துன்பம் வருவது நல்லதுக்கே
துன்பம் வருவது நல்லதுக்கே
எப்படியோ துன்பம் வந்து விடுகிறது. நம் பிழை என்று இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு விதத்தில் துன்பம் வந்து நம்மை வேதனை செய்கிறது. துன்பம் வந்து விட்டால், தளர்ந்து போகிறோம். என்ன செய்யப் போகிறோம், இதில் இருந்து எப்படி மீள்வது என்று தவிக்கிறோம்.
துன்பமே இல்லாத வாழ்வு இருக்கக் கூடாதா என்று ஏங்குகிறோம். இன்பம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை , இந்த துன்பம் வரமால் இருந்தால் சரி என்று நினைக்கிறோம்.
நாமாவது இந்த உலக வாழ்க்கையில் ஈடுபட்டு, ஏதேதோ செய்கிறோம். தெரிந்தோ தெரியாமலோ தவறு நிகழ்ந்து விடலாம். தெரியாமல் யாரையாவது மனம் புண்பட பேசி இருப்போம். தெரிந்து அல்ல, தெரியாமல்.
ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். தெரியாமல் குடித்தால் நஞ்சு நம்மைக் கொல்லாதா. செய்த வினைக்கு மறு வினை வரும் தானே? அப்பர், சுந்தரர்,மணிவாசகர், அருணகிரிநாதர், இரமணர் போன்ற பெரியவர்களே படாத பாடு பட்டிருக்கிறார்கள்.
சிறு வயதில், சைவ சமயம் விட்டு, சமண சமயத்தில் சேர்ந்து விட்டார் அப்பர். அவருடைய தமக்கையார், . திலகவதியார் ஒரு நாள் சிவனிடம் முறையிட்டார்."என் தம்பி இப்படி போய் விட்டானே, அவனுக்கு நல்ல புத்தியை கொடுத்து நீ தான் அவனை நல் வழிப் படுத்த வேண்டும் " என்று மனம் உருகி வேண்டினார்.
சிவன், அவருடைய கனவில் வந்து சொன்னார், "உன் தம்பி முன்பே என்னை நோக்கி தவம் செய்திருக்கிறான். அவனுக்கு சூலை நோயை கொடுத்து யாம் அவனை நல்வழிப் படுத்துவோம்" என்று.
சிவன் நினைத்தால், நாவுக்கரசரை மனம் மாறச் செய்ய முடியாதா? தாங்க முடியாத வயிற்று வலியை கொடுத்தார். நாவுக்கரசர் வலி தாளாமல் துடித்தார். அந்த வலி வந்ததால், அவர் தன்னுடைய தமக்கையை நோக்கி வந்தார். பின் சைவ சமயத்தை வந்து அடைந்தார். தேவாரம் பாடினார். செய்தி அதுவல்ல.
துன்பம் வரும் போது, தோல்வி வரும் போது தவிக்கிறோம். துவள்கிறோம். அது எல்லாம் சரி. அந்த துன்பம் கூட, தோல்வி கூட ஏதோ ஒரு பெரிய நன்மைக்கு என்று நாம் நினைக்க வேண்டும்.
தோல்வியை கண்டு துவண்டு விடக் கூடாது. ஏதோ ஒரு மிகப் பெரிய வெற்றியைத் தரவே இறைவன் இந்த துன்பத்தை நமக்குத் தந்திருக்கிறான் என்று நினைக்க வேண்டும்.
சுடு மணலில் , செருப்பு இல்லாமல் நிற்க வைத்தார்கள் மணி வாசகரை.
தாள முடியாத வயிற்று வலியால் துன்பப்பட வைத்தார் நாவுக்கரசரை.
அந்தத் துன்பங்களுக்கு பின்னால், அவர்கள் பக்தி உலகுக்குத் தெரிந்தது.
ஏதோ ஒன்றை வெளிக் கொணரவே துன்பங்களும், தோல்விகளும், அவமானங்களும் வருகின்றன என்று நம்ப வேண்டும். அவற்றை வென்று முன்பு இருந்ததை விட பெரிய , உயரிய நிலைக்குப் போக வேண்டும்.
பரீட்சை வைத்துதானே மார்க் போட முடியும். மார்க் வாங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.ஐயோ பரீட்சை வந்து விட்டதே என்று அலறினால் என்ன அர்த்தம். கொஞ்சம் படித்தவுடன் , ஒரு பரீட்சை வரும். அதில் தேறினால், மேலும் படிக்கலாம், அதில் இன்னொரு பரீட்சை வரும். பரீட்சை கொஞ்சம் கடினம் தான். இருந்தாலும் படிக்க வேண்டும், எழுத வேண்டும்.
வாழ்க்கையும் அப்படித்தான். அப்பப்ப சோதனைகள் வரும்.சோதனை வரும் என்று எதிர் பார்த்து அதற்கு நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும்.
ஒன்றும் படிக்காமல் பரீட்சை எழுதப் போனால், நடுக்கம் வரத்தான் செய்யும்.
அடுத்து என்ன சோதனை வரும் என்று எண்ணிப் பாருங்கள். அதை எப்படி சமாளிப்பது என்று திட்டம் போடுங்கள்.
நம்மை தினமும் தயார் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
அப்படி செய்தால், எளிதாக தேர்ச்சி பெற முடியும். இல்லை என்றால், கையில் வினாத்தாளை வைத்துக் கொண்டு திரு திரு என்று முழிக்க வேண்டியதுதான்.
துன்பம் வரும் வேளையில் சிரிங்கனு சொல்வாங்க, சிரிக்க கூடாது.
துன்பம் வரும் வேளையில் சாயிராமா என்று சிந்திக்க வேண்டும்.
வாழ்க வளமுடன்.
*****