சாய் தியானாலயாவில் “ சாயி லீலா”

சாய் தியானாலயாவில் “ சாயி லீலா”

சாய் தியானாலயாவில் “ சாயி லீலா”

ஒருமுறை சகோதரி புவனா என்பவர் எங்களது சாய் தியானாலயா ஆத்ம ஞான பீடத்திற்கு கல்பனா என்ற சகோதரியை கூட்டிவந்தார். உள்ளே நுழைந்ததும் கூடத்தில் வைக்கப்பட்டு இருந்த எட்டடி உயர சாய்பாபாவின் படத்தைப் பார்த்து உணர்ச்சிவயப்பட்டு வியந்து நின்றுவிட்டார். 

அவரை ஆசுவாசப்படுத்தி சகோதரி புவனா அவர்கள் உள்ளே அழைத்து வந்து குருவிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அவர்களை அன்போடு வரவேற்ற குரு அவர்கள் ஏன் பாபாவைப் பார்த்து வியந்து நின்றுவிட்டீர்கள் என்று கேள்வி கேட்க, 

அதற்கு அந்த சகோதரி, நான் இதற்குமுன் இவ்வளவு பெரிய படத்தில் பாபாவை பார்த்தில்லை. தவிர கடந்த ஐந்து ஆண்டுகளாக என் வாழ்க்கையில் நடைபெற்ற அனைத்து சிக்கல்களில் இருந்தும் என் குடும்பத்தை காப்பாற்றி மீட்டுக் கொண்டுவந்தவர் இவர்தான் என்று யாரோ என் கன்னத்தில் அறைந்து சொன்னதுபோல் இருந்தது. அதனால் சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். ஆனால் இப்போது நான் இவரை பரிபூரணமாக நம்புகிறேன் என்றாள் கண்ணீர் மல்க.

தொடர்ந்து அவள் தன் கதையை குருவிடம் கூறினாள், கடந்த ஐந்து ஆண்டுகளாக என் குடும்பத்தில் அடுத்தடுத்து ஏதாவது ஒரு பிரட்சனைகள் வந்து கொண்டே இருந்தது. அவை எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் தீர்ந்து கொண்டும் வந்தது. ஆனால் அவைகளில் எல்லாம் யாரோ ஒருவரால் எப்படியோ சாய் பாபா என்ற பெயர் எங்கள் மனதிற்குள் வந்துவிடும்

எனக்கோ, எங்கள் குடும்பத்திற்கோ பாபா என்றால் யாரென்று தெரியாது. ஆனால் எப்படியோ பிரட்சனை தீர்ந்தால் சரி என்று அந்த நிகழ்விற்குப் பின் சாய்பாபா என்ற பெயரை மறந்து விடுவோம். ஆனால் கடந்த சில மாதங்களாக எங்கள் வீட்டில் மீண்டும் ஒரு பிரட்சனை. 

மிகவும் மனக் கலக்கத்தில் இருந்த என்னை, எங்கள் வீட்டிற்கு புதிதாய் குடிவந்த இந்த சகோதரிதான் ஏன் ஒரு மாதிரி இருக்கின்றீர்கள், மனம் கஷ்டமாக இருந்தால் என்னுடன் வாருங்கள் தியான மையத்திற்கு செல்வோம். அங்கு எங்களது குரு ஸ்ரீராம் அவர்கள் தியானம் கற்றுத் தந்து நம் பிரட்சனைகளுக்கும் வழி காட்டுவார். என்று அழைக்க, நானும் ஏதாவது நல்ல காலம் பிறக்காதா என்ற ஏக்கத்தில் தான் இங்கு வந்தேன்.

ஆனால் இங்கு வந்த பின்புதான் இது பாபா சென்டர் என்பதும், இவ்வளவு பெரிய பாபா இருப்பதும் தெரிந்தது. நம் வாழ்க்கையில் ஏன் இவர் அடிக்கடி வருகிறார். இவர் யார் என்று புரியாமல் ஆச்சர்யத்தில் அப்படியே வியந்து நின்றுவிட்டேன் என்றார்.

தொடர்ந்து, தன் கதையை குருவிடம் கூறினார் அந்த சகோதரி. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது ஆறு வயது மகளுக்கு திடீரென உடல்நலமில்லாது போய் உடனடியாக தனியார் மருத்துவ மனையில் சேர்த்திருக்கின்றார்கள்.மருத்துவர்கள் அனைத்து சோதனைகளையும் செய்து பார்த்து, குழந்தைக்கு யூரின் இன்பெக்ஷன், யூரின் வரும் பாதையில் அடைப்பு இருக்கிறது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பயமுறுத்தி விட்டார்களாம். 

மிகுந்த மனவேதனையில் இருந்த சமயம் அவர்களது வீட்டில் குடியிருந்த ஒரு இஸ்லாமிய சகோதரி அவரிடம் விபரம் கேட்க, அவரும் அவரது குழந்தையின் பிரட்சனையைக்கூறி வருத்தப்பட்டிருக்கிறார்.

உடனே அந்த சகோதரி அவரை வீட்டிற்குள் அழைத்து அவர்களது பீரோவில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்துவந்து அவரிடம் கொடுத்து, இவரது பெயர் சாயிபாபா. இவரிடம் உங்களது பிரட்சனையை கூறுங்கள். வேறு ஒருவரையும் நம்பாதீர்கள். இவரை மட்டுமே நம்புங்கள். நன்மையே நடக்கும். என்று கூறி அறுதல்படுத்தியிருக்கிறார்.

அவரும் அந்தப்புகைப்படத்தை வீட்டிற்கு எடுத்துவந்து அவரது பீரோவில் ஒட்டி வைத்திருக்கின்றார். அவ்வப்போது ஞாபகம் வரும்போது  குழந்தைக்காக வேண்டிக் கொள்வதோடு சரி, மற்றபடி மறந்து விடுவாராம். அவர் ஏன்  பாபாவின் படத்தை பூஜை ரூமில் வைக்காமல் பீரோ கதவில் ஒட்டினார் என்றால், பாபாவின் படத்தை ஒரு இஸ்லாமிய சகோதரி கொடுத்ததால் அவர் இல்ஸாமிய கடவுளாக இருப்பாரோ என்ற சந்தேகத்தினால் தானாம்.  ஏனென்றால், அப்போது பாபாவை பற்றி எந்தக் கதையும் அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கிறது.

ஒரு சில நாட்களில் அவர்களது குழந்தை பழையபடி சரியாகிவிட்ட படியால் அவரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம். காலப்போக்கில் பீரோவில் ஒட்டி யிருந்த பாபா படமும் எங்கேயோ கீழே விழுந்து காணாமல் போயிருக்கிறது.

சில மாதங்கள் கழித்ததும் மீண்டும் அவர்களது குழந்தைக்கு அதே போன்று பிரட்சனை வரவும், அப்போதும் அதே இஸ்லாமிய சகோதரியின் ஆலோசனையின்படி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார்.

அங்கு குழந்தையை பரிசோதித்து விட்டு, ஏற்கனவே தனியார் மருத்துவ மனையில் கொடுத்திருந்த பரிசோதனை விபரத்தையும் மாறி, மாறிப் பார்த்த மருத்துவர், ஏம்மா, குழந்தைக்கு ஒன்னும் இல்லையேம்மா அவ நல்லாத்தானே இருக்கா. ஏன் இவ்வளவு டெஸ்ட் எடுத்தீங்க, யாரு உங்களை எடுக்கச் சொன்னது? தேவை இல்லாம பச்சை குழந்தையை சிரமப்படுத்தாதீங்க என்றவர், தொடர்ந்து, கொஞ்சம் சத்து கம்மியா இருக்கு, சத்துமாத்திரை மட்டும் எழுதித்தரேன். அத மட்டும் கொடுங்க நல்லாயிரும் என்றிருக்கிறார்.

அவர்களுக்கு, ஒரு புறம் மகிழ்ச்சியா கவும், மறுபுறம் சந்தேகமாகவும் இருந்திருக்கிறது. யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்று தெரியாமல் குழம்பியிருக்கிறார். பிறகு அவர்கள்  வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். பிறகு ஓரிரெண்டு நாட்களில் குழந்தையும் சகஜமாகியிருக்கிறாள்.

நடந்த சம்பவத்தையும், சாயிபாபாவையும் அப்போது அவர்கள் தொடர்புபடுத்திப் பார்க்கவில்லையாம். அத்தோடு அதை விட்டுவிட்டார்களாம். ஒரு வாரத்திற்குப் பின்பு, அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் அவர்களது இல்லத்திற்கு வந்திருக்கின்றார். அவர் கோவா, மும்பை, குஜராத் என்று மக்களை சுற்றுலா அழைத்துச் செல்பவர்.

அவர் எதார்த்தமாக, அடுத்தவாரம் செல்லும் மும்பை சுற்றுலாவிற்கு நான்கு நபர்கள் வரவில்லை. அவர்களுக்குப் பதில் நீங்கள் வருகின்றீர்களா என்று கேட்க, அவர்களது கணவரோ, வரலாம் என்று ஆசைதான். நீங்கள் திடீரென்று கேட்பதால் பணம் ஏற்பாடு செய்ய முடியாதே என்று கூற, அதற்கு நண்பரோ, நீங்கள் வந்தால் போதும். சுற்றுலா முடிந்து வந்த பின்பு பணம் கொடுத்தால் போதும் என்று கூட்டிச்சென்றிருக்கின்றார்.

சுற்றுலா குழுவினர் குஜராத், கோவா சென்றுவிட்டு மும்பை வரும் சமயம்  மும்பையில் தீவிரவாதிகள் தாஜ் ஓட்டலை தாக்கிய சம்பவம் நடந்திருக்கின்றது. சுற்றுலா ஏற்பாட்டாளர் சமயோசிதமாக மும்பை  சுற்றுலாவை தவிர்த்துவிட்டு நாசிக், சீரடி என்று திட்டத்தை மாற்றி அனைவரையும் பத்திரமாக சீரடிக்கு அழைத்துவந்துவிட்டனர்.

திடீரென பணய குழுவினர் சீரடிக்கு வந்ததால் குழுவில் உள்ள முக்கால்வாசிப்பேருக்கு பாபாவைப் பற்றி தெரியாமலே பாபாவை தரிசித்திருக்கின்றனர். அதில் நமது சகோதரியும் ஒருவர். பாபாவைப்பற்றி எதுவும் தெரியாமல், புண்ணியபூமி சீரடிக்குச் சென்று பகவான் சாயிநாதரை தரிசிக்கின்றோம் என்ற எண்ணமே சிறிதும் இல்லாமல், ஏதோ சாதாரணமாக ஆன்மீக சுற்றுலா செல்வதுபோன்று சென்று வந்திருக்கின்றனர்.

ஊருக்கு வந்த பின்பு இந்த கதையை  மாடியில் குடியிருக்கும் பாபாவின் போட்டோவை கொடுத்த இஸ்லாமிய சகோதரியிடம் கூற, அந்த சகோதரியோ, பல ஆண்டுகளாக நான் சாயிபாபாவின் பக்தை. ஒரு முறையேனும் நான் சீரடிக்குச்சென்று பாபாவை தரிசிக்கமாட்டோமா என்று தவம் இருக்கின்றேன். என்னுடைய மதமும், சூழ்நிலைகளும் அதற்கு தடையாய் இருக்கின்றன. பாபாவை பார்ப்பதற்கு எனக்கு இன்னும் கொடுத்து வைக்கவில்லை.

ஆனால் நீங்கள் சீரடிக்குச் சென்று வந்து விட்டீர்கள். இதுதான் பாபாவின் மகிமை. அவரை விடாது நம்புங்கள். இனி உங்கள் மகளுக்கு ஒரு குறையும் வராது. அவளது வாழ்க்கை மிகச்சிறப்பாக இருக்கும். அவளுக்கு சாயி துணையிருப்பார் என்று கூறியிருக்கின்றார்.

அந்த இஸ்லாமிய சகோதரி கூறியதைப்போன்று அதற்குப் பின்பு அவரது மகளுக்கு ஒரு குறையுமில்லாது ஆரோக்கியமாக  இருக்கின்றாளாம். ஆனால் தற்போது பிரட்சனை வேறுவடிவில் வந்திருக்கின்றதாம். 

அவளுடைய கணவர், தன்னுடைய நண்பரை நம்பி அவருடைய நிறுவனத்தில் தனது சேமிப்பு மொத்தத்தையும் முதலீடு செய்திருக்கின்றார். யாருடைய நேரமோ. நண்பர் மொத்த பணத்தையும் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டாராம்.

அவர்களின் ஒட்டுமொத்த சேமிப்பும் கைவிட்டுப் போனதில் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகி, மனவேதனையோடு வாழ்ந்து வந்தோம் அந்த சமயத்தில்தான் புவனா என்ற இந்த சகோதரி எங்கள் வீட்டு மாடிக்கு புதிதாக குடிவந்தார்கள்.
அப்போதுதான் நான் சோகமாகவே இருப்பதைக்கண்ட சகோதரி என்னை இங்கு கூட்டிவந்தாள். என்று தன் கதையை குருவிடம் கூறி முடித்தாள்.

குரு அவர்களுக்கு ஒன்றை தெளிவாக கூறினார். நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக்கொடுக்க நான் மந்திரவாதியோ, காவல்துறை அதிகாரியோ அல்ல.  மேலும் நீங்கள் பாபாவிற்கு பக்தை ஆகிவிட்டால் நீங்கள் இழந்த பணத்தை பாபா மீட்டுக் கொடுத்துவிடுவார் என்று கற்பனை செய்ய வேண்டாம். மாறாக பாபாவிடம் நீங்கள் காட்டும் பக்தி உண்மையாக இருந்தால், பாபா, உங்களுக்கு ஏற்படும் பிரட்சனைகளை தாங்கும் சக்தியையும், அதில் இருந்து சீக்கிரம் வெளியே வருவதற்குண்டான உறுதியையும் நிச்சயம் தருவார்.

தொடர்ந்து அவர் செய்வார் என்று உறுதியாகவும், நம்பிக்கையாகவும், பாபாவிடம் பக்தி செலுத்துங்கள், அவர் செய்யும் வரை பொறுமையாக இருங்கள். நிச்சயமாக நீங்கள் இழந்ததைவிட இரண்டுமடங்கு அதிகமாக உங்களுக்கு சாயி தருவார். என்று கூறி அவர்களுக்கு பாபா என்பவர் யார்? அவரை எப்படி அணுகுவது? தியானம் செய்வது எப்படி என்பதை எல்லாம் கூறி, மன நலத்திற்காகவும், உடல் நலத்திற்காகவும், யோகா, தியானம் ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்தார்.

அவர்களும் பாபாவின் மேல் பக்திபூண்டு குரு  அவர்கள் கூறியதன்படி வாழ்ந்ததோடல்லாமல் தன் குடும்பத்தினரையும் அழைத்து வந்து பாபாவிற்கு தன்னால் இயன்ற சேவையினை செய்து வந்தார்கள். அடுத்த இரண்டாவது மாதம் அவரது கணவருக்கு கேரளாவில் நல்ல வேலை கிடைத்து கைநிறைய சம்பளம் கிடைத்தது.

கேரளா சென்ற கணவர் ஒரு நாள் கேரள அரசின் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்க, அதில் அவருக்கு ஐந்து லட்சம் பரிசு கிடைத்தது. அவர்  நண்பரிடம் கொடுத்து ஏமாந்த தொகை இரண்டரை லட்சம். குரு சொன்னதைப் போன்று தான் இழந்ததைவிட இரண்டு மடங்கு தொகையை பாபா கொடுத்துவிட்டார் என்று மகிழ்ந்தார்.

அடுத்து குரு ஏற்பாடு செய்த சீரடி புனிதப் பயணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டு பாபாவிற்கு நன்றிகடன் செலுத்தினார். பாபாவின் மேல் உள்ள பக்தியை இறுகப்பற்றிக் கொண்டு வாழ்வில் மேன்மேலும் உயர்ந்து வருகின்றார் என்று சொல்லவும் வேண்டுமோ!

- தொடரும்