இறை தேடல்

இறை தேடல்

இறை தேடல்

பொத்தம் பொதுவாய் இறைத்தேடல் என்ற பெயரில் எதையாவது தேட வேண்டும்,

ஏதாவது கிடைக்கும் என்ற நினைப்பில் நீங்கள் இறைவனை காண தேடினால்,  உங்கள் நேரமும் முயற்ச்சியும் விரையமாகுமே தவிர எவ்வித பலனும் தராது. 

முதலில் இறைவனை அடைந்தால் நமக்கு இவை எல்லாம் கிடைக்கும் என்ற எண்ணத்தை அகற்ற வேண்டும்.
இது மிக மிக முக்கியமானது.எதையும் எதிர்பார்த்து நீங்கள் இறைவனை காண முயற்சிக்க கூடாது. அந்த எதிர்பார்ப்பே இம்முயற்ச்சிக்கு முதல் தடை.

நீங்கள் ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.இந்த பிரபஞ்சத்தையும், உங்களையும் படைத்தவனை தானே நீங்கள் தேடுகின்றீர்கள். அப்படி என்றால் நீங்கள் கேட்காமலேயே அவன் உங்களுக்கு கொடுத்துள்ளவை களுக்கு  முதலில் நன்றி செலுத்துங்கள்.

எல்லாம் அறிந்து கொடுப்பவனிடம், பாத்திரமறிந்து அதற்கு தக்கவாறு தருபவனிடம் என்ன கேட்க வேண்டி உள்ளது.நமக்கு தேவையானவற்றை,  அருகதைப்பட்டதை அவனே அறிந்து தர வல்லவன்.

அவன் தரவில்லை என்றால் நாம் அதை பெற்றுக்கொள்ள  இன்னமும் நம்மை தகுதிப்படுத்திக் கொள்ளவில்லை என்பதல்லவா அர்த்தம்.

எதையும் எதிர்பாராமல் முழுமையாக நம்மை அவனிடத்தில் சரணடைந்து  ஒப்படைத்து விட்டால் மட்டுமே போதுமானது.பின் நமக்கு தேவையானது அனைத்தும் அவனே வாரிவழங்குவான். உங்களுக்கு வழிகாட்டுவான்.

இது உங்களுக்கு அதிக்கப்படியான நம்பிக்கையாக தோன்றலாம். ஆனால் நாம் நம்பிக்கை வைப்பது நம்மை படைத்தவனிடம். நமக்கு நமது மனதை  கட்டுப்படுத்த இந்த அதீத நம்பிக்கை இங்கு அவசியம்  தேவை.

பக்தியே நம்பிக்கை. நம்பிக்கையே பக்தி. இரண்டாவதாக,  நாம் தேடும்  இறை சக்தி புனிதமானது என்பதால், அதை நாம் அடையும் முயற்சி தூய்மையானதாக இருக்க வேண்டுமல்லவா.

நமது உள்ளும் புறமும் தூய்மையானதாக இருந்தால், இறை சக்தியை நாம் தேட வேண்டாம்,  அதுவே நம்மை தேடி வரும் என்பதே உண்மை.

புறத்தூய்மையை பராமரிப்பது எளிதானது. ஆனால் அகத்தூய்மையை பராமரிக்க வேண்டும் என்றால், நமது முழுமன ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியப்படாது.அகத்தூய்மை என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நமக்கு நாம் உண்மையாய் இருக்க வேண்டும். இப்படி நாம் உண்மையாய் இருப்பதால், நம்மை யாருடைய இகழ்வும் புகழ்தலும் பாதிக்காது.நமது மனசாட்சியின் வழிகாட்டுதலின்படி நடந்து கொள்ள வேண்டும்.

நம் எண்ணங்கள் நல்லவைகளாக இருக்க வேண்டும்.  இந்த நல்லெண்ணங்கள்,  நல்ல ஆக்கபூர்வமான அதிர்வலைகளை நம்மில் உருவாக்கும்.ஒவ்வொரு நாளும் காலையில் அன்றைய பொழுதின் விடியலை காண வைத்தமைக்கு அந்த இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

நம்மால் முடிந்த அளவு பிறருக்கு,  நம் தகுதிக்கு ஏற்ப உதவிகள் செய்வோம்.
அதிகமாக ஏழைகளுக்கு உதவுங்கள். மற்றவர் வாழ்வில் ஒளி ஏற்றுவதை விட, இறைவனை காண வேறு சிறந்த வழி கிடையாது.

ஏழையின் எதார்த்தமான சிரிப்பில் இறைவனை காணலாம்.  நீங்கள் உதவ உதவ எத்தனை பேர் ‘உங்களை’ இறைவனாக பார்க்கின்றனர் என்பது விளங்கும்.மூன்றாவதாக, நான் இறைவனை காண போகிறேன், காண வேண்டும், தேடிக்கொண்டிருக்கிறேன் என நினைபதை தவிர்த்து,  நான் இறைவனுடன் ஒன்றாகி, என்னுள் உள்ள இறைவனை உணரப்போகி றேன் என மாற்றி சிந்தியுங்கள். 

இறைவன் உண்மையில் உங்களுடன், உங்கள் உள்ளில் தான் இருந்து கொண்டிருக்கின்றார்.இறைவன் என்னுள்ளேயே இருக்கின்றார் என்ற எண்ணமே, உணர்வே, நமது எல்லா செயல்களையும், எண்ணங்களையும் மாற்றி,  நல்வழிப்படுத்தி,  அவனை, அந்த ஜோதியை, ரூபமில்லா சக்தி நிலையில் உள்ளவனை,  உங்களுக்குள் தெளிவாக காண வழி செய்யும்.

எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுக்குள் தான் இறைவன் இருக்கின்றார் என்ற உணர்வே உங்களது தன்மையை மாற்றி உங்களை இறைநிலைக்கு உயர்த்தி சென்றுவிடும்.இது ஒவ்வொருவருக்கும் தனித்தனியான அனுபவமாக தான் இருக்கும்.

ஒருவருக்கு கிடைத்த அனுபவம் உங்களுக்கும் கிடைக்கும் என்பது நிச்சயமில்லை.உங்களுக்கு முற்றிலும் வேறுமாதிரியான அனுபவமாக இருக்கலாம். சுயமாக உள்ளுணருதல் தான் உண்மையான அனுபவம்.

மற்றவை எல்லாம் வெறும் வழிகாட்டிகள் மட்டுமே. இப்படி நீங்கள் உங்களது தகுதியை உயர்த்திக் கொண்டால் வெகு விரைவில் இறைவனை உணரலாம். இறைவனோடு உறவாடவும் இயலும்.

கடவுளுக்கு நன்றி.
 
*****