சந்திரா பாயின் நினைவலைகள்
பாபா காலமாவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் சீரடி சென்று பாபாவை தரிசித்தேன். அன்றிலிருந்து நான் பூஜிக்கும் தெய்வம் அவர் ஒருவரே. ஒவ்வொரு நாளும் அவர் கைநிறைய உதியை எனக்கு கொடுத்து வந்தார். அதை நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றேன். அது மிகவும் மகிமையும், சக்தியும் வாய்ந்தது. பாபாவின் ஒரு பல் வைக்கப்பட்ட புனிதமான தாயத்தையும் நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றேன்.
அவரின் ஞாபகார்த்தமாக அவரே எனக்கு அளித்த பரிசு அது.
பாபாவிடம் எனக்கு மிகவும் ஆழ்ந்த பக்தி. அந்த பக்திக்கு சக்தி வாய்ந்த பலன் கிடைத்திருக்கின்றது. நான் 1898 ல் சீரடி சென்ற சமயத்தில் இப்போது உள்ளபடி மசூதி கட்டப்பட்டிருக்க வில்லை. சாதே வாடாவும் அப்போது கட்டப்பட்டிருக்க வில்லை.
இப்போதுள்ள ஸாதே வாடாவிற்கு அருகில் உள்ள வேப்பமரத்தின் அடியில் பாபா உட்கார்ந்திருந்தார். பாபா மசூதியில் நீரை ஊற்றி விளக்கு எரித்ததை நான் பார்த்திருக்கின்றேன். கந்தை துணிகளால் கட்டப்பட்ட பலகையின் மீது அவர் படுத்துக் கொண்டிருந்ததையும் நான் பார்த்திருக்கின்றேன். அவர் படுத்திருந்த பலகையின் நான்கு மூலையிலும் அகல் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும்.
அப்போதெல்லாம் பிரபலமானவர்கள் யாரும் சீரடிக்கு வரவில்லை. நான் அங்கே செல்லும் போதெல்லாம் கிராமத்தார் வீடு ஒன்றில் தங்குவேன். பாபா என்னிடம் காட்டிய அன்பு மிகவும் உயர்ந்தது. என் கணவர் திரு.போர்க்கர் பாபாவைப் போய் பார்த்ததில்லை. ஆயினும் அவரிடமும் பாபா அன்பைக் காட்டினார்.
1909 ஆம் ஆண்டு பண்டரீபுரத்தில் ஒரு பாலம் கட்டுவதற்காக, பொறியாளரான என் கணவர் நியமிக்கப்பட்டார். ஆதலால் அவர் பண்டரீபுரத்திலேயே வாசம் செய்ய நேரிட்டது. ஆகையால் நான் சீரடி சென்று பாபாவிற்கு சேவை செய்து வந்தேன்.
ஒரு நாள் பாபா என்னை அழைத்து, நீ உடனே பண்டரீபுரத்திற்கு புறப்படு, நானும் உனக்கு துணையாக வருவேன். நீ முதலில் புறப்படு என்றார். ஆகவே நான் உடனேயே துணைக்கு இருவரை அழைத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டேன். அங்கே என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. நான் அங்கே போய் சேர்ந்த போது என் கணவர் அங்கில்லை.
அவர் வேலையை ராஜினாமா செய்து விட்டு பம்பாய்க்கு சென்றுவிட்டதாக தெரிந்தது. நான் பெரும் கஷ்டத்திலும், துயரத்திலும் ஆழ்ந்தேன். என்னிடம் இருந்தது கொஞ்சம் பணம் மட்டுமே. அதை வைத்து நாங்கள் மூவரும் குருதுவாடி வரை மட்டுமே செல்ல முடியும்.
நாங்கள் மூவரும் குருதுவாடி சென்ற போது எங்கள் முன் ஒரு பக்கீர் வந்து நின்று, நீங்கள் எதைப் பற்றி கவலைப்படுகின்றீர்கள் என்று விசாரித்தார். நான் அவருக்கு பதில் கூறுவதை தவிர்த்து நடந்தேன். உடனே அவர் உங்கள் கணவர் தோண்டில் இருப்பதாகவும் உங்கள் துணையுடன் நீங்கள் தோண்டுக்கு போக வேண்டும் என்று கூறி என் கையில் தோண்டுக்கு மூன்று டிக்கெட்டுகளை தினித்து விட்டு கூட்டத்திற்குள் சென்று மறைந்தார்.
அந்த டிக்கெட்டுகளை பயன்படுத்தி நாங்கள் மூவரும் தோண்டுக்குச் செல்லும் இரயிலில் ஏறினோம். அதே நேரத்தில் தோண்டில் என் கணவர் அரைகுறை தூக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருக்க, அவர் முன் ஒரு பக்கீர் தோன்றி, ஏன் என் அன்னையை கவனிக்காமல் விட்டாய். அவள் உன்னைக் காண தோண்டுக்கு இரயிலில் வந்து கொண்டு இருக்கின்றாள் என்று வண்டியின் நம்பரையும் கூறி விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.
என் கணவர் திடுக்கிட்டு எழுந்து, என்னை கண்டிக்கும் இந்த பக்கிரி யார். என்றவாறே விழித்துப்பார்த்தார். ஆனால் பக்கீர் அங்கிருந்து மறைந்து விட்டிருந்தார். நாங்கள் தோண்டிற்கு சென்ற போது எங்களை வரவேற்க என் கணவர் இரயில் நிலையத்தில் காத்திருந்தார்.
என் கணவர் நான் அவரைத் தேடி வருவதாகக் கூறிய பக்கீரைப் பற்றி கூறி, நான் வழிபட்டுவரும் பாபாவின் புகைப்படத்தை காணவிரும்பினார். நான் போட்டோவை காண்பிக்க, அவரிடம் வந்த பக்கீர் பாபாவே என்று அடையாளம் கண்டு கொண்டு ஆச்சரியப்பட்டார்.
ஒரு குரு பூர்ணிமா தினம். நான் பூஜைப் பொருட்களுடன் பாபாவை வணங்கச் சென்றபோது பாபா, என்னிடம், எனக்கு பூஜைகள் வேண்டாம். கந்தோபா கோவிலில் இருக்கும் உபாசினிக்கு சென்று பூஜை செய் என்றார். பாபாவின் ஆணை எனக்கருதி உபாசினி மகராஜை நான் பூஜை செய்து வழிபட்டேன். மகராஜ் என்னை தடுக்கவில்லை. ஆனால் அதற்குப் பின் உபாசினி மகராஜ்க்கு நான் ஒருபோதும் பூஜை செய்தது இல்லை.
அவரிடம் எனக்குண்டானது ஒரு குருவினிடம் சிஷ்யைக்கு இருக்க வேண்டிய பாவமே! சீரடி மக்களைப் போன்று நான் அவரிடம் வெறுப்பைக் காட்டவில்லை. பாபா அடிக்கடி கூறுவார், நாம் யாரிடமும் வெறுப்பு காட்டக் கூடாது. பொறாமை,விரோதம், எதிர்ப்பு, சண்டைபோடும் மனோபாவம் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். என்று.
என்னிடமும், என் குடும்பத்தாரிடமும் பாபா காட்டிய பரிவு,1918 ல் அவர் இறப்பதற்கு முன்பு மட்டுமின்றி, அதன் பின்னரும் வெளியாயிற்று.
1918 ம் ஆண்டு தசராவிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தாம் உடலை விட்டபிறகும் என் நல்வாழ்வைப் பற்றியே எண்ணியிருந்தார். என்பதை நான் நன்றாக உணர்ந்தேன். " பாய், (பாபா என்னை அப்படித்தான் அழைப்பார்) நீ என்னை காண இனி இங்கே வந்து சிரமப்பட வேண்டாம். நீ எங்கு இருந்தாலும் உன்னுடனேயே நான் இருப்பேன் என அவர் என்னிடம் உறுதியளித்தார்.
அவருடைய அன்பு அத்தகையது. அவருடைய வாக்கு சத்தியமானது. பின்னர் நான் ஊர் திரும்பி விட்டேன். சரியாக தசரா சமயம், பாபா அடிக்கடி உங்களைப் பற்றி எல்லாம் கூறிக்கொண்டே இருக்கின்றார். இன்னும் சொற்ப காலங்கள் கூட அவர் உயிர் வாழமாட்டார் என்று எனக்கு திட்சித் செய்தி அனுப்பினார்.
அவர் உடலை விடுவதற்கு முன் சரியான சமயத்தில் நான் சீரடிக்குச் சென்றேன். கடைசி கணங்களில் அவருக்கு சிறிது நீர் அளித்தேன். பாக்யாவும் அப்படியே செய்தார். பாபா பாக்யாவின் மீது சாய்ந்தவாறே தன் உடலை விட்டார்.
அதற்குப்பிறகு 1919 ல் ஒருமுறையும், 1933 ல் ஒரு முறையும் சீரடிக்குச் சென்றேன். பாபா உறுதியளித்தது போல், எப்போதும் என்னுடனே இருந்து எனக்கு துணை புரிந்து வருகின்றார்.
1921 ம் ஆண்டு முழுக்க முழுக்க பாபாவின் அனுக்கிரகத்தால் எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. 1918 ல் எனக்கு 48 வயதாகியிருந்தும் அதுவரை கருத்தரிக்காததால், எனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்ற ஏக்கம் இயற்கையாகவே எனக்குள் இருந்தது. சாதாரண மக்களும், மருத்துவர்களும் அந்த வயதிற்கு மேல் கருத்தரிப்பது சாத்தியமில்லை என அபிப்ராயப்பட்டனர். ஆனால் பாபா என் விருப்பத்தினை அறிவார்.
1918 ல் பாய்! உன் உள்ளத்தின் விருப்பம் என்ன? என என்னிடம் கேட்டார். அதற்கு நான், பாபா தாங்கள் யாவும் அறிவீர்கள். நான் சொல்வதற்கு என்ன இருக்கின்றது என்று பதிலளித்தேன்.
இந்திகழ்விற்குப் பின்பு, மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் என் மாதவிடாய் நின்றது. சில மாதங்கள் கழித்து டாக்டர் புரந்தரேயிடம் சாதாரண மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட போது, டாக்டர் புரந்தரே எனது வயிற்றில் ஒரு கட்டி தோன்றியிருப்பதாகவும், அதை அறுவைச் சிகிச்சை முலம் அகற்ற வேண்டும் என்றும் கூறினார்.
அதற்கு நான் மறுத்தேன். பத்து மாதங்கள் பொறுத்துப் பார்த்து விட்டு பிறகு முடிவு செய்கின்றேன் என்று கூறிவிட்டேன். என்னுடைய 51 வது வயதில், நீண்ட காலம் கருத்தரியாமல் இப்போது குழந்தை பிறக்க எந்த வாய்ப்பும் இல்லை என்று அவர் கருத்து தெரிவித்தார்.
ஆனால் சாயியின் திருவருள் அசாத்தியத்தையும் சாத்தியமாக்கும். பாபா மகா சமாதியடைந்து மூன்று ஆண்டுகள், இரண்டு நாட்களுக்குப் பிறகு நான் ஒரு ஆண் மகவைப் பெற்றேன். செம்பூரில் நிகழ்ந்த பிரசவத்திற்கு, வைத்தியரோ, நர்ஸோ, மருந்தோ எதுவும் கிடையாது.
பிரசவத்திற்கு முன் வழக்கமான பணிகளைச் செய்தேன். இரவு சுகப் பிரசவமாயிற்று. அப்போதும் அதற்கு முந்தின ஒன்பது மாதங்களும், எனக்கு உடல் ரீதியாக பல வித சிக்கல்கள் இருந்தது. அனைத்திற்கும் மருந்தாக தண்ணீரும், உதியையுமே எடுத்துக் கொண்டேன்.
என் கணவர் காலமான போதும் பாபவின் கருணை வெளிப்பட்டது. என் கணவரின் மரணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக பாபா என் கனவில் தோன்றி, அஞ்சாதே நான் ராமச்சந்திராவை அழைத்துச் செல்கின்றேன் என்று கூறினார். பாபா முதலில் என்னை அழைத்துச் செல்லுங்கள் என நான் வேண்டினேன்.
நீ செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது என்றும், உனக்கு விதிக்கப்பட்ட கடமையை நிறைவேற்ற உன் கணவரின் மறைவிற்குப் பின் வாழ நீ மனதை திடப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பாபா பதிலளித்தார். இக்கனவை நான் என் கணவரிடம் தெரிவித்தேன். என் கணவர் அதைப் பொருட்படுத்தவில்லை.
அது சாதுர்மாஸ்ய வித காலம். சரியாக இரண்டு மாதங்களுக்குப் பின் அவருக்கு உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு, உயிர் பிரியும் காலம் வந்தது. அப்போது என் கணவர் தன் ஆயுட் காலம் முடிவது தனக்கு தெரிவதாகவும், ஆனால் சாதுர்மாஸ்ய விரதம் முடிந்ததும் உயிர் துறக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். ஆனால் அதே சமயம் அவர் பூரணமாக நினைவிழந்தார்.
நான் பாபாவிடம் சாதுர்மாஸ்யம் முடியும் வரை அவரை விட்டு வைக்கும்படி பிரார்த்தனை செய்தேன். அடுத்த தினம் அவருக்கு நினைவு திரும்பியது. கை, கால்கள் சுவாதீனமடைந்தன. என் கணவர் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். சாதுர்மாஸ்யத்தின் எஞ்சிய ஏழு நாட்களும் நலமாகச் சென்றன.
அன்று இரவு அவர் தேனீர் அருந்திவிட்டு, பாபாவிற்கு ஆரத்தி செய்யும்படியும், விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்யும் படியும் கேட்டுக் கொண்டார். நானும் அவ்வாறே செய்தேன். இது இரவு முழுவதும் நீடித்தது. காலையில் மருத்துவர்கள் வந்து நம்பிக்கை அளித்தார்கள். இருப்பினும் இன்று அவர் இறந்து விடுவார் என்பதனை நான் நன்கு உணர்ந்தேன்.
நான் அவருக்கு பருக சிறிது கங்கை நீரை அளித்தேன். அதைப் பருகிவிட்டு, ஸ்ரீராம், ஸ்ரீராம் எனக்கூறிக் கொண்டே தன் பிராணனை விட்டார். அவரை பகவானின் திருவடிகளுக்கு அழைத்துச் செல்லும்படி, பாபாவிடமும், ஸ்ரீ கிருஷ்ணரிடமும் பிரார்த்தனை செய்தேன். இவ்வாறு பகவானையும், பாபாவையும் உச்சரித்துக் கொண்டே அவர் உயிர் நீத்தார். அவருக்கு அத்தகைய நல்ல கதி கிடைக்கச் செய்த பாபாவின் திருவருளை நான் கண்டேன்.
****