சாய் தியானாலயாவில் “ சாயி லீலா”

சாய் தியானாலயாவில் “ சாயி லீலா”

சாய் தியானாலயாவில் “ சாயி லீலா”


சென்ற இதழில் பாபாவை அறியாமலே பாபாவின் பக்தையான கல்பனாவின் கதையினை படித்திருப்பீர்கள். அந்தக்கதையில் இருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், “ நீ என்னை அறிவதற்கு முன்பே நான் உன்னை அறிகிறேன்” என்ற பகவான் சாயி பாபாவின் “ அருள் வாக்கினைத்தான்.
எனவே சாயி பக்தர்களாகிய நாம் எதற்குமே கவலைப்படாமல் “ நான் சாயி பாபாவின் பக்தை” என்ற கர்வத்தோடு பயமின்றி வாழலாம்.

இனி, இம்மாதம் சர்மிளா என்ற அன்புச்சோதரியின் கதையினைக் கேளுங்கள். சர்மிளா மாற்று மதத்தைச் சேர்ந்த அன்புச் சகோதரி. கல்லூரியில் படித்த காலத்தில் தன்னோடு படித்த சக மாணவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கணவர் வேறு மதத்தைச் சேர்ந்தவராதலால் இருவர் வீட்டிலும் அதிக எதிர்ப்புகள். அனைத்தையும் சமாளித்து ஒருவழியாக திருமணத்தை முடித்து இல்லறத்தை ஏற்றுக்கொண்டு கடுமையான சிரமத்தோடு வாழ்க்கை யை ஓட்டி வந்திருக்கின்றார்கள். 

சகோதரியின் தாய் ஒரு சாய் பக்தை. அதை அவர்களின் சமுதாயம் ஏற்காது என்றாலும், மனதிற்குள்ளாக பாபாவின் மேல் அந்தத் தாய்க்கு அபார நம்பிக்கை. மகளின் மேல் அதிக பாசம் கொண்ட அந்த தாய் ஏற்கனவே மகளின் திருமணத்திற்காக பாபாவிடம் பிரார்த்தனை வைத்திருக்கின்றார்.

இதற்கிடையே சகோதரி நிறைமாத கர்பிணியாக இருந்த நேரம். கணவருடன் இருசக்ர வாகனத்தில் செல்லும்போது  விபத்து ஏற்பட்டு வயிற்றில் பலமான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றார். மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, வயிற்றில் அடிபட்டுள்ளதால், தாய்க்கும், சேய்க்கும் பாதிப்பு ஏற்படும் என்று கூறியிருக்கின்றார்கள்.

என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற சமயத்தில், விபரத்தை கேள்விப்பட்ட சகோதரியின் தாயார், தன் சமுதாயத்தின் எதிர்ப்பையும் மீறி மயிலை சாய்பாபாவின் ஆலயத்திற்கு சென்று தன் மகளுக்காக மனமுருகி வேண்டிக்கொண்டு “உதி” வாங்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்திருக்கின்றார்.

மருத்துவமனையில், சகோதரிக்கு ஆறுதல் கூறியவர், அவரின் நெற்றியிலும், வயிற்றிலும் உதியை பூசிவிட்டு, சிறிது உதியை நீரில் கலக்கி குடிக்கக் கொடுத்திருக்கி ன்றார். “உதி”யைப்பற்றி அறியாத சகோதரி தன் தாயிடம் இது என்னம்மா என்று கேட்டிருக்கின்றார்.

இது சாய்பாபாவின் “உதி” மிகவும் சக்தி வாய்ந்தது. உதியின் மீது நம்பிக்கை வைத்தால் நடக்காத காரியமே கிடையாது. என்று உதியைப் பற்றியும், பாபாவைப் பற்றியும், எடுத்துக்கூறி, நீயும் நம்பிக்கையோடு இரு என்று ஆறுதல் கூறியிருக்கின்றார்.

சகோதரியும் அப்போதைக்கு நம்பிக்கையுடன் உதி கலந்த நீரை குடித்திருக்கின்றார். ஒரு சில மணிநேரங்களில் மருத்துவர்களே வியக்கும் வண்ணம், எந்த பிரட்சனையும் இன்றி சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்திருக் கின்றார் சகோதரி. 

நிறைமாத கர்ப்பிணியான தாயின் வயிற்றில் காயம் ஏற்பட்டு, மருத்துவர்களே பயப்பட்டும் பகவான் சாயிநாதரின் கருணையால் சுகப்பிரசவம் நடந்து தாயும், சேயும் நலமுடன் இருப்பதைக் கண்ட அந்தத் தாய் உடனே ஓடிச்சென்று மயிலை சாயிநாதருக்கு தன் நேர்த்திக்கடனை செலுத்தி வந்தார்கள்.

பகவான் சாயிநாதரால்தான் இக்காரியங்கள் நிகழ்ந்தன என்று அந்தத் தாய் மனப்பூர்வமாக நம்பினாலும், தனது காதல் திருமணத்தால் பல்வேறு குடும்ப பிரட்சனையில் சிக்கித் தவித்த  சகோதரி சர்மிளா அவர்கள் பகவான் சாயிநாதரின் லீலைகளை அப்போது உணரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பத்தாண்டுகாலம் கணவர் வீட்டிலும், சகோதரி வீட்டிலும் நடந்த பிரட்சனைகள், இருவருக்குமே நிம்மதியை இழக்கச்செய்து பல மனநலப்பிரட்சனையும், உடல்நலப் பிரச்சனையும் கொண்டுவந்து விட்டிருக்கின்றது. சகோதரி உடல் நலப்பிரச்சனையினால் பல வகையில் பாதிக்கப்பட்டு, முக்கியமாக கைகளை தூக்கவே மிகவும் சிரமப்பட்டிருக்கின்றார்.

அந்த நிலையில்தான், அவர்களது தோழியின் வழிகாட்டுதலின் படி நமது சாய் தியானாலயா ஆத்ம ஞான பீடத்திற்கு வந்து குருவை சந்தித்தார்கள். குருவும் அவர்களுக்கு யோகாவும், தியானமும் கற்றுக்கொடுத்தார்கள். நாளடைவில் சகோதரி உடல்நலப்பிரட்சனையில் இருந்து மீண்டு வந்தார்கள்.

முதல்முதலில், நமது சபைக்கு வந்தபோது அங்கு இருந்த சீரடி சாய் நாதரின் எட்டடி உயரப் படத்தைப் பார்த்து இவர் யார் என்று கேட்டார்கள். குரு சகோதரிக்கு பாபாவைப் பற்றி எடுத்துக் கூறினார்கள். சகோதரியும் பத்தாண்டுகளுக்கு முன்பே அவர்களது தாயின் மூலம் பாபா தனக்கு செய்த அற்புதங்களை கூறி ஆச்சர்யப்பட்டார்.
இதுவரை தனக்கு பாபா என்ற பெயர் மட்டுமே தெரியும். ஆனால் இப்போதுதான் இவரது படத்தை பார்க்கின்றேன். என்று கூறி வியந்தார்.

பாபா இந்த உலகத்தில் எல்லா இடங்களிலும், எல்லா ரூபங்களிலும் உள்ளார். ஆனால் நம் கர்மவினைகள் தீரும் வரை நம் கண்களுக்கு தென்பட மாட்டார். இதுவரை நீங்கள் பார்க்காத பாபாவை இப்போது நீங்கள் பார்த்ததால் உங்களது கர்ம வினைகள் தீர்ந்தது என்று பொருள். இனி இவரை இறுக்கிப் பிடித்துக்கொள்ளுங்கள். உங்கள் அனைத்துப் பிரட்சனையும் எளிதில் தீரும். என்று கூறினார் குரு.

சகோதரியும், போகப் போக சபையில் நடக்கும் பாபா வழிபாட்டிலும் கலந்து கொண்டார். சகோதரி நிறையப் படித்தவள் என்றாலும், ஆரம்பத்தில் தன்னைச் சுற்றி இருக்கும் தான் சார்ந்த சமுதாயத்தையும், மக்களையும், கண்டு மிகவும் பயந்து மன இறுக்கத்தில் இருந்தாள். குரு அவர்கள் தியானத்தின் முலம் பாபாவை உணர்ந்து கொண்டு தன்னை மேம்படுத்திக்கொள்வது எப்படி என்பதை கற்றுத்தந்தார்.

தியானம் கற்றுக்கொள்வதற்கு மதம் மாற வேண்டுமோ என்று பயந்த சகோதரியிடம், தன்னை உணர்வதற்கு ஒருவர் மதம் மாற வேண்டியதில்லை எனவும், மனம் மாறினால் போதும் எனவும் எடுத்துக்கூறி அவரது தயக்கத்தை அகற்றி அவர்களை முழுமையாக யோகாவிலும், தியானத்திலும் ஈடுபடுத்தினார்.

சகோதரி சர்மிளாவும், மிகவும் அர்பணிப்போடு குரு கற்றுத்தந்த தியானம், யோகாவை கற்றுக்கொண்டு தனது மனப்பிரட்சனையில் இருந்தும், உடல் நலப்பிரட்சனையில் இருந்தும் விரைவிலேயே வெளிவந்தார். 

தனது இரண்டு சகோதரர்களுக்கு திருமணம் ஆகியும் வெகுநாட்களாக குழந்தை இல்லாததற்காக சகோதரி நமது சபையில் பிரார்த்தனை வைத்தார். பிரார்த்தனை வைத்த அடுத்த வருடமே இருவருக்குமே குழந்தைச் செல்வத்தை பாபா அருளினார். சகோதரிக்கு பாபாவின் மேல் நம்பிக்கை கூடியது.

17.1.2019 ஆம் வருடம் “சாய் தியானாலயா” ஏற்பாடு செய்த சீரடி புனிதப் பயணத்தில் குடும்பத்துடன் கலந்து கொள்ள ஆசைப்பட்டு குருவிடம் பெயர் கொடுத்து விட்டார்கள். குருவும் பயணத்திற் குண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். 

திடீரென்று சகோதரியின் கணவருக்கு முழங்கால் வலி வந்து மிகவும் சிரமப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காலில் பட்டை அணிந்திருந்தார். மருத்துவர்கள் நீண்ட தூரப் பயணத்தை தவிர்க்கும்படி கூறியிருக்கின்றார்கள்.

சகோதரி சர்மிளாவும் குருவிடம் விபரத்தைக்கூறி, சீரடிக்கு வரமுடியாத நிலையில் இருப்பதைக்காக மிகவும் வருத்தப்பட்டார்கள். அதற்கு குரு அவர்கள், உங்கள் குடும்பத்தார் சீரடிக்கு வரவேண்டும் என்பது பகவான் சாயிநாதரின் ஆணை. அதனால்தான் நீங்கள் பெயர் கொடுத்தீர்கள். நானும் பயணத்திற்குண்டான அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டேன். பயணத்திற்கு இன்னும் பத்து நாட்களே இருக்கின்றன. 

அதற்குள் சாயி என்னென்ன லீலைகளை நடத்துவாரோ! யாமறியோம் ஆகவே அமைதியாக இருங்கள். வரச்சொன்னால் போவோம். இல்லை என்றால் கேன்சல் செய்து கொள்வோம். எல்லாம் அவர் விருப்பம். இதில் நமது விருப்பம் ஏதுமில்லை. அமைதியாக இருங்கள் என்று கூறி விட்டார்.

பயணத்தேதியும் வந்துவிட்டது. சகோதரியின் கணவரோ நான் கட்டாயம் பாபாவை தரிசிக்கப் போகிறேன் என்று காலில் கட்டுடன் புறப்பட்டுவிட்டார். வேறுவழியின்றி சகோதரியும் அவர்களது குழந்தைகளும் புனிதப் பயணத்திற்கு புறப்பட்டுவிட்டார்கள்.

சகோதரியின் கணவர் சற்று சிரமத்துடன்தான் பயணம் மேற்கொண்டார். ஒருவழியாக மறுநாள் மாலை நாங்கள் பகவான் சாய் நாதரை தரிசித்துவிட்டு வெளியில் வருகிறோம். சகோதரியின் கணவர் எங்கள் பின்னால் வருகிறார். நாங்கள் குருஸ்தான் வந்து விட்டோம் பின்னால் இருந்து சகோதரியின் கணவர். பாபா என்று தன்னைமீறி கத்துகிறார். எண்ணவோ ஏதோ என்று நாங்கள் அனைவரும் திரும்பிப் பார்க்க, அவரோ நேராக குருவை நோக்கி ஓடி வருகிறார்.

நாங்கள் அனைவரும் அவரை ஆச்சர்யமாகப் பார்க்க, அவரோ தனது காலில் போட்டிருந்த கட்டை கழற்றி வீசிவிட்டு என் கால்வலி சரியாகி விட்டது. என் கால் வலி சரியாகி விட்டது. பாபாவுக்கு நன்றி! பாபாவிற்கு நன்றி! என்று குருவின் கைகளைப் பிடித்துக்கொண்டு சுற்றுகிறார்.

அந்திகழ்வைப் பார்த்த அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் எங்களுடன் சேர்ந்துகொண்டு “சாய்நாத் மகராஜ்கீ ஜே” என்று பகவான் சாய்நாதருக்கு வாழ்த்துக்குரல் எழுப்பினார்கள். பாபா கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என்பதற்கு இதைவிடவா சான்று தேவை.

தன் கண்முன்னால் பாபாவின் லீலைகளைக்கண்ட சகோதரி சர்மிளா குடும்பத்துடன் பாபாவிற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டார். பல மனப் போராட்டங்களுக்குப் பின் இன்று அவரும் அவரது குடும்பத்தினர் அனைவரும் பகவான் பாபாவை முழுமையாக ஏற்றுக்கொண்டிருக் கின்றனர். 

சாய் தியானாலயா ஆத்மஞான பீடத்திற்கு வந்து குருவிடம் தீட்சை எடுத்துக் கொண்டதில் இருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டிருக் கின்றேன். “அன்னதானம்” என்ற நிகழ்வை உணர்வுப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். “ சபையில் நிகழும்” மவுனம்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனுபவப்பூர்வமாக நிகழ்காலத்தை உணர்ந்தேன்.

மொத்தத்தில் இந்த கரடு முரடான மனித வாழ்க்கையை எப்படி எதிர்கொண்டு சமாளிப்பது என்று கற்றுக்கொண்டேன். எங்கள் குரு  அடிக்கடி எங்களிடம், “ நாம் பாபாவின் பக்தராகி விட்டதால் நமக்கு இன்பங்கள் மட்டுமே நடக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. நமக்கு ஏற்படும் துன்பங்களில் இருந்து எப்படி வேளியேறுவது என்பதை கற்றுக்கொள்வதே நாம் பாபாவின் பக்தர்கள் ஆனதற்குண்டான அழகு” என்று கூறுவார்.

அதை நான் கற்றுக் கொண்டிருக்கி றேன். பாபா எங்களுக்கு நிறைவான வாழ்க்கையை கொடுத்திருக்கிறார். எங்களை நன்றாக பார்த்துக் கொள்ளும் பாபா, எங்கள் குழந்தைக ளையும் பார்த்துக்கொள்வார். இந்த நம்பிக்கையையும், பொறுமையையும்  கற்றுத்தந்த பகவான் சாயி பாபாவிற்கும், அதை எங்களுக்குப் புரிய வைத்த எங்கள் குருநாதருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறி, தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் அன்புச்சகோதரி.

அடுத்த மாதம் இன்னுமொரு சாயி பக்தையின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுவோம்.

தொடரும்.

****