பசுக்களை காப்போம்.

பசுக்களை காப்போம்.

இரமண மகரிஷி தனது 16  வது வயதிலேயே சமாதி நிலையை அடைந்த மிகப்பெரிய யோகி. பகவான் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டவர்

இவர் மிகவும் அமைதியானவர். எப்பவாவது ஓரிரு வார்த்தைகள் பேசுவதோடு சரி. தன்னுடைய இளம் வயதிலேயே திருவண்ணாமலைக்கு வந்துவிட்டவர். சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேல் மெளன தவம் மேற்கொண்டவர். பிற்காலத்தில் ரமணாசிரமம் அமைந்தபின்பு ஆசிரமத்தில் ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு மணிநேரம் மக்களுக்கு தரிசனம் தருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அவரிடம் ஆசி வாங்குவதற்கு மக்களும், பக்தர்களும் அவரைக் காண காத்திருப்பார்கள். அவர்களோடு ஒரு
பசுவும் வந்து காத்திருக்கும். அக்காலத்தில் காணக்கிடைக்காத காட்சி அது. கண்டவர்கள் புண்ணியசாலிகள்.

மற்ற மனிதர்கள் அவரை காண 
காலம் தவறினாலும் அந்த பசு மட்டும் நேரம் தவறாமல் ஆஜராகும். 
மழை, வெயில், குளிர் என எதுவாக இருந்தாலும், அதற்கு நோய் தாக்கினாலும் ஆரோக்கியமாக இருந்தாலும் தினந்தோறும் சரியாக நேரத்திற்கு வந்துவிடும்.

பசு வாராண்டாவில் இருக்கும் ஜன்னலில் தலையை உள்ளே விட்டு தனது குருவான இரமணரை நோக்கி சாந்தமாக நின்றிருக்கும்.

சில சமயங்களில் கண்கள் திறந்திருக்கும்.சில சமயங்களில் கண்கள் மூடியிருக்கும். சில நேரங்களில் கண்களில் கண்ணீர வழிந்துகொண்டிருக்கும்.இது ஒரு அதிசய நிகழ்வாகும்.

ஒரு நாள் பசு மிகவும் நோய்வாய்ப்பட்டு படுத்துவிட்டது. அதனால் தன்னுடைய அன்றாட நிகழ்வான "குரு தரிசனத்திற்கு" வரமுடியவில்லை.

அன்றைய நிகழ்வில் பசுவை காணாத பகவான் ரமணர், பசு வரவில்லை என்றால் பரவாயில்லை. நாம் பசுவைக்காண்போம் என்று பசுவைக் காண கிளம்பிவிட்டார்.மற்ற சீடர்கள் திகைத்தனர். 

இரமணர் கூறினார். அது எப்போதும் சரியாக வந்துவிடும்.. அதன் ஆத்மா தயாராக தான் இருந்திருக்கும்.. உடல் தான் ஒத்துழைத்திருக்காது.. பாவம் என்றவாறே தன் முக்கியமான சீடரான பசுவைக் காணக் கிளம்பிவிட்டார்.

தடியை ஊன்றிக்கொண்டு மெல்ல நடந்து பசு இருக்கும் இடத்திற்கே பகவான் வந்துவிட்டார். தன் நல்ல சீடனுக்கு ஒன்றென்றால் பகவானால் ஓரிடத்தில் எப்படி அமர்ந்திருக்க முடியும்

அந்த பசு இரமணர் அமரும் திசையை நோக்கி  ஜன்னலில் பார்ப்பது போலவே அமர்ந்திருந்தது. 
அதனால் எழக்கூட முடியவில்லை. அதன் முன்னால் சென்று பரிவுடன் தலையை வருடினார் இரமணர்

இரமணரைப் பார்த்ததும் பசு தன் கண்களை மூடிக்கொண்டது. அடுத்த நொடி கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது. பின்பு மெல்ல கண்களைத் திறந்து தன் ஆத்ம நாயகனை சற்றே ஏறிட்டுப் பார்த்தது. அவ்வளவுதான் தலையை பகவான் இரமணரின் காலடியில் வைத்து இறந்து போனது. 

உலக வரலாற்றிலேயே, இது தான் ஒரு தன்னையுணர்ந்த மகாத்மாவின் முன்னால் விழிப்புணர்வு அடைந்த பசு
விடைபெற்ற நிகழ்வு நடந்ததாகும்.

அதன் பிறகு சீடர்கள் பகவான்  இரமணரிடம் கேட்டார்கள், இந்த பசு மனிதனாக பிறக்குமா என்று. 

அதற்கு இரமணர், அதற்கு மனிதனாக பிறக்க வேண்டிய அவசியமில்லை. ஏன் என்றால் அந்த பசு ஞான மடைந்த பின்பு இறந்ததனால் அதற்கு மறுபிறவி என்பது கிடையாது என்றார். 

ஆம் ஏற்கும் திறனுடையது பசு. அதனால் தான் பசுக்கள் புனிதமாக வணங்கப்படுகின்றன. மிருக இனங்களில் விழிப்புணர்வு அடைந்த ஒரே ஜீவன் பசு மட்டுமே. 

அதனால் தான் ஆசிரமங்களிலும் 
கோயில்களிலும், வீடுகளிலும் பசுக்கள் இடம்பெற்றுள்ளன.பசுக்களை இந்துக்கள் தெய்வமாக வழிபடுகின்றார்கள். கோமாதா எங்கள் குலமாதா என்ற சொல்லில் இருந்து இதை நாம் அறியலாம். 

ஒரு குடியானவனிடம் ஒரு பசு இருந்தால் அவன் குடும்பத்தை சிரமமில்லாமல் காப்பாற்றி விடுவான் என்பது மூத்தோர் மொழி. இன்றைய காலகட்டத்தில் இவைகளை விட்டு நாம் வெகுதூரம் விலகி விட்டோம். அதனால் நாம் இழந்தது அநேகம். இனியாவது நம் முன்னோர் சொல் கேட்டு வாழ்வை வளமாக்குவோம்.

எல்லாம் அறிந்த ஞானி ஏதுமறியாது வாழ்ந்து கொண்டிருப்பதைப் போல பசுக்கள் எப்போதும், அமைதியாக சுத்தமான விழிகளுடன் அப்பாவித்தனமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும்.

பசுக்களை காப்போம்! பாரதத்தின் பெருமையை உயர்த்துவோம்!

*****