தகுதிக்கு மீறியதை வேண்டாதீர்கள்!
தகுதிக்கு மீறியதை வேண்டாதீர்கள்!
யாருக்குமே தகுதிக்கு மீறிய ஆசை இருக்கக் கூடாது. அப்படி ஆசை வந்துவிட்டால், தகுதியை வளர்த்துக் கொண்ட பிறகே ஆசை கொள்ள வேண்டும். அளவுக்கு மீறிய எதுவுமே நஞ்சுதான்.
ஒரு நாட்டின் ராஜா தினமும், ரோஜா மெத்தையில் படுத்து உறங்கி சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அந்த ரோஜா மெத்தையை அலங்கரிக்கிற வேலையை வேலைக்காரன் ஒருவன் செய்து வந்தான். அவனுக்கு ஒரு ஆசை, நாம் எப்படியாவது இந்த மெத்தையில் படுத்து தூங்க வேண்டும் என்று நினைத்தான்.
அப்படியே ஒருநாள் அந்த ரோஜா மெத்தையில் படுத்து உறங்கியும் விட்டான். அங்கே திடீரென வந்த ராஜா அவன் தனது மெத்தையில் படுத்துறங்குவதைப் பார்த்து விட்டார். உடனே காவலாளரை அழைத்து, அந்த வேலைக்காரனை சவுக்கால் அடிக்கக் கட்டளை இட்டார். ஆனால் சவுக்கடி வாங்கிய அவன் வாய்விட்டு சிரித்தான்.
அதைக் கண்டு ஆச்சரியப்பட்ட ராஜா, ஏன் சிரிக்கிறாய் எனக் கேட்டான். அதற்கு அந்த வேலைக்காரன் என்னுடைய தகுதிக்கு தகுந்தபடி வாழக் கற்றுக்கொள்ளாமல், ரோஜா மெத்தையில் ஒரே ஒருநாள் படுத்துவிட்டேன். நான் ஒருநாள் படுத்ததற்கே இவ்வளவு அடி கிடைத்தால் தினந்தோறும் இந்த மெத்தையில் படுக்கிற உங்களுக்கு எவ்வளவு அடி கிடைக்குமோ! அதை எண்ணிதான் சிரித்தேன் என்றானாம்.
1915-ம் ஆண்டில் அப்துல்காதர் என்ற பக்தர் பாபாவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அதனால் அவர் எப்போதும் பாபாவின் சேவையிலேயே மூழ்கிப் போய், ஷீர்டியிலேயே தங்கி பாபாவிற்கு தொண்டு செய்து கொண்டிருந்தார்.
ஒருநாள் அவர் பாபாவிடம் சென்று, “பாபா ! நான் எப்பொழுதும் தங்களையே நினைத்து நினைத்து உருகி தொழுது கொண்டிருக்கி றேன்.தங்களுடைய சேவையிலேயே என்னுடைய வாழ்நாள் நேரம் முழுவதும் செலவழிக்கிறேன். அதற்கு ஈடாக உங்களுடைய சக்தியில் ஒரு பகுதியை எனக்களித்து என்னை மகானாக்க வேண்டும் பாபா!" என்று கெஞ்சினார்.
பாபா சிரித்துக் கொண்டே, "அப்துல்! அதற்கான பக்குவம் உனக்கு இன்னும் வரவில்லை ! அதனால் பேராசைப்படுவதை நிறுத்து!" என்று கூறினார். ஆனாலும் அப்துல் காதர் விடுவதாக இல்லை.மீண்டும் மீண்டும் பாபாவை நச்சரித்தார்.
பாபாவும் ஒருமனதாக யோசித்தவராக, தன் கைகளை மூடிக் கொண்டு வானத்தை நோக்கி ஏதோ முணுமுணுத்தபடி, அப்துலை நோக்கி கைகளை வீசுவதுபோல் வீசினார். பாபா கையில் ஒன்றுமில்லை. ஆனால், அப்துல் மட்டும் "தனக்குள் ஏதோ ஒன்று இறங்கியதை உணர்ந்தார்."
அதுநாள் முதல் அப்துல்காதர் ஷீரடிக்கு வந்த ஜனங்களுக்கு நீதி போதனைகளை சொல்ல ஆரம்பித்து விட்டார். திடீர் திடீரென எல்லோரையும் கண்டபடி திட்டினார். கல்லால் அடிப்பதாக பயமுறுத்தினார்.தனக்குத்தானே எதை எதையோ பேசியும் உளறிக் கொண்டும், பித்துப் பிடித்தவரைப் போல் எல்லோரிடமும் நடந்து கொண்டார். அப்துலின் இந்த செய்கைகளால் ஒன்றரை மாதங்களாக சீரடி மக்கள் பெரிதும் அவதிப்படுவதை பாபா உணர்ந்தார்.
ஒருநாள் அப்துல் காதரை மசூதிக்குள் வரும்படி அழைத்த பாபா, தன் மூடிய கைகளை அவர்முன் நீட்டி, "லாவ் பாலே இடார்" என்று கூறியபடி தன் பக்கம் இழுத்தார்.இப்போதும் பாபாவின் கைகளில் ஒன்றும் இல்லை. ஆனால், ஏதோ ஒன்று தன்னிடமிருந்து வெளியேறுவதை அப்துல் உணர்ந்தார்.
அதன்பின் அப்துல்காதர் தன் இயல்பு நிலைக்கு திரும்பி சாதாரணமாகி விட்டார். "தன் தகுதிக்கு மீறிய வேண்டுதலை பாபாவிடம் வைத்தது மிகப்பெரிய தவறு" என்பதை அந்த நொடியில் உணர்ந்த அப்துல், பதினைந்து நாட்கள் கழித்து பூனாவுக்குச் சென்று ஒரு பீடிக்கடை வைத்து வாழ்க்கை நடத்தி பிழைத்துக் கொண்டார்.
*****