சாய் தியானாலயாவில் “ சாயி லீலா”

சாய் தியானாலயாவில் “ சாயி லீலா”

சாய் தியானாலயாவில்
“ சாயி லீலா”

இம்மாத சாயிலீலாவில் அயனாவரத்தில் வசிக்கும் சகோதரி இந்துமதி அவர்கள் தனது அனுபவங்களை எழுதுகிறார்.

சீரடி ஸ்ரீ சாய்பகவானின் பொற்பாத கமலங்களில் என் இதயத்தோட்டத்தில் பூத்த நன்றி கலந்த மலர்களை காணிக்கையாக்கி சரணடைகிறேன்.

சாயி மகராஜ் குருவை தேடி மாத இதழின் ஆசிரியரும், ஸ்ரீ சாய் தியானாலயா ஆத்மஞான பீடத்தின் நிறுவனருமான, மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய எனது குருஜி திரு. ஸ்ரீராம் சாய் அவர்களுக்கு கோடானுகோடி அன்பு வணக்கங்களை என் சிரம் தாழ்த்தி தெரிவித்துக் கொள்கிறேன்.

பகவான் சீரடி சாயிநாதன் மூலமாகவும், குருஜி திரு. ஸ்ரீராம் சாய் அவர்களின் மூலமாகவும் என் வாழ்வில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீண்ட நாட்களாகவே எனது அனுபவங்களை எழுத வேண்டும் என்ற ஆவல் இருந்தும் எழுதுவதற்கு சிறிது தயக்கமாகவே இருந்தது. ஆகவே எனது எண்ணம் நிறை வேறாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

சென்ற வருடம் ஜூலை மாத இதழில் குருஜி அவர்கள் எழுதிய அமுத மொழியில், “ மாபெரும் படைப்புகளை உருவாக்க நல்ல உணர்வுகளும், அபரிதமான, மகிழ்ச்சியான மனநிலை மட்டும் இருந்தால் போதும். உனக்கு நிச்சயம் வெற்றி கிட்டும். நான் என்றும் உனக்கு துணையாக இருப்பேன். உன் கடமையைச் செய். சிறப்பான பலனை நான் கொடுக்கிறேன்” என்ற வரிகளை படித்தவுடன் எனக்குள் எழுத வேண்டும் என்ற ஊக்கத்தைப் பெற்றேன்.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீ சத்யசாய் பாபாவின் அவதார தின அபிஷேகத்திற்காக சாய் இராஜயோகா என்ற கம்பெனியின் சீயக்காய் தூள் கொண்டு வந்திருந்தார்கள். அந்த கவரில், நமது சாய் மகராஜ் குருவைதேடி முகவரி இருந்தது. அந்த முகவரி எனது வீடு இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவில்தான் இருக்கிறது. 

அதைப்பார்த்தவுடன், நமது வீட்டின் அருகிலேயே இருக்கின்றது. நாம் அவசியம் செல்ல வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. ஆனால் எவ்வளவு முயற்சித்தும் என்னால் பாபா வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. இப்படியே ஒரு வருடத்திற்கு மேலானது 

ஒருமுறை அருகில் உள்ள பாபா ஆலயத்திற்கு சென்றபோது அங்கே சாய் மகராஜ் குருவைதேடி இதழை கொடுத்தார்கள். புத்தகத்தைப் படித்துவிட்டு, இவ்வளவு அருகில் இருந்தும் நம்மால் செல்ல முடியவில்லையே என்று வருந்தினேன்.

இருப்பினும் கடந்த பல வருடங்களாக, காரணமே இல்லாமல் எப்பொழுதும் என் மனம் படபடப்பாகவே இருக்கும். பலவிதங்களில் எவ்வளவோ முயற்சித்தும் என்னைவிட்டு அந்த படபடப்பு நீங்கவில்லை. அருகில் இருக்கும் பாபாவீட்டிற்கு செல்ல முடியவில்லையே என்ற கவலைகூட எனக்கு படபடப்பாக மாறிப்போனது.

வாழ்க்கையில் சில முக்கியமான திருப்பங்கள் ஏற்படவேண்டுமானால், சில சம்பவங்களையும், சில இடங்களையும் நாம் அவ்வளவு சீக்கிரத்தில் அடைந்துவிடமுடியாது. அதற்குண்டான நேரம் வரும்வரை நாம் பொறுத்திருக்கவேண்டும். நேரம் காலம் வரும்போது இறைவனே அதற்குண்டான வழியைக்காட்டுவான் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

ஒருவழியாக, 2022 ஆம்வருடம் ஜனவரி 20 ந்தேதி வியாழக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு பாபா வீட்டிற்குச் சென்றேன். கதவுகள் திறந்தே இருந்தன. நான் உள்ளே சென்றேன். குருஜி மட்டும் படித்துக்கொண்டு இருந்தார்கள். நான் சென்று அவரிடம் வாழ்க வளமுடன் சாய்ராம் என்று கூறினேன். பதிலுக்கு அவரும், வாழ்க வளமுடன், சாய்ராம் என்று கூறிவிட்டு,
 “வாங்கப்பா” என்றார்.

“வாங்கப்பா” என்றது எனக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. ஏனென்றால், நானும் அனைவரிடமும், வாங்கப்பா, போங்கப்பா என்றுதான் பேசுவேன்.

குருஜியிடம் சிறிதுநேரம்தான் பேசியிருப்பேன். அதற்குள் என்மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. குருஜி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. நாம் இப்போது கொஞ்ச நேரம் தியானம் செய்யலாம் என்றார். நானும் தியானம் செய்வதற்கு கண்ணைமூடி தயார் ஆனேன்.

சிறிது நேரத்தில் குருஜி தனது கரங்களை என் தலையில் வைத்தார். கரங்களை என் தலையில் வைத்த அந்த விநாடியில் இருந்து என் மனதின் படபடப்பு நின்று போனது. மனம் அமைதியாய் தியானித்தது. அந்த விநாடியில் இருந்து இன்றுவரை மீண்டும் அந்த படபடப்பு எனக்கு வரவேயில்லை. குருஜிக்கு எனது கோடானுகோடி நமஸ்காரங்களை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒருநாள் எங்களது வீட்டில் சத்யசாய்பாபா சிவன் அலங்காரத்தில் இருக்கும் போட்டோவை வைத்து சிவபுராணம் படித்தேன். பின்பு பாபா வீட்டிற்குச் சென்று குருஜியை சந்தித்தேன். குருஜி அவர்கள், எனக்கு ஒரு பேப்பரில் விபூதி கொடுத்தார். நான் அந்த பேப்பரை பிரித்து பார்த்தால். அதில் நான் வணங்கிய சிவன் அலங்காரத்தில் இருந்த சத்ய சாய்பாபா போட்டோவும், மஹா பெரியவா போட்டோவும் இருந்தது. அது எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவும், ஆசீர்வாதமுமாக இருந்தது.

ஒரு வியாழன் அன்று பாபா வீட்டிற்குச் சென்று தியானம் செய்துவிட்டு வீட்டிற்கு வருகிறேன். அது என் கணவருக்கு தெரியாது. என் கணவரோ அருகில் இருக்கும் பனந்தோப்பு பாபா ஆலயம் சென்று வந்தவர் ஆலயத்தில் கொடுத்ததாக அந்த மாத சாயி மகராஜ் குருவை தேடி இதழை என்னிடம் கொடுத்தார்.

நான் என் கணவரிடம், இதழின் ஆசிரியர், திரு ஸ்ரீராம் சாய் வீட்டிற்கே நான் சென்று வருகிறேன் என்று கூறி நானும் புத்தகத்தை காட்ட, நாங்கள் இருவருமே பாபாவின் கருணையை நினைத்து ஆனந்தப்பட்டோம்.

அடுத்த வியாழக்கிழமை எனக்கு கடினமான முதுகுவலி. முதுகு வலியோடு பாபா வீட்டிற்குச் சென்றேன். அங்கே தியானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நான் உள்ளே சென்ற அந்த விநாடி, குருஜி திரு.ஸ்ரீராம் அவர்கள், “ முதுகு தண்டுவடம் பலம்பெறும்” என்றார். நான் அன்று ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்ந்தேன்.

அடுத்த மாதத்தில் ஒரு நாள் என் கணவரும் பாபா வீட்டிற்கு வந்தார். குருஜி அவர்கள், அவருக்கு தீட்சை அளித்து, மூன்று மாதத்தில் உங்களது உடல்நலப் பிரச்சனைகள் தீர்ந்து நலமடைவீர்கள் என்றார். அதன்படி என்கணவருக்கு நாங்கள் பெரிதாக நினைத்து பயந்து கொண்டிருந்த உடல்நலக்கோளாறுகள் படிபடியாக குணமானது.

குருஜி அவர்கள் தனது சத்சங்கத்தில் மனிதர்களுக்கு தியானப்பயிற்சி மிகமுக்கியமானது என்பதை அழுத்திக் கூறுவார். ஆனால் லெளகீகமான உலகத்தில் நம்மால் நமது குருஜி கூறியதை பயிற்சி செய்ய முடியவில்லையே என்று மன வருத்தப்பட்டுக்கொண்டே அன்றைய சத்சங்கத்தில் கலந்து கொண்டேன்.

என்னைப்பார்த்ததும் குருஜி அவர்கள், எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றாக இருந்தால் தனியாக தியானம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். அது எனக்கே கூறியதைப் போலிருந்தது.

1.9.22 அன்று எங்களுக்கு 40 வது திருமண ஆண்டு. நானும் என் கணவரும் ஐ.சி.எப் கமல விநாயகர் கோவிலுக்குச் சென்றுவிட்டு, பாபாவீட்டிற்குச் சென்று குருஜியிடம் ஆசீர்வாதம் வாங்கச் சென்றோம். அப்போது ஆரத்தி எடுக்கும் நேரம். எங்களைப்பார்த்ததும். குருஜி ஸ்ரீராம் சாய் அவர்கள் என்னை பாபாவிற்கு ஆரத்தி எடுக்கச்சொன்னார்.

நான் முதல்முதலாக பாபாவிற்கு ஆரத்தி எடுத்தேன். திருமணநாள் அன்று பாபாவிற்கு ஆரத்தி எடுக்கும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி மனம் மகிழ்ந்தது. பிறகு இன்று எங்களது 40 வது திருமணநாள் என்று குருஜியிடம் கூறி ஆசீர்வாதம் பெற்றோம்.

4.9.22 ஞாயிறு அன்று சாயி மகராஜ் குருவை தேடி இதழின் 50 வது வெளியீட்டு விழா. நான் வீட்டில் இருந்து புறப்படும்போது மஹா பெரியவா போற்றி படித்துவிட்டு சென்றேன். அம்மாத இதழில் மஹா பெரியவா பற்றி சிறப்புக்கட்டுரை எழுதியிருந்தார் குருஜி அவர்கள்.

13. 10.22 அன்று பாபா வீட்டிற்குச் செல்லும் முன் குருஜி ஸ்ரீராம் சாய் நமக்கு சகோதரராய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தவாறே சென்றேன். குருஜி சத்சங்கம் செய்து கொண்டிருந்தார். 

நான் என் சொந்த சகோதர சகோதரிகளின் மேல் உள்ள பற்றை விட்டுவிட்டேன். அவர்களிடம் இருந்து மனதளவில் ஒதுங்கி இருக்கின்றேன். சாயிநாதர் எனக்கு ஆயிரம் சகோதர சகோதரிகளை கொடுத்துள்ளார். என்று கூறியபோது நான் உள்ளே நுழைந்தேன். குருஜி என்னைப் பார்த்தும் இதோ இவர் எனது சகோதரிகளில் ஒருவர் என்றார். எனக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது. நான் சாயிநாதருக்கு நன்றி கூறினேன்.

குருஜி எப்போதும் தனது சத்சங்கத்தில், கடவுளைத் தேடி  ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு தியானத்தின் மூலம் உங்களுக்குள் கடந்து செல்லுங்கள். கடவுளைக் காணலாம் என்று கூறுவார். 
ஆகவே புனிதப்பயணங்களுக்கு செல்லும்போது,அவரிடம் சொல்வதற்கு எனக்கு சிறிது தயக்கம் இருந்தது.

ஒரு நாள் தூக்கத்தில் நான் ஒரு கனவு கண்டேன். கனவில் நானும் என் கணவரும் குருஜியிடம் சென்று நாங்கள் காசிக்கு சென்று வருகின்றோம் என்று கூற, அவரும் எங்களை வாழ்த்தி வழியனுப்புகிறார்.
கனவில் இருந்து விழித்த நான் குருஜியிடம் சென்று காசிக்கு புனித யாத்திரை செல்வதாக கூறி ஆசி வேண்டினேன். 

அவரும் உடனடியாக, வாழ்க வளமுடன் சந்தோசமாக சென்று வாருங்கள் என்று வழியனுப்பி வைத்தார். பயணம் முடிந்து வந்த நான் குருவிற்கு காணிக்கை அளிக்க நினைத்து ஒரு கவரில், ஓம் சாயி நமோ நம, ஸ்ரீ சாயி நமோ நம, ஜெய,ஜெய சாயி நமோ நம, சற்குரு சாயி நமோ நமஹ என்று எழுதிக்கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

மறுநாள், கவரில் மந்திரம் எழுத மறந்துவிட்டு காணிக்கை உள்ள கவரை குருஜியிடம் சமர்பித்தேன். குருஜி அந்த மாத புத்தகத்தை எனக்கு அளித்தார். நான் புத்தகத்தை எதார்த்தமாக புரட்ட புத்தகத்தின் 7ஆம் பக்கத்தில் அதே மந்திரம் அச்சாகியிருந்தது. அற்புதத்திலும் அற்புதமாக இருந்தது.

ஒரு முறை குருஜி அவர்கள், உங்களுக்கு பூர்வஜென்ம புண்ணியம் நிறைய இருக்கின்றது என்று கூறினார். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. ஏன் என்றால் பல சோதிடர்கள் என் சாதகத்தை ஆராய்ந்து பார்த்து சொன்னதை குருஜி அவர்கள் என்னைப் பார்த்தவுடனே சொன்னதை நினைக்கும்பொழுது குருஜி அவர்களை நான் பாபாவாகவே பார்க்கின்றேன்.

ஒரு வியாழக்கிழமை குருஜி திரு. ஸ்ரீராம் அவர்கள் நிகழ்த்திய தியானத்தில் கலந்து கொண்டேன். தியானத்தில் குருஜி என் தலை மீது கையை வைத்து தீட்சை வழங்கியபிறகு வெகுநேரம் அவரின் கை என் தலையிலேயே இருப்பதை உணர்ந்தேன். 

சிறிது நேரங்கழித்து குருஜியின் குரல் தூரத்தில் கேட்டது. அப்போதுதான் அவர் நகர்ந்த பின்பு, என் தலைமீது இருந்தது பாபாவின் கரங்கள் என்பதை உணர்ந்தேன். பகவான் சாயிநாதருக்கும், குருஜி ஸ்ரீராம் சாயிக்கும் எனது கோடானுகோடி நமஸ்காரங்கள்.

குருஜி திரு. ஸ்ரீராம் சாயியியை நான் எப்பொழுதெல்லாம் சந்திக்கிறேனோ அப்பொழுதெல்லாம் ஏதாவது அதிசயமும், அற்புதமும் நடந்து கொண்டே இருக்கும். நான் என்ன நினைத்துக்கொண்டு செல்கிறேனோ, அதை நான் கூறுவதற்குமுன்பு, அது சம்பந்தமாகவே என்னிடம் பேசுவார். சமீபத்தில்கூட குருஜி வேறு வீடு பார்த்துக்கொண்டிருந்தார். நான் பாபாவிடம் எங்கள் குருஜி எங்களை விட்டு வெகுதூரம் சென்றுவிடக்கூடாது என்று பிரார்த்தித்துக்கொண்டேன். 

குருஜி தற்போது குடியிருக்கும் தெருவிற்கு பக்கத்து தெருவிலேயே வீடு கிடைத்தது என்று கூறினார். நான் பாபாவின் கருணையை எண்ணி மனதிற்குளாக நன்றி கூறினேன். 

ஓம் சாய்ராம்.

தொடரும்


*******