சாய் தியானாலயாவில் "சாயி லீலா"

சாய் தியானாலயாவில் "சாயி லீலா"

சாய் தியானாலயாவில் "சாயி லீலா"

   -ஜெயந்தி ஸ்ரீராம்.


லீலை: 15.பாபா அருளிய விநோதமான குழந்தை வரம்.

எனது மிக நெருங்கிய தோழி ஒருவரின் மகளுக்கு திருமணமாகி ஐந்தாண்டுகளாக குழந்தை இல்லை. எல்லா வைத்திய முறைகளையும் முயற்சி செய்து பார்த்தாயிற்று. சுற்றி இருப்பவர்கள் கூறிய எல்லா கோவில்களுக்கும் சென்று பரிகாரங்கள் செய்தாயிற்று. பலன் ஒன்றும் இல்லை.

இறுதியில், பாபாவிடம் பிரார்த்தனை வைப்பதற்காக "சாய் தியானாலயா பிரார்த்தனை மையத்திற்கு" வருகிறார்கள். எப்போதும்போல் குரு அவர்களுக்கு ஆறுதல்கூறி, நிச்சயம் பாபா உங்களுக்கு நன்மையைச் செய்வார் என்று நம்பிக்கையளித்து அனுப்பி வைக்கின்றார். 

குழந்தை செல்வம் வேண்டி அந்த தம்பதியினர் நிறைய வைத்தியமும், பிரார்த்தனைகளும் செய்து விட்டதனால் அவர்கள் நம்பிக்கையற்று இருந்தனர். அதனால், சரியாக ஒரு மாதத்தில் திரும்ப வந்து, குருவிடம் என்ன சுவாமி, பாபா இன்னும் எங்களுக்கு குழந்தை வரம் கொடுக்க வில்லையே என்று குறைபட்டுக் கொண்டனர்.

குரு அவர்களிடம் சத்சரிதத்தில் வரும் "ஞானம் கேட்டு வந்த ஹாஜி" கதையைக்கூறி, நீங்கள் கேட்பது கடைச்சரக்கல்ல, நீங்கள் கேட்டதும் காசு வாங்கிக் கொண்டு எடுத்துக் கொடுப்பதற்கு, நம்பிக்கையோடு, பொறுமையும் மிக அவசியம். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இறைவனிடம் நாம் கேட்டுப் பெறுவதற்கு எதுவுமேயில்லை. ஏனெனில் அவன் ஏற்கனவே அனைத்தையும் நமக்கு கொடுத்துவிட்டான். 

உதாரணமாக, ஒரு மரத்தின் விதையையும், உங்களையும் அவனே படைக்கின்றான். விதை மண்ணில் விழுந்ததும் முளைக்கின்றது. ஏன் தெரியுமா? விதைக்குள் விருட்சத்திற்குண்டான அனைத்து மூலத்தையும் இறைவன் ஏற்கனவே அதற்குள்ளாகவே பதித்து விட்டான். எனவே அவைகள் தன்னாலேயே முளைத்து தளைக்கின்றன. 

மனிதனும் அப்படித்தான் மனிதனுக்குள்ளாகவே இனப்பெருக்கத்தின் அத்துணை கூறுகளும் பதியப்பட்டிருக்கின்றன. மனிதன் இயற்கையை  மீறிய காரியங்களைச் செய்து தன்னைத்தானே கெடுத்துக் கொள்கிறான். பிறகு எனக்கு அது இல்லை, இது இல்லை என்று படைத்தவனிடம் முறையிட்டால் எப்படி.

தூங்கும்போது விழிக்கின்றீர்கள். விழித்திருக்கும்போது தூங்குகிறீர்கள். இறைவன் கொடுத்த உடலை இயற்கைக்கு விரோதமாக பயன் படுத்துகின்றீர்கள். உடலையும், மனதினையும், முறையாகப் பயன்படுத்தி வாழ்பவர்களுக்கு இந்த பூமியே சொர்க்கம், இல்லை என்றால் இதுவே நரகம்.

அதையும் மீறி இறைவனிடம் கேட்டு அவன் தந்தால், நாம் கேட்டால்தான் இறைவன் தருவான் என்றல்லவா பொருள் ஆகிறது. கேட்டால்தான் இறைவன் தருவான் என்று வைத்துக் கொண்டாலும், எந்த ஒன்றையும் கொடுப்பதற்கு முன்பு அதற்கு நம்மை தகுதியானவனாக மாற்ற வேண்டியது அவனது கடமை அல்லவா? அதற்காகவே சோதனைகளை கொடுக்கின்றான். என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?

அப்படி இல்லாது, நாம் என்ன பாவம் செய்தோம் இறைவன் ஏன் நம்மை இவ்வாறு சோதிக்கின்றான் என்று துன்பப்படுவானேன்? "சோதனைகளே சாதனைகளாகின்றன" என்பதனை அறிந்து கொண்டு, அதன்படி ஏன் உங்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை. 

பாபா கொடுக்கும் வரை கொஞ்சம் பொறுமையை கடைபிடியுங்கள். ஏன் என்றால் உங்களது ஜாதகத்தின்படி உங்களுக்கு குழந்தைச் செல்வம் கிடையாது. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான பாபா நினைத்தால்தான் உங்களுக்கு குழந்தைச் செல்வம் கிடைக்கும். அதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பாபாவை சரணடையுங்கள். 

உங்களுக்கு இதை விட்டால் வேறு வழி இல்லை. பாபாவை நம்புங்கள் அவர் நினைத்தால் எதுவும் நடக்கும். ஏற்கனவே விதிக்கப்பட்டதை மாற்ற அவர் ஒருவரால்தான் முடியும். பாபாவிடம் உங்கள் பாரத்தை இறக்கி வைத்துவிடுங்கள். நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமானால் இறக்கி வைத்த பாரத்தை மீண்டும் மனதில் ஏற்றிக்கொள்ளாதீர்கள். 

பாபாவிடம் என் கோரிக்கையை சமர்ப்பித்துவிட்டேன். பாபா எனக்குண்டானதை நிச்சயம் வழங்குவார் என்று மனதை திடப்படுத்திக்கொண்டு, சதா சர்வ காலமும் சாயிநாதரையே மனதில் இருத்துங்கள். மிகவிரைவில் நீங்கள் கேட்டதை பகவான் சாயி உங்களுக்கு வழங்குவார்.

மிக முக்கியமாக உங்களுக்கு எது தேவையோ அந்த கோரிக்கையை பாபாவிடம் தெரிவித்த பிறகு மீண்டும் அந்த கோரிக்கையை மறந்துகூட நினைத்து புலம்பாதீர்கள். " எது நடக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அதை பாபாவிடம் விண்ணப்பித்து விட்டு அப்போதே மறந்து விடுங்கள்" அந்தக் கோரிக்கை உடனே நடந்துவிடும். 

அப்படியும் நடக்கவில்லை என்றால் குறை உங்களிடம் தான் இருக்கும். பாபாவிடம் எப்படி இருக்கும். இந்த வழியை நீங்கள் எவ்வளவு உறுதியாகப் பின்பற்றுகிறீர்களோ அவ்வளவு விரைவாக உங்கள் கோரிக்கை பாபாவால் நிறைவேற்றப் படும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

அதன்பிறகு மூன்று மாதங்கள் ஆயிற்று, அந்த தம்பதியினர் நமது மையத்திற்கு வரவில்லை. குருவும் இரண்டு மூன்று முறை அவர்களைப் பற்றி விசாரித்தார்கள். பிறகு கேட்பதை நிறுத்திக்கொண்டார்கள். ஆயினும் வியாழன் தோறும் அவர்களுக்கு உண்டான பிரார்த்தனை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

ஒரு வியாழக்கிழமை மையத்தில் மாலை ஆரத்தி தொடங்குவதற்கு முன்னால் குருவை சந்திக்க வேண்டும் என்று ஒரு பெண்ணும் அவளது கணவரும் வந்து குருவிடம், அய்யா நாங்கள் தீவிரமான பாபா பக்தர்கள். பொருளாதாரத்தில் மிகவும் சிரமப்பட்டுகிறோம். எங்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றார்கள்.  இதற்கு மேல் குழந்தைகள் வேண்டாம் என்று என் மனைவி குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டாள். 

ஆனாலும் எப்படியோ என் மனைவி மீண்டும் கர்பமாகிவிட்டாள். தற்போது மூன்று மாதமாகிறது. மருத்துவரிடம் விளக்கம் கேட்டால். ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது. இந்தக் குழந்தையையும் பெற்றுக் கொள்ளுங்கள். பிறகு மீண்டும் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். 

எங்களுக்கு அவர்களின் மீது நம்பிக்கை இல்லை.நாங்கள் இருக்கும் சூழ்நிலையில் நான்காவதாக ஒரு குழந்தையை பெற்று வளர்க்கக் கூடிய நிலை எங்களுக்கு இல்லை. நாங்கள் இப்போது என்ன செய்வது அய்யா. அபார்ஷன் செய்து கொள்வதையும் நாங்கள் பெரும் பாவமாக நினைக்கிறோம். தனியார் மருத்துவமனையில் சென்று அபார்ஷன் செய்து கொள்ளலாமா?

எங்களுக்கு இப்போது என்ன செய்வதென்றே புரியவில்லை. பாபா எங்களை இந்த இக்கட்டான சூழ்நிலையில் தவிக்க விடுகிறார். என்று கண்ணீர் விட்டு குருவிடம் புலம்பினார்கள். குருவோ, உடனடியாக அவர்களிடம், வேண்டாம் அதை மட்டும் செய்து விடாதீர்கள். நீங்கள் சற்று அமைதியாக இங்கு உட்காருங்கள். இங்கு இப்போது சத்சங்கம் நடக்கும். முடிந்ததும் பாபாவிற்கு ஆரத்தி காட்டப்படும். ஆரத்தி முடிந்ததும் நாம் பேசிக்கொள்ளலாம். என்று அவர்களை சற்று ஆசுவாசப்படுத்தி அமர வைத்தார்கள். 

சத்சங்கம் ஆரம்பித்தது. சத்சங்கத்தில் குரு அவர்கள் நீங்கள் எப்போது பாபாவை மனப்பூர்வமாக நம்பி இங்கே வந்தீர்களோ, அப்போதே உங்களது கோரிக்கையை பாபா அறிவார். உங்களது கோரிக்கைகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நீங்கள் இங்கே தயவு செய்து உங்கள் அலைபாயும் மனதை சற்று கட்டுப்படுத்திக்கொண்டு, இங்கு நடக்கும் நிகழ்வுகளில் கவனம் வையுங்கள். 

நீங்கள் வெறுமனே சும்மா உட்கார்ந்திருங்கள். உங்களுக்குள் பாபா என்ன மாற்றம் செய்யவேண்டு மோ அதை மிகச்சரியாக செய்வார். ஏனெனில் நமக்கு எதை தர வேண்டும் என்பதை அறிந்தவர் அவர் மட்டுமே, என்பதை அறிந்து கொள்ளுங்கள். என்று கூறிவிட்டு பாபாவின் தியானத்தை ஆரம்பித்தார்.

சரியாக தியானம் ஆரம்பம் ஆவதற்கு ஒரு விநாடிக்கு முன்பாக மூன்று மாதமாக மையத்திற்கு வராத, குழந்தையில்லாத தம்பதியினர் உள்ளே வந்து குருவிற்கு வணக்கம் செலுத்தினார்கள். குருவும் தியானம் ஆரம்பிக்க இருக்கிறது. முதலில் தியானத்தில் கலந்து கொள்ளுங்கள். பிறகு பேசிக்கொள்ளலாம் என்று அவர்களை தியானத்தில் அமர வைத்தார்.

பத்து நிமிடங்கள் தியானம் முடிந்த உடன்  ஆரத்தி ஆரம்பமானது. ஆரத்தி முடிந்தவுடன் மூன்று மாதம் கர்பிணியான  பெண் தன் வயிற்றை கைகளால் பிடித்தபடி வலியால் துடித்தாள். அருகில் உள்ளவர் அவரை விசாரித்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க, அடுத்த பத்து நிமிடத்தில் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காமலே தானாகவே அபார்ஷன் ஆயிற்று என்ற செய்தி வந்தது.

மையத்தில் இருந்தவர்களிடம் இந்தக் கதையை குரு அவர்கள் பாபாவின் மகிமையை பார்த்தீர்களா? ஒரு மணி நேரத்திற்கு முன்புதான், எங்களுக்கு இந்தக் குழந்தை வேண்டாம் ஆனால் அபார்ஷன் செய்ய மனமில்லை என்று பாபாவிடம் வேண்டினார்கள். மருத்துவ சிகிச்சையின்றி இயற்கையாகவே, அந்தக் குழந்தை வெளியேறிவிட்டது. பாபா அந்தக் குழந்தையை யாருக்குக் கொடுக்கப் போகின்றாரோ அவருக்குத்தான் தெரியும். என்று கூறி முடிக்கவும். குழந்தையில்லா அந்தப் பெண் மயங்கி விழவும் மிகச்சரியாக இருந்தது.

உடனடியாக அவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டி சென்று சிகிச்சையளிக்க, அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தியை கூறவும், மிகவும் ஆனந்தப்பட்ட அந்த தம்பதியினர் மீண்டும் நம் மையத்திற்கு வந்து அனைத்து பாபா பக்தர்களுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்து பாபாவிற்கு நன்றி செலுத்தினார்கள். அதுமட்டுமின்றி அந்த வாரம் நடக்கும் அன்னதானத்திற் குண்டான செலவையும் அவர்களே ஏற்றுக் கொண்டார்கள்.

இந்த நிகழ்வு எதார்த்தமாக கூட நிகழ்ந்திருக்கலாம். நமது மையத்திற்கு வராமல் இருந்திருந்தால் கூட இது நடந்திருக்க வாய்பு உண்டு. அன்றைய நிகழ்விற்கு ஒரு தம்பதி மட்டும்கூட வந்திருக்கலாம். ஆனால் இரண்டு தம்பதிகளும் ஒருவர் பின் ஒருவராக வரவைத்து, அதிலும் மூன்று மாதமாக வராத தம்பதியினரையும் குறிப்பாக அன்றைய தினம் வரவழைத்து நமது மையத்தில் சாயி நாதர் நடத்திய லீலா வினோதத்தை என்னெவன்பது

ஒரு முத்து கடலில் விளைந்திருக்கலாம். இன்னுமொரு முத்து இயற்கையாக நிலத்தில் வளர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் மெருகேற்றப்பட்ட முத்துக்கள் பாபா என்ற நூலில் கோர்க்கப்பட்டதுதான் "சாயி லீலை" என்று எங்களது குரு அடிக்கடி கூறுவார். நானும் இதையே கூறி அடுத்த மாதம் "பாபா வரம் கொடுத்தும் பெற்றுக் கொள்ளாத நபர்களின்" கதைகளை கூறுகிறேன்.

தொடரும்.


*****