சாய் தியானாலயாவில் "சாயி லீலா"
சாய் தியானாலயாவில் "சாயி லீலா"
ஜெயந்தி ஸ்ரீராம்.
குருவினுடைய வாக்குப்படி, கர்மா எப்பொழுது தீர்ந்தது. எப்படி அன்னதானம் ஆரம்பிக்கப்பட்டது என்பதைப் பற்றி அடுத்த மாதம் எழுதுகிறேன்.
வெகுநாட்களாக நகரின் தொழில் அதிபர் ஒருவர் குருவிடம் நான் இடம், பொருள் அனைத்தும் தருகின்றேன். நீங்கள் அன்னதானம் செய்யுங்கள் என்று கூறிக்கொண்டே இருந்தார். அவரிடமும் குரு, எதை செய்தாலும் தொடர்ந்து செய்ய வேண்டும். நீங்கள் மட்டும் கொடுத்து, நான் செய்வது என்றால் ஏதாவது ஒரு காலகட்டத்தில் கண்டிப்பாக நின்றுவிடும். அதற்கென்று ஒரு காலம் வரும்போது பாபாவே ஆரம்பித்து வைப்பார் என்று கூறிவிட்டார்.
அதற்குண்டான காலமும் வந்தது. ஆம் குரு பாபாவின் புகழைப் பரப்பும் விதமாக ஒரு புத்தகம் ஆரம்பித்தார்.
(அதுவும் பாபாவாலேயே ஆரம்பிக்கப்பட்டது. அது எப்படி என்பது பற்றி பின்பு எழுதுகின்றேன்) அதுதான் நமது சாயி மகராஜ் குருவை தேடி என்ற மாத இதழ்.
இதழின் முதல் வெளியீட்டு விழாவில் வருகின்ற பக்தர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காக, உணவு தயாரித்து வழங்கும் ஒருவரிடம் நூறு பேருக்கு உணவு தயாரிக்கக் கூறியிருந்தார் குரு.
உணவு தயாரிப்பவர் நமது குருவிடம் யோகப் பயிற்சி பெற்ற திரு. செல்வராஜ் என்ற மாணவர். அவர் தன் குருவின் மீதுள்ள அன்பால் நூறு பேருக்கு பணம் வாங்கிக்கொண்டு அதற்குப் பதில் இருநூறு பேருக்குண்டான உணவு தயார் செய்து கொடுத்து விட்டார்.
முதல் இதழ் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. வந்திருந்த நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் உணவு அருந்தியும் இன்னும் நூறு பேருக்குண்டாண உணவு மிச்சமிருந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை. மதியம் மணி இரண்டை நெருக்கிக் கொண்டிருந்தது. மே மாத வெயிலும் கடுமையாக அனலை வீசிக்கொண்டிருந்தது.
மீதம் உள்ள உணவைப் பார்த்ததும் இந்த உணவை என்ன செய்வது. மணி வேறு இரண்டை கடந்து விட்டது. சாப்பிடும் நேரம் கடந்தபின்பு இதை யார் வாங்குவார்கள். நூறு பேருக்கு செய்யச் சொன்னால் நூறு பேருக்கு மட்டும் செய்ய வேண்டியதுதானே! இப்போது இந்த உணவை யாருக்கு கொடுப்பது. நாங்கள் இதற்கு முன்பு அன்னதானம் செய்து பழக்க மில்லையே என்றவாறே குரு அவர்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டார்.
பின்பு அவரே, சரி உணவை எடுத்துக் கொண்டு கீழே ரோட்டில் வையுங்கள். நான் பேப்பர் தட்டு வாங்கி வருகின்றேன். கேட்பவருக்கு கொடுப்போம் என்று கூறிவிட்டு தட்டு வாங்க கடைக்குச் சென்றார். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடைகள் விடுமுறையாதலால் தட்டு வாங்கிவர காலதாமதமாகி மணி மதியம் 2.30.ஆகிவிட்டது.
தட்டு வாங்கிவந்த குரு, யார் கேட்டாலும் உணவை கொடுத்து காலி செய்து விடுங்கள். உணவை விரயம் ஆக்கிவிடாதீர்கள் என்று கூறிவிட்டு மாடிக்குச் சென்று விட்டார்.
அப்போது நமது "சாய் தியானாலயா" அயனாவரம்- வில்லிவாக்கம் மெயின் ரோட்டில் ஒரு மாடியில் இயங்கிக் கொண்டிருந்தது.நாங்களும் நான்கு அண்டாக்களில் உணவை எடுத்துக் கொண்டு கீழே ரோட்டில் வைத்துக் கொண்டு நிற்கின்றோம். யாருக்கும் அன்னதானம் செய்து பழக்கமில்லை என்பதால் சற்று சங்கோஜத்துடன் நிற்கின்றோம்.
ஆண்கள், பெண்கள் என்று நாங்கள் பத்து பேர் உணவு அண்டாக்களுடன் தயாராக நிற்கின்றோம். கடுமையான வெயில் காரணமாக ரோட்டில் நடமாட்டமே இல்லை. எங்கள் குழுவில் இருந்த ஆண்கள் கண்களில்பட்ட ஓரிரண்டு நபர்களை சாப்பிட அழைத்தாலும், அவர்களும் நாங்கள் சாப்பிட்டு விட்டோம். வேண்டாம் என்று கூறிச் சென்றுவிடுகின்றனர்.
எங்களுக்கோ தர்மசங்கடமான நிலை.
ஏற்கனவே அன்னதானம் என்றால் குரு ஆயிரம் விளக்கம் கூறுவார்.நாம் சாப்பிடாமல் நமது உணவை பசித்தவர்களுக்குத் தருவதே அன்னதானம். அதையும் நேரத்தோடு தந்துவிடவேண்டும். பசி இல்லாதபோது உணவு கொடுத்து புண்ணியமில்லை என்பார்.
இன்றோ, நாங்கள் வயிறு நிறைய உண்டுவிட்டு, அன்னதானம் செய்ய நிற்கின்றோம் அதுவும் நேரம் கடந்து, இருந்தாலும், மக்கள் வந்து உணவை வாங்கிச் சென்று விட்டால் உணவு வீணாகாது. உணவு வீணாகிவிட்டால் குரு கோபப்படுவார். குருவுக்கு கோபம் வந்தால் அதையே சாக்காக வைத்து நாள்கணக்கில் மவுனமாக இருந்துவிடுவார். எனது மனது வேறு குழம்பித்தவிக்கின்றது.
மனதிற்குள் சாய் தேவா! இது என்ன சோதனை. இதற்கு ஒரு வழி காட்டக் கூடாதா? என்று மனதிற்குள் பிரார்த்திக்கின்றேன். மணி மதியம் மூன்று. அந்த 100 அடி சாலை முழுவதும் ஒரு மனிதனைக் கூட காணோம். நேரம் ஆகிவிட்டது. இனிமேல் யாரும் வரமாட்டார்கள். அருகில் ஏதாவது ஆதரவற்றவர்களின் இல்லம் இருந்தால் கொடுத்து விடாலாம் என்று ஒரு சகோதரி யோசனை கூறினாள்.
அதுவும் நல்ல யோசனைதான் ஆனால் இப்போது எங்கு போய் ஆதரவற்றவர்களின் இல்லத்தை தேடுவது. என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது தூரத்தில் ஒரு வயதான பெரியவர் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும், சகோதரர் கார்த்திக் என்பவர். அவரிடம் ஓடிப்போய் அவரைபார்த்து அய்யா சாப்பிடுகின்றீர்களா வாருங்கள் என்று அழைத்து வந்தார். அவரும் ஏதும் கூறாமல் சகோதரனின் பின்னால் நடந்து வந்தார்.
கிழிந்து அழுக்கான உடையணிந்து பலகாலமாய் குளிக்காத தோற்றத்தோடு பரட்டை தலை, நீண்ட தாடியோடு, ஆறடி உயரத்தில், காலில் செருப்பு இல்லாமல், வெயிலில் நடந்து வந்து எங்களின் முன்னால் நின்றார்.
அப்பாடா ஒரு பிச்சைக்காரராவது வந்தாரே என்று நாங்கள் அனைவரும் பரபரப்பாக ஒருவர் தட்டெடுக்க,ஒருவர் சாதம் வைக்க, ஒருவர் இனிப்பு வைக்க என தட்டை நிரப்ப, சகோதரர் கார்த்திக் அதை வாங்கி அவரிடம் நீட்டுகின்றார்.
ஆனால் அவரோ சாப்பாட்டுத் தட்டை கையில் வாங்காமல் எங்களையும், சாப்பாட்டு அண்டாக்களையும், வெறித்துப் பார்க்கின்றார். சிவந்த நிறம், பூனைக் கண்கள், நீளமான மூக்கு, கறைபடிந்த பற்கள், முழங்காலுக்கு கீழே தொங்கும் கைகள். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சட்டென்று சாப்பாட்டுத் தட்டை கைகளில் வாங்கியவர், தட்டில் உள்ள உணவுகளை ஒன்றாக அள்ளி வாயில் போட்டார்.
நாங்கள் அத்தனை பேரும் அவரையே பார்த்துக் கொண்டிருக்கின்றோம். மூன்றே முறை அவர் தட்டில் இருக்கும் உணவை கைகளில் அள்ளி வாயில் போடுகின்றார். அவர் வாயில் போடுவதற்கு முன்பாக அவருடைய நாக்கு வாயிலிருந்து வெளிவந்து அவரின் கைகளில் இருக்கும் உணவை லாவகமாக சுருட்டி உள்வாங்கிக் கொள்கின்றது. அவரது நாக்கு, வாயில் இருந்து அரை அடி நீளத்திற்கு வெளியில் வருவதைப் பார்த்த நாங்கள் அதிசயத்துப் போய் அவரையே பார்க்க, மாடியில் இருந்து ஒரு குரல் எங்கள் கவனத்தை கலைக்கின்றது.
கூட்டம் நிற்கின்றது, சாப்பாடு போடாமல் என்னப்பா பண்றீங்க என்று குருதான் குரல் கொடுக்கின்றார். அப்போதுதான் நாங்கள் பார்க்கின்றோம். எங்கிருந்துதான் அவ்வளவு கூட்டம் வந்தார்களோ தெரியவில்லை. நூற்றுக்கண்க்கான நபர்கள் எங்களை மொய்த்து எடுத்து விட்டார்கள். அடுத்த பத்து நிமிடத்தில் அண்டாக்கள் காலியாயின. ஆனால் அந்த வயதான பக்கிரியை அதற்குப் பின்னால் நாங்கள் கவனிக்கத் தவறிவிட்டோம். பகவானே! சாயிலீலை என்பது இதுதானோ!
தட்டுகளில் சாப்பாட்டை எடுத்துப் போடப் போட, எங்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம். அந்த ஆனந்தம் "கொடுத்துப் பார்த்தால்தான்" தெரியும். அந்த நாளில் அன்னதானத்தின் பெருமையை நாங்கள் உணர்ந்தோம். ஆனால் அதை குருவிடம் ஒருவரும் கூறவில்லை.
மறுநாள் காலையில் குருவினுடைய ஆத்ம நண்பர் சென்னை பட்டாளத்தை சேர்ந்த திரு. செந்தில்குமார் என்பவர் குருவுடன் உரையாடும்போது அவருடைய சகோதரரின் திருமணத்தைப் பற்றி பேச்சு வந்தது
திருமணத்தில் வழங்கப்படும் விலை உயர்ந்த உணவுகள் வீணடிக்கப் படுவதைப் பற்றி பேசி வருத்தப்பட்டார். திரு.செந்தில் அவர்கள். அதற்கு குரு அவர்கள் அன்னத்தின் பெருமைகளைப் பற்றி கூறி அதை விரயம் செய்யக்கூடாது.திருமணத்தில் உணவு மிச்சமானால் நீங்களாவது அதை கவனத்துடன், திருமணம் முடிந்ததும் அருகில் இருக்கும் ஆதரவற்ற இல்லங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யுங்கள்.
அதுமட்டுமின்றி அவர்கள் உணவு உண்ணும் வரை அவர்களுடன் இருந்து பரிமாறிவிட்டு வாருங்கள். அவர்கள் உணவை உன்பதற்கும், விசேசங்களில் நமது உறவினர்கள் உணவை உன்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வீர்கள் என்று கூற. அவரும் கண்டிப்பாக செய்கிறேன் என்று கூறிச் சென்றார்.
திருமணம் முடிந்த மறுநாளே வந்தவர் திருமணத்தில் நிறைய உணவுகள் மிச்சமாகிவிட்டன.நீங்கள் கூறியபடியே ஏற்கனவே அருகில் இருந்த முதியோர் இல்லத்தை தொடர்பு கொண்டு வைத்திருந்தேன். உணவு மிச்சமானதும் அவர்களுக்கு எடுத்துச் சென்று வழங்கினோம்.அவர்கள் அந்த உணவை அவ்வளவு ஆர்வமாக உண்டார்கள். எங்கள் உறவினர்கள் உண்டபோது மனம் ஆனந்தப்பட்டது. ஆனால் இவர்கள் உண்டபோதுதான் எங்கள் ஆத்மா ஆனந்தப்பட்டது. எங்களுக்கும் உணவு விரயம் ஆக வில்லை என்ற திருப்தி கிட்டியது என்றார்.
பிறகு பேச்சுவாக்கில் யார் யாரோ அன்னதானம் என்ற பெயரில் பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வளவு கூறும் நீங்கள் ஏன் அன்னதானம். செய்யக்கூடாது என்றார்.
குரு உடனே, செய்யலாம். ஆரம்பித்துவிட்டால் தொடர்ந்து செய்ய வேண்டும். அதற்குண்டான பொருளாதாரத்திற்கு வழி செய்ய வேண்டுமே! அதுதான் யோசிக்கிறேன் என்றார்.
திரு.செந்தில் அவர்கள் உடனே, நீங்கள் பாபாவின் காலடியில் அன்னதான உண்டியல் என்று ஓர் உண்டியல் வையுங்கள். முதல் தொகையை அதில் நானே இடுகின்றேன். என்று கூற குருவும் மறுநாளே ஒரு உண்டியல் வாங்கி அன்னதான உண்டியல் என்ற எழுதி பாபாவிடம் வைத்துவிட்டார்.
எனக்கோ ஆச்சர்யம். ஏன் என்றால் அதுவரை எங்கள் சபையில் உண்டியல் இல்லை. குருவும் அதுவரை யாரிடமும் பணம் கேட்டதில்லை. சொன்னது போலவே திரு.செந்தில் அவர்கள் முதல் நபராக ஒரு தொகையாக உண்டியில் செலுத்தினார். அவரிடம் குரு, சரி உங்களின் விருப்பப்படியே அன்னதானம் செய்கிறேன்.ஆனால் ஒரு நிபந்தனை. நமது சபையில் அன்னதானம் செய்யவேண்டாம். சமைத்து எடுத்துக் கொண்டு பசியோடு இருப்பவர்களை தேடிச்சென்று கொடுக்கலாம் என்று நினைக்கின்றேன் என்றார்.
அது சற்று சிரமமானது அல்லவா என்றார் செந்தில். இல்லை.சமைத்து பார்சல் கட்டி கொடுப்பதற்கு நமது சபைக்கு வருபவர்கள் இருக்கின்றார்கள். எடுத்துச் செல்வதற்கு நான் இருக்கின்றேன். என்னிடம் இரண்டு சக்ர வாகனம் இருக்கின்றது. ஆகவே உடனடியாக ஆரம்பித்துவிடவேண்டியதுதான் என்றார்.
நானும், மற்ற உறுப்பினர்களும், இன்னும் கொஞ்ச காலம் போகட்டும் உண்டியலில் சற்று பொருளாதாரம் வந்ததும்,சமைப்பதற்கு முக்கியமாக பாத்திரமும், அடுப்பும் வாங்கிக் கொண்டு ஆரம்பிக்கலாம் என்றோம்.
ஆனால் குருவோ, இல்லை, இல்லை அன்னதானத்திற்கென்று ஒரு தொகை வந்து விட்டது. அதை கையில் இருப்பு வைக்கக் கூடாது. உடனடியாக அன்னதானத்திற்கு செலவு செய்து விட வேண்டும். தவிர எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டு ஆரம்பிக்கலாம் என்றால் நாட்கள் போய்கொண்டே இருக்குமே தவிர காரியம் ஆகாது. இருப்பதை வைத்துக் கொண்டு என்ன முடியுமோ அதை செய்ய ஆரம்பித்துவிட்டால் பின்பு எல்லாம் கைகூடி வந்து விடும் எனவே,
நாளை வியாழக்கிழமை. நாளையில் இருந்து வியாழக்கிழமை தோறும் அன்னதானம் நடக்கும் என்று கூற,
நானும், சபைக்கு வரும் சில சகோதரிகளும், அவசரப்பட வேண்டாம். என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும், கையில் இருக்கும் தொகையைக் கொண்டு, நம்மிடம் இருக்கும் பாத்திரங்களைக் கொண்டும் என்ன செய்யமுடியுமோ அதை செய்து தாருங்கள். நான் சென்று கொடுத்து வருகின்றேன். என்று முடிவாகக் கூறிவிட்டார்.
உடனே அனைவரும் அதற்குண்டான ஏற்பாடுகளை செய்தோம். தெரிந்த சகோதரிகளின் வீடுகளில் இருக்கும் பெரிய பாத்திரங்களை கொண்டுவந்து எங்களால் முடிந்த அளவிற்கு உணவு சமைத்து உணவுப் பொட்டலங்களைப் தயார் செய்தோம். மொத்தம் 48 பொட்டலங்கள் வந்தது.
குரு அவர்கள் தனது இரண்டு சக்ர வாகனத்திலேயே எடுத்துச் சென்று விநியோகித்து வந்தார். எனினும் எடுத்துச் சென்ற பொட்டலங்கள் தீர்ந்தும் கூட நிறைய நபர்கள் உணவிற்காக காத்திருந்ததாகவும் அவர்களுக்கு கொடுக்க முடியாமல் போனதற்காக வருத்தப்பட்டார். அதன்பின்பு அவரே அடுத்த வாரம் வியாழன் அன்று நாம் 100 பேருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும் என்று கூறி அதற்கு தேவையானது என்ன என்று கேட்டார்.
முதலில் தேவையானது 100 பேருக்கு சமைக்கக்கூடிய பாத்திரங்களும். அடுப்பும்தான் என்று நான் கூற, சரி அதற்கு முதலில் ஏற்பாடு செய்வோம்
என்று குரு அவர்கள் கடைக்குச் சென்று அடுப்பும், பாத்திரங்களும் எவ்வளவு ஆகும் என்று விசாரித்து வருகின்றேன் என்று கூறிச் சென்றார்.
கடைத் தெருவிற்குச் சென்றவர் விசாரித்துப் பார்த்ததில் அடுப்பும், பாத்திரங்களும் பதினைந்தாயிரம் ரூபாய் வரை ஆகும் என்றவுடன் திகைத்து போய், இவ்வளவு ருபாய்க்கு எங்குபோவது, என்றவாறே பாத்திரக்கடையின் வாசலில் நின்று சற்று நேரம் கடையையே பார்த்துக் கொண்டு நின்றிருக்கின்றார்.
இவை எல்லாம் சாத்தியமா, அப்படியே பொருட்கள் வாங்கிவிட்டாலும் எரிபொருளுக்கு என்ன செய்வது. அதற்கடுத்து மளிகைப் பொருட்கள், அரிசி இருக்கின்றது. என்றவாறே சற்றே வருத்தத்துடன் அங்கிருந்து புறப்பட எத்தனித்திருக்கின்றார்.
அப்போது அவ்வளவுதானா, புறப்பட்டாச்சா, என்று ஒரு குரல் குருவை நோக்கி வந்திருக்கின்றது. சட்டென்று திரும்பிப் பார்க்க, அங்கே முதன்முதலில் இடம், பொருள் அனைத்தும் கொடுத்து அன்னதானம் செய்யச் சொன்னாரே ஒரு தொழில் அதிபர் அவர் நின்றிருக்கின்றார்.
-லீலைகள் தொடரும்.
****