறார். பசியுடன் துவாரகமாயிக்கு வந்த எவரையும் வெறுமையாகத் திருப்பி அனுப்பியதில்லை அவர். பாபா தன் கையால் சமைத்துப் பரிமாறிய தருணங்களும் உண்டு. 
ஒவ்வொரு நாளும் பாபா வழக்கமாக மதியம் பூஜை‌ ஆனவுடன் சாப்பிடுவார். பக்தர்கள் பலரும் பாபாவுக்காக எடுத்து வரும் நைவேத்தியங்களை ஒன்றாக அவரிடம் தருவார்கள். எல்லா தட்டுக்களிலும் இருக்கும் உணவுகளை ஒன்றாகப் போட்டு பிசைந்து, அதிலிருந்து அவர் இரண்டு கவளம் மட்டுமே சாப்பிடுவார். மீதியை பக்தரர்களுக்குக் கொடுத்து விடுவார். இந்தப் பிரசாதத்தை வாங்கிச் செல்வதற்காக பல மணிநேரத்துக்கு பக்தர்கள் காத்திருப்பார்கள். 

ஒருநாள் இப்படி பல்வேறு சுவையான உணவு வகைகள், மணக்க மணக்க வந்திருந்தன. பாபா அவற்றை முதலில் ஈஸ்வரனுக்கு அர்ப்பணித்தார். பிறகு சிறிது அவர் சாப்பிட்டார். எப்போதும் தன்னுடன் இருக்கும் தீவிர சீடர்களின் பக்கம் திரும்பிய அவர், "முன்னே வந்து தட்டை பிடியுங்கள்” என்றபடி பரிமாற எழுந்தார். அவர்கள் சந்தோஷத்துடன் தட்டை நீட்ட, பாபாவே அந்தப் பந்தி முழுவதிலும் உட்கார்ந்து இருந்தவர்களுக்கு பரிமாறினார். 
அவர்கள் அதிசயத்துடனும், மனநிறைவுடனும் சாப்பிட்டார்கள். பரிமாறுவது சாட்சாத் கடவுள் ஆயிற்றே! பிறகு பாபா, வெளியில் காத்திருந்த பக்தர்களையும் கூப்பிட்டார். அவர்களையும் உட்கார வைத்து அறுசுவை உணவு பரிமாறினார். திருப்தியுடன் அவர்கள் சாப்பிட்டு சந்தோஷமடைந்தார்கள். 
ஷீரடியில் பாபாவுடன் ஆரம்ப காலம் முதலே இருந்தவர் மகல்சாபதி. தூங்கும் நேரத்தில்கூட அவர் பாபாவைப் பிரிந்ததில்லை. அவரிடம் நடத்திய ஒர் உரையாடல் மூலம், அன்னதானத்தின் மகிமையை பாபா சொன்னார்.
"மகல்சாபதி, நீ தைத்ரிய உபநிஷத் படித்திருக்கிறாயா? அதில் இந்த விஷயத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. 'அன்னம் ப்ரம்ஹேதி வ்யாஜானத அன்னாத்வேயம் கல்விமானி பூதானி ஜாயந்தே அன்னேன ஜாதானி ஜுவந்தி அன்னம் ப்ரயந்த்யபிசம் விகன்தீதி’ என்கிறது தைத்ரிய உபநிஷத்” என்று பாபா சொன்னார். 
"அப்படியென்றால்?" - கேட்டார் மகல்சாபதி.
"சொல்கிறேன். கடவுளின் எல்லா லட்சணங்களும் உணவில் இருக்கின்றன. எல்லா உயினங்களும் உணவின் சத்தியிலிருந்து தான் வாழ்கின்றன. மேலும், மரணத்துக்குப் பிறகு நாம் உணவு சொரூபமாக மண்ணோடு கலந்து விடுகிறோம். மேலும், 'அன்னம் ந நின்த்யத அன்னம் பகு பரீச்க்ஷித அன்னம் பகு குர்வீத ந கஞ்சன வசதோ ப்ரத்யாக்ஷித' என்றும் அதில் இருக்கிறது. 
அதாவது, உணவை பழிக்காதீர்கள், வெறுக்காதீர்கள், வீணாக்காதீர்கள். அதிகமாக உற்பத்தி செய்யுங்கள். எந்த ஒரு விருந்தாளியையும் இல்லை என்று சொல்லி ஏமாற்றி அனுப்பாதீர்கள் என்பதேயே இது உணர்த்துகிறது.” 
நீங்கள் சொல்வது உண்மை தான்” என்றார் மகல்சாபதி.
"உனக்கு ஒன்று சொல்கிறேன். இந்த உணவு தானியங்களை யார் உண்டாக்குகிறார்கள்? மனிதர்கள் அல்ல. இயற்கையின் உதவி இல்லாமல் மனிதன் ஒரு தூசியைக் கூட உருவாக்க முடியாது. எதை நம்மால் உருவாக்க முடியவில்லையே, அதன்மீது நமக்கு உரிமையில்லை. தானியங்கள் எல்லாருக்கும் பொதுவானவை. எனவே, அவற்றைப் பதுக்கி வைக்காமல், தேவையானதை வைத்துக் கொண்டு, மற்றதை இல்லாதவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். அவ்வாறு செய்யாமல் பதுக்கி வைப்பது நாசத்துக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்.
உடைகள், அலங்கார சாதனங்கள், பாத்திரங்கள் போன்ற மற்ற பொருட்களைத் தானம் செய்யும்போது, யார் அதற்கு ஏற்றவன் என்று பாத்திரம் அறிந்து கொடுக்க வேண்டும். ஆனால் அன்னதானம் செய்வதற்கு உயர்வு, தாழ்வு என்று பார்க்க தேவை இல்லை. யார் பசி என்று வீட்டு வாசலில் வந்து நிற்கிறானோ, அவனுக்கு உணவு கொடுப்பது தான் உயர்ந்த தர்மமாகும். வயிறு நிரம்பியவுடன் தான் நியாயம், தர்மம், பண்பாடு போன்ற மற்ற விஷயங்களை நினைக்கத் தோன்றும். பசியுடன் இருக்கும்பொழுது, நியாய தர்மத்தைப் பற்றிக் கேட்பவரோ, சொல்பவரோ யார்?” என்றார் பாபா.
தானத்தில் சிறந்தது அன்னதானம். ஷீரடி சாய்பாபாவினுடைய பிரார்த்தனைகளில் அன்னதானமே முக்கியமானது. அதை மனிதர்களுக்கு மட்டும் தான் அளிக்க வேண்டும் என்பதில்லை. இதை விளக்கும் ஒரு சம்பவம், சாய் சத்சரிதத்தில் உள்ளது. பாபாவின் பக்தரான சந்தோர்கர், தினந்தோறும் முகம் தெரியாத புது மனிதர்களுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், பல நாட்கள் அப்படி உணவு பெற யாரும் வருவதில்லை.
ஒருநாள் பாபாவிடம் அவர், "நான் தினந்தோறும் காக்கைகளுக்கு உணவு வைத்துவிட்டு அதிதிகளுக்காக காத்திருப்பேன். ஆனால். யாரும் வருவதேயில்லை. ஏன் பாபா இவ்வாறு நடக்கிறது?” என்று வெகுளித்தனமாகக் கேட்டார்.
"அதிதி என்பது யார்? மனித உருவத்தில் மட்டுமல்லாமல் பறவைகள், விலங்குகள், பூச்சிகள் உருவத்தில் இருப்பவை கூட அதிதிகள் தான். நீ உணவளிக்கும் போது அதனை உண்பதற்காக பசியுடன் யார் அல்லது எது வந்தாலும் அது அதிதிதான். உயிர் உள்ள எந்த ஜீவன் வேண்டுமானாலும் சாப்பிடட்டும் என்று நினை. அப்படிச் செய்தால் அதிதிகளுக்கு உணவளித்த புண்ணியம் உனக்கு கிடைக்கும்” என்று சந்தோர்கருக்குச் சொன்னதன் மூலம் எல்லா பக்தர்களுக்கும் உணர்த்தினார் பாபா.
நோயுற்ற மனிதர், நாய், பூனை என நீங்கள் காணும் சகலமும் பாபாவின் ரூபமே. பசியாக இருக்கும் எந்த ஜீவனுக்கும் உணவளிப்பவர், உண்மையில் அந்த உணவை பாபாவின் வாயில் இடுவதாக அர்த்தம்.
அன்னதானம் போலவே பாபா அக்னிக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். தான் தங்கியிருந்த துவாரகாமாயியில் ஓர் அக்னி குண்டத்தை பாபா நிர்மாணித்தார். இதற்கு 'தூனி’ என்று பெயர். இரவு, பகல் என எந்தநேரமும் இது அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும். 
இந்த நெருப்புக்கு வெறுமனே விறகுகளை மட்டும் போடாமல், பக்தர்கள் தங்களின் தீய எண்ணங்களையும் இதில் காணிக்கையாகப் போட்டு எரித்துவிட வேண்டும் என்றார் அவர். இதில் வெளிவரும் சாம்பலையே 'உதி’ என்ற பிரசாதமாக பலருக்கு வழங்கினார் பாபா. நோய் தீர்க்கும் மருந்தாக அது இருக்கிறது. 
"சகோதரர்களே! இந்த தூனி என்னை ஊக்குவிக்கிறது. எப்படியென்றால், நாம் வாழ்வது நமக்காக மட்டும் அல்ல. பிறர் வாழ்க்கையில் ஒளி காட்டுவதற்காகவும், கெட்ட செயல்களையும் தவறான எண்ணங்களையும் பஸ்பம் செய்வதற்க்கும் வாழ்கிறோம் என உணர்த்துகிறது. தவிர, சரீரத்தின் கடைசி ரூபம் 'சாம்பல்’ என்பதை இந்த அக்னி எனக்கு போதிக்கிறது. இந்த 'தூனி’ எனக்கு குருவாக இருந்து இந்த தத்துவங்களைக் கற்றுக் கொடுக்கிறது” என்கிறார் பாபா.
குரு வாழ்க! குருவே துணை!
 ******