சாய் தியானாலயாவில் "சாயி லீலா"
சாய் தியானாலயாவில் "சாயி லீலா"
-ஜெயந்தி ஸ்ரீராம்.
லீலை:12, சீரடி பயணத்தில் பாபாவின் லீலை தொடர்ச்சி..
தொடர்ந்து ஒரு மாதம் முழங்கால் வலியால் அவதிப்பட்ட குரு சீரடியில் சென்று பாபாவை தரிசனம் செய்த விநாடியில் வலிநீங்கி குணமடைந்த அற்புத லீலையை படியுங்கள்.
ஒரு முறை குரு அவர்கள் 45 நபர்கள் கொண்ட குழுவுடன் சீரடி பயணம் செய்ய ஏற்பாடு செய்தார்கள். பயணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக குருவிற்கு கடுமையான முழங்கால் வலி வந்து விட்டது. கால்களை தரையில் ஊன்றி அவரால் நடக்கமுடியவில்லை. சிரமப்பட்டு ஒரு காலை தரையில் தேய்துத்தான் நடக்க முடிந்தது.
வீட்டில் இருந்தஅனைவரும் மருத்துவரிடம் சென்று பார்க்கும்படி எவ்வளவோ கூறிவிட்டோம். குரு அசைந்தாரில்லை. கால்வலியுடன் பயணத்திற்கு தேவையான முன்ஏற்பாடுகள் அனைத்தையும் தான் ஒருவராகவே செய்து முடித்தார். பயண நாளும் வந்தது.
குரு சிரமப்பட்டு நடந்து வருவதைக் கண்ட பயணிகள் அனைவருமே குருவிடம் கால்வலிக்கு மருந்து எடுத்துக் கொள்ள வற்புறுத்தியும் கூட குரு மருந்து எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. எங்களுடன் வந்த மதுரையைச் சேர்ந்த லட்சுமி என்ற வயதான பெண்மணி ஒருவர் மட்டும் குருவிடம் தொடர்ந்து கால்களை மருத்துவரிடம் காட்டி வைத்தியம் செய்திருக்கலாமே! இப்பொழுது இவ்வளவு சிரமப்படுகின்றீர்களே! என்று தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தார்.
குரு அவரிடம், அம்மா எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை. நான் பாபாவை பரிபூரணமாக நம்புகிறேன் என்னை பாபா பார்த்துக்கொள்வார் என்றார்.
இருந்தாலும் எல்லாவற்றையும் பாபாவே பார்த்துக் கொள்வார் என்று சும்மா இருந்துவிடமுடியுமா என்ன? என்று அவர் கேட்க,
முடியாதுதான். ஆனால் நடக்கின்ற காரியம் அனைத்தும் பாபாவாலேயே நடக்கின்றன என நம்பும் என்னைப் போன்றவர்கள் இந்த துன்பமும் பாபாவால் தரப்பட்டது என்றுதானே எடுத்துக் கொள்ள முடியும். பாபா எனக்குத் தந்ததை அவரே தீர்த்து வைப்பார். அதுவரை அதை நான் அனுபவிக்கத்தான் வேண்டும்.
நான் அதை அனுபவிக்க முடியாது என்று மாற்று ஏற்பாடு செய்தால் அந்த பிரச்சனை ஒரு முடிவிற்கு வந்து விடும் தான். ஆனால் அதை வேறொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் அனுபவிக்க வேண்டிவருமே! நாம் நினைத்தபடி நடந்து கொண்டால் துன்பங்கள் தொடரும். இறைவன் நினைத்தபடி நடந்து கொண்டால் இன்பங்கள் நிறையும். நான் இறைவனின் கட்டளைப்படி நடக்க விரும்புகிறேன் என்றெல்லாம் கூறிப்பார்த்தார்.
அந்த அம்மா குரு கூறியதைப் புரிந்து கொள்ளாமல் இந்த காலத்திலே எவ்வளவோ மருத்துவம் வந்து விட்டது. அதைப் பயன்படுத்திக்கலேன்னா நமக்கு அறிவு என்று ஒன்றை எதற்கு இறைவன் கொடுத்திருக்கின்றான். என்றார்கள்.
அதே அறிவுதான் இறைவனிடம் சரணாகதி அடைவதற்கும், அதன்மூலம் ஞானமார்க்கத்தை அடையவும் பயன்படும் என்று அந்த நேரத்தில் அந்த பெண்மணிக்கு உணர வாய்பில்லை. உணர்த்தவும் வாய்பில்லை. எனவே, குரு அவர்கள், சரி அம்மா, சீரடி சென்றதும் நீங்க சொன்னபடியே நான் மருத்துவரைப் போய் பார்க்கின்றேன் என்றார்.
அதற்கு அந்த அம்மா, ஓ! சீரடியில் உங்களுக்கு தெரிந்த மருத்துவர் இருக்கின்றாரா? என்றார். ஆமாம் மிகவும் பிரபலமானவர் அவரை தெரியாதவரே இருக்க முடியாது. அவ்வளவு பிரபலமானவர் என்றார் குரு. அப்படியானால் சீரடி சென்றதும் என்னையும் அந்த மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறீர்களா? எனக்கும் பல வருடங்களாக முட்டி வலி இருக்கின்றது என்றவரிடம், கண்டிப்பாக அழைத்துச் செல்கிறேன். என்றார் குரு.
அனைவரும் சீரடி சென்றோம். குரு நடக்க முடியாமல் சிரமப்பட்டு வருவதைக் கண்ட சக பயணிகள் குருவை விசேஷ கட்டண அனுமதி பெற்று தரிசனத்திற்கு செல்லுமாறு கூற, குருவோ, அவசியமில்லை. நான் உங்களுடனே, இலவச தரிசனத்திலேயே வருகின்றேன். என்று கூறிவிட, அனைவரும் பாபாவின் பாடல்களை பாடிக்கொண்டும், பாபாவின் கதைகளை பேசிக்கொண்டும் ஆனந்தமாக இலவச தரிசன வரிசையில் சென்றோம்.
அன்று ஹோலிப் பண்டிகையாதலால் அதிககூட்டம் அதனால் நாங்கள் பாபாவை தரிசிக்க மூன்று மணி நேரம் ஆகியது. அனைவரும் ஆனந்தமாக ஆடிப் பாடிக்கொண்டு சென்றதால் நேரம் போனதே தெரியவில்லை. அனைவரும் பகவான் சீரடி நாதனை கண்குளிர தரிசனம் செய்து திருப்தியுடன் வெளியே வந்தோம்.
வெளியே வந்ததும் தான் தெரிந்தது. குருவிடம் வாதம் செய்து கொண்டுவந்த பெண்மணியைக் காணவில்லை. எனவே அனைவரையும் ஓரிடத்தில் அமரச்செய்துவிட்டு, குரு அவர்கள் மீண்டும் உள்ளே சென்று அவரை தேடி கண்டுபிடித்து ஒரு மணி நேரம் கழித்து அழைத்து வந்தார்.
காணாமல் போனவர் மீண்டும் வந்துவிட்டதால் அனைவரும் அவரையே பார்த்து பேசிக்கொண்டி ருந்ததால், குருவை ஒருவரும் கவனிக்கவில்லை. பாபாவின் தரிசனத்திற்கு ஒரு காலை இழுத்து இழுத்துச் சென்றவர், தரிசனம் முடிந்து வெளியே வரும்போது இரண்டு கால்களாலும் நன்றாக நடந்து வந்ததை நான் மட்டும் கவனித்தேன். ஆனால் ஒருவரைக் காணவில்லை என்ற பரபரப்பில் உடனே நான் அதை குருவிடம் கேட்கவில்லை.
குருவும், காணாமல் போனவரும் வந்தவிட்டதால் அனைவரும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்த தால் நான் உட்பட குருவின் கால்வலி பற்றி அவரிடம் யாரும் கேட்கவில்லை.
பேசிக்கொண்டே அனைவரும் தங்குமிடம் வந்து சேர்ந்தோம்.
மறுநாள் அதிகாலையில் அனைவரும் நாசிக் திரையகம்பேஸ்வரர் தரிசனத்திற்கு புறப்படும் போது குரு அவர்கள் பேரூந்தில் எப்பொழுதும் போல் நின்று கொண்டே சத்சங்கம் செய்துகொண்டு வந்தார்.
பேரூந்து நாசிக்கை அடைந்தபோது தான் அந்த அம்மா சாய்ராம் உங்கள் கால்கள் சரியாகிவிட்டதா என்ன? நன்றாக நடக்கின்றீர்களே என்று கேட்டார். அதற்கு குரு, ஆமாம், நேற்று மருத்துவரைப் பார்த்து வந்தேன் அல்லவா? ஆகையால் குணமாகிவிட்டது என்றார்.
அதற்கு அந்தப் பெண்மணி, ஏன் சாய்ராம், மருத்துவரிடம் என்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியிருந்தேன் அல்லவா? ஏன் என்னை விட்டுச் சென்றீர்கள் என்று குருவிடம் சற்று கோபத்தோடு கேட்க,
குருவும், சரி, நாளை காலையில் கூட்டி செல்கிறேன் என்று கூறினார்.
மறுநாள் காலையில் மீண்டும் சாயிநாதரின் தரிசனத்திற்கு புறப்படும் போது, அந்த பெண்மணி, குருவிடம் சாய்ராம் தரிசனம் முடித்ததும் அப்படியே மருத்துவரிடம் செல்லலாமா? என்று கேட்க, குருவோ சிரித்துக் கொண்டே, மருத்துவரே சாயி தானம்மா, பாபாவை விட வேறு பெரிய மருத்துவர் இந்த உலகத்தில் உண்டா என்ன? என்று கேட்க,
அதற்கு அந்தப் பெண்மணி, அப்படியானால் உங்களுக்கு மட்டும் பாபாவைப் பார்த்ததும் குணமாகிவிட்டது. எனக்கும்தான் பல ஆண்டுகளாக முழங்கால் வலி இருக்கின்றது.எனக்கு ஏன் குணமாகவில்லை என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு குரு அவர்கள், எனக்கு பாபாவின் மேல் மட்டும் நம்பிக்கை. உங்களுக்கு பாபாவைத் தவிர மற்ற அனைத்தின் மீதும் நம்பிக்கை. நான் பேசுவது உங்கள் அறிவிற்கு ஒத்துவராதது போல் தோன்றும். உண்மைதான். ஞானிகள் கூறும் இறைநிலை என்பது மனித அறிவிற்கு எட்டாதது. அதை அறியும் அளவிற்கு நமக்கு ஞானமில்லை. எனவே அதை எண்ணி குழப்பமடையத் தேவையில்லை.
வாழ்க்கையை எளிமையாகப் பாருங்கள். உங்களது வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து சம்பவங்களுக்கும் சாயிநாதனே பொறுப்பு என்ற சரணாகதி வந்துவிட்டால் அவரைத்தவிர வேறு ஒருவரிடம் உங்கள் மனம் எப்படிப் போகும். அப்படியே போனால் அது சரணாகதியாகுமா?
எனக்கு கடந்த ஒரு மாத காலமாக ஏற்பட்டிருக்கும் மூட்டுவலியை, நான் பரிபூரணமாக நம்பும் என் இறைவனான சாயி என் கர்மாவின் பொருட்டு எனக்கு கொடுத்திருக்கின்றார். எல்லா காரியங்களுக்கும் ஒரு காரணம் இருக்கும். எனது காரியத்திற்குண்டான காரணத்தை என் இறைவனான சாயியே அறிவார். என் கர்மவினை நீங்கும்போது அதை அவரே நீக்குவார் என்பது எனது பரிபூரண நம்பிக்கை. அவர் அதை நீக்கும்வரை நான் பொறுமையாக இருக்க வேண்டும்.
சாதாரண அரிசி உண்ணும் அளவிற்கு சோறாக வேண்டும் என்றால் பதினைந்து நிமிடம் வேகவைக்க வேண்டும். பசிக்கிறதே என்று அவசரப்பட்டு பத்து நிமிடத்தில் இறக்கி உண்டுவிட்டால் அப்போதைக்கு பசி ஆறிவிடும். ஆனால் அடுத்த மூன்று மணிநேரத்தில் சரியாக செரிக்காமல் வயிற்றில் பிரச்சனை ஆரம்பித்து விடும். ஆகவே பொறுமை மிக அவசியம் என்று கூறினார்.
சாயி, கலியுகத்தின் கண்கண்ட தெய்வம். நமது பிரச்சனை எவ்வளவு பெரியதாக இருந்தாலும். சாயியின் முன்னால் நின்று, எள்ளவும் சந்தேகமின்றி அவரிடம், பரிபூரண சரணாகதி ஆகிவிட்டால், எவ்வளவு பெரிய பிரச்சனைகள் என்றாலும் ஒரு நொடியில் சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்துவிடும் என்பதே உண்மை.
லீலை: 13. சாயி வாங்கிய தட்சணை.
சில ஆண்டுகளுக்கு முன்பாக நாங்கள் குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எங்களது சொந்த கிராமத்திற்குச் சென்றிருந்தோம். நாங்கள் ஊருக்கு வந்ததைக் கேள்விப்பட்ட பக்கத்து ஊரைச்சேர்ந்த குருவின் சிஷ்யை ஒருவர் அவரது தாயாரிடம் அன்னதானத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தனுப்பியிருந்தார்கள்.
அவர்களது தாயார் எங்களது ஊரைச் சேர்ந்தவர். அவரும் பாபாவின் பக்தை. ஆனால் சற்று ஏழ்மை நிலையில் இருப்பவர். பணத்தை எடுத்துக் கொண்டு எங்களது வீட்டிற்கு வந்து பணத்தை குருவிடம் கொடுத்துவிட்டு, அவர்களது வீட்டிற்கு திரும்புகையில், நம் மகள் பாபாவின் அன்னதானத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கின்றாள். நாமும் பாபாவின் அன்னதானத்திற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கின்றார். ஆனால் நம்மிடம் அவ்வளவு பணம் இல்லை. தற்சமயம் ஐம்பது ரூபாய்தான் உள்ளது. அதை எப்படிக் கொடுப்பது. என்று தயங்கியவாறே அவர்களது வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள்.
மறுநாள் அதிகாலை மூன்று மணியிருக்கும்.கடுமையான மழை பெய்து கொண்டிருக்க, அவர்களது வீட்டின் கதவு தட்டப்பட்டிருக்கின்றது.
மின்சாரம் வேறு இல்லை. வீட்டில் அந்த அம்மா மட்டும்தான். இந்நேரத்தில் யாராக இருக்கும் என்றவாறே கை விளக்கை எடுத்துக் கொண்டு கதவைத் திறந்தால் வாசலில் நீண்ட அங்கியும் தலையில் தலைப்பாகையும் அணிந்த இஸ்லாமியப் பெரியவர் ஒருவர் மழையில் நனைந்தவாறு நின்றிருக்கின்றார்.
இவர் கைவிளக்கை அவரின் முகத்தில் அடித்து என்னவேண்டும் என்று கேட்க, அவரோ, பக்கத்தில் உள்ள ஒரு ஊரின் பெயரைச் சொல்லி, அங்கிருந்து வருகின்றேன். பசிக்கின்றது. ஐம்பது ரூபாய் இருந்தால் கொடுங்களேன் என்று கேட்க, இவரோ, சற்று பொறுங்கள் என்று வீட்டிற்கு உள்ளே ஓடி இருட்டில் கைப்பையை தேடி ஐம்பது ரூபாயை எடுத்துவந்து பார்த்தால் வாசலில் அந்த மனிதரைக் காணோம்.
மழை விட்டிருக்க, அவர் கைவிளக்கை அடித்தபடி தெருமுழுக்க தேட எங்கேயும் அவரைக் காணவில்லை.என்ன அதிசயம். அந்த அம்மா ஐம்பது ரூபாயை தன் கைகளிலேயே இறுக்கிப் பிடித்தபடி பொழுது விடிந்ததும் எங்கள் வீட்டிற்கு ஓடிவந்தார்கள்.
வந்தவர்கள், குருவைப் பார்த்ததும், இரவு நடந்ததை கூறி, என்னிடம் ஐம்பது ரூபாய் தான் இருக்கின்றது என்று மனதிற்குள் தான் நினைத்தேன் சாய்ராம். ஆனால் என்ன அதிசயம் வந்தவர் பாபாவைப் போல் உடையணிந்திருந்தார். என்னிடம் பசிக்கிறது ஐம்பது ரூபாய் கொடு என்று கேட்டார் சாய்ராம். எடுத்து வருவதற்குள் மாயமாய் மறைந்து விட்டார். அப்படியானால் பாபாவே என் வீட்டிற்கு வந்துவிட்டாரா சாய்ராம். என்று உணர்ச்சிவசப்பட்டவராக
தான் கைகளில் வைத்திருந்த ஐம்பது ரூபாயை குருவிடம் கொடுத்து அன்னதானத்திற்கு என் பங்கை கொடுத்துவிட்டேன். பாபா எனது ஐம்பது ரூபாயை அன்னதானத்திற்கு ஏற்றுக்கொண்டார் என்று ஆனந்தமாக கூறிச் சென்றார்கள்.
அடுத்த மாதம் நமது சாய் தியானாலயா பிரார்த்தனை மையத்தில் "சாயி மகராஜ் குருவைதேடி" ஆன்மீக மாத இதழ் ஆரம்பிக்கப்பட்ட லீலையை கூறுகின்றேன்.
தொடரும்.