கருணை கடவுள்

கருணை கடவுள்

கருணை கடவுள்

பாபா தன் பக்தர்களிடம் கொண்டுள்ள தீவிரமான அன்பையும், கவனிப்பையும், பற்றி மகல்சாபதியின் புதல்வரான மார்தாண்டன் தனது சொந்த அனுபவங்களின் மூலம் விவரிக்கின்றார்.

ஒரு முறை மார்தாண்டின் தாயார் தன் சகோதரனைக் காண நந்தூர் என்ற ஊறுக்குச் சென்றிருந்தார். வழக்கம் போல் மகல்சாபதி துவாரகாமாயியில் பாபாவிற்கு சேவைகள் செய்து கொண்டிருந்தார்.

திடீரென்று பாபா,  "அர்ரே, பகத் என் பக்தர்களில் ஒருவருக்கு பிளேக் கட்டி வந்து மிகவும் அவஸ்தையில் இருக்கிறார்". எனக்கும் கூட என் பிட்டத்தில் கட்டி வந்து விட்டது. சீக்கிரமே எனக்கு சரியாகிவிடும். என்றார்.

பாபாவின் பின்புறத்தில் பிட்டத்தில் பெரிய கட்டி புடைத்து இருந்ததை மகல்சாபதியால் மிகத் தெளிவாக காண முடிந்தது. அது பாபாவிற்கு மிகுந்த வலியைக் கொடுத்திருக்க வேண்டும். எனவே அவர் உட்காரக்கூட முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டார். இதனால் மகல்சாபதி மிகவும் கவலையடைந்தார்.

ஆனால் பாபா அவரிடம், "பகத் கவலைப்படாதே! இரண்டு மூன்று நாட்களில் இது உடைந்துவிடும்" எனக்கு கூடிய சீக்கிரம் குணமாகிவிடும் என்றார்.

அப்பொழுது மகல்சாபதிக்கு எந்த பக்தருடைய கட்டியை பாபா ஏற்றுக் கொண்டு சிரமப்படுகின்றார் என்பது தெரியாது. எனினும் பாபா தன் பக்தர்களின் நோய், நொடிகளை தாம் ஏற்று அனுபவிக்கிறார் என்பதும், அதன் மூலம் தம் பக்தர்களை வலியில் இருந்தும், வேதனையில் இருந்தும் விடுவிக்கிறார் என்பதையும் அறிந்திருந்தார். 

இரண்டு நாட்களுக்குப் பிறகு பாபா கூறியதைப் போன்று அந்த கட்டி உடைந்திட,  பாபா வலியில் இருந்து நிவாரணம் பெற்றார்.

இந்நிகழ்ச்சி நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, மகல்சாபதிக்கு அவரது மனைவியிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் அவர் தனது பிட்டத்தில் ஒரு கட்டி தோன்றியதையும், அதன் வலி தாங்க முடியாததாக இருக்கவே பாபாவிடம், நிவாரணத்திற்காக பிரார்த்தித்ததாகவும், பாபாவிடம் வேண்டுதலை சமர்பித்த உடனேயே, வலி சுத்தமாக இல்லாமல் போய் விட்டதாகவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்தக் கட்டி உடைந்து, தற்போது முழுமையாக சரியாகிவிட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அப்பொழுதுதான் மகல்சாபதிக்கு தன் மனைவி பாபாவிடம், பிரார்த்தித்தனால் பாபாவே, அந்தக் கட்டியை தாம் ஏற்றுக்கொண்டு வலி இல்லாமல் செய்து நிவாரணப் படுத்தியிருக்கிறார் என்பதும் தெரிய வந்தது.

பாபாவின் அளப்பரிய அன்பையும், கருணையையும், எண்ணி மனம் நெகிழ்ந்தவராய், தன் மகன் மார்த்தாண்டனிடம், உன் அம்மாவிற்கு நிவாரணம் அளிப்பதற்காக, அவளுக்கு வந்த கட்டியையும், வலியையும், தாமே ஏற்றுக் கொண்டார் பாபா. ஆதலால் தான்  உன் அம்மா விரைவாக குணமடைந்திருக்கின்றார். 

நம் மீது அன்னையைப் போல் அன்பு செலுத்தும் நம் கடவுள், பகவான் பாபா தன்னை நம்பும் பக்தர்களுக்காக அவ்வளவு கஷ்டத்தையும் தாமே அனுபவித்துள்ளார் என்று கூறி, பாபாவை நம்புகின்றவர்கள் கடவுளின் அரவணைப்பில் உள்ளார்கள் என்பதை நீ என்றும் மறவாதே என்று கூறினார்.