நான் யார் ?
அண்ணாமலையில் இருக்கும் அருணாச்சலம், வேங்கடராமன் எனும் திருப்பெயரில் திருச்சுழி எனும் தலத்தில் அவதரித்தது. மீண்டும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி எனும் திருநாமத்தோடு அருணாசலத்திலேயே வாழ்ந்த பகவான் ரமணரின் அவதார நோக்கத்தை உற்று நோக்கினால் நமக்கு கிடைப்பது ஒரேயொரு பதில்தான்.
அதாவது பகவான் தமது வாழ்வு முழுவதும் ஒரேயொரு உபதேசத்தை கூறிக் கொண்டேயிருந்தார்.அதுதான் "நான் யார்? எனும் ஆத்ம விசாரம்.
ஏன் நான் யார் என்பதை அறிய வேண்டும் என்கிற கேள்விக்கான பதிலைத்தான் விதம்விதமாக பல பாடல்களிலும், உபதேச நூல்கள் மூலமாகவும் உணர்த்தியிருக்கிறார்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக மௌன உபதேசத்தின் மூலமாக ஆலமரம் கீழ் விளங்கும் தட்சிணா மூர்த்தியாக அமர்ந்தும் பிரம்மத்தை போதித்தார்.மௌனத்தினால்தான் பிரம்மம் பிரகடனம் செய்யப்படுகிறது என்று உபநிஷதம் கூறியதையே தன் அனுபூதியில் நின்று காட்டினார்.
எனக்கு பிரட்சனை என்று கூறிய பக்தரிடம், "ஆமாம், பிரச்னை என்று யார் சொல்வது" என்று திருப்பிக் கேட்டார். ‘‘நான்தான் சொல்கிறேன்’’ என்று பதில் வந்தது பக்தரிடம்
‘‘அந்த நான் யார் என்று பார்’’ என்று திருப்பிக் கேட்டு மடக்கினார்.
ஒரு கணம் இந்த பதிலைக் கேட்டவர்கள் திகைத்தார்கள். என்ன இது? நான் யார் என்று எப்படி என்னையே கேட்டுக் கொள்வது என்று குழம்பினார்கள். மீண்டும் பகவானை பார்த்தார்கள். ‘‘பகவானே, நான் யார் என்று எப்படி கேட்டுக் கொள்வது’’ என்று புரியாது கேட்டபோது அழகாக பகவான் விளக்கினார்.
‘‘நான், நான், நான்,என்று சொல்கிறாய் அல்லவா?அந்த நான் யார்? என்று சற்று உள்ளே பாரேன் என்றார்.
இந்த நான் எனும் எண்ண விருத்தி எங்கிருந்து வருகிறது என்று கவனத்தை உள்முகமாகத் திருப்பேன்.
இந்த உடலை நான் என்று சொன்னால் தூக்கத்தில் உடலைக் குறித்த நினைவு இல்லை அல்லவா? ஆனால், சுகமாகத் தூங்கினேன் என்று மறுநாள் சொல்கிறாயே, அப்போது இந்த தூக்கத்தை யார் அனுபவித்தது?
விழித்திருக்கும்போதும் இந்த நான் உள்ளது. உடலும், உலகமும் மறைந்த தூக்கத்திலும் இந்த நான் என்பது இருக்கிறது. எனவே, இந்த நான் எனும் உணர்வு எங்கு உற்பத்தியாகிறது என்று தேடினால் மெல்ல இந்த நான் தன்னுடைய பிறப்பிடமான ஆத்மாவிற்குள் சென்று ஒடுங்கும்’’ என்று விளக்கினார்.
எங்கேயோ கடவுள் இருக்கிறார்.
அவரை காண்பது மிகவும் கடினம்.
அது யாருக்கோ சிலருக்குத்தான் முடியும். வீட்டைத் துறக்க வேண்டும்.
குடும்பத்தை விட்டு ஓடிவிட வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்தவே இல்லை.
‘‘பகவானே, கடவுளை அறிவது எப்படி‘‘
என்று கேட்டால் அவரது பதில்,
‘‘கடவுளை அறிவது இருக்கட்டும்.
உன்னை நீ யார் என்று தெரிந்து கொண்டு விட்டு அதற்கு அன்னியமாக, அதற்கு அப்பால் கடவுள் என்கிற விஷயம் தனியே இருக்கிறதா என்று பார். எனறே உபதேசித்தார்.
இந்த கேள்வியை கேட்பவன் யார் என்று தன்னையே ஏன் கேட்டுக் கொள்ளக் கூடாது‘‘ என்று ஞான மார்க்கத்தை போதித்தார்.
மீண்டும், மீண்டும் பகவானிடம் நான் யார் என்கிற ஆத்ம விசாரத்தை எப்படி செய்வது என்று கேட்கப்பட்டது
மகரிஷிகளும், பொறுமையாக,
‘‘அப்பா, ஓர் இருட்டு அறையில் இருக்கிறாய்.இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஆனால், நான் இருக்கிறேனா என்று யாரிடமாவது கேட்பாயா என்ன? நான் எங்கே என்று இருட்டில் தேடுவாயா.
கண்கள் இருட்டில் தவித்தாலும் நான் என்கிற உணர்வு. இருக்கிறேன் என்கிற நிச்சய உணர்வு அதாவது உன்னுடைய இருப்பு உனக்கு தெள்ளத் தெளிவாக தெரிகிறதல்லவா?
நீ இருக்கிறாய் என்பதை யாரேனும் சொல்ல வேண்டுமா என்ன?
அந்த நான் இருக்கிறேன் என்கிற உணர்வின் மீது உன் கவனத்தை செலுத்து.
மெல்ல அந்த நான் என்கிற உணர்வு எங்கு உற்பத்தியாகிறதோ அங்கு சென்று ஒடுங்கும்.அந்த இடம்தான் அருணாசலம். (அருணாச்சலம் என்று ஊரைச் சொல்லவில்லை உள்ளத்தை சொல்கிறார்) அதுவே ஆத்ம ஸ்தானம்’’ என்று மிக எளிமையான மார்க்கத்தை கூறினார்.
‘‘பகவானே, மூர்த்தி வழிபாடு, பூஜை, மந்திரங்கள் என்று எத்தனையோ இருக்கிறதே‘‘ அவை எல்லாம் என்ன தரும்?
‘‘இவையெல்லாமும் சித்த சுத்தி தரும்.
மனதில் ஏகாக்கிரகம் என்கிற மன ஒருமையை உண்டாக்கும்.நான் யார் என்று அறிய வேண்டும் என்றால், மீண்டும் தன்னிடத்தேதான் வரவேண்டும்." என்று பதில் பகன்றார்.
கடவுள் எங்கே என்று தேடுபவன் யார் என்று தேட வேண்டும்.
புறத்தே இந்த நான் செல்லும்போது உலகமாக விரியும். அகத்தே சென்றால் பிரம்மத்தில் சென்று ஒடுங்கும்.
இதுதான் எளிமையான கோட்பாடு.
எனவே, ஒரு ஆன்மிக சாதகன் தியானம், ஜபம் என்று தொடங்கி செய்வதெல்லாம் மனதை உள்முகப்படுத்துதலே ஆகும்.
அதாவது இந்த மனம் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்று சிரத்தையோடு கவனத்தை திருப்புவதே ஆகும்.
ஒரு சாதகர், ‘‘பகவானே இந்த மனம் தானாகவே சென்று ஆத்ம ஸ்தானத்தில் சென்று உட்கார்ந்து கொள்ளக் கூடாதா?‘‘ என்று கேட்டார்.
பகவான் பதில் கூறாமல், அருகே அணில் ஒன்று நிறைய குட்டி போட்டிருந்தது. அங்கும் இங்கும் தலையை தூக்கி ஓட எத்தனித்தது. மகரிஷி அதை ஒவ்வொன்றாக எடுத்து
சிறு குடுவையில் எடுத்து பத்திரமாக வைத்து உணவும் கொடுத்தார்.
எதிரே இருந்தவர் முகம் மலர்ந்தது. பகவான் புரிகிறா? என்பதுபோல பார்த்தார்.
‘‘இந்த அணில் குஞ்சுகளுக்கு நாம வெளியபோனா நம்மள பூனையோ, வேறு பிராணியோ கொத்தி தூக்கிண்டு போயிடும்னு தெரியாது.
அதுக்கு அந்த விவேகம் வரும் வரைக்கும் நாமதான் அதை உள்ளே வைத்து பாதுகாக்கணும்.
அதுமாதிரிதான் மனசுக்கு வெளிய போறதுனால துக்கம் வரும்கற விஷயம் தெரியாது. மனசுக்கா தெரியற வரைக்கும் நாமதான் அதை வெளியிலிருந்து உள்ள பிடிச்சு போட்டுண்டே இருக்கணும்’’ என்று எளிமையாக கூறினார்.
‘‘என்னால் நான் யார் எனும் விசாரம் செய்ய முடியவில்லை. என்ன செய்வது’’
‘‘அதை ஈசனிடம் விட்டுவிடு. சரணாகதி செய்து விடு.’’
‘‘அப்படிச் செய்தால் என்ன நடக்கும்?
‘‘வைத்தியனிடம் ஒப்புக்கொடுத்த பிறகு சும்மாயிருக்க வேண்டும்.
அதற்குப் பிறகு என்ன கேள்வி. அதை ஈசன் பார்த்துக் கொள்வார்’’ என்று உபதேசித்தார்.
ஆனால், பல நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு மௌனம்தான் உபதேசம். பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் பாதத்தில் நம்மை சரணாகதி செய்வோம்.
‘‘ஐயே.அதி சுலபம்‘‘ என்று பகவான் கூறிய முக்திப் பதத்தை நாமும் கூறுவோம்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!
***