இராமகிருஷ்ண தம்பிரான்.
இராமகிருஷ்ண தம்பிரான்.
அகஸ்டின்
கடந்த 14.2.24 அன்று குடந்தை ஸ்ரீ மொளனகுரு ஆஸ்ரமத்திற்கு, நமது இதழின் ஆசிரியரும், எனது குருநாதருமாகிய திரு. ஸ்ரீராம் அவர்களுடன் செல்லும் பெரும் பேறு அடியேனுக்குக் கிட்டியது.
மொளனகுரு சுவாமிகளை தரிசித்துவிட்டு, ஆஸ்ரம நிர்வாகி திரு. வைத்தியநாதன் அவர்களை சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தபோது. ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த 105 வயதான ஒரு பெரியவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
அவருடன் பேசியபோதுதான் அவர் யார், அவருடைய அனுபவம் என்ன என்பது எங்களுக்குப் புரிந்தது. திருநெல்வேலி, சேரன்மகாதேவியை பூர்வீகமாகக் கொண்ட திரு. இராமகிருஷ்ண தம்பிரான் என்பது அவருடைய பெயர். தற்போது 105 வயதாகும் அவர் இன்றும் தனது வேலைகளை தானே செய்து கொள்வதோடு மட்டுமல்லாது, ஆலயத்திற்கும் சிறுசிறு வேலைகளை செய்து கொடுத்துக்கொண்டு சுறுசுறுப்பாக வலம் வருகின்றார்.
அதுமட்டுமின்றி, ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பிரட்சனைகளுக்கு ஆறுதல்கூறி அவர்களுக்கு அருள்வாக்கும் அளிக்கின்றார். அவர்கூறுகின்ற “வாக்கு” அப்படியே நடப்பதாக பக்தர்கள் நம்புகின்றார்கள்.
சிறுவயதிலேயே ஆன்மீக தேடுதலில் காரணமாக, திருவாவடுதுறை ஆதீன மடத்தில், 15 வருடங்கள் கடுமையான ஆதீனப் பயிற்சியை எடுத்துக் கொண்டு, இராமநாதபுரம் ஸ்ரீ மொளனகுரு ஆஸ்ரமத்தில் 10 ஆண்டுகள் ஆதீனமாக இருந்துள்ளார்.
திருவாவடுதுறையில் பயிற்சி பெற்ற போது, 1947 ஆம் வருடம் நமது இந்திய நாடு சுதந்திரம் அடைந்து நேருவின் தலைமையில் புதிய அரசு அமைந்த போது, திருவாவடுதுறை ஆதீனம் சார்பாக செங்கோல் எடுத்துச் சென்று அன்றைய பாரதப் பிரதமர் திரு. நேருஜி அவர்களிடம் கொடுத்த இருவரில் இவரும் ஒருவர் என்பதை அறிந்தபோது வியப்பில் ஆழ்ந்தோம்.
அதைப்பற்றிய அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டபோது பழைய நினைவுகளில் மூழ்கினார் திரு. இராமகிருஷ்ண தம்பிரான். தன் வாழ்நாளில் அநேக மகான்களையும், ஆதீன கர்த்தாக்களையும், சந்தித்தவர். எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அரசியலை தாக்குபிடிக்க முடியாமல் தற்போது தனது வயதான காலத்தில், குடந்தை ஸ்ரீ மொளன குரு சுவாமிகளே கதி என இங்கு வந்து சரணடைந்து விட்டார்.
“காணப்படுவதெல்லாம் அசத்தியம், காண்பதுவே சத்தியம்” என்பதற்கிணங்க தன் வாழ்நாளை “காண்பதுவே” வாக வாழ்ந்து கழித்துவிட்ட தம்பிரான் அவர்களின் இறுதிக்காலம் ஆனந்தமாக கழியவேண்டி “அத்வைதா ஆனந்தம்” ஸ்ரீ மொளன குரு சுவாமிகளை வேண்டித் துதித்துப் பிரார்த்திக்கின்றோம்.
ஆஸ்மர நிர்வாகி திரு. வைத்தியநாதன் அவர்கள் தம்பிரான் அவர்களை தனது பாதுகாப்பிலேயே வைத்து கவனித்துக்கொள்கிறார். உங்களது அலுவலுக்கிடையே, தம்பிரானை கவனித்துக்கொள்வது சிரமாக இல்லையா என்றதற்கு, அவரது வேலையை அவரே செய்து கொள்கிறார். தவிர ஆலயத்திற்கு தன்னால் இயன்ற வேலையையும் செய்து தருகிறார்.
அவர் என்னிடம் எதுவும் எதிர்பார்ப்பதில்லை. நானும் அவருக்கு எதுவும் செய்வதில்லை. அதனால் அவர் இங்கிருப்பதில் எனக்கொன்றும் பிரட்சனை இல்லை என்கிறார். தன்னலம் கருதா சேவை செய்துவரும் திரு. வைத்தியநாதன் அவர்களையும் வாழ்த்த வயதில்லை வணங்கிப் பணிகின்றோம்.
குரு வாழ்க! குருவே துணை!
******