சாய் தியானாலயாவில் “சாய் லீலா”

சாய் தியானாலயாவில்    “சாய் லீலா”

சாய் தியானாலயாவில் 


“சாய் லீலா”


என்னுடைய வாழ்க்கையில் சாய்பாபா மற்றும் எனது குரு யோகி ஶ்ரீராம் அவர்கள் வந்த பிறகு நடந்த அற்புதங்கள் மற்றும் அதியங்களைப் பற்றி கூற விரும்புகிறேன்.


எனக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. என் திருமணத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு தான் சாய்பாபாவைப் பற்றி தெரிய வந்தது. சாய்பாபா எனது வாழ்வில் வந்த பிறகு தான் எனக்கு நிறைய நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தன. எனக்கு திருமணம் ஆன பின்பு சாய்பாபாவே நேரில் வந்தது போல் எனது குரு ஶ்ரீராம் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அதன்பின் எனக்கு கிடைத்த அதிசயங்கள், அற்புதங்கள், ஆசிர்வாதங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்.


எனக்குத் திருமணமாகி மூன்று மாதங்களுக்கு பின் நான் கர்ப்பம் தரித்தேன். கர்ப்பம் தரித்த நான்கு மாதத்தில் அந்த குழந்தை கருவிலேயே இறந்துவிட்டது. அச்சமயம் நான் மிகவும் மனமுடைந்து போனேன். அதன் பின் குரு ஶ்ரீராம் அவர்களைப் பற்றி எனக்குத் தெரிய ஆரம்பித்தது. முதன் முறையாக நான் அவரை நேரில் சந்தித்து பேசிய போது அவர் என்னிடம் சொன்ன விஷயம் என்னவென்றால், நீ இழந்ததைப் பற்றி கவலைப்படாதே, கூடிய விரைவில் சாய்பாபாவின் ஆசியுடன் உனக்கு அழகான மற்றும் அறிவான ஒரு குழந்தை கிடைக்கும் என்று கூறினார். அதுதான் எனக்கு அவரிடமிருந்து கிடைத்த முதல் ஆசிர்வாதம். சாய்பாபாவே நேரில் வந்து கூறியது போல் தோன்றியது. அன்றிலிருந்தே எனக்கு சாய்பாபா மற்றும் குரு இருவரும் வேறில்லை ஒருவர்தான் என்று அறிந்து கொண்டேன். அதன்பின் சாய்பாபாவை வணங்குவதைப் போலவே குருவையும் மனதளவில் வணங்க ஆரம்பித்துவிட்டேன்.


பிறகு ஒரு சில மாதங்களுக்கு பின்பு எனக்கு குரு ஶ்ரீராம் அவர்களுடன் சீரடி புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு எனக்கு நிகழ்ந்த அற்புதங்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. என் மொத்த வாழ்நாளிலும் எனக்கு மிகவும் பிடித்த சந்தோஷமான மறக்க முடியாத நாட்கள் என்றால் நான் சீரடி சென்றது தான். சீரடியில் ஒரு நாள் அதிகாலையில் பாபாவின் சன்னதிக்கு முன்பு அனைவரும் தியானம் செய்தோம். 


தியானம் முடிந்த பிறகு குரு அவர்கள் என்னை நோக்கி விரைவில் உனக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகின்றது என்று கூறினார். அந்த வார்த்தை பாபாவின் சன்னதி முன்பு கிடைத்ததே மிகப்பெரிய ஆசிர்வாதமாக எனக்குத் தெரிந்தது. ஏனென்றால் நான் சீரடி செல்லும் முன்பு சாய்பாபாவிடம் கேட்டது ஒரேயொரு விஷயம் தான். அது என்னவென்றால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும். அந்த குழந்தை கருவில் இருக்கும் பொழுது உங்கள் சன்னதிக்கு வரவேண்டும் என்றும் என்னுடைய குழந்தை கருவில் இருக்கும் பொழுதே பாபாவின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டேன். அதே சமயம் குரு அவர்கள் அவ்வாறு கூறியதும் எனக்கு வார்த்தைகளே இல்லை கூறுவதற்கு. அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. இதில் மீண்டும் ஒரு ஆச்சரியம் அது என்னவென்றால், அன்று மாலையே எனக்கு அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தது. என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பின்பு புனித யாத்திரை மிகவும் சிறப்பாக முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் மருத்துவமனைக்குச் சென்று சோதித்துப் பார்த்தேன். மருத்துவர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று கூறினார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் பாபாவிடம் வேண்டியது போல் எனக்கு நடந்து விட்டது என்று மிகவும் ஆனந்தமாக இருந்தேன். அன்றிலிருந்து சாய்பாபாவை எனது குரு ஶ்ரீராம் அவர்களின் உருவத்தில் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். நான் முன்னமே சொன்னது போல் தான் சாய்பாபாவும் குருவும் எனக்கு வெவ்வேறு இல்லை இருவரும் ஒருவரே. அதன் பின்பு சாய்பாபாவாகிய குருவின் ஆசிரவாதத்தினால் நான் குழந்தையை பெற்றெடுத்தேன். இவ்வாறாக எனது வாழ்வில் பல சந்தோஷமான விஷயங்கள் நிகழ ஆரம்பித்தது.


மேலும் என்னுடைய குணாதிசயம் என்னவென்றால் ஏதேனும் சின்ன பிரச்சினைகள் வந்தால் கூட நான் அதைப் பற்றியே அதிகமாக யோசித்து கொண்டிருப்பேன். அதிலிருந்து எப்படி வெளியில் வருவது என்று கூட எனக்குத் தெரியாது. எந்த ஒரு குழப்பமோ, பிரச்சனைகளோ வந்தால் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிடுவேன். ஆனால் என் வாழ்வில் நிகழும் குழப்பங்கள் மற்றும் பிரச்சினைகளை என்று என் குருவிடம் கூற ஆரம்பித்தேனோ அன்றிலிருந்து எனக்கு ஏற்படும் சின்ன சின்ன பிரச்சினைகள் காணாமல் போக ஆரம்பித்தது. என்னுடைய மனநிலையும் தெளிவு பெற ஆரம்பித்தது. ஏதாவது ஒரு கஷ்டமான நிலை வந்தாலும் அதை எவ்வாறு தனியாக கையாளுவது என்று கற்றுக்கொண்டேன். இவ்வாறு சாய்பாபாவாகிய குரு அவர்களால் எனது வாழ்க்கையில் நிறைய மனநிம்மதி தரக்கூடிய நிகழ்வுகளாக நடந்தன. அதன் பின் ஏதாவது ஒரு துன்பம் வந்தால் கூட அவை எனக்கு பெரியதாக தெரியவிவ்லை. ஏனென்றால் சாய்பாபாவாகிய குரு ஶ்ரீராம் அவர்கள் வாழ்க்கை வாழ்க்கை என்றால் என்ன, நாம் ஒவ்வொருவரும் எந்த நோக்கத்திற்காக இந்த பூமிக்கு வந்துள்ளோம் என்று எனக்கு புரிய வைத்தார். குரு அவர்கள் அறிவுரைப்படி என் வாழ்வின் பின்பற்ற ஆரம்பித்தேன். இச்சமயம் வரை எனது வாழ்க்கையை அமைதியாக பயணித்துக் கொண்டிருக்கிறேன். அனைவருக்கும் பொதுவான விஷயம் ஒன்று அது என்னவென்றால், நாம் ஏதேனும் ஒரு பிரச்சனைகளையோ அல்லது ஏதேனும் ஒரு காரியம் செய்வதற்கு முன்போ கடவுளிடம் வேண்டிக் கொள்வோம். ஆனால் அதற்கான பதிலை கடவுள் எப்படி கொடுப்பார், நாம் எடுக்கும் முடிவு சரியா, இல்லை தவறா என்று எப்படி தெரிந்து கொள்வது, நாமோ கடவுளிடம் கூறிவிட்டோம். ஆனால் அவரோ அதற்கான தீர்வினை எப்படி கொடுப்பார் என்று நமக்கு தெரியாது. ஆனால் என்னுடைய விஷயத்தில் அவ்வாறு இல்லை, ஏனென்றால் சாய்பாபாவாகிய குரு அவர்களிடம் இருந்து நான் கேட்பதற்கான தீர்வு உடனடியாக கிடைத்துவிடும். கடவுளிடம் நேரடியாக நான் எதைப்பற்றி கேட்கின்றேனோ அதற்கான பதிலை கொடுத்துவிடுவது போல் தோன்றும். அவர் கூறும் அறிவுரையின்படி பின்பற்றும் போது என்னுடைய அனைத்து காரியங்களும் மனநிம்மதியுடன் முடிகின்றன.


சாய்பாபாவாகிய குரு அவர்கள் எனது வாழ்வில் வந்த பிறகு தான் தெளிவாக யோசிக்கும் திறனும், எப்படி சிந்தித்து செயல்படுவது என்றும் அறிந்து கொண்டேன். எனது இப்பிறவிக்கான அர்த்தமே சாய்பாபாவாகிய குரு ஶ்ரீராம் அவர்கள் எனது வாழ்வில் நான் சந்தித்தது தான்.


ஓம் சாய்ராம்  -