சாய் தியானாலயாவில் "சாயி லீலா"

சாய் தியானாலயாவில் "சாயி லீலா"

சாய் தியானாலயாவில் "சாயி லீலா"

   -ஜெயந்தி ஸ்ரீராம்.

சாயி மகராஜ் குருவை தேடி ஆன்மீக மாத  இதழ் முழுக்க, முழுக்க, பகவான் சாயிநாதரால் நடத்தப்படும் இதழ். அதனால்தான் இன்றுவரை எங்களின் பங்களிப்பாக ஒரு ரூபாய் கூட இல்லாமல் தொடர்ந்து ஆறாவது ஆண்டை நோக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றது.

கடுமையான கொரானா காலகட்டத்தில் கூட இதழ் தடைபடாமல் வெளிவந்ததற்கு பகவான் சாயிநாதரே காரணம். "என் கடன் பணி செய்து கிட்பபதே" என்பதற்கிணங்க, சாயிநாதர் எங்களுக்கிட்ட பணியை செய்வது மட்டுமே எங்களது வேலை. மற்ற எதைப் பற்றியும், குருவோ, நாங்களோ சிந்திப்பதில்லை.

பகவான் சாயிநாதர் இந்த புத்தகத்தின் மூலம் அநேக அதிசயங்களைப் நிகழ்த்திருக்கின்றார். ஒருமுறை அணைக்கரையைச் சேர்ந்த பாபாவின் பக்தர் ஒருவர், வாழ்க்கையில் மிகவும் விரக்தியடைந்து இனி வாழ்ந்து பயனில்லை. ஆற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையில் ஆற்றில் குதித்து உயிர்விடும் எண்ணத்தில் அணைக்கரை பாலத்தில் நடந்து சென்றிருக்கின்றார்.

அது இரவு பத்து மணி, ஓரிடத்தில் நின்று பாலத்தின் கைப்பிடி சுவற்றில் ஏறி ஆற்றில் குதிக்க முற்படுகையில் சுவற்றில் கை வைத்த இடத்தில் ஒரு புத்தகம் இருந்திருக்கின்றது. எடுத்துப் பார்த்தால் அது நம் "சாயி மகராஜ் குருவைத்தேடி" இதழ். அந்தப் புத்தகத்தை கையில் எடுத்துப் பார்க்கின்றார். 

அட்டைபடத்தில் இருந்த பாபா அபயகரம் காட்டி புன்னகைத் திருக்கின்றார். பாபாவின் படத்தைப் பார்த்த அக்கணமே தன் மனதில் இருந்த தற்கொலை எண்ணங்கள் மறைந்து விட்டதை உணர்ந்திருக்கின்றார்.

அவரின் மனதிற்குள் ஏதோ ஒரு மாற்றம். தன்னுடைய தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டு வெளிச்சம் உள்ள பகுதிக்கு புத்தகத்தை எடுத்து வந்து புத்தகத்தை புரட்டியிருக்கின்றார். முதல் பக்கத்தில் வரும் அமுத மொழி அவரது கண்ணில் பட அதை படித்திருக்கின்றார். அதில் பாபாகூறுவதாக எழுதப்பட்ட,
என் அன்புக் குழந்தையே! 
எந்த ஒரு சூழ்நிலையிலும் கவலை கொள்ளாதே! பயப்படாதே! அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நீ என்னை மனதார நினைத்தால் மறுகணமே நான் உன்னுள் இருப்பேன்

எனது பக்தனாகிய உனது வாழ்வில் நடக்கும் எந்த ஒரு செயலும் எனது அனுமதியின்றி நடக்காது. உனது வாழ்வில் என்ன நடந்தாலும் உனது நன்மைக்காக மட்டுமே நான் நடத்துகின்றேன் என்று முழுமையாக நம்பு! உனது வாழ்வில் இனி நீ சுகங்களை மட்டுமே அனுபவிப்பாய்!

தாய் எப்படி தன் குழந்தைக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வாளோ அதைப் போன்று நான் உனக்கு நன்மையானவற்றை பார்த்துப் பார்த்துச் செய்வேன். எனது பக்தனாகிய நீ இனி எதற்கும் கவலைப் பட வேண்டாம். பயப்படவும் வேண்டாம். இனி உன் வாழ்க்கையில் நடக்கப் போகும் அற்புதங்களை மகிழ்ச்சியோடு அனுபவிப்பாய் இது என் வாக்கு. என்பதை படித்து முடித்தவுடன் அவருக்குள் புதிய உற்சாகமும், நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கின்றது.

ஆம் நானும் பாபா பக்தன்தான். பாபா இருக்கும் போது நான் ஏன் கலங்க வேண்டும். நிச்சயமாக பாபா எனக்கு வேண்டியதைச் செய்வார். எனக்குத் துணையாக என் சாயி தேவன் இருக்கையில் நான் ஏன் தவறான முடிவெடுக்க வேண்டும். இனி நான் ஒருபோதும் தவறான முடிவிற்கு செல்ல மாட்டேன் என்று முடிவெடுத்திருக்கின்றார்.

இதை உடனே அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியரிடம் கூற வேண்டும் என்று உந்துதல் ஏற்பட இரவு 12 மணிக்கு குருவிற்கு போன் செய்கின்றார். எப்போதும் இரவு பத்து மணிக்கெல்லாம் உறங்கும் பழக்கமுடைய குரு இரவில் வரும் தொலைபேசி அழைப்பை எடுக்க மாட்டார். அன்று எண்ணவோ உறக்கத்தில் இருந்து எழுந்து போனை எடுக்கின்றார். 

அந்த நபர், என் பெயர் கோவிந்தராஜன். அணைக்கரை எனது ஊர் என்று தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை குருவிடம் கூறி தான் அந்தப் புத்தகத்தை பார்க்கவில்லை என்றால் எனது உயிரை மாய்த்துக் கொண்டிருப்பேன். தக்க சமயத்தில் உங்கள் புத்தகத்தை பார்த்ததினால் பாபா என்னைக் காப்பாற்றி விட்டார். உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று கூறினார்.

குருவும், நீங்கள் பாபாவின் பக்தர் என்று கூறிக்கொள்வதில் பெருமை இல்லை. எப்போது பாபாவின் பக்தராகி அவரை நேசிக்க ஆரம்பித்தீர்களோ அந்த விநாடியில் இருந்து அவர், உங்களது ஒவ்வொரு செயலையும் கவனித்துக் கொண்டு இருக்கின்றார் என்று உணர்வதுதான்  பாபா பக்தர்களாகிய நமக்கெல்லாம் மிகப் பெரிய பெருமை. 

ஏனெனில் இந்த உலகத்தில் நாம் அநேகருடன் பழகி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆயிரம்தான் அவர்களுடன் மிக நெருக்கமாக வாழ்ந்து கொண்டிருந்தாலும், தாய், தகப்பன், சகோதர சகோதரி, மாமன் மச்சான், சித்தப்பா, பெரியப்பாவாக இருந்தாலும் அதிகப்பட்சமாக அவரவர், அவரவரைத்தான் பார்த்துக் கொள்ள முடியும். அதுதான் இயற்கை.

ஆனால் நம் சாயிதேவனோ, தன்னை நம்பும் மனிதனை மட்டுமல்ல, ஏனைய சீவராசிகளையும் எந்த நேரமும் காத்து ரட்சித்துக் கொண்டிருக்கும் கண்கண்ட தெய்வம். என்பதை நாம் உணர்ந்து கொண்டால், "எப்போது எதை நமக்கு தரவேண்டுமோ, அப்போது அதை நமக்கு தவறாமல் தந்து விடுவார்" என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிடும். பிறகு நம் சுமையை சுமக்கும் சாய்தேவனிடம் கேட்டுப்பெற என்ன இருக்கின்றது? 

எல்லாவற்றையும் பாபா பார்த்துக் கொண்டிருக்கின்றார் என்ற பரிபூரண நம்பிக்கையை மனதில் வைப்போருக்கு இந்த பூமியில் நடக்காத காரியம் என்பதே இல்லை. எனவே உங்களுக்கு ஆக வேண்டி காரியங்களை பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் மனதை மாற்றி, அதற்குப்பதில் சாயிநாதனின் நாமத்தையே உச்சரித்து வாருங்கள். உங்கள் காரியங்கள் தானாக நடக்கும். என்று கூறினார்.

குரு கூறியதைப் பின்பற்றிய அந்த நண்பர் அணைக்கரை திரு. கோவிந்தராஜன் அவர்கள், ஒரு வருடத்திற்குள்ளாக தன்னுடைய அனைத்து பிரச்சனைகளையும் பாபா தீர்ந்துவைத்துவிட்டார் என்றும், தற்போது மனநிம்மதியுடன் இருப்பதாகவும் குருவிடம் பகிர்ந்து கொண்டார். 

மேலும், நமது இதழுக்கு தன்னை ஆயுள் சந்தாதாரராக இணைத்துக் கொண்டதோடு மட்டுமின்றி தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் சாயி தேவனைப் பற்றியும், நமது இதழைப் பற்றியும் எடுத்துக் கூறி "தான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதற்கிணங்க சாயி சேவையாற்றுகிறார்.

இவரைப்போன்றே ஓர் அன்புச்சகோதரி இல்லறத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரணமாக தான் இனி வாழ்ந்து பயனில்லை என்ற முடிவிற்கு வந்தவள் தான் வணங்கும் சாயிநாதனை இறுதியாக வணங்கிவிட்டு உயிரை விட்டுவிட நினைத்தவள் கையில் தூக்க மாத்திரை குப்பியுடன் பாபாவின் ஆலயத்திற்கு வந்தவளின் கைகளில் நமது சாயி மகராஜ் குருவை தேடி இதழ் கிடைக்கின்றது. 

இறுதியாக அந்தப் புத்தகத்தை படித்துவிட்டு உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இரவு பத்து மணிக்கு தான் அடிக்கடி வரும் பாபா கோவில் வாசலில் அமர்ந்து படிக்கின்றாள். அது 2018  ஆகஸ்ட் மாத இதழ். 

அந்த இதழை எடுத்துப் பிரித்ததும் "பக்த லீலாமிர்தம்" என்ற தலைப்பில் சென்னையைச் சேர்ந்த திருமதி.பத்மா என்பவர் தனது அனுபவங்களை எழுதியிருந்த கட்டுரை வருகின்றது. அதில் தான் அனுபவித்த துன்பங்களுக்கு குரு. ஸ்ரீராம் அவர்களின் வழிகாட்டுதலின் படி பாபாவின் மீது முறையான பக்தி செலுத்தி, தியானத்தின் மூலம் எப்படி தன் துன்பத்தில் இருந்து மீண்டு வந்தேன் என்பதை எழுதியிருந்தார். அதைப் படித்துப் பார்த்த சகோதரிக்கு மனதிற்குள் ஒரு புதிய நம்பிக்கை பிறக்கின்றது.

இவ்வளவு சிரமத்தில் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் இவர்களே பாபாவை நம்பி மீண்டு வந்திருக்கின்றார்கள். நாம் ஏன் நமது துன்பத்தில் இருந்து மீண்டு வரமுடியாது. என்று சிந்தித்து இருக்கின்றாள். 

நாமும் பலகாலமாக பாபாவின் பக்தை யாக இருக்கின்றோம். இருப்பினும் நமக்கு ஏற்பட்ட துன்பங்கள் தீரவே மாட்டேன் என்கிறதே! ஒருவேளை நான் பாபாவிடம் முறையிடுவதில் ஏதும் தவறிருக்குமோ! அந்தக் கட்டுரையில் எழுதியிருப்பது போல் குரு ஸ்ரீராம் அவர்களை சந்தித்து இதற்கான விளக்கத்தைப் பெறுவோம். என்று நினைத்தவள் உடனடியாக இரவு 11மணிக்கு குருவை தொடர்பு கொண்டு விபரத்தைக் கூற, குருவோ, உங்களுக்கு நேரம் இருக்குமானால் நாளை என்னை நேரில் வந்து சந்தியுங்கள் என்று கூற, அந்த சகோதரி மறுநாளே குருவை நேரில் சந்தித்து விளக்கங்களைப் பெற்று மன அமைதி பெற்றாள். 

அன்றிலிருந்து  மாதந்தோறும் தன்னாலியன்ற புத்தகங்களைப் பெற்று பாபாவின் பக்தர்களுக்கு இலவசமாக வழங்குவதை பாபாவின் சேவையாக செய்து கொண்டு இருக்கின்றாள்.

அடுத்து திருநெல்வேலியைச் சேர்ந்த திரு.சுப்பிரமணியன் என்ற 80 வயதுடைய பாபாவின் பக்தர் ஒருவர் குருவினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு விபரத்தைக் கூறினார்.

தன்னுடைய நண்பர் ஒருவர் மதுரையில் இருந்து தனக்கு சாயி மகராஜ் குருவைதேடி இதழை அனுப்பி வைத்ததாகவும். தனக்கு வந்த இதழை தான் படிக்கலாம் என்று பிரித்த போது புத்தகத்திற்குள் இருந்து பாபாவின் உதி கொட்டிக்கொண்டே இருப்பதாகவும், தான் அந்த உதியை என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் தெவித்தார்.

அவர் மேலும், தான் பாபாவின் நெடுங்கால பக்தர் எனவும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே மதுரையில் இருந்து மிதிவண்டியிலேயே சீரடிக்குச் சென்று வந்ததாகவும் தெரிவித்தார். தன் வாழ்வில் இப்படி ஒரு அதிசயம் இப்போதுதான் நடக்கின்றது என்றும் உதி அதிகமாக சேர்ந்து வருகின்றது என்றும் அதை என்ன செய்வது என்றும் மீண்டும் கேட்டார்.

குருவோ, இவை எல்லாம் பாபாவிற்கு அதிசயங்கள் இல்லை. பாபாவின் இயல்பே அதுதான். நமது இயல்பு அதுவில்லாததினால் நமக்குத்தான் அவை அதிசயங்களாகத் தெரிகின்றது.
நீங்கள் இந்த அதிசயங்களிலேயே மனதை நிறுத்திவிட்டால் அதைத் தாண்டிய ஆன்மீக அதிசயங்களை உங்களால் காண முடியாமல் போகும். எனவே புத்தகத்தில் வரும் உதி உங்களுக்கானது என்று நினைக்காதீர்கள். பாபா தன்னுடைய  "குருவிகளுக்காக" 
( பக்தர்களுக்காக) உங்கள் மூலமாக உதியை அனுப்புகிறார்.

யாருக்கு உதி தேவைப்படுகிறதோ அந்த நபரையும் பாபாவே அனுப்புவார். அவர்களுக்கு அந்த உதியை தாராளமாக கொடுங்கள். மேலும் உங்களுக்கும், உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும், நோய்வாய்பட்டவர்களுக்கும், பாபாவின் உதியை மருந்து எனக் கொடுங்கள். நம்பிக்கையுடன் எடுத்துக் கொள்ளுங்கள். பாபாவின் உதியை விட இந்த உலகத்தில் வேறு சிறப்பாக குணமளிக்கும் மருந்து வேறில்லை. என்று கூறினார்.

அந்த பாபா பக்தரும், குரு கூறியபடியே அனைவருக்கும் உதியை அளித்து வருவதாகவும், இந்த சேவை தனக்கு, தனது கடைசி காலத்தில் மிகுந்த மன அமைதியை தருவதாகவும், இந்த அற்புதத்தை தன் வாழ்வில் நிகழ்த்திய பாபாவிற்கும், தகுந்த விளக்கத்தை தக்க சமயத்தில் அளித்து தனது தலைகனம் ஏறாமல் காத்த தங்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக! என தன் நன்றியினை   குருவிடம் பகிர்ந்து கொண்டார்.

இந்த மூன்று சம்பவங்களிலுமே, சம்பந்தப்பட்டவர்களுக்கு, நமது இதழை யார் வழங்கியவர் என்று தெரியாது. சம்பந்தப்பட்ட ஊர்களுக்கும் நமது அலுவலகத்தில் இருந்து புத்தகம் அனுப்பப்படவில்லை என்பதுதான் நடந்த "சாயி லீலைக்கு" ஆதாரம்.

சமீபத்தில் நடந்த நமது இதழின்  ஐந்தாம் ஆண்டு விழாவிற்கு வந்த திரு. "உதி" மூர்த்தி அய்யா அவர்கள்,
(மூர்த்தி அய்யா அவர்கள், யார் பாபாவின் புத்தகங்களை வெளியிட்டாலும் அதை அதிக அளவில் வாங்கி பக்தர்களிடம் கொண்டு சேர்ப்பதில் முதன்மையாக செயல்படுபவர்) நான் எங்கே சென்று உங்களது சாயி மகராஜ் புத்தகத்தை அளித்தாலும் அங்கே ஏற்கனவே புத்தகம் வந்து விட்டது என்று காட்டுகின்றார்கள் என்று செல்லமாக கோபித்துக் கொண்டார்.

ஆனால் சர்வ நிச்சயமாக நாங்கள் அனுப்பவில்லை. அப்படி என்றால், புத்தகத்தை நடத்துவது மட்டுமில்லாமல், புத்தகம் யார் யாருக்கு கிடைக்க வேண்டும் என்பதையும் பாபாவே பார்த்துக் கொள்கின்றார் என்பதுதானே உண்மை.

தொடரும்.


*****