“குரு பூர்ணிமா”
“குரு பூர்ணிமா”
- சுந்தர்சாய்
ஓம் சாய்ராம்! ‘சாய் மகராஜ் குருவைத் தேடி’ வாசகர்களுக்கு சுந்தர் சாய் வணக்கத்துடன் “குரு பூர்ணிமா” நல் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஜுலை 21 ஆம் தேதி, ஞாயிறு ஆடிப் பௌர்ணமி மிகவும் உயர்ந்த விஷேசமான நாள்.
யுகங்களைக் கடந்து இந்த ஆடிப் பௌர்ணமி நன்னாள் மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது என்பதே ஓர் ஆச்சர்யமல்லவா! நம் பூலோக வாழ்வில், சம்சார சாகரத்தில் - கடல் கொந்தளிப்பு, சூறாவளிக்காற்று திமிங்கலகளுக்கு இடையே இருளில் பயணம் செய்யும் நம் ஒவ்வொரு வருக்கும் வழிகாட்டியாக, கலங்கரை விளக்காகத் திகழும் பேரொளியாகிய குருவைப் போற்றும் நன்னாள் இது.
மனித குல முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக பல யுகங்களைக் கடந்த ஆற்றலாகத் திகழும் வேதங்களைத் தொகுத்து எளிமைப்படுத்திய “வேத வியாசர்” என அறியப்படும் வியாச பகவானை மரியாதை செய்யும் - குரு பூர்ணிமா நன்னாள். “வியாசாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே” எனும் ரத்தின வாசகத்திற்கேற்றபடி நம்மைக் காக்கும் மஹா விஷ்ணுவே வேத வியாசகராக அவதரித்ததாக சொல்லப்படுகிறது.
இறை சக்தியே முப்பெரும் தொழிலாக படைத்தல், காத்தல், அழித்தல் எனப் போற்றப்படும் பிரபஞ்ச இயக்கத்தை வழிநடத்தும் பேருண்மையாய் விளங்குவது பரம சத்தியம். இம்மூன்றும் ஒன்றாகி, நன்றாகி நம்மை ஆட்கொண்டு, அணைத்துக் கொண்டு - யாமிருக்க பயம் ஏன்? என அன்பு வெள்ளமாய் வழிந்தோடும் ரூபமாய் இன்றளவும் நம்முடன் பயணிக்கும் ஊக்க சக்தியே “குரு”
அந்தவகையில், ஶ்ரீ குரு தேவ தத்த” என்று அறியப்படும் ஶ்ரீ தத்தாத்ரேயர். இறைவனே குரு வடிவாய் உருமாற்றம் கொண்டு இப்பூவுலகில் தோற்றம் செய்து நம்முள் விளங்கும் இறைசக்தியை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதால்,“ஶ்ரீ குரு தேவ” என அழைக்கப்படுகிறார்.
கு - என்றால் இருள் (அறியாமை எனும் அகங்காரம்) ரு - என்றால் நீக்குபவர்.
நம் ஒவ்வொருவருடைய அறியாமையின் அளவை எடை போட்டு, அதற்கேற்றபடியும் காலம், தேசம் என்ற வரையறைகளுக்குத் தகுந்த மாதிரியும் நம்மை வழிநடத்த இறைவனே பல அவதாரங்களை தோற்றுவித்து நம்மை இன்றளவும் வழிநடத்துவது மிகப்பெரிய ஆசிர்வாதமும், உத்தரவாதம் அல்லவா?
கலியுகத்தில் - 1320 கி.பி.யில் ஶ்ரீபாத ஶ்ரீ வல்லபராக பிடாபுரம் தொடங்கி ஶ்ரீ நரசிம்ம சரஸ்வதி, ஶ்ரீ அக்கல்கோட் ஸ்வாமி சமர்த்தர், ஶ்ரீ மாணிக்கப் பிரபு, ஷிர்டியில் சத்குரு ஸ்ரீ சாய் மகராஜ் எனப் பற்பல அவதாரங்கள்.
நாம் அறிந்த திருமூலர்,வடலூர் இராமலிங்க வள்ளலார், ஶ்ரீ சத்ய சாய் பகவான், ஶ்ரீ ரமண மகரிஷி, காஞ்சி மஹா பெரியவர், என தொடர்ச்சியாக வெவ்வேறு இடங்களில் வேறு வேறு தோற்றமானாலும் அவையெல்லாமே ஶ்ரீ குருதேவரின் பிரபஞ்ச சக்தியின் வெளிப்பாடே என அறிவதே ‘தெளிவு’.
தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருவடி போற்றல்
தெளிவு குருவின் திருவாக்கு மந்திரம்
தெளிவு குருவருளின் மூலம் வீடுபேறு
என எல்லாமே குருவருள், குருவருளே எல்லாமுமாகி தெளிவதே ஞானம் என்றறியப்படும் பேருண்மை. குருவின் திருவடியில் சங்கமமாகாத இறைவடிவே இல்லையென்று தெளிந்து குருவிடம் பரிபூரண நம்பிக்கையுடன் அபார பொறுமை காத்தால் எட்டாக்கனி என்பதே இல்லையென்றாகும்.
நம்மைத் தேடி, நம் இல்லம் தேடி நம்மில் எவ்வித வேறுபாடும் பார்க்காது முழுமையாக நம்மை அரவணைக்கும் கருணைக் கடலே நம் ப்ரியமான சத்குரு சாய் மகராஜ் என்பது நம்மில் பலரது அனுபவமாய் இன்றளவும் திகழ்கிறதல்லவா?
அனைவருக்கும் அனைத்துமாய் அளவற்ற பெரும் கருணையாய் விளங்கும் குருவருள் பற்பல வடிவங்கள் எடுக்க வேண்டியிருப் பதுடன், நம்முடன் இவ்வாழ்வில் இன்றளவும் என்றென்றும் பயணிக்கும் பலரிடமிருந்து வெளிப்படுவதும் பிரபஞ்ச சக்தியின் திடமான வெளிப்பாடே என்பதில் அய்யமில்லை
முன்பே குறிப்பிட்டபடி நாம் ஒவ்வொருவரும் பல பிறப்புகளின் கூட்டாக அடைந்திருக்கும் ஆன்மீக நிலையின் ஏற்றத் தாழ்வுகளின்படியே நம்மை வழிநடத்த குருவருள் சிலரைத் தேர்ந்தெடுத்து நம்மை அவர்களிடம் சேர்க்கிறது என்பது நம்மில் பலரது அனுபவ உண்மையே. அவர்களை நாம் அடையாளம் காண்பது கடினம் என்றாலும், முழு நம்பிக்கையுடன் உண்மையான ஆர்வத்துடன் நாம் அணுகும்போது நமக்கு தெளிவாக வழி கிட்டும் என்பதே சத்யம்.
நமது சாய் தியானாலயா ஆத்ம ஞான சபையின் அங்கத்தினர்களது அனுபவமும் இதையே வெளிப் படுத்தும். “தேடுதல்” என்பதே நமது லட்சியமாய் அமையும் பொழுது, நமது குருவும் நம்மை தேடிவருவார் என்பதே உண்மை. அது நிகழ்காலத்தில் நமது ஆசிரியர் “ஶ்ரீராம் குருவின்” வாழ்வில் நிகழ்ந்திருக்கின்றது. அந்த அனுபவத்தை உணர்த்தி நமக்கு வழி காட்டுவதே “சாய்மகராஜ் குருவைத் தேடி” இதழின் நோக்கமாகும்.
நாமனைவரும் ஒன்றாய்க் கூடும் இந்த ஞானவழி - குருவருளின் மிக அற்புதமான ஏற்பாடு என்பதை உணர்ந்து, தெளிந்து, காலங்களை கடந்து போற்றப்படும் நன்னாளாகிய “குரு பூர்ணிமா” நாளில் நாமும் நம்முடன் பயணித்து நம்மை நன்கு வழிநடத்தும் நமது குருவிற்கு பணிவான வணக்கத்தை செலுத்த வேண்டியது நம் கடமையல்லவா?
நாம் எங்கிருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும், நன்றி மறவாது நம் முன் வாழும் குருவை வணங்கினால் - ஶ்ரீ குரு தத்தாத்ரேயர் வாக்குப்படியே - அந்த நமஸ்காரம் என்னையே வந்தடையும். நானும் உங்கள் குருவின் மூலமாக எனது ஆசிர்வாதத்தை உங்கள் ஒவ்வொருவருக்கும் வழங்குவேன் என அருளியிருக்கிறார்.
நாமும் வேத வியாசரில் தொடங்கி வழிவழியாய் வந்தருளும் அனைத்து குருமார்களின் திருவடிகளையும் வணங்கி மரியாதை செய்வதோடு, நம்மிடம் அன்பு காட்டி, நம்மோடே பயணிக்கும் ஆத்மார்த்தமான குருவிற்கு நமது “பாத நமஸ்காரம்” செய்து கமலத் திருவடிகளை - போற்றுவோம், பற்றுவோம், இறுகப் பற்றுவோம்.
“குரு வாழ்க! குருவே துணை!”
“எல்லாம் சாயி! எல்லாமுமே சாயி!”
*****