சாய் தியானாலயாவில் "சாயி லீலா"
சாய் தியானாலயாவில் சாயி லீலா என்ற தொடரின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சாயிபாபாவின் லீலைகளை பேச ஆரம்பித்தால் பேசிக் கொண்டே இருக்கலாம். (A series on the miracles of our beloved Shirdi Sai Baba)
அன்பிற்கினிய சாய் பக்தர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம். சாய் தியானாலயாவில் சாயி லீலா என்ற தொடரின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சாயிபாபாவின் லீலைகளை பேச ஆரம்பித்தால் பேசிக் கொண்டே இருக்கலாம்.
நான் உங்களிடம் பாபாவைப் பற்றி ஆயிரம் கதைகளை கூறலாம். ஆனால் அவர் உங்கள் வாழ்வில் வருகின்றார் என்றால், அவரே உங்களிடம் நேரடி அனுபவங்களை ஏற்படுத்திக் கொண்டு உங்களிடம் வருவார். இது நிதர்சனமான உண்மை. இதை ஒவ்வொரு சாய் பக்தரும் அவர்களின் வாழ்க்கையில் உணர்ந்திருப்பார்கள்.
கோடிக்ணகான சாயி பக்தர்களுக்கும் அவரவர்களுக்கென்று தனிதனியாக சாயி லீலைகளைப் பற்றி அனுபவங்கள் இருக்கும். அந்த அனுபவங்களை பேசினால் ஆயுள் போதாது. ஆயினும் அதுவே நமது பிறவித் துன்பம் போக்கும் கருவியல்லவா?
என் கதைகளை கூறுகின்றவருடைய, கேட்கின்றவர்களுடைய, எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி நம்மை வாழ்வின் லட்சியங்களை அடையச் செய்கின்றார் நம் சாயி நாதன். என்ற சத்சரித வரிகளுக்கேற்ப, எங்களது குரு ஸ்ரீராம் சாய் அவர்களால் நிறுவப்பட்ட "சாய் தியானாலயாவில்" நமது பகவான் சாயிநாதர் நடத்திய லீலா விநோதங்களை மாதாமாதம் இத்தொடரில் நீங்கள் படித்து மகிழலாம்.
கடந்த இருபது ஆண்டுகளாக மக்களுக்கு யோகா, தியானம் போன்றவற்றை கற்றுத் தந்து கொண்டிருந்த குருஜி அவர்களால் சென்னை அயனாவரத்தில் 2014 ஆம் ஆண்டு "சாய் தியானாலயா" ஆரம்பிக்கப்பட்டது.
அதன்பிறகு தியான மையத்தில் பாபாவின் பூஜை, ஆரத்தி, சத்சங்கம், அன்னதானம், சாயியின் புகழ் பரப்பும் மாத இதழ், போன்றவைகள் படிப்படியாக தொடங்கப்படுவதற்கு பாபா எப்படி லீலை புரிந்தார் என்பதையும், மன்றத்திற்கு வரும் பாபாவின் தொண்டர்களுக்கு நிகழ்ந்த பாபாவின் லீலைகளையும் தொகுத்து எழுதுவதற்கு அனுமதி அளித்த பகவான் ஸ்ரீ சாயி நாதருக்கும், எனது குரு ஸ்ரீராம் அவர்களுக்கும், எனது முதற்கண் நன்றியினை தெரிவித்து கொண்டு தொடங்குகின்றேன்.
லீலை: 1. இரட்டைக் குழந்தைகள்.
நமது சபைக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் சகோதரி சரண்யா ஞானமூர்த்தி அவர்கள். நமது சபையின் பல தூண்களில் அவரும் ஒருவர். அவரது வளைகாப்பு நிகழ்வு (அதுவும் சாயியின் லீலையே அந்தக் கதையை பின்னால் பார்ப்போம்) சென்னை வில்லிவாக்கத்தில் நடந்தது. அதில் குருஜி கலந்து கொண்ட போது, அவர்களது உறவினரான திருவண்ணாமலையைச் சேர்ந்த திரு. சீனிவாசன்- மகாலட்சுமி தம்பதியினரை குருஜியிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.
அவர்களைப் பார்த்ததும் குரு பாபாவிடம் இருந்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அவர்களும் எங்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் பாபாதான் எங்களுக்கு குழந்தை வரம் தர வேண்டும் என்று முறையிட்டனர்.
மருத்துவர்கள் யார் உங்களுக்கு குழந்தை இல்லை என்று சொல்வதற்கு, நிச்சயம் உங்களுக்கு குழந்தைச் செல்வம் உண்டு. பாபாவின் அருளால் அடுத்த ஆண்டு உங்களுக்கு குழந்தை பிறக்கும் என்று வாக்களித்தார்.
அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றனர் தம்பதிகள்.
ஒன்றும் செய்ய வேண்டாம் நம்பிக்கையுடன், பொறுமையாக இருங்கள். அதுவரை சாயி மகராஜ் குருவை தேடி என்ற ஆன்மீக மாத இதழை பத்து புத்தங்கள் வாங்கி பக்தர்களுக்கு வழங்குங்கள். என்றார் குரு.
பல மருத்துவ சோதனைகளுக்குப் பின் உங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கைவிட்டபோதும், நமது பகவான் சாயிநாதரை சரணடைந்தால் கிட்டாது போகுமா என்ன? கர்ம வினைகள் நீங்கியவர்களே சாயி நாதனை வணங்குகின்றார்கள். அப்பேற்பட்டவர்களே சாயிநாதனை பணிந்து தமக்கு தேவையானதை பெறுகின்றனர்.
தம்பதிகள் நமது இதழை மாதந்தோறும் பெற்று தாங்கள் வசிக்கும் திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு விநியோகித்து தங்களது கர்ம வினையின் பாதிப்பை குறைத்துக் கொண்டார்கள்.
இங்கே தான் சாயி தன் லீலையை ஆரம்பிக்கின்றார். மாதா மாதம் வாசகர்களுக்குச் செல்ல வேண்டிய புத்தகங்களை குருவே பேக்கிங் செய்து அனுப்புவது வழக்கம். அந்த மாதம் தம்பதிகளுக்குச் செல்ல வேண்டிய பத்து புத்தகங்களை அவரே பேக்கிங் செய்து அனுப்புகின்றார்.
பத்து புத்தகங்கள் அரை கிலோ வரும். அதற்கு தபால் செலவு 20 ரூபாய். அரை கிலோவிற்கு மேலே சென்று விட்டால் செலவு ரூ.40 ஆகிவிடும். எனவே கவனமாக 10 புத்தகங்களை மட்டுமே பேக்கிங் செய்து அனுப்புவது வழக்கம்.
அந்த மாதம் தம்பதிகளுக்கு புத்தகம் போய் சேர்ந்து விட்டது. சகோதரி மகாலட்சுமி அவர்கள் பார்சலைப் பிரித்துப்பார்க்க அதில் 11 புத்தகங்கள் இருந்ததும், எப்போதும் 10 புத்தகங்கள் தானே அனுப்புவார்கள். இந்த மாதம் 11 புத்தகங்கள் அனுப்பியுள்ளார்களே என்று சந்தேகப்பட்டு, சகோதரி சரண்யாவிடம் தொலைபேசியில் சாய்ராம் அண்ணாவிடம் எத்தனை புத்தகங்கள் அனுப்பினீர்கள் என்று கேட்டுச் சொல்லவும் என்று கூற சரண்யாவும் குருவிடம் கேட்க, அவரோ 10 புத்தகம்தான் அனுப்பியதாக கூறி 10 புத்தகத்திற்குமேல் 1 புத்தகம் கூட அனுப்பினாலும் தபால் கட்டணம் அதிகமாகிவிடும் என்று விளக்கிக் கூறியிருக்கின்றார்கள்
உடனே சகோதரி மகாலட்சுமி அவர்கள்
11 புத்தகங்களையும் எண்ணுவதற்கு வசதியாக விரித்து வைத்து புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப்பில் சரண்யா அவர்களுக்கு அனுப்பி, 11 புத்தகங்கள் இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள்.
புகைப்படத்தை சோதித்துப்பார்த்த சரண்யா 10 புத்தகத்திற்கு மேல் அனுப்பவில்லை என்று சாய்ராம் நம்பிக்கையாகச் சொல்கிறார்.எனவே, மீண்டும் ஒரு முறை எண்ணிப்பார்க்கச் சொல்ல, மகாலட்சுமியும் சரி என்று மீண்டும் ஒரு முறை எண்ண அப்போதுதான் பாபாவின் லீலை வெளிப்பட்டிருக்கின்றது.
இப்போது அதில் 12 புத்தகம் இருப்பதை கண்ட மகாலட்சுமி வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். மீண்டும் சரண்யாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதட்டமாக, இப்போது 12 புத்தகம் இருப்பதாகச் சொல்ல, சரண்யா குருவிடம் செய்தியை கூற, அவரோ சட்டென்று இது சாயிநாதரின் லீலை என்பதைப் புரிந்து கொண்டு, உணர்ச்சிவசப்பட வேண்டாம். மகாலட்சுமிக்கு, பாபா இரட்டைக் குழந்தைகளை கொடுக்கப் போகின்றார். அதற்காகத்தான் இரண்டு புத்தகங்களை அதிகமாக்கி கொடுத்திருக்கின்றார் என்று விளக்கினார்.
பொங்கிப் பாயும் நதியும் பொய்துப் போகலாம், வான் மழையும் கூட பொய்த்துப் போகலாம் சாயியின் வாக்கு பொய்யாகுமா? விரைவிலேயே
சகோதரி மகாலட்சுமி சீனுவாசன் பாபாவின் கருணையினால் கருவுற்றார்கள். அவர்களுக்கு எப்போது குழந்தை பிறந்தது. அது, ஒரு குழந்தையா, இரட்டைக் குழந்தையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் சகோதரி சரண்யா ஞானமூர்த்தியின் அனுபவங்களை தெரிந்து கொண்டால் தான் முடியும்.
சரண்யா அவர்கள் சிறுவயது முதலே பாபாவின் பக்தை. பாபாவின் அருளினாலே திருமணம் நடைபெற்றது. குழந்தை பாக்கியம் சற்றே தள்ளிப்போனதால் குருவின் மூலம் பாபாவிடம் பிரார்த்தனை வைக்கப்பட்டது. இருப்பினும் காலம் கடந்தும் குழந்தை பாக்கியம் கிட்டாததினால் சகோதரி மனவருத்தத்தில் இருந்தார்.
அந்த சமயத்தில் சாய் தியானாலயாவின் சார்பாக
குருவின் தலைமையில் மன்ற உறுப்பினர்கள் 40 பேர் இலவசமாக சீரடி யாத்திரை சென்றோம். அதில் சரண்யாவைத் தவிர்த்து மற்ற அனைவரும் புறப்பட்டோம். அப்போது சரண்யா அவர்கள் குருவிடம் என்னை மட்டும் ஏன் விட்டுச் செல்கின்றீர்கள் அண்ணா என்று உரிமையுடன் கேட்க, அதற்கு குருஜி அவர்கள், சாயியின் அருளால் உனக்கு ஒரு குழந்தை பிறந்து அதற்கு ஒரு வயது பூர்த்தியாகும் போதுதான் உன்னை அழைத்துச் செல்வேன் என்று கூற அவளும் அமைதியானாள்.
சீரடி சென்று வந்ததும் குரு சென்னைக்குள் ஒரு நாள், சித்தர்களின் சீவசமாதி சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்தார். அது ஒரு சித்திரை மாதம். கடும் வெய்யிலில் பயணம் ஆரம்பம் ஆனது. கடைசி நேரத்தில் ஒரு பயணி வராமல் போனதால், எனக்கு உடனே சகோதரி சரண்யா ஞாபத்திற்கு வந்தார். உடனே அவரை தொடர்பு கொண்டு விபரத்தைச் கூற, அவரும் ஒப்புக் கொண்டு எங்களுடன் சீவசமாதி தரிசனத்திற்கு புறப்பட்டார். பல தலங்களை தரிசித்துவிட்டு ஞாயிறு கிராமம் என்ற சூரியன் தலத்திற்குச் சென்றோம்.
குருவும், ஒரு சிலரும் ஆலயத்தின் உள்ளே ஓர் ஓரமாக அமர்ந்திருக்கின்றோம். பக்தர்கள் ஆலயத்திற்குள் சென்று தரிசனம் செய்து விட்டு வெளியே வருகின்றார்கள். அப்போது குரு, அர்ச்சனைத் தட்டுடன் வந்த ஓர் அம்மாவை அருகே அழைத்து அவரிடம் இருந்த தட்டை வாங்கி அதிலிருந்த தேங்காயை எடுத்து உடைத்து அதை சரண்யாவிடம் கொடுத்து சாப்பிடுமாறு கொடுத்து கண்டிப்பாக உனக்கு குழந்தை வரம் உண்டு கவலைப்படாதே! என்று கூறினார்.
அடுத்த ஒரு வருடத்திற்குள் அவள் அழகிய பெண்குழந்தையை பெற்றெடுத்து நட்சத்திரா என்று பெயரிட்டார்கள். அடுத்தமுறை நாங்கள் சீரடி யாத்திரை செல்லும்போது குழந்தைக்கு சரியாக ஒரு வயது பூர்த்தியாகி இருந்தது.
அன்று தான் நாங்கள் சரண்யாவின் குடும்பத்துடன் 60 பேர் கொண்ட குழுவாக சீரடி செல்கின்றோம். அனைவரும் சாய் அப்பாவை பார்க்கப் போகின்ற ஆர்வத்தில் ஆனந்தமாக பயணப்பட்டோம்.இரண்டாம் நாள் அதிகால 4 மணி இருக்கும். இரயிலில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.
சரண்யா தன்னுடைய பெட்டியில் இருந்து ஓடி வந்து குருஜியிடம், அண்ணா ஒரு சந்தோசமான செய்தி, திருவண்ணாமலை மகாலட்சுமிக்கு குழந்தை பிறந்திருக்கின்றது. அதுவும் நீங்கள் கூறியது போல் இரட்டைக் குழந்தை. என்றாள் சந்தோசமாக.
-லீலைகள் தொடரும்.