சாய் தியானாலயாவின் 11 வது புனித சீரடிப் பயணம்.
ஜெயந்தி ஸ்ரீராம்.
“சாய் தியானாலயா ஆத்ம ஞான பீடத்தின்” 11 வது சீரடிப் புனிதப் பயணம் பகவான் சாயிநாதரின் பேரருளுடன் மிகச்சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.
36 நபர்களுடன் 17.1.24 புதன் கிழமை சென்னையில் இருந்து புறப்பட்டு வியாழன் அன்று மதியம் 12 மணிக்கு, சீரடிக்குச் சென்றோம். அங்கு தங்கும் விடுதியை அடைந்து சிரமப்பரிகாரம் செய்து கொண்டு மதிய உணவை முடித்தோம்.
மதியம் 3 மணிக்கு பகவான் சாயிநாதரை கண்ணார கண்டு தரிசித்தோம். கூட்டம் இல்லாததால் அதிக நேரம் நின்று தரிசிக்க முடிந்தது. பின்பு சாயி அடியவர்களின் நினைவிடங்களுக்கும், அவர்களது இல்லங்களுக்கும் சென்று விட்டு இரவு உணவருந்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டோம்.
மறுநாள் காலையில் எங்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பேரூந்தில் நாசிக் சென்று சோதி லிங்கம் திரைகம்பேஸ்வரரை தரிசித்துவிட்டு, மதிய உணவு முடித்து மாலை கோதாவரி நதி, காலாராம், கோரா ராம், சீதா குகை, முக்திதாம் ஆகியவற்றை தரிசித்து இரவு சீரடி வந்து ஓய்வெடுத்துக்கொண்டோம்.
மறுநாள் அதிகாலை 6 மணிக்கெல்லாம் அனைவரும் சிவநேசன் சமாதி சென்றோம். அங்கு குரு ஸ்ரீராம் அவர்கள் சத்சங்கம் செய்து தியானப்பயிற்சி கொடுத்தார். காலை வேளையில் தியானம் செய்தது மிகவும் அற்புதமாக இருந்தது. தவத்தின்போது இரண்டு பைரவர்கள் வந்து ஆசீவதித்தது எங்களை ஆச்சர்யப்படுத்தியது.
பின்பு விடுதிக்குத் திரும்பி காலை உணவை முடித்துக்கொண்டு, ஆட்டோமூலம், கந்தோபா ஆலயம், பஞ்சமுக கணபதி, சகூரி உபாசினி மகராஜ் சமாதி, ரஹதா குசால்சந்த் இல்லம், வீர பத்ரா ஆலயம், கற்பக விருட்சம், ஆகியவற்றை தரிசித்து விடுதிக்கு வந்து மதிய உணவை முடித்துக்கொண்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டோம்.
பின்பு மாலையில் மீண்டும் சாயிநாதரை தரிசித்து, தேவையான பிரசாதப் பொருட்களை வாங்கிக் கொண்டு இரவு விடுதி திரும்பினோம். மறுநாள் காலையில் மீண்டும் சமாதி மந்திர் சென்று சாயிநாதரை தரிசித்துவிட்டு அன்று மதியம் 1 மணிக்குப் சிறப்பு பேரூந்து மூலம் புறப்பட்டு இரவு புனே வந்து அங்கிருந்து இரயிலில் மறுநாள் மாலை 4 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம்.
இப்பயணத்தில் பெங்களூரில் இருந்து மரியாதைக்குறிய சகோதரர், தொழிலதிபர் திரு. பிரசாத் சாய்ராம் அவர்களும் எங்களுடன் கலந்து கொண்டு புனிதப் பயணத்தை மேலும் சிறப்பித்தார். பாபாவின் அபிசேக தீர்த்தம், பிரசாதம், உதிப்பாக்கெட்டு களையும் பக்தர்களுக்கு விநியோகித்து, ஆனந்தப்படுத்தினார்.
சீரடியில் வசிக்கும் தமிழரான சுவாமிகள் திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் நமது குழுவினருக்கு தேவையான, பிஸ்கெட், பாபாவின் காலண்டர், கீ செயின், பேனா, உதி ஆகியவற்றை வழங்கி ஆசி வழங்கினார். உடல்நலமில்லாத போதும் எங்கள் குழுவினருக்காக சிரமப்பட்டு ஏற்பாடு செய்து அன்புடன் வழங்கினார். அவர் நீள் ஆயுள், நிறை செல்வம், வான்புகழ், மெய்ஞானம், ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ்க வளமுடன் என்று பகவான் சாயிநாதரிடம் பிரார்த்திக்கின்றோம்.
இப்புனிதப் பயணத்தை எந்தவித இடையூறும் இன்றி மிகச்சிறப்பாக திருப்தியுடன் நடத்திக்கொடுத்த பகவான் சாயிநாதருக்கும், எங்களது ஆத்மகுரு திரு. ஸ்ரீராம் அவர்களுக்கும் எங்களது சீரடி புனிதப் பயண பக்தர்கள் குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றியினை காணிக்கையாக்குகிறோம்.
குரு வாழ்க! குருவே துணை!