பாபாவின் முதல் பூஜாரி பாபு சாஹிப் ஜோக்
திரு.பாபு சாஹிப் ஜோக் அரசுப் பணி செய்தவர். அவருக்கு குழந்தைகள் இல்லை. தனது ஓய்வூதியத்தில் மனைவியுடன் நிம்மதியாகவும், வசதியாகவும் வாழ்ந்து வந்தார்.1909 ல் பணி ஓய்விற்குப்பின் தன் மனைவியுடன், பாபாவின் தரிசனத்திற்கு சீரடிக்கு வந்தார்.
பாபா, பாபு சாஹிபின் மீது மிகுந்த அன்பு செலுத்தினார். எந்தளவிற்கு என்றால் அவரை திரும்ப அவரின் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டில் இருந்து அவருக்கு தேவையான பொருட்களைக் எடுத்துவர கூட அவரை அனுப்ப மறுத்து விட்டார்.
பாபு சாஹிப் சீரடியில் சாதே வாடாவில் தங்கியிருந்தார். அங்கே சக பக்தர்களால் மன உளைச்சலுக்கு ஆளானவர் தான் திரும்ப ஊருக்கே செல்லப் போவதாக கூறினார். அதை கேள்விப்பட்ட பாபா அவரிடம், " வாடா என்ன சாத்தேயின் அப்பனுக்கு சொந்தமானதா"? உன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தாதா கேல்கரிடம் கூறுகின்றேன். நீ அங்கேயே நிம்மதியாக தங்கியிரு சரியா, என்று அன்போடு கூறினார்.
பாபாவின் அன்பான வார்த்தைகளால் ஈர்க்கப்பட்ட பாபு சாஹிப் தொடர்ந்து அங்கேயே தங்கலானார்.
பாபு சாஹிப் ஆச்சார அனுஷ்டானங்களை தீவிரமாக பின்பற்றக்கூடிய பிராமணர். நீதியும், நேர்மையோடு அறவழியில் நடக்கக் கூடிய தர்மவானாக இருந்தார். அவரது மனைவியும் அப்படியே! அவரை பாபா எப்போதும் அன்புடன் ஆயி என்று அழைப்பார்.
பாபு சாஹிப் ஒரு தத்த உபாசகர். அடுத்தவருக்கு ஒருபோதும் இடைஞ்சல் தராதவண்ணம் தன் சாதனையை அமைதியாக செய்து வந்தார். தத்த ஜெயந்தி அன்று ஸ்ரீ தத்தருக்கு, நைவேத்தியமும், ஒரு கப்னியும் சமர்ப்பிப்பது வழக்கம்.
அந்த வருட தத்த ஜெயந்தி அன்று அவர் சீரடியில் இருந்ததால், பாபாவிற்கு ஒரு கப்னியை அளிக்கவேண்டும் என்று முடிவு செய்தார்.
சீரடியின் தையல்காரரும், பாபாவின் பக்தருமான பாலாஷிம்பியிடம் பாபாவிற்காக ஒரு கப்னியை தைத்து வாங்கிக் கொண்டார். தத்த ஜெயந்தியன்று பாபாவிற்கு பூஜை செய்த பின்பு கப்னியை பாபாவிடம் சமர்ப்பித்தார். அதை மனமுவந்து ஏற்றுக்கொண்ட பாபா, தன்னுடைய வேறு ஒரு கப்னியை பாபு சாஹிபிற்கு பிரசாதமாக அளித்தார்.
அதை மிகுந்த மகிழ்சியோடு ஏற்றுக்கொண்ட பாபு சாஹிப் அதை பொக்கிஷமாக பாதுகாத்தார். மாலை வேளைகளில் அதை அணிந்து கொண்டு தலையைச் சுற்றி ஒரு வெள்ளைத் துணியைக் கட்டிக்கொண்டு அவர் பாபாவின் தரிசனத்திற்கு செல்வதே ஒரு அழகுதான். பாபு சாஹிப் அதை இராஜ உடை என்று கூறுவார்.
பாபு சாஹிப் மிகவும் இளகிய மனம் படைத்தவர். ஆனால் அவர் செய்து வந்த பணி அவரை சற்று, முன் கோபியாக மாற்றிவிட்டது. அவர் அடுத்தவர்களின் பார்வையில் சற்று கோபக்காரராக காணப்பட்டார். ஆனால் பாபா அவரை படிப்படியாக மாற்றிவிட்டார்.
மிகவும் சிக்கனமாக வாழ்ந்த அவர் கணிசமான தொகையை சேமித்து வைத்திருந்தார். தனது சேமிப்பின் மீது சிறிது கர்வம் இருந்ததை பாபா அறிந்திருந்தார். எனவே அவரிடம் இருந்து மீண்டும், மீண்டும் தட்சணை கேட்டு அவருடைய சேமிப்பு முழுவதையும் கரைத்துவிட்டார். இதன்முலம் அழியும் செல்வத்தின் மீது பற்று வைக்கக்கூடாது என்ற பாடத்தை பாபு சாஹிப் கற்றுக் கொண்டார்.
எனவே மாதந்தோறும் தன்னுடைய ஒய்வூதியத்தில் அந்த மாத செலவுபோக மீதம் எவ்வளவு இருக்கின்றதோ அதை அப்படியே கொண்டுவந்து பாபாவின் காலடியில் வைத்து விடுவார்.
அவர்மீது முழு நம்பிக்கை வைத்திருந்த பாபா, தடசணையின் முலம் தனக்கு வருகின்ற பணத்தையும் அவரிடம் கொடுத்து வைப்பது வழக்கம். பாபு சாஹிப் இது பாபாவின் பணம் என்று அதை தனியாக வைத்திருப்பார்.
தேவைப்படும் பொழுது பாபா அவரிடம் அந்த தொகையை கொண்டு அதை வாங்கு, இதை வாங்கு என்று கூறுவார். பாபா சில நேரங்களில் அவரிடம் ரூ.100 ஐ கொடுத்துவிட்டு சில தினங்கள் கழித்து, வேண்டும் என்றே வேடிக்கையாக பாபு சாஹிப் நான் சில தினங்களுக்கு முன்பு உன்னிடம் ரூ.125 கொடுத்தேனல்லவா, அதை எடுத்துவா என்பார்.
பாபு சாஹிப், பாபா நீங்கள் ரூ 100 தான் கொடுத்தீர்கள் என்று கூறுவார். இப்படியே அடிக்கடி நடக்கும். ஒரு முறை பாபு சாஹிபிற்கு கோபம் வந்து விட்டது. சற்று எரிச்சலாக பாபாவிடம், இனிமேல் உங்களது பண விவகாரங்களில் தலையிட எனக்கு விருப்பமில்லை. இனிமேல் அதை வேறு யாரிடமாவது கொடுத்து வைத்துக் கொள்ளுங்கள். என்று கூறினார்.
பாபாவோ அவரை சமாதானப்படுத்தும் விதமாக, பாபு சாஹிப், சரி,சரி, கோபப்படாதே, நான்தான் தப்பாக கணக்குப் போட்டுவிட்டேன். நான் கொடுத்தது 100 ரூபாய்தான் சரியா என்று கூறுவார்.
ஒருமுறை ஒரு பக்தர் பாபாவிடம் கினியா நாணயத்தை சமர்ப்பித்தார். பாபா அதை பாபு சாஹேப்பிடம் கொடுத்து, இது என்ன? என்று கேட்டார. அதற்கு அவர், இது கினியா என்றும் அதன் மதிப்பு 15 ரூபாய்க்கு சமமானது என்றும் கூறினார். பாபாவோ, இல்லை இல்லை இது 30 ரூபாய் மதிப்புள்ளது. இது வைத்துக்கொண்டு 30 ரூபாய் கொடு என்றார்.
19.01.1912 ல் பாபாவின் நெருங்கி அடியவரான மேகா மறைவிற்குப்பிறகு, பாபாவின் விஷயங்களை அனைத்தையும் பாபு சாஹிப்தான் பார்த்துக்கொண்டார். 1918 ல் பாபாவின் மகாசமாதிவரை அவருக்கு ஆரத்தி செய்யும் பெரும் பேறு கிட்டியது.
அதுநாள்வரை மேகா செய்து வந்த சேவைகள் அனைத்தும் பாபு சாஹிப்பின் பொறுப்பில் வந்தது. துவாரகாமாயியில் பாபாவிற்கு ஆரத்தி, சாத்தே வாடாவில் மாலை ஆரத்தி,தீட்சித் வாடாவில் ஆரத்தி, மற்றும் குருபாதுகாவில் ஆரத்தி, அனைத்தையும் பாபு சாஹிப் செய்யத் தொடங்கினார்.
பாபு சாஹிப் தன் கடமைகளை வெகு சிரத்தையுடன் செய்வார். வழக்கமாக ஆரத்திக்கு ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். இருந்த போதிலும், எப்போதாவது ஒரு சிலரே இருந்தாலும் அல்லது யாருமே இல்லாவிட்டாலும் கூட அதை பொருட்படுத்தாமல் வழக்கமான அதே பக்தியுடனும், சிரத்தையுடனும் ஆரத்தியை செய்வார்
பாபு சாஹிப்பின் மனைவி தாய்பாய்யும் தர்மத்தின்படி அறநெறியில் வாழ்பவரே. அவர்கள் இருவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து ஆச்சார அனுஷ்டானங்களை முறைப்படி செய்து விட்டு புனித நூல்களை பாராயணம் செய்வர். அதன்பிறகு துவாரகாமாயிக்கு பாபாவின் தரிசனத்திற்குச் செல்வர்.
பாபு சாஹிப் பாபவின் அருகிலேயே இருந்து, பாபாவிற்கு தேவையான தினசரி கடமைகளை செய்வார். தாய்பாய் வீட்டிற்கு திரும்பி ஆரத்திக்கு தேவையான பிரசாத நைவேத்தியம் தயார் செய்வதோடு, பாபா அனுப்பி வைக்கும் எண்ணற்ற விருந்தினர்களை உபசரிப்பார்.
தாய்பாய் பக்தியின் இலக்கணமாக விளங்கினார். அவர் பாபாவிடம் அதி தீவிரமான பக்தி கொண்டிருந்தார். அவர் தன் குருவான பாபா மீது கொண்டிருந்த உணர்வுமயமான பிரேம பக்தி எந்த அளவிற்கு ஆழமானது என்றால், பாபவின் சமாதிக்குப் பிறகு, அவர் தன் கட்டுப்பாட்டை இழந்தவராய் சீரடியின் தெருக்களில். குறிக்கோளின்று அலையத் தொடங்கினார். அவர் தன் குருவை தேடுகின்றார் என்று தெரிகின்றது. அவர் முகத்தில் வெறுமை நிலவியதோடு, அவரை சுற்றியுள்ள சூழலைப் பற்றி தன்னுணர்வே அவரிடம் இல்லை. பாபா இல்லை என்பதை எந்த அளவிற்கு அவர் சூன்யமாக உணர்ந்தார் என்றால், அதன் பிறகு இரண்டே மாதங்களில் அவர் உயிர் துறந்தார்.
ஆச்சார அனுஷ்டானங்களை தீவிரமாக கடைபிடிக்கும் பழமைவாதியான பாபு சாஹிப் உணவு விசயத்தில் மிகவும் கண்டிப்பானவர். அதை விரத காலங்களில் தீவிரமாக கடைபிடித்தார் அது போன்ற நாட்களில் வெங்காயத்தை கூட கையால் தொட மாட்டார். இதை மதித்த பாபா விரத நாட்களில், அவரை தன்னோடு உணவுண்ண வற்புறுத்த மாட்டார்.
உண்மையில், பாபா வேறு சில பக்தர்களை பாபு சாஹிப்புடன் அவர் வீட்டிற்கு அனுப்பி அவருடன் உணவுஉண்டு வரச் செய்வார். பாபாவிற்கு பக்தர்கள் பழங்களையும், இனிப்புகளையும் சமர்ப்பிக்கும் பொழுது பாபா அப்படியே பாபு சாஹிப்பிடம் கொடுத்துவிடுவார்.
ஒருமுறை பாபு சாஹிப், பாபாவிடம் எப்போது தனக்கு சன்யாசம் வழங்கப் போகின்றீர்கள் என்று கேட்டார். அதற்கு பாபா, நீ உலகியல் பொறுப்புகளில் இருந்து முற்றிலுமாக விடுபட்ட பிறகு என்று பதிலளித்தார். இப்போது பாபா உடலோடு இல்லை. ஆகவே பாபாவிற்கு செய்ய வேண்டிய பொருப்புகளில் இருந்து விடுபட்டார். எனவே அவர் சில ஆண்டுகள் சீரடியில் தங்கியிருந்து பாபாவின் சமாதியை கவனித்துக் கொண்டார்.
காகா தீட்சித்தின் மறைவிற்குப் பின்பு, மற்ற பக்தர்கள் சீரடியை விட்டுச் சென்று விட்டனர். தனித்து விடப்பட்ட பாபு சாஹிப் சகோரிக்குச் செல்ல முடிவெடுத்தார். அங்கு அவர் சன்யாசம் ஏற்றுக்கொண்டார்.
சகோரிக்குச் செல்வதாக அவர் எடுத்த முடிவு அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்து. ஏன் என்றால் உபாசினிக்கும், அவருக்கும் ஒருபோதும் ஒத்துப் போனதில்லை. ஒரு முறை பாபு சாஹிப் உபசினியை தரதரவென்று துவாரகாமாயிக்கு இழுத்து வந்தார்.
பிறகு தங்களுக்குள் நடந்த சண்டையின் காரணத்தை பாபாவிடம் முறையிட்டு, பாபாவிடம் நீதி வழங்குமாறு கோரினார். அது பழைய கதை. இருப்பினும், அவர் பாபாவிற்கு எந்த அளவிற்கு பக்தியோடு சேவை செய்தாரோ, அந்த அளவிற்கு உபாசினிக்கும் சேவை செய்தார். ஒரு சன்யாசியாக அவர் உயிர் நீத்ததால், சகோரியில் உபாசினி ஆஸ்ரமத்திற்கு எதிரில் அவருக்கு சமாதி எழுப்பப்பட்டுள்ளது.
*****