நோய் நீக்கும் அன்னதானம்.

நோய் நீக்கும் அன்னதானம்.

நீங்கள் எந்த இனமாகவும் இருக்கலாம், எந்த மொழி பேசுபவராகவும் இருக்கலாம், எந்த சாதி, மதமாகவும் இருக்கலாம். அவ்வளவு ஏன், யானை போன்ற பெரிய மிருகங்களில் இருந்து கொசுவை போன்ற சிறிய உயரினங்கள் வரை அனைத்திற்கும் முதலில் வருகின்ற பொதுவான ஒரே உணர்வு பசி.

எனவே நீங்கள் அன்னதானம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், அதற்கு மட்டும் சாதி, மதம், மொழி, இனம், மனிதன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், மிருகம் என்று பாகுபாடு பார்க்கத் தேவையில்லை என்று சங்கர கீதை கூறுகின்றது.

அதேபோன்று அன்னதானம் செய்வதற்கு நேரம் காலம் பார்க்கத் தேவை இல்லை என்றும் கூறுகின்றது.
ஒரு சிலர் இரவு பத்து மணிக்குமேல் அன்னதானம் செய்தால் அன்னலட்சுமி வீட்டை விட்டு போய்விடுவாள் என்று கூறுவார்கள். நீங்கள் எப்போது பசி என்று கேட்போருக்கு இல்லை என்று கூறினீர்களோ அப்போதே உங்கள் மனதை விட்டு அன்னலட்சுமி போய் விட்டாள். அதற்கப்புறம் உங்கள் வீட்டில் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?

பசி என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. பசி என்ற உணர்வு அக்னியைப் போன்றது. எப்பொழுது ஓர் உயிர் பசியால் துடிக்கின்றதோ அப்பொழுதே அதன் வயிறு என்ற யாக குண்டம் எரிய ஆரம்பிக்கின்றது. அதில் உடனடியாக யாக பொருட்கள் என்ற உணவினை இடவேண்டும் அப்பொழுதுதான் உணவினை உண்ட அக்னி சாந்தியடையும். இதுவே யாகத்தின் பலனும், அன்னதானத்தின் பலனுமாகும்.

இன்னும் ஒரு படி மேலே நின்று ஞானமார்க்கத்தின்படி கூறுவதென்றால் அன்னதானமே உண்மையான ஹோமம் ஆகும்.

சிலர் கூறுவதுபோன்று தொடர்ந்து அன்னதானம் செய்வதால் செல்வம் ஒன்றும் குறைந்து போகாது. மாறாக இறைக்கின்ற கேணிதான் ஊறும் என்பதற்கேற்ப, அன்னதானம் செய்வதற்குண்டான செல்வம் வந்து கொண்டே இருக்கும். இது அனுபவ உண்மை.

அக்காலத்தில் ஆயுர்வேத மருத்துவர்கள் நோய்க்கு மருந்தளித்து விட்டு, நோயாளியிடம் வாரத்திற்கு ஒரு முறை அன்னதானம் அளித்து வாருங்கள். நோய் விரைவில் குணமாகிவிடும் என்று கூறுவதுண்டு.

அதையே சங்கர கீதை அன்னதானம் செய்வோருக்கு பலன் உடனடியாகக் கிட்டும் என்றும், முக்கியமாக வியாதியையும், சோகத்தையும் போக்கும் என்று கூறுகின்றது.

எவர் ஒருவரின் கர்மா தீர்கின்றதோ அவரே அன்னதானம் செய்ய முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. உங்களின் கர்மா தீர்ந்துவிட்டதா என்பதை அறிய நீங்களும் அன்னதானம் செய்து பாருங்கள். உங்களால் தொடர்ந்து செய்யமுடியவில்லை என்றால், தொடர்ந்து மிகச்சரியாக யார் அன்னதானத்தை செய்து வருகின்றார்களோ அவர்களுக்கு  உங்களால் ஆன உதவியை செய்து வாருங்கள்.

அப்படி ஏதேனும் ஒரு வகையில் உங்களால் தொடர்ந்து பிறருக்கு உதவி செய்ய முடிகின்றது என்றால் உங்கள் கர்மா தீர்ந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தொடர்ந்து அன்னதானம் செய்து உங்கள் பிறவியை புனிதப் பிறவியாக மாற்றிக் கொள்ளுங்கள். பல ஆலயங்களிலும், பல மடங்களிலும் தொடர்ந்து அன்னதானத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருவது நாம் அறிந்ததே!

பகவான் சாயிநாதரும் பசித்தவனுக்கு முதலில் பசியைப் போக்கு என்று கூறியதோடு மட்டுமல்லாது தன்னை நாடி வந்த பக்தனுக்கு தன் கையாலேயே உணவு சமைத்த அன்னதானம் செய்தார்.  என் பொருட்டு நீ பிறருக்கு செய்யும் அன்னதானத்தின் ஒவ்வொரு பருக்கையும் என் வாயில் இடுவதாக அர்த்தம் என்று மொழிந்தார்

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல் பெருமானார். பசிபிணி போக்குவதன் பெருமையை உலகிற்கு உணர்த்தி இன்று வரை அந்த தர்மத்தை நிலைநாட்டியிருக்கின்றார். அது இந்த உலகு உள்ளவரை நிலைத்திருக்கும் என்பதில் அய்யமில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நமது இதழின் ஆசிரியர்  திரு. ஸ்ரீராம் சாய் அவர்கள் வாரந்தோறும் வியாழன் அன்று இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே தேடிச் சென்று  150 நபர்களுக்கு அன்னம் அளித்து வரும் சேவையை பகவான் சாயிநாதரின் கட்டளைக் கிணங்க தொடர்ந்து செய்து வருகின்றார்.

மனிதனுக்கு மட்டும் அல்ல, வாயில்லா ஜீவன்களுக்கு கொடுக்கும் தானமும் அன்னதானமே! வாயில்லா ஜீவன்களுக்கு நாம் கொடுக்கும் அன்னதானம் நன்மைகள் மிகுந்த புண்ணியத்தையும் சேர்த்து அதீத பலன்களை கொடுக்கும்! 

அதிகாலையில் எழுந்து புறா, கிளி போன்ற பறவை இனங்களுக்கு கம்பு, கேழ்வரகு, திணை, அரிசி, கோதுமை போன்ற தானியங்களை தானம் கொடுத்து கூடவே தண்ணீரையும் வைக்கலாம். 

பசுக்களுக்கு வாழைப்பழம், பச்சரிசி, வெல்லம், அகத்திக்கீரை போன்றவற்றை தானம் கொடுக்கலாம் 
பைரவரின் அம்சமாக விளங்கும் நாய்களுக்கு உணவு தானம் செய்யலாம். 

எப்போதாவது, எங்கேயாவது, யாருக்காவது தினந்தோறும் ஒருவருக்காவது அன்னதானம் செய்யுங்கள். முடியாதபோது ஒரு கைபிடி அரிசியோ, சர்க்கரையோ எடுத்து உங்கள் வீட்டின் மூலையில் போட்டு வைய்யுங்கள். நூற்றுக்கணக்கான உயிரினங்களின் பசியை போக்கிய  புண்ணியம் பெறுவீர்கள்.

வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

****