பூமிக்கு வந்த வேலை.
பூமிக்கு வந்த வேலை.
ஒருவன் செய்யும் செயல்களே அவனுடைய இன்பதுன்பத்திற்கும்,
அவன் எடுக்கின்ற பிறவிகளுக்கும் காரணமாகின்றன. செயல்களே
வாழ்வின் அத்தனை நகர்வுகளுக்கும் காரணமாகின்றன. மனிதன் புரியும் நல்வினை தீவினை ஆகிய இரண்டு செயல்களுமே புண்ணியகர்மா பாவகர்மாவாக அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்கின்றன.
நானூறு ஐந்நூறு பிறவிகளும்கூட எடுத்து அல்லல்படும் ஜீவாத்மாக்கள் உண்டு.ஒருவனுடைய ஒட்டுமொத்த கர்மவினை சஞ்சிதம் என்றும், இந்தப்பிறவியில் அனுபவிப்பது பிராரப்தம் என்றும் அடுத்துவரும் பிறவிகள் அனுபவிக்கக் காத்திருப்பது ஆகாமியம் என்றும் கூறப்படுகிறது. மனிதன் செய்த செயல்கள் அல்லது வினைகளின் சேர்மானமே இவையெல்லாம்.
மனிதன் தான் பூர்வத்தில் புரிந்த வினையாலேயே மீண்டும் பிறக்கிறான் வாழ்கிறான் இறக்கிறான். அவன்செய்த தீவினை நல்வினைகளுக்கேற்ப அவனுக்கு இன்பதுன்பங்களை அளித்து அவன் வாழ்க்கையை வகுப்பதே கர்மாவாகிவிடுகிறது. விதைப்பதைத் தான் ஒருவன் அறுவடை செய்ய முடியும் என்று சொல்வார்கள்.
வேம்பின் விதையை விதைத்துவிட்டு மாம்பழத்தை எதிர்பார்க்கலாமா? இதற்கு இறைவனைக் குறைசொல்லக் கூடாது. தான்புரிந்த காரியங்களால் தன் தலைவிதியைத் தானே எழுதிக்கொள்கிறான் மனிதன்.
ஒருவன் முற்பிறவியில்செய்த தீவினையாலே அவன் கற்பகமரத்தை அடைந்து நின்றாலும் அவனுக்கு எட்டிக்காய்தான் கிடைக்கும் என்கிறது மூதுரை.
“கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல், முற்பவத்தில் செய்த வினை” என்கிறது அப்பழம்பாடல்.
ஆக, செயல்களே ஒருவன்
வாழ்க்கையை வடிவமைக்கின்றன என்றால் அதை மாற்றியமைக்க யாராலும் முடியாதா என்றால் முடியும் பகவான் சாயிநாதனால் அதைச்சரி செய்ய முடியும்.இந்தக் கர்ம உபாதையைக் குறைக்க பாதை ஏதேனும் உண்டா? உண்டு பகவான் சாயிபாபா காட்டும் பாதையில் நடக்கும் போது கர்ம உபாதை குறையும்.
ஐம்புலன்களும் அதனதன் வேலையைச் செய்யட்டும், மனம் என்னையே நினைக்கட்டும் என்று பற்றற்று காரியங்களை செய்வது எப்படி என்பது பற்றி மிக எளிதாக விளக்குகிறார் பகவான் சாயிபாபா.
பற்றற்ற நிலையில் செயல்களை செய்யும்போது அவை செயல் புரிபவனை பாதிப்பதில்லை என்கிறது
ஶ்ரீமத் பகவத்கீதை.பகவானின் பாதாரவிந்தங்களில் மட்டும் பற்றுவைத்து, பற்றற்ற நிலையில் செயல்புரியும் ஒருவன், செயல்களின் பாதிப்பிலிருந்து வெளியே வந்துவிடுகிறான் முக்கியமாக ஆன்ம விடுதலை பெறுகிறான் என்கிறது பகவத்கீதை.
“பற்றுக பற்றற்றான் பற்றினை;
அப்பற்றைப், பற்றுக பற்று விடற்கு”
என்று பாடுகிறது குறள்.
செயலின் வீரியத்தை விளைவுகளை
வெளியேற்றுவதே இந்தப்பற்றின்மை.
இப்படிச் செயல்கள் ஆட்டிப்படைப் பதை அனுமதிக்காமல் அதை அடக்கி ஒடுக்கிவிடவேண்டும்.
“உலகம் செய்திப் பத்திரிகையைப் போன்றது.ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை பத்திரிகையை ஒருமுறைதான் நாம் படிக்கமுடியும். ஆனால் ஒரே பத்திரிகையை யாரும் திரும்பத்திரும்ப ஒவ்வொருநாளும் படிப்பதில்லை. அதேபோல இவ்வுலகில் பிரவேசித்திருக்கும் நாம் இந்த உலகச்செய்திப் பத்திரிகையை
ஒருதடவை படித்துமுடித்து விட்டோம். அதே பத்திரிகையை நாம் மீண்டும் படிக்க முயற்சிக்கக் கூடாது. இன்றைய செய்தித்தாள் நாளைய குப்பைத்தாள்.
இவ்வாறே நாம் வாழ்க்கையை பிறப்பு இறப்பு சுழற்சியிலேயே உழலவிட்டுக் கொண்டிருந்தால்,நமது வாழ்க்கை குப்பைத்தாளாகவே ஆகிவிடும். ஆகவே இவ்வுலகை நாம் மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கு சம்மதிக்கக் கூடாது. சுவைமிக்க பத்திரிகையாகிய தெய்விகத்தைப் பார்க்க முடிவெடுத்து அதற்காகவே நாம் பாடுபடவேண்டும்.
செய்யும்வினைகள் எதுவாயினும் ஆண்டவனுக்கு அர்ப்பணம் செய்துவிடும்போது,அங்கே வினைகளின் பாதிப்பு இருப்பதில்லை. பகவானுடைய பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துவிடும் ஆத்மா மிகச்சரியாக அவரால் வழி நடத்தப் படுகிறது.அவர் கருணைப்பார்வை கிடைக்கப்பெற்ற ஆத்மாவிற்கு அவர் அபயஹஸ்தம் கிடைத்துவிடுகிறது.
உன் தலையெழுத்தை எழுதுவது உன்செயல்களே என்பதைப்
புரிந்துகொள்.பூர்வவினைகளுக்கு முற்றுப்புள்ளிவைத்து பிறவியை முடித்துக்கொள்.இனி எந்தக் கர்ம வினையும் இல்லை என்ற உத்தரவாதத்தோடு வெளியேறும் ஆத்மா, பந்தவிடுதலை அடைந்து விடுகிறது. இனி கர்மவாசமும் கர்ப்பவாசமும் இல்லாதபடிச் செய்யும் பரிபக்குவத்தை உன் ஆத்மா அடைந்துவிடவேண்டும். அதுவே நாம் பூமிக்கு வந்த வேலை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
*******